பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்?

111



'வந்துஎ னைக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிற விக்கு இரு மாதரைச்
சிந்தை யாலும் தொடேன்என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சார்த்துவாய்."

என்றாள் சீதை. எனவே, கற்பென்பது பெண்கட்குத்தான் என்றும், ஆண்கள் எத்தனை பேரை வேண்டுமானலும் மணக்கலாம் என்றும் கூறுவார் கூற்றுக்கு இதை விட வேறு என்ன மறுப்பு வேண்டும்! இனி மற்றவர் மனைவியை நெஞ்சால் நினைத்தல் கொடுமை என்பதையும், அவ்வாறு நினைத்த இராவணன் மனத்தையெல்லாம் இராமனது அம்பு துளைத்துத் துளைத்து ஆராய்ந்தது என்றும் காட்டுகின்றார் கம்பர். அக்காட்சியையும் கற்பனையையும் மற்றொரு கற்புடைப் பெண்ணாகிய மண்டோதரியின்பால் ஏற்றியே பேசுகின்றார். இராவணன் போர்க்களத்தில் மடிந்துகிடக்கின்றான். இராமன் அம்பு அவன் உடலைத் துளைத்துவிட்டிருக்கிறது. அக்கோரக் காட்சியைக் கண்ட மண்டோதரி வாய் விட்டுப் புலம்புகின்றாள். அப்புலம்பல் கம்பர் கைவண்ணத்தால் பல பாடல்களாய் வருகின்றது. அவற்றில் ஒன்று இராவணன் உடலம் சல்லடைக்கண்களாகத் துளைக்கப்பட்டிருப்பதைப் பற்றியது. இராமன் அம்பு அவ்வாறெல்லாம் புறத்தையும் அகத்தையும் துளைத்தமைக்குக் காரணம், இராவணன் உள்ளத்தே எங்கேனும் சீதையைப்பற்றிய எண்ணம் இருக்கிறதா என்று அந்த அம்பு தேடினதே என்கிறார் கம்பர். மற்றொருத்தியை மனத்தாலும் நினைத்தலாகாது என்பதையும், அவ்வாறு நினைத்தவர் எத்துணை உயர்ந்தவராயினும் அவர் நெஞ்சம் வேம் என்பதையும் உலக நீதியாகக் காட்டி, கற்பு மேம்பாட்டினை ஒரு கற்புடைப் பெண் மூலமே விளக்கும் நிலை போற்றற்குரியதாகும்.

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்