உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வரலாற்றுக்கு முன்


ஒன்றே போதும். இப்படிப் புராணங்களும், இலக்கியங்களும், வரலாறும், தொல்பொருள் ஆராய்ச்சியும், நில நூலும் ஒருசேரக் கூறுகின்றபடி இமயம் கடலுள் ஆழ்ந்திருந்த காலமும், குமரிக்குத் தெற்கே பரந்த நிலப் பரப்பு இருந்த காலமும் உலகில் உண்டு என்று கொள்வது முற்றும் பொருந்துவதேயாகும்.

இந்த இழந்த நிலப்பரப்பிலேதான் முதல் முதல் மனிதன் தோன்றினான் என்பர். மனிதத் தோற்ற வளர்ச்சி பற்றியும் மொழி பற்றியும் ஆராய்கின்ற அறிஞர்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். மனிதர் மத்திய ஆசியாவிலோ அன்றிக் குமரிக்கண்டத்திலோ தனித்தனியாகத் தோன்றிப் பல இடங்களுக்கு மெள்ள மெள்ளப் பரவினர் என்பர். இந்தியா முழுவதிலும் பரவி இருந்த திராவிடப் பெருங்குடி மக்களைப் பற்றி ஆராய்கின்ற வரலாற்றறிஞர்கள், இந்தக் கொள்கையின் அடிப்படையில், நாடு முழுவதும் பரவியிருந்தும், இன்று தென்னாட்டில் தனிப் பண்பாட்டை வளர்த்தும் வாழ்ந்துவரும் திராவிட மக்கள் குமரிக் கண்டத்திலிருந்து மெள்ள மெள்ள இமயம் வரை வடக்கு நோக்கி வந்தவர் என்று கூறுகின்றார்கள். ஒருசிலர் மத்தியதரைக் கடலிலிருந்து வந்தவர்கள் என்பர். எனினும், முன்னதே வலியுடைத்தாகும். இன்றும் விந்திய மலைக்குத் தெற்கும். குமரிக்கு வடக்கும் உள்ள நிலப்பரப்பு வடவிந்திய நிலப் பரப்பினும் தொன்மை வாய்ந்தது என்று ஆராய்ந்து காட்டியுள்ளனர். எனவே, பழமையான மண்ணில் மக்கள் தோன்றிப் பிற இடங்களுக்கு மெள்ள மெள்ளச் சென்றார்கள் என்று கொள்வது பொருத்தமாகும்.

இந்த நிலையில் நிலத் தோற்ற அழிவுகளைக் கண்டு அமைவோம். பரந்த குமரிக்கண்டம் அழியவும், புதிய வடவிந்தியப் பகுதி தோன்றவும் தென்னாட்டில் வாழ்ந்த மக்களும் அவர்களின் தலைவனாகிய மன்னனும் இழந்த குமரிக்கண்டத்துக்குப் பதிலாக வடவிந்தியப் பகுதியை