பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

81

சென்றபோது அவர் பூஜை அறையில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு வழிபாடு செய்து கொண்டிருந்த போதும் ‘வாசலில் புலவர் ஒருவர் வந்திருப்பது’ தெரிந்த வள்ளலுக்குப் பாராமுகமாக இருக்க முடியவில்லை. பூஜையை நடுவில் நிறுத்திவிட்டு வெளியே வந்தார். வாயிலில் காத்திருந்த இராமச்சந்திர கவிராயரையும் உள்ளே வரவேற்று உபசரித்துப் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார். கவிராயர் ஒரு புறம் அமர்ந்து கவனிக்க, நடுவில் நிறுத்திய பூஜையைத் தொடர்ந்தார் வள்ளல். சாம்பிராணிப் புகையும் சந்தனமும் பூக்களின் மணமும் புலவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி நினைவுகளை உண்டாக்கிக் கவலை நீங்கி மலரச் செய்தன. பூஜையறையைச் சுற்றிச் சுழன்றன கவிராயர் கண்கள்.

கைதேர்ந்த ஒவியர்கள் மூலம் எழுதி வாங்கித் தொங்க விட்டிருந்த கடவுளர் படங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. பூஜையறைக்கே தெய்வீக அழகைக் கொடுத்தவை அந்தப் படங்கள்தாம். மூங்கிற் புதருக்கு நடுவே நெல்லையம்பதியில் சிவபெருமான் இலிங்க ரூபத்தோடு மறைந்து வசித்ததாகச் சொல்லப்படும் புரான ஐதிகத்தை விளக்கியது அந்தச் சிவபெருமான் படம். மூங்கிற் புதரும் அதன் நடுவில் இலிங்கமும் படத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருந்தன. அடுத்துப் பாற்கடலில் ஆதிசேடன் குடைபிடிக்க அறிதுயில் புரியும் திருமாலின் தெய்வீகக் காட்சி படமாக விளங்கியது. மலர்ந்த செந்தாமரை மலருக்கு நடுவில் கையில் ஏட்டுடனும் படைப்புக் கருவியுடனும் உட்கார்ந்திருப்பதாக வரையப்பட்டிருந்த பிரம்மாவின் சித்திரமோ, முன்னதைவிட நன்றாக இருப்பதுபோல தோன்றிது. இவைகளுக்கும் மேலாகக் கையில் வேல் பிடித்து வெண்ணீறு அணிந்து மலைமேல் நிற்பதாகக் காட்சி கொடுத்த முருகன் ஓவியமும், அப்பம், பொரி, அவல், கனி முதலியன கூடை கூடையாக முன்னே படைக்கப்பட்டிருக்கும் நிலையிலே அமர்ந்திருக்கும் விநாயகர் ஒவியமும் விளங்கின.

அந்தத் தெய்வங்களின் படங்களையும் அவற்றிற்குத் தூபம் காட்டி வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் வள்ளலான

உ.பூ - 6