பக்கம்:நித்திலவல்லி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

447


கிறார்கள். ஒரு மமதையின் காரணமாகத் தானே போர்க் களத்திற்குச் செல்லாமல், படைவீரர்களே வெற்றியை ஈட்டிக் கொண்டு வருவார்கள் என்ற தப்புக் கணக்கில் களப்பிரக் கலியரசன் மதுரையிலேயே அரண்மனையில் மாவலி முத்தரையனுடன் வட்டாடிக் கொண்டு[1] கிடக்கிறான். கூடியவரை அரண்மனையிலும், அகநகர் எல்லையிலும் உள்ள சிறிதளவு களப்பிர வீரர்களின் எண்ணிக்கையும் தனித்தனியே சிதறும்படியாகச் செய்து பல முனைகளில் அவர்களைப் பிரித்துத் தாக்க வேண்டியது நம் கடமை.

வெளிப்படையாக நடைபெறும் புறத்தாக்குதலைத் தொடங்கி அரண்மனையை வளைத்துக் கொள்ளச் செல்லும் நம் வீரர்கள் குழுவிற்குப் பெருஞ்சித்திரன் மட்டும் தலைமை தாங்கினால் போதும். மாலையில் தொடங்கும் இந்தப் புறத்தாக்குதலால், நள்ளிரவுக்குள் நமக்குச் சாதகமான பல மாறுதல்கள் ஏற்படும். நள்ளிரவில் இந்த மாறுதல்கள் தெரிந்த பின், சூழ்நிலையை உறுதி செய்து கொண்டு, அதன்பின் நீயும் காராளரும், கொல்லனும், நிலவறையிலுள்ள நம் வீரர்களும் கரந்துபடை வழியாக அரண்மனையிற் புகமுடியும். அவ்வாறு அரண்மனையில் புகுந்ததும், முதல் வேலையாக அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் அரண்மனையில் எங்கே சிறைப்பட்டிருப்பார்கள் என்பதை உங்களுக்குக் காட்டுவதற்கு உங்களோடு இருக்கும் உப வனத்துக் குறளன் உதவியாக இருப்பான். மதுரை மாநகரத்துக் கோட்டையில், நம் மீன் கொடி பறக்கத் தொடங்கியதும், அதைக் கண்டு வந்து என்னிடம் தெரிவிக்க, வையையின் இக்கரையில் செல்லூர் அருகே நானே ஆட்களை நிறுத்தியிருக்கிறேன். கோட்டையில் நம் கொடி பறப்பதை அறிந்த சில நாழிகைகளில், நானும் என்னோடு மறைந்திருக்கும் மற்றவர்களும் கிழக்குக் கோட்டை வாயில் வழியே அகநகரில் புகுந்து, அங்கே அரண்மனைக்கு வந்து சேருவோம். இக்கட்டளைகளை எவ்விதத் தயக்கமும், ஐயப்பாடும் இன்றி நிறைவேற்றுக...” என்று பெரியவர் ஒலையை முடித்திருந்தார்.



  1. தாயக்கட்டம் போல் ஒரு விளையாட்டு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/445&oldid=946668" இலிருந்து மீள்விக்கப்பட்டது