பக்கம்:நித்திலவல்லி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


ஒலையைப் படித்து முடித்ததும், பெருஞ்சித்திரனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டு உறவு சொல்லி மகிழ்ந்தான் இளையநம்பி. அரச வம்சத்தின் கடைசி இரண்டு குலக் கொழுந்துகள் சந்தித்துத் தழுவிக் கொண்ட அந்தக் காட்சியைக் காராளர் விழிகளில் ஆனந்தக் கண்ணிர் மல்கக் கண்டு மகிழ்ந்தார்.

இரத்தினமாலை தன் மாளிகைக்குப் புதிய விருந்தினர்களாகிய காராளரையும், பெருஞ்சித்திரனையும் வரவேற்று உபசரிக்கத் தொடங்கினாள். உணர்ச்சிக் குமுறல்களை எல்லாம் உள்ளேயே அடக்கிக் கொண்டு இரத்தினமாலை அவ்வளவு விரைவாய் வந்திருப்பவர்களுக்கு முன்னால் எப்படி இத்தனை இயல்பாகச் சிரித்து மகிழவும், வரவேற்கவும் முடிகிறதென எண்ணி வியந்தான் இளையநம்பி. அவளுடைய திறமையை அவன் அப்போது காண முடிந்தது.

அன்று அந்த மாளிகையில், அவர்கள் மூவரையும் ஒரு சேர அமர வைத்து விருந்து பரிமாறினாள் இரத்தினமாலை. விருந்துண்டு முடிந்ததும், மாளிகைக் கூடத்தில் அமர்ந்து மிகமிக நுட்பமான அரச தந்திர உபாயங்களைப் பற்றிக் காராளரும் இளையநம்பியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக உடனிருந்த பெருஞ்சித்திரன் இடையிடையே கொட்டாவி விட்டபடி, உறக்கக் கலக்கத்தில் இருந்ததையும் கவனித்துக் கொண்ட இளையநம்பி, “தம்பீ! நீ உறங்கப் போவதாயிருந்தால், போகலாம்” என்று சிரித்துக் கொண்டே அவனை நோக்கிச் சொன்னான். பெருஞ்சித்திரனோ, இளையநம்பி அப்படிச் சொல்லுவதற்காகவே காத்திருந்தவனைப் போல் உடனே எழுந்திருந்து உறங்கப் போய்விட்டான். அதைக் கண்டு இளையநம்பி பெரிதும் ஏமாற்றம் அடைந்தான். ஏமாற்றத்தோடு அவன் காராளரைக் கேட்டான்:

“ஐயா, நாளை மாலை அரண்மனையை வளைத்துப் புறத் தாக்குதல் நடத்திச் செல்லும் படையணிக்கு இவன் தலைமை தாங்கினால் போதும் என்று பெரியவர் கட்டளையிட்டிருக்கிறாரே; அதை நினைத்தால்தான் எனக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/446&oldid=946669" இலிருந்து மீள்விக்கப்பட்டது