பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மொஹெஞ்சொ - தரோ


தனித்தனியே அமைக்கப்பட்டவை ஆகும். இங்ஙனம் அமைந் துள்ள பெரிய மாளிகை ஆட்சி உரிமையுடைய பெருந்தலைவனது அரண்மனையாகவும், அதனை அடுத்த மாளிகைகள் அவனுக்கு அடுத்த உத்தியோகத்தர்களின் மாளிகைகளாகவும், இம்மாளிகை களின் வெளிப்புறம் உள்ள விடுதிகள் காவலாளர் ஏவலாளர் இல்லங்களாகவும் இருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.

தையலார்க்குத் தனி அறைகள்

இல்லங்கள் சிலவற்றில் கால்நடைகளைக் கட்டுவதற்குத் தனி இடங்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆதலால் அம்மக்கள் வீட்டு முற்றுளிலேயே ஒரு மூலையில் அவற்றைக் கட்டியிருத்தல் வேண்டும். ‘சமையல் அறைகள் இல்லாத இல்லங்களில் சமையல் வேளையும் முற்றத்திலே நடைபெற்றிருத்தல் வேண்டும்’, என்று அறிஞர் சிலர் அறைகின்றனர். ஆயின் கராச்சி விக்டோரியாக் கண்காட்சிக் சாலையின் காப்பாளராகிய அறிஞர் சி.ஆர்.ராய் என்பார், ‘ஒவ்வொரு வீட்டிற்கும் வாயிற்படி உண்டு. அதனை அடுத்துத் திறந்த சிற்றறை ஒன்று வாயிற் காவலனுக்காகக் கட்டப்பட்டுள்ளது. அதன் பின்புறம் அமர்ந்து பேசுதற்குரிய கூடங்கள் உண்டு. அவற்றிற்குப் பின்புறம் படுக்கை அறைகள், சமையல் அறைகள், தையலார் இருக்கத் தனி அறைகள் முதலியன இருக்கின்றன என்று கூறுகின்றனர்.[1]

நீராடும் அறைகள்

ஒவ்வோர் இல்லத்திலும நீராடத் தனி அறை இருக்கிறது. மாளிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நீராடும் அறைகள் இருக்கின்றன. இவை தெருப்பக்கம் அமைந்துள்ளன; மெல்லிய செங்கற்களால் தளவரிசை இடப்பெற்றுள்ளன; இவற்றிலிருந்து கழிநீர் ஓட வடிகால்கள் நன்முறையில் அமைந்துள்ளன.


  1. C.R. Roy’s article in ‘The Indian World’ (1940)