பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

திருவிளையாடற்புராணம்

காகச் செய்யப்படுவது. யாகம் என்பது உலக அறம் ஓங்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது. இந்த அசுரன் அழிவு வேள்வி ஒன்று செய்தான்; அதில் ஒரு பூதத்தை வர வழைத்தான்; விருத்திராசுரன் என்பது அப் பூதத்தின் பெயராகும்.

"ஐயா! எனக்கு இடும் கட்டளை யாது?" என்று கேட்டான்.

"நீ இந்திரனைச் சென்று அழிக்க வேண்டும்" என்று கட்டளை இட்டான்.

விருத்திராசுரன் இந்திரனைத் துரத்தித் துரத்தி அடித்தான்; இந்திரனின் குலிசப்படை மிகவும் பழையதாகிவிட்டது; அதனை வச்சிரப்படை என்றும் கூறுவர். அதனால் அந்த அசுரனை இந்திரனால் வெல்ல முடியவில்லை; உயிர் தப்பிச் செல்லவும் முடியவில்லை. புதிய படைக் கருவி கிடைத்தால்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்தான்.

ஆபத்துக்கு உதவும் படைப்புக் கடவுளிடம் மறுபடியும் சென்று முறையிட்டான். "இந்திரப் பதவி கொடுத்தீர். ஆனால் போதிய படைபலம் இல்லாமல் இருக்கிறேன்; பயங்கரவாதிகள் என்னை எளிதில் தாக்கி விடுகின்றனர்; புதிய படைக்கருவி தேவைப்படுகிறது" என்றான்.

"என்னுடைய தொழில் படைத்தல்தான்; காத்தல் கடவுள் வேறு இருக்கிறார். திருமாலின் துறை அது. அவரிடம் சென்று இருவரும் முறையிடுவோம் வா" என்று கூறி இந்திரனை அழைத்துச் சென்றான்.