பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

255



“'என்னைப் பற்றியே நான் பேசுவதும், அதனால் அவரை ஏசுவதும் தவறுதான்; அவரை நம்பி நான் ஒருத்திதானா உயிர் வாழ்கிறேன்?”

“பட்டம் கட்டிக் கொண்டு அவர் பாரினை ஆள உலகம் அவரை எதிர்நோக்குகிறது; தாய்ப் பாசம் அவரை இழுக்கிறது. பரதன் அழுகை அவரை அழைக்கிறது; அவர் யாருக்காக வாழ்வது? கரை கடந்து தவிக்கும் என் துயருக்குக் கறை காண முடியாது; கரையைக் கரைக்க அவருக்கு அக்கறை பிறக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.”

“உற்ற கணவன் என்னைத் துறந்து கைவிட்டாலும் பெற்ற தந்தை. என்னை நினைந்து அழாமல் இருக்க மாட்டார்; அவருக்கு என் இறுதி வணக்கத்தை இயம்புக”

“உன் தலைவன் சுக்கிரீவனுக்கு இந்தச் செய்தியைச் சொல்லுக! சுந்தரத் தோழனுக்கு மணிமுடி சூட்டி அழகு பார்க்கச் சொல்; மாலை சூட்டி மகிழச் சொல்” என்று கண்களில் நீர் மல்கத் தன் இறுதிச் செய்தியைச் சொல்லி அனுப்பினாள்.

அவள் நெஞ்ச அவலத்தை அஞ்சனை மகன் அறிந்து வருந்தினான்; அதைத் துடைக்க ஆறுதல் மொழிகளைக் கூறினான்.

‘நீர் செப்புவது அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியாது; மரணத்தைப் பற்றிச் சிந்திக்க இது தருணம் அன்று; திங்கள் ஒன்று நீங்கள் இங்குத் தங்கி இருக்கத் தேவை இல்லை; ஊண் உறக்கமின்றித் தவிக்கும் புவிக்கு