பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அதை அணிந்து சென்றால் அதைப் பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?” என்ற முறையில் தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தன் அன்புத் தந்தையாரின் மன உணர்வை அறிந்த பாத்திமா நாச்சியார், “நாயகம் அவர்களே! நீங்கள் தானே போதித்தீர்கள், ஒருவருக்குத் தானம் தரவேண்டும் என்றால் நம்மிடமுள்ள பொருட்களில் உயர்ந்ததும் சிறந்ததும் எதுவோ அதை அளிக்க வேண்டும் என்பதாக அவர் கேட்ட போது என்னிடம் மிக உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் நீங்கள் திருமணப் பரிசாக வாங்கித் தந்த குப்பாயப் போர்வைதான் இருந்தது. அதையே அந்த முதியவருக்குத் தானமாக தந்து மகிழ்ந்தேன். அது தவறா, தந்தையே?" எனக் கேட்டார்.

பாத்திமா நாச்சியாரின் பதில் பெருமானாரையே வியக்கவும் திகைக்கவும் வைப்பதாயிருந்தது. இதைக் கேட்ட மாத்திரத்தில் பெருமானார் கண்கள் பனித்து விட்டன.

“நான் போதித்தவைகளை என் மகளே பேணி நடக்கிறாளா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இப்படியொரு கேள்வியைக் கேட்டேன். இப்போது, உன்னைப் பெற்றபோது அடைந்த மகிழச்சியைவிட பெருமகிழ்வடைகிறேன்” என்று பூரித்தார் என ஒரு அழகிய எழுத்தோவியமாகவே உமறுப் புலவர் தன் சீறாப் புராணத்தில் ஒரு காட்சியை,

"அழகியதெவையும் அல்லாஹ்வுக்காக
விழைவுடன் கொடுத்திட வேண்டும்
என்ற பழமறை வாக்கால் பகர்ந்ததாலரோ
மழை தவழ் கொடையினர், வழங்கினேன் என்றார்”

எனப் புனைந்துரைத்துள்ளார்.

தன் ஒரே மகள் திருமணத்திற்குத் திருமணப் பரிசாக ஒரு சிறு குப்பாயப் போர்வைதான் வாங்கித் தர இயன்றது