நான்கு நண்பர்கள்/முத்து மாலை

விக்கிமூலம் இலிருந்து
முத்து மாலை

ஆலமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டியிருந்தது. அந்த மரத்தின் கீழே ஒரு புற்று இருந்தது. அந்தப் புற்றில் ஒரு பாம்பு வசித்துவந்தது. அந்தப் பாம்பு பொல்லாத பாம்பு! அது அடிக்கடி மரத்தின் மேல் ஏறி, காக்கையின் முட்டைகளை உடைத்துச் சாப்பிட்டுவிடும்.

இதனால் காக்கை வருத்தப்பட்டது. நரியிடம் யோசனை கேட்டது. நரி ஒரு யோசனை சொன்னது அதைக் கேட்டதும், “சரியான யோசனை. நான் அப்படியே செய்கிறேன்” என்றது காக்கை.

உடனே காக்கை நேராக அரண்மனைக்குச் சென்றது. அரசகுமாரி குளிக்கும் இடத்தில் காத்துக்கொண்டிருந்தது.

அரசகுமாரி அங்கே வந்தாள். நகைகளைக் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டுக் குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய முத்து மாலையைக் காக்கை தூக்கிக்கொண்டு பறந்தது. உடனே அரசகுமாரி கூச்சல் போட்டாள். அரண்மனைச் சேவகர்கள் காக்கையைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள்.  காக்கை முத்து மாலையைப் பாம்புப் புற்றில் போட்டுவிட்டு மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. சேவகர்கள் புற்றின் பக்கத்திலே போனார்கள். உள்ளே முத்து மாலை கிடந்ததால் புற்றை இடித்தார்கள். அப்போது உள்ளேயிருந்த பாம்பு புஸ் என்று சீறிக்கொண்டு வெளியே வந்தது.  சேவகர்கள் பாம்பை ஈட்டியால் குத்தினார்கள். பாம்பு அங்கேயே செத்துப் போய்விட்டது.

சேவகர்கள் முத்து மாலையை எடுத்துக்கொண்டு திரும்பினார்கள்.

காக்கை சுகமாக வாழ்ந்தது.