3. இலக்கியம்
இலக்கியம்
சொற்களையும் வாக்கியங்களையும் உண்டாக்கிப் பாடவும் பேசவும் அறிந்த மக்கள். எழுத்து முறையைக் கண்டறிந்த பின்பு, தாம் அதுவரை வாழையடி வாழையாக அறிந்து வைத்திருந்த சமுதாயக் கருத்துகளையும் சமயக் கருத்துகளையும் பாக்களில் வடித்தனர். காலம் செல்லச் செல்ல அறிவு வளர வளர, மொழி வளம் பெற்றது. மொழி வல்ல அறிஞர்கள் மக்கள் படைத்த இலக்கியங்களையும் பேச்சு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு மொழிக்கு இலக்கணம் வகுத்தனர். பின்வந்த புலவர்கள் அந்த இலக்கண அமைதிக்கேற்பத் தமிழர் பழக்கவழக்கங்களையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் குறிக்கும் செய்யுட்களைச் செய்தனர்.
இலக்கியம் என்பது மக்களுக்கெல்லாம் பொதுவாகப் பயன்படும் பொருளை உடையதாய் இனிய வகையில் சொல்லப்படுவதாய் இருத்தல் வேண்டும்; சொற்கட்டுச் சிறந்து இன்பம் பயத்தலைக் குறிக்கோளாகப் பெற்றிருத்தல் வேண்டும்.[1] மக்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் செய்யுட்களோ நூல்களோ படிப்போரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவரது வாழ்க்கையையும் வழிப்படுத்த வல்லன. இவையே, இலக்கியம் எனப்படும்.[2] அபிமன்யு கொல்லப்பட்ட அன்றிரவு அவனை