தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/ஆக்கம் அழிவுக்கே
1. ஆக்கம்; அழிவுக்கே! |
Construction for
Destruction |
தென்னை மரத்தில் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தேங்காயை நாம் பார்த்திருக்கிறோம். அதே காய்கள் அங்காடிகளிலே விற்பனையாகும் போதும் நாம் அதனதன் அளவையும் அடிக்கடி கண்டிருக்கிறோம்.
பத்து தேங்காய் உருவம்
ஒரே தேங்காயில் அமைந்துள்ளது!
அத்தகைய தேங்காய்களைப் போல பத்து தேங்காய்களை ஒன்று சேர்த்து ஒரே காயாக்கினால் எந்த அளவிற்கு அதன் அளவில் அது பெரியதாக இருக்குமோ, அப்படிப்பட்ட அளவில் ஒரு தேங்காயை நீங்கள் தென்னை மரத்தில் இன்றுவரைப் பார்த்திருக்கிறீர்களா?
இத்தகைய ஒரு பெரிய தேங்காயை நான் பார்த்திருக்கிறேன். நான் மட்டும் பார்க்கவில்லை. கோவை நகருக்குச் சுற்றுலா வரும் பொது மக்களும், நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும் அந்தக் காய்களைக் கண்டு வியந்து போய் விட்டோம்!
கோவையில் எங்கே பார்த்திருக்கிறீர்கள் இந்த அதிசய, அற்புதத் தேங்காயை? என்று கேட்கிறீர்களா?
கோவை நகரில், காலம் சென்ற தொழிலியல் விஞ்ஞானி யான industrial Scientist மேதை ஜி.டி. நாயுடுவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும் பிரசிடென்சி ஹால் (Presidency Hall) எனப்படும் திரு. ஜி.டி. நாயுடுவினுடைய அறிவியல் பொருட்காட்சி அரங்கில் நாங்கள் அந்தத் தேங்காயின் புகைப் படத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டோம்.
தமிழகத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் அந்த விஞ்ஞான வித்தக அரங்கிற்குச் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து - அதைப் பார்த்துவிட்டு, அவரவர் புருவங்களை மேலேற்றிக் கொண்டே செல்கிறார்கள். அந்த அற்புதத் தேங்காயின் உருவப்படம் மட்டுமா அங்கே இருக்கின்றது?
வாழை மரம் அளவு :
உயரம் உள்ள நேற்செடி!
உழவர் பெருமக்கள், தங்களது வயல்களில் விவசாயம் செய்து வரும் நெற்பயிர்களை நாம் கண்டிருக்கிறோம். அந்தப் பயிர்களைப் போலல்லாமல், ஒவ்வொரு நெற்பயிர் செடியும், வாழை மரம் போல் உயர்ந்த வளர்ந்திருப்பதை நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் அன்ற வாழை மரம் போல் நீண்டு உயர்ந்து வளமாக வளர்ந்துள்ள நெற்பயிர் மரக் காட்சிப் படங்களைக் கண்டோம்! வியந்தோம்!
அந்த வாழை மரம் போன்ற விவசாய நெற்பயிர்களில் கதிர்கள் முற்றி, நாணம் கொண்ட பருவப் பெண்களின் சிவந்த முகங்களைப் போல செந்நெற்கதிர்கள் கொத்துக் கொத்தாக காய்த்துத் தலைக் குனிந்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பயிர்களின் காட்சியையும் - நாங்கள் அந்த அரங்கிலுள்ள நெற்பயிர் புகைப் படங்களிலே பார்த்தோம். பிரமித்துப் போனோம்!
பிறகு, வாழை மரங்கள் உள்ள படத்தையும் கண்டோம். அந்த வாழை மரங்களிலே தள்ளப்பட்டிருந்த ஒவ்வொரு வாழைக் குலையிலும்; வரிசை வரிசையாக அடுக்கி வைத்த தார் போன்றிருந்த வாழைச் சீப்புகளிலே உள்ள நூற்றுக் கணக்கான வாழைக் காய்கள், ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேலிருக்குமோ என்னவோ, அவ்வளவு பெரிய தோற்றமுடைய வாழைக் குலையை ஒவ்வொரு மரத்திலும் புகைப் படமாகப் பார்த்ததும்; எங்களையும் அறியாமல் அடே...யப்பா...! என்று அசந்து போனோம்!
தமிழ் நாட்டில் அபூர்வப் பிறவியாக, அதிசய மனிதராகப் பிறந்து மறைந்த தொழிலியல் விஞ்ஞானி கோயம்புத்தூர் துரைசாமி நாயுடு என்று தமிழ் மக்களால் போற்றிப் புகழப்பட்ட ஜி.டி. நாயுடுவின் அறிவியல் காட்சியகத்திலே, விவசாயத் துறையின் இந்த விஞ்ஞான அற்புதங்களைப் புகைப் படங்களாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளிலே கண்டோம்.
சுற்றுலா பயணிகளுடன்
நானும் இணைந்தேன்
கோவை நகர் சென்று அந்தக் காட்சியை நான் கான விரும்பியதைப் போல, கல்லூரி மாணவ, மாணவியர்களும் நான் அங்கே சென்ற அன்று பேருந்துகளிலே பயணம் வந்து பிரசிடென்சி ஹால் என்ற காட்சியரங்கம் முன்பு கூடியிருந்தார்கள். அவர்கள் கூட்டத்திலே நானும் ஒருவனாகச் சேர்ந்துக் கொண்டேன்.
நாள்தோறும் இவ்வாறு காட்சி அரங்கம் முன்பு திரண்டு காணப்படும் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, அங்கே இருக்கின்ற புகைப்படக் காட்சிகளை விளக்கிக் கூறிட பொறியியல் படித்த சுமார் இருபது வயதுள்ள ஒரு தெரிவை பெண் எங்களுடன் வந்தார்.
எங்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கேட்கும் கேள்வி களுக்கு அன்றலர்ந்த செந்தாமரை முகத்துடன் சற்றும் தயங்காமல், நகைச்சுவையுடனும் - நயத்துடனும் அந்தப் பெண் பதிலளித்துக் கொண்டே வந்து, ஒவ்வொரு காட்சியையும் சுட்டிக் காட்டினார்.
விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு அவர்கள், என்னென்ன அறிவியல் சாதனைகளைக் கண்டு பிடித்து உலகுக்கு அறிவு தானமாக, கொடை மட பண்போடு வழங்கினாரோ, அவை அனைத்தையும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட பிறவற்றையும் அந்தக் காட்சியக அரங்கத்துள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு இடம் பெற்றிருந்தன.
அந்த நிழற்படக் காட்சிகள் ஒவ்வொன்றையும், என்போன்ற சுற்றுலா பயணிகள், மாணவிகள், மாணவர்கள், பொது மக்களுள் சிலராக வந்த எல்லாரும் கூர்ந்து நோக்கியவாறே அரங்குக்குள் நகர்ந்துக் கொண்டே இருந்தோம் - ஆமைகள் போல!
நாங்கள் அங்கே கண்ட சில காட்சிகள் இவை : தொழிலியல் ஞானி நாயுடு அவர்கள் கண்டுபிடித்த கடிகாரங்கள், வானொலிப் பெட்டிகள், பொறியியல் இயந்திரங்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட உதிரி உறுப்புகள், மனிதனுடைய உருவத்தைச் சிறியதாகவும், பெரியதாகவும், எதிரொலிக்கும் தகடுகள், அழகாக பாதுகாப்பாக, அடுக்கடுக்காக அவை அடுக்கி வைப்பட்டிருக்கும் காட்சிகள், இவற்றையெல்லாம் மேதை ஜி.டி. நாயுடு மறைவுக்குப் பிறகும், பொறுப்போடு திரட்டிச் சேகரித்து, பாதுகாப்போடு காட்சி அரங்கமாக வைக்கப்பட்டிருக்கும் அந்த விஞ்ஞான வித்தகரின் திருக்குமாரர் திரு. ஜி.டி. கோபால் அவர்களின் அக்கறையான அரும் உணர்வுகளையும் கண்டு, நான் மட்டுமன்று, என் போன்ற எண்ணிலர் அசந்து போனோம் அடே....யப்பா... என்று!
காட்சியகத்திலே கண்ட அதிசயங்கள்!
அந்த அரங்கத்தின் காட்சிகளில் ஒன்றில் - கார் ஒன்றைக் கண்டேன் பாவாணர் மொழிப்படி அந்த 'உந்து'வுக்கு மேல் கூரை இல்லை; அதாவது மூடப்படும் மேல் மூடி தகடு இல்லை. திறந்த வெளி உந்து அது. அதன் அப்போதைய விலை என்ன தெரியுமா? இரண்டே ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.
அந்த மேற்கூரையற்ற திறந்த காரிலே சவாரி செய்தவர்கள் யார் யார் தெரியுமா? ஒட்டுநர் ஜி.டி.நாயுடு, எதிர்கால இந்தியக் குடியரசுத் தலைவர்களுள் ஒருவராக இருந்தவரும், அப்போதைய தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கிய திரு. வி.வி. கிரி, மற்றும் ஜி.டி. என். அவர்களின் நண்பர்கள் ஓரிருவர் உட்பட அந்த 'உந்து'வில் அமர்ந்து கோவை நகரைப் பவனி வந்திருக்கிறார்கள். அந்தக் காட்சிகளும் அரங்கில் புகைப்படங்களாக உள்ளன.
தந்தை பெரியாரும், தொழிலியல் ஞானியுமான ஜி.டி. நாயுடுவும் இணைந்து பங்கேற்ற சில விழாக்கள், பொதுமக்கள் கருத்தரங்குகள் ஆகியவற்றை நினைவுப்படுத்தும் நிகழ்ச்சிச் சம்பவங்களும் அங்கே படங்களாக வைக்கப்பட்டிருந்தன.
இவை மட்டுமா? மின்காந்த ஆற்றலோடு இயங்கும் விளையாட்டு இரயில் ஒன்றை எங்களுக்கு அங்கே இயக்கிக் காட்டினார்கள். அந்த இரயில், நாங்கள் தற்போதைய சென்னை கிஷ்கிந்தா காட்சித் திடலிலும், தீவுத் திடல் காட்சியரங்கிலும், வி.ஜி.பி.-யின் தங்கக் கடற்கரையில் கண்டு களித்ததுபோன்ற உணர்ச்சிகளையும் நினைவூட்டின.
அதனால், ஜி.டி. நாயுடு விளையாட்டு இரயில் இயக்கம், அதன் அறிவியல் நுட்பச் சாதனை, எங்களை அடிமை கொண்டது. அந்த ஆண்டுகளிலேயே ஜி.டி. நாயுடு அவர்களது சிந்தனை, தற்போதைய ஆண்டுகளின் விஞ்ஞான வளர்ச்சியை நினைவூட்டி, வியப்பை விளைவித்தது என்றால், எத்தகைய ஓர் அறிவியல் சிந்தனையோடு அதை அவர் அக் காலத்திலேயே உருவாக்கி இருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வேளாண்மைத் துறையில் ஜி.டி. நாயுடு, தேங்காய் புரட்சி, வாழைப் புரட்சி, நெற்பயிர்களது விவசாயப் புரட்சிகளை மட்டுமே செய்து காட்டியவர் அல்லர்.
விவசாயத் துறையிலே பருத்தி விளைவிப்பதில் புரட்சி, துவரையில் புரட்சி, பப்பாளிப் பழம் புரட்சி, ஆரஞ்சுப் புரட்சி, காலிஃபிளவர் புரட்சி, சோளம் புரட்சி போன்ற பல புரட்சிகளை எல்லாம் - தனது சொந்த விவசாயப் பண்ணையிலே விளைவித்துக் காட்டி நிரூபித்துச் சாதனை புரிந்த செயல் வீரர் செம்மல் ஜி.டி. நாயுடு என்றால், இது ஏதோ புத்தகச் சடங்குக்காகக் கூறப்பட்டதன்று என்பதை - இன்றைய இளைய தலைமுறையினர் உணர வேண்டுகிறோம்.
பிரிசிடென்சி அரங்கில் எங்களுடன் வலம் வந்த அந்த Guider ஆகிய வழிகாட்டி நெறிப்படுத்தும் மங்கையின் விளக்கவுரை, சாதனையுரைகளைச் சாற்றிய பாங்குரை, எங்களுடைய மன உணர்வுகளுக்கு ஒரு நல் விருந்தாக அமைந்தது.
அந்தப் பெண், செல் விருந்தோம்பி எங்களை வழியனுப்பி வைத்த பின்பு, வரு விருந்தினர் திரள்களுக்காக எங்களை விரைவுப் படுத்தி கொண்டே எங்களுடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தாள்.
ஆனால், எங்களைப் பொருத்தவரையில் அந்த விஞ்ஞான அரங்கை விட்டு வெளியே வர முடியாத சொல்லொணா மகிழ்ச்சியில் திளைத்தோம்; இப்படியும் ஒரு விஞ்ஞானி தமிழ்நாட்டில் இருந்தாரா என்று மாணவர்கள் பேசிக் கொண்டே வந்தார்கள். விஞ்ஞான மேதை மட்டுமல்ல ஜி.டி.நாயுடு; ஒரு தொழில் மேதையும் கூட. தனது மோட்டார் தொழிலை, ஜி.டி. நாயுடு ஒரே ஒரு பேருந்துவைக் கொண்டு இயக்கத் துவங்கினார்.
முதலாளியும் அவரே!
தொழிலாளியும் அவரே!
எறக்குறைய 200க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு ஜி.டி. நாயுடு உரிமையாளர் ஆனார் என்றால், இது என்ன மாய மந்திரத்தால அந்த பேருந்துகளை உருவாக்கினார்?
இது என்ன சாதாரணமான சாதனையா? அவற்றுக்காக அவர் இரவும் பகலும் உழைத்த உழைப்புகள் என்ன சாமான்யமானதா? எண்ணிப் பாருங்கள். இவரல்லவா உழைப்பால் உயர்ந்த உத்தமர்?
அமெரிக்க மோட்டார் மன்னர் ரூதர் ஃபோர்டு, தனது மோட்டார் கார் தொழிலில் சாதனை புரிய என்ன அரும்பாடு பட்டாரோ, அவரைவிட பல மடங்கு உழைப்புக்களை ஜி.டி. நாயுடு தனது தொழிற்துறை வெற்றிக்காகத் தியாகம் செய்தவர் என்றால், இது ஒர் அரிய செயற்கரிய செயலல்லவா?
கோவையில் பேருந்துகளை நடத்திய அவரது துவக்கக் காலப் பேருந்து நிறுவனத்துக்கு ஜி.டி. நாயுடுவே முதலாளி. அவரே அந்த ஒரு பேருந்துக்குரிய ஒட்டுநர், அவரே கிளினர். பஸ் நிலையத்தில் குரல் கொடுத்துப் பயணிகளைச் சேகரிக்கும் பணியாளர், சுருங்கக் கூறுவதானால் எல்லாமே ஜி.டி. நாயுடு தான்.
முதலாளிக்கு முதலாளியாகவும், தொழிலாளிக்குத் தொழிலாளியாகவும் அவரே வேலை செய்ததால்தான், தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம், வளம், நலம் ஆகியவைகள் உயர முடியும் என்ற உண்மைகளை அவர் உணர்ந்தார்.
அவரது பேருந்து நிறுவனத்தில் தொழிலாளி ஒருவன் உடல் நலமில்லாமல் தொழிலுக்கு வந்து பணியாற்றினால், ஜி.டி. நாயுடு நிறுவன நிர்வாகம் அந்தத் தொழிலாளிக்குப் பத்து ரூபாயை அபராதம் விதித்தது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?
தொழிலாளர் சுகமே, நலமே தனது சுகம், நலம் என்று ஜி.டி. நாயுடு எண்ணி வாழ்ந்ததால்தான், அவரால் ஒரு பெரும் பேருந்து நிறுவனத்துக்கும், 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும், முதலாளியாக உயர முடிந்தது. அத்துடன் அந்த மனித குல நேயர், தொழிற் சங்கத் தலைவராகவும் நியமனமாகி முன்னேற முடிந்தது.
நாயுடு கண்டுபிடித்த :
அற்புத சாதனைகள்
முகம் சவரம் செய்யும் ரேசண்ட் என்ற பெயருடைய பிளேடு ஒன்றை ஜி.டி. நாயுடு கண்டு பிடித்தார். அந்த பிளேடு 200 முறைகள் முகச் சவரங்களைத் தொடர்ந்து செய்யும் கூர்மை பெற்றதாக இருந்தது. ஏறக்குறைய 2 ஆண்டுக்களுக்கு அந்த பிளேடு முக சவரம் செய்யுமாம்!
அப்படிப்பட்ட அற்புத பிளேடு ஒன்றை இதுவரை உலகத் தால் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்றால், ஜி.டி. நாயுடுவின் விஞ்ஞான ஆய்வுத் திறத்தின் திறமை எவ்வளவு நுட்பமானது என்று எண்ணிப் பார்ப்போருக்குத்தான் உண்மை புரியும்.
ஒலி சமனக் கருவி என்ற ஒன்றக் கண்டுபிடித்தவர் ஜி.டி நாயுடு. அதை ஆங்கிலத்தில் Distance Adjuster என்பார்கள். அதன் விவரத்தை உள்ளே உள்ள பகுதிகளில் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
எடிசன் கைவிட்ட
ஒட்டுப் பதிவு இயந்திரம்!
இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தலில், மக்கள் வாக்குகளைப் பதிவு செய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்தப் போவதாக, இந்தியத் தேர்தல் அதிகாரிகள் இப்போது மிகப் பெரு மிதத்தோடு கூறுகிறார்கள். ஏதோ ஒரு புதிய விஞ்ஞானக் கருவியைப் பயன்படுத்தபோவது போல மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள்.
வாக்குப் பதிவு செய்யும் இந்த இயந்திரத்தை, அதாவது vote Recording Machine என்ற மின்சாரக் கருவியை, ஜி.டி. நாயடு 50 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார். அதை அப்போதைய இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டன. இப்போது அதே ஒட்டுப் பதிவு இயந்திரத்தைத் தேர்தல்களிலே பயன்படுத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜி.டி. நாயுடு கண்டுபிடிப்பில் இந்த வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவரான தாமஸ் ஆல்வாய் எடிசன், இந்த ஒட்டுப் பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க மிக முயற்சி செய்தார். ஏதோ சில சிக்கல்களால் அவர் அந்த முயற்சியை அன்று கைவிட்டு விட்டார்.
எடிசன் கைவிட்ட அந்த அரும் முயற்சியை, தமிழ்நாட்டுத் தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு அப்போதே கண்டு பிடித்தார் - வெற்றியும் பெற்றார்!
சாலைகளில் ஓடும் பேருந்துகளின் வேக அதிர்ச்சிகளைச் சோதித்துப் பார்க்கும் Vibrat Testing Maching என்ற ஒரு கருவியை ஜி.டி. நாயுடு கண்டுபிடித்தார்.
இந்த வேக அதிர்ச்சியைச் சோதிக்கும் கருவியைக் கண்டு பிடித்தவர். தனது பேருந்துகள் ஒடும் வேகம் என்ன? எவ்வளவு? என்பதை அறிவதற்காகவே முதன் முதலாக அதைப் பயன்படுத்திடத் தனது பேருந்துகளுக்குப் பொருத்தினார்.
பழங்களைச் சாறு பிழியும் கருவிகள் இப்போது பழக் கடை களில் இயங்குவதைப் பார்க்கின்றோம். சாத்துக்குடி ஜூஸ், ஆப்பிள். திராட்சை, அன்னாசி, சப்போட்டா, ஆரஞ்சு, காரட் போன்றவைகளை இயந்திரக் கருவிகளில் போட்டு சாறு பிழிந்து விற்கிறோம். பருகுகிறோம் அல்லவா? அந்தக் கருவிகளைக் கண்டு பிடித்தவர் நமது ஜி.டி. நாயுடுதான். இது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இரும்புச் சட்டங்களில் உள்ள நுணுக்கமான வெடிப்புகளைக் கண்டுபிடிக்கும் Magro Plux Testing Unit என்ற கருவியை ஜி.டி. நாயுடு என்ற அறிவியல் மேதைதான் கண்டுபிடித்தார். யாருக்குத் தெரியும் இந்த விஞ்ஞான சாதனை? இருட்டடிப்பு செய்து விட்டன அப்போதைய மத்திய - மாநில அரசுகள்.
இன்றைக்கு எந்தக் கணக்கைப் போடுவதானாலும் சுலப மாகப் போடுவதற்குரிய Calculating Machine-னைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஒவ்வொரு மளிகைக் கடைக்காரனும் அதைப் பயன் படுத்திடும் வளர்ச்சியை அது பெற்றுள்ளது. அந்தக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? நமது தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு அவர்கள்தான்.
இவை மட்டுமா? தூரத்துப் பார்வைக்காகப் பயன்படுத்தும் தொலைப் பார்வை கண்ணாடியான Lence-யும்; குளிர்பதனக் கருவியான Refrigerator-யும்; ஒலிப்பதிவு செய்யும் இயந்திரமான Recording Machine-யும், வானொலி கடிகாரமான Radio Clock-கையும் காஃபி தரும் கலவை இயந்திரமான Coffee Supplier-ரையும், பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பேருந்துகளின் கால நேரத்தையும், அது போலவே நிலையத்தை விட்டுப் புறப்பட்டு வெளியே போகும் காலத்தையும், கணக்கிடும் கருவியையும், உணவு தானியங்களை மாவாக அரைக்கும் Griender கருவிகளையும், வானொலி Radio பெட்டிகளையும் கண்டுபிடித்தவர் நமது ஜி.டி. நாயுடுதான் என்றால், தமிழ் மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.
நகராட்சிகள், பேரூராட்சிகள், பெரும் நகரங்கள்தோறும் முக்கியமான இடங்களில் நான்கு முகக் கடிகாரங்களை - அதாவது Tower Clock-க்கையும், கார்களுக்கும், அதாவது உந்து வண்டி களுக்கும், பேருந்துகளுக்கும் தேவையான உதிரி உறுப்புகளைச் செய்து கொள்ளும் Foundry Castings கருவிகளையும், மின்சார மோட்டார் உற்பத்திகளையும் கண்டுபிடித்த விஞ்ஞானியாகவும் ஜி.டி.நாயுடு விளங்கினார்.
செப்புக் கம்பிகளைப் பல வகையான அளவில் தயார் செய்யும் ஆர்முச்சூர் வைண்டிங் என்ற டைனமோக்களுக்குத் தேவையான கம்பிச் சுருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் ஜி.டி. நாயுடு உருவாக்கினார்.
சத்து மாவு தயாரிக்கப்படும் Malt Products நிறுவனத்தை நாயுடு ஏற்படுத்தினார். காசுகளை ஒரு கருவியுள் போட்டால், அந்தக் கருவி தானாகவே பாடல்களை பாடும் Slot Singing Machine-யும் பொழுது போக்குக்காகக் கண்டுபிடித்தவர் திரு. நாயுடு.
மேற்கண்ட கண்டுபிடிப்புக் கருவிகளை எல்லாம் தொழில் நிறுவனத்தின் பயன்பாடுகளுக்காக உருவாக்கியவை போக, கல்வித் துறையில் தொழில் நுணுக்கப் பள்ளி, பொறியியல் கல்லூரி போன்ற பள்ளிகளையும், சித்த மருத்துவத் துறையில், பல மருந்துகளைப் பரிசோதித்து நீரிழிவு நோயை குணமாக்கும் மருந்துகளையும், வெள்ளை - வெட்டை என்ற நோய்களுக்குத் தனது நண்பர்களுடன் இணைந்து, மேல் நாடுகள் போற்றுமளவுக்கு சிறப்பான மருந்துகளையும், ஜி.டி.நாயுடு கண்டுபிடித்தார். இதனால் சித்த வைத்தியப் பேராசிரியர் என்ற பட்டத்தையும் நாயுடு பெற்றார்.
ஆக்கம் அழிவுக்கே!
உடைத்து நொறுக்கினார்!
இவை மட்டுமா? அறிவியல், தொழிலியல் துறைகளில் மேலும் பலவிதமான அரிய கண்டுபிடிப்புகளை எல்லாம் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த விவரங்களை, புத்தகத்தின் உள்ளே நீங்கள் படித்து மகிழலாம்.
இத்தகைய அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை அரும் பாடுபட்டுக் கண்டுபிடித்த ஜி.டி.நாயுடு, தனது விஞ்ஞான விந்தைக் கருவிகள் எல்லாவற்றையும் சென்னையில் ஒரு பொருட்காட்சியாகத் திறந்து வைத்து, மக்களைப் பார்க்குமாறு செய்தார்.
மக்கள் அந்தப் பொருட்காட்சியைப் பார்த்த பின்பு, மனம் நொந்து, விரக்தி உள்ளத்தோடு, வேதனைப்பட்டு, “ஆக்கம் அழிவுக்கே' Construction for Destruction என்ற அறிவிப்புப் பலகையிலே அதை எழுதி, அந்த காட்சியகத்தின் வாயிலிலே மாட்டித் தொங்க வைத்து, அதனையும் மக்கள் பார்க்குமாறு செய்தார் ஜி.டி. நாயுடு.
தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணா அவர்களையும் அந்த விஞ்ஞானப் பொருட் காட்சியகத்துக்கு வரவழைத்து, அவர்களையும் அவற்றைப் பார்க்கச் செய்த பின்பு, கூடியுள்ள மக்கள் கூட்டத்திற்கு முன்பாக, தனது அரிய கண்டுபிடிப்புக் கருவிகளை எல்லாம் மக்களை விட்டே அடித்து உடைத்து நொறுக்கினார்!
தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு மனம் உடைந்து ஏன் அவற்றை அடித்து உடைத்து நொறுக்கினார்? என்ற விவரத்தை நீங்கள் இந்த நூல் உள்ளே படிக்கலாம் வாருங்கள்!