மனத்தின் தோற்றம்/மொழி ஒப்பியல்
13. மொழி ஒப்பியல்
(Comparative Philology)
ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் உலகியலில் உண்டு. நாம் இதற்கு முன் பார்த்தறிந்தவர் போன்றுள்ள மற்றொருவரைக் காணின், உடனே முன்னவரின் நினைவு வருகிறது. அவர் போலவே இவரும் இருக்கிறாரே என்று எண்ணுகிறோம். இருவரிடையே காணப்படும் ஒற்றுமை தொடர்பாக ஒரு சிறிய ஆராய்ச்சியிலும் சிலர் ஈடுபடுவதுண்டு. இவர் என்ன - அவர் பிள்ளையா யிருப்பாரா என்று சிலரும், உடன் பிறந்தவரா யிருப்பாரா அல்லது பங்காளியா யிருப்பாரா என்று சிலரும் எண்ணக்கூடும். ஒற்றுமை யுடையவர்களுள் பெரும்பாலோர் உறவினராயிருப்பர் சிறுபாலார் ஒருவகை உறவும் இன்றியே, இயற்கையாக - தற்செயலாக ஒற்றுமை அமையப்பெற்றி ருப்பர். இவ்வாறு ஒருவரோடு இன்னொருவரை ஒப்பிட்டுப் பார்ப்பது போலவே, ஒரு மொழியோடு பிற மொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் வழக்கம் பிற்காலத்தில் ஏற் பட்டது.
நாம் வாழும் இவ்வுலகம் பல்வேறு பகுதிகளாய்ப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழிகள் ஒன்றோடொன்று ஒற்றுமை யுடையனவாய் இருத்தல் இயல்பு. ஒற்றுமையுடைய மொழிகள் ‘ஒரு குடும்ப மொழிகள்’ என மொழியியல் அறிஞர்களால் கூறப்படுகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம் முதலியன வாகப் பல்வேறு மொழிக் குடும்பங்கள் பேசப்படுகின்றன.
ஒரு மொழியும் அதிலிருந்து பிறந்த பல மொழிகளும், ஒரு மொழியும் அதிலிருந்து பிரிந்த பல மொழிகளும், ஒரு மொழி திரிந்து வேற்று மொழிகளின் கலப்பினால் உரு மாறிய பல மொழிகளும் ஒவ்வொரு குடும்பம் எனக் கூறப் படும். ஒரு குடும்ப மொழிகள் நாளடைவில் தமக்குள் பல் வேறு வகையான மாறுபாடுகள் பெற்றிருப்பினும், அவற்றின் அடிச்சொற்கள் பெரும்பாலும் ஒத்திருக்கும். ஒரு குடும்ப மொழிகட்குள்ளேயே, மிக மிக நெருங்கிய மொழிகளின் அடிச்சொற்கள் கட்டாயம் ஒத்திருக்கும்; நெருக்கம் குறைந்த ஒரு குடும்ப மொழிகளில் பெரும்பாலான அடிச்சொற்கள் ஒத்தில்லாவிடினும், அப்பா, அம்மா முதலிய முறைப் பெயர்களும், ஒன்று, இரண்டு முதலிய எண்ணுப் பெயர்களும் இன்ன பிறவுமாவது ஒத்திருக்கும். இப்படிப் போல உள்ள சில அல்லது பல ஒற்றுமைகளைக் கொண்டு ஒரு குடும்ப மொழிகளை அடையாளங் கண்டுகொள்ளலாம். இந்த அடிப்படையிலேயே உலக மொழிகள் மேற்கூறிய பல்வேறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொழிகள் பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மொழி ஒப்பியல் ஆராய்ச்சிகளும் விரிவும் வளர்ச்சியும் அடைந்து வருகின்றன. இந்த ஒப்பியல் மொழியாராய்ச்சி சுவைமிக்க ஒரு கலையாகவும் காட்சியளிக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சர். வில்லியம் ஜோன்சு (Sir William Jones) என்பவர் வடமொழி என்கிற சமசுகிருதம் பயின்றார். சமசுகிருத மொழிக்கும் - கிரேக்கம், இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகட்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் அவரது உள்ளத்தைக் கவர்ந்தன. மேலும் ஆராய்ந்து, சமசுகிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகட்கும் உள்ள ஒப்புமைகளை விளக்கி, அவை ஒரு குடும்ப மொழிகள் என்னும் உண்மையை கி.பி. 1786ஆம் ஆண்டில் வெளியிட்டு ‘மொழி ஒப்பியல்’ அல்லது ‘ஒப்பு மொழியியல்’ (Comparative Philology) என்னும் புதுத்துறைக்கு வித்திட்டார். பின்னர் இவரைத் தொடர்ந்து அறிஞர் பலர் இத்துறையில் ஈடுபட்டு ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிடலாயினர்.
‘ராஸ்மஸ் ராஸ்க்’ (Rasmus Rask) என்னும் டேனிஷ் காரர் (1787-1832) ஆரிய மொழிகள், பின்னோ - ஊக்ரிக் மொழிகள், திராவிட மொழிகள் ஆகியவற்றை அரிதின் முயன்று வகைப்படுத்தினார்.
‘பல்லஸ்’ (P.S. Pallas) என்பவர் 1791ஆம் ஆண்டிலும், ‘அதெலுங்’ (J. C. Adelung) என்பவர் 1817ஆம் ஆண்டிலுமாக, பல மொழிகளினின்றும் சொற்களைத் தொகுத்துச் சொல் அட்டவணைகள் சில படைத்தார்கள். இவ்வாறு மற்றும் சிலர் மொழி ஒப்பியல் ஆராய்ச்சியில் கருத்து செலுத்தினர்.
இத்தகைய ஆராய்ச்சிகளின் பயனாக, சமசுகிருதமும் மேற்கு ஆசிய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் 'இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் பிரிவைச் சேர்ந்தவை என்னும் உண்மை நாளடைவில் தெளிவுபட லாயிற்று. ஆனால், வட இந்திய மொழிகளேயன்றித் தென்னிந்திய மொழிகளுங்கூட, சமசுகிருதம் என்னும் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் தவறான எண்ணம் ஐரோப்பிய மொழி நூலறிஞர் பலரிடையே நெடுங்காலம் நிலவி வந்தது.
இந்நிலையில், நேப்பாளத்தில் நெடுநாள் இருந்த ஹாட்சன்[1] (Hodgson) என்னும் பெரியார், வட இந்திய தென்னிந்திய மொழிகளிலுள்ள சொற்களைத் தொகுத்துச் சில ஆய்வுரைகளை வெளியிட்டு, வட இந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் வெவ்வேறு குடும்பத்தவை என்னும் உண்மைக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வித்திட்டார். பம்பாயில் பன்னாள் வாழ்ந்த ‘பெறி’ என்னும் பேரறிஞர், இந்திய மொழிகளை நன்காராய்ந்து, வட இந்திய மொழிகள் ஆரியக் குடும்பத்தை யும் தென்னிந்திய மொழிகள் தமிழ்க் குடும்பத்தையும் சேர்ந்தவை என்னும் கொள்கையை வெளியிட்டார். இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஐரோப்பிய அறிஞர் சிலரின் உள்ளத்தை ஈர்த்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கால்டுவெல் (Caldwell) என்னும் பெரியார் தமிழ் நாட்டில் வந்து தங்கினார்; தென்னிந்திய மொழிகளைக் கற்றார்; அம்மொழிகளினிடையே உள்ள இலக்கண ஒப்புமைகளை ஆராய்ந்து பதினைந்து ஆண்டுகாலம் ஓயாது உழைத்து 'திராவிட (தென்னிந்திய) மொழிகளின் ‘ஒப்பிலக்கணம்’ (Comparative grammar of Dravidian Languages) என்னும் அரிய நூலை ஆக்கி 1856ஆம் ஆண்டில் வெளியிட்டு ‘ஒப்பிலக்கணம்’ என்னும் புதுத்துறையைத் தொடங்கி வைத்தார். இப்புது முயற்சியை மொழி நூலறிஞர்கள் மிகவும் வியந்து பாராட்டினர். ஒப்பிலக்கணத் துறையின் தந்தையாக விளங்கிய கால்டுவெல் அவர்களின் புதுத்துறைப் படைப்பைப் பாராட்டி, இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகம் ‘டாக்டர்’ என்னும் சிறப்புப் பட்டம் அளித்துச் சிறப்புப் பெற்றது.
கால்டுவெல் அவர்களின் படைப்பைக் கண்டு ஊக்கங் கொண்ட ஐரோப்பிய மொழி நூலறிஞர் சிலர், தாமும் அவர் பாதையைப் பின்பற்றி ஒப்பிலக்கண நூல்கள் படைக்க லாயினர், அறிஞர் ‘ழீல் பிளோக்’ (Jules Bloch) என்பவர் ‘திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு’ என்னும் தலைப்பில், திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஆராய்ந்து பிரெஞ்சு மொழியில் நூலொன்று படைத்தார். ‘பாப் (Fronz Bopp) என்பார் (1791-1867) இந்திய-ஐரோப்பிய மொழிகளின் ஒப்பிலக்கணம் இயற்றினார். ‘புரூக்மன்’ (Brugmann) என்பவர் (1849-1919) இந்திய - ஐரோப்பிய மொழிகட்குப் பொது ஒப்பிலக்கணம் படைத்தார். மற்றும், கோல் புரூக், கிரீம், மாக்ஸ் முல்லர், விட்னி முதலிய அறிஞர் சிலரும் இத்துறையில் ஈடுபட்டுப் பணியாற்றினர். இவ்வாறு இவர்கள் இந்திய - ஐரோப்பிய மொழிகளை ஆராய, ‘பிளீக்’ (Bleek) என்பவரோ, தென்னாப்பிரிக்க மொழிகளை ஆராய்ந்து அவற்றிடையே உள்ள ஒப்பிலக்கணக் கூறுகளைத் துருவியெடுத்துத் தந்து ‘தென்னாப்பிரிக்க மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (Comparative Grammar of the South African Languages)என்னும் நூலை வெளியிட்டார். இப்படியாக ‘ஒப்பு மொழியியல்’ (Comparative Philology) என்னும் கலைக்குள்ளேயே ‘ஒப்பிலக்கணம்’ என்னும் துறையும் ஒரு பிரிவினதாய் வளர்ந்து வரலாயிற்று.
கால்டுவெல் அவர்களின் படைப்பை அடிப்படையாகக் கொண்டு, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்கள் பல தோன்றலாயின. இந்தத் துறையில் தேவநேயப் பாவாணர், வேங்கடராசுலு ரெட்டியார் முதலிய அறிஞர்கள் பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இன்னும் இந்தத் துறை ஓர் எல்லையில் நின்றுவிடாமல் வளர்ந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகட்குள்ளே உள்ள ஒப்புமைகளை ஆராய்ந்து வெளியிடுவது ஒருபுற மிருக்க, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மொழி கட்குள்ளே உள்ள ஒப்புமைகளை ஆராயும் முயற்சியிலும் அறிஞர் சிலர் ஈடுபடலாயினர். கால்டுவெல் அவர்களே கூட, தென்னிந்தியாவில் பேசப்படும் திராவிடக் குடும்ப மொழிகட்கும், ஆசிய நாடுகளில் பேசப்படும் சித்தியக் குடும்ப மொழிகட்கும் இடையே ஒற்றுமையிருப்பதாக ஆய்ந்து தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளை ஆராய்ந்த கிரையர்சன் (Dr. Grierson) போன்றோர் சிலர் திராவிடக் குடும்ப மொழிகளை வேறு உலகக் குடும்ப மொழிகளோடு ஒத்திட்டுக் கூறத் துணியாவிடினும், இலங்கைப் பேரறிஞரான ஞானப்பிரகாச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, O. M, I.), ஆக்சுபோர்டு பல்கலைக்கழப் பேராசிரியர் டி. பர்ரோ (T. Burrow), கலிபோர்னியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எம். பி. ஏமெனோ (M. B. Emeneau) போன்றோர் சிலர் திராவிட மொழிகளை உலக மொழிகளோடு பிணைத்துப் பேசியுள்ளனர்.
ஞானப்பிரகாச அடிகளார் 1938-ஆம் ஆண்டளவில், ‘சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி’ (An Etymological And Comparative Lexicon of the Tamil Language) என்னும் அகராதியொன்று படைத்தார். இதில், சொற்பிறப்பும் மொழி ஒப்பியலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறப்பட்டிருக்கும் இவ்வகராதியில், எடுத்துக் கொண்ட ஒரு சொல், எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாகிறது என்பது காட்டப்பட்டிருப்பதோடு, அத்தமிழ்ச் சொல் மற்ற இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய - ஒத்த நிலையில் வழங்கப்படுகிற அவ்வம் மொழியுருவங்களும் (Indexes of Words Quoted from Indo-European Languages) கொடுக்கப்பட்டிருப்பது, இவ்வகராதிக்கு மட்டுமன்றித் தமிழ் மொழிக்கும் மாபெருஞ் சிறப்பளிக்கிறது. ஞானப்பிரகாச அடிகளார், நூலின் முன்னுரையில் பின்வருங் கருத்துக் களைத் துணிந்து வெளியிட்டுள்ளார்:
“தமிழ்ச் சொற்கள் முதல்முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலி &535] ōïT அடிப்படையாகக் கொண்டவை; தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப் படையாகும். எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவங்கொண்டன என்பது புலப்படும்”.
இவ்வாறு ஞானப்பிரகாச அடிகளார், திராவிடக் குடும்பத்தின் தலைமை மொழியாகிய தமிழோடு உலக மொழிகளை முடிச்சுப் போட்டுள்ளார். பேராசிரியர்கள் பர்ரோ, ஏமெனோ ஆகிய இருவரும் இணைந்து ‘A Dravidian Etymological Dictionary’ என்னும் அகராதி யொன்றை 1961ஆம் ஆண்டில் வெளிளிட்டுள்ளனர். இந்த அகராதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பத்தொன்பது திராவிடக் குடும்ப மொழிகளிலுள்ள ஒத்த உருவமுடைய சொற்கள் சிலவற்றை ரோமன் (ஆங்கில) எழுத்தால் எழுதி, அவற்றிற்கு ஆங்கிலத்தில் பொருள் கூறியுள்ளனர். இந்நூலில் திராவிட மொழிகளுக்குள் தமிழே முதன்மை பெற்றுள்ளது. முதலில் ஒரு தமிழ்ச் சொல் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளது; அதனையடுத்து அதே பத்தியில் அந்தத் தமிழ்ச் சொல்லோடு ஏறக்குறைய ஒத்த தோற்றமுடைய வேறு சில திராவிட மொழிகளின் சொற்கள் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப் பட்டுள்ளன. சில சொற்கட்குப் பொருள் கூறுமிடத்து, திராவிட மொழிகளிலுள்ள ஒத்த உருவமுடைய சொற் களேயன்றி, திராவிட மொழிகளிலிருந்து இந்தோ-ஆரியன் மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் சென்று கலந்துள்ள சில சொற்களும் உடன் கொடுக்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன. இந்த அகராதியில், பத்தொன்பது திராவிடமொழிகளும், வடஇந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் வழங்கும் பதினைந்து இந்தோ-ஆரியன் மொழிகளும், அரபு, பாரசீகம், பலுச்சி ஆகிய ஆசிய மொழிகளும், கிரீக், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய ஐரோப்பிய மொழிகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகாறும் கூறியது, மொழி ஒப்பியல் வரலாற்றின் ஒரு சுருக்கமாகும்.
- ↑ Linguistic Survey of India, VOL. 1