உள்ளடக்கத்துக்குச் செல்

மனத்தின் தோற்றம்/சிலம்பில் இரு குரவைகள்

விக்கிமூலம் இலிருந்து

15. சிலம்பில் இரு குரவைகள்




சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என இரு பெருங் குரவைக் கூத்துப் பகுதிகள் உள்ளன. குரவை என்பது, மகளிர் கைகோத்துப் பாடி ஆடும் ஒரு வகைக் கூத்து. ஆய்ச்சியர் குரவையைத் திருமாலைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும், குன்றக் குரவையை முருகனைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும் கூறும் அளவுக்கு, இரண்டும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்னும் முறையில் சிறந்து திகழ்கின்றன. சுவையான இந்தப் பகுதிகளை எழுத ஆசிரியர் இளங்கோ அடிகள் எங்கே யாரிடம் கற்றாரோ என வியக்கத் தோன்று கிறது. இனி முறையே அவை வருமாறு:

1. ஆய்ச்சியர் குரவை

ஏழுகள்

தாம் வாழும் பகுதியில் தீய நிமித்தங்கள் பல தோன்றியதால், மாதரி, தன் மகள் ஐயையிடம், குரவைக் கூத்து ஆடினால் தீமைகள் வாரா எனக் கூறிக் குரவைக் கூத்தாட ஏற்பாடு செய்தாள். மேலும் சில கூறுவாள்:

கன்னியர் எழுவர் தலைக்கு ஒரு காளையாக ஏழு காளைகளைத் தொழுவத்தில் கட்டி வளர்த்து வந்தனர். இந்த இந்தக் காளையை அடக்குபவருக்கு இந்த இந்தக் கன்னி உரியவள் என மாதரி கூறலானாள்: 1. தேனார்ந்த மலர்மாலை அணிந்த இந்தக் கன்னி, இதோ இருக்கும் கரிய காளையின் சீற்றத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து அதை அடக்குபவனை விரும்புகிறாள்.

2. இதோ உள்ள பொன் வளையல் அணிந்த பெண்ணின் தோள்கள், இதோ உள்ள நெற்றிச் சுட்டி பொருந்திய காளையின் மேலேறி அடக்குபவனுக்கு உரியவை யாகும்.

3. இதோ உள்ள முல்லை மலர் சூடிய கூந்தலை யுடைய கன்னி, வலிமை மிக்க இந்த இளங்காளையை அடக்குபவனுக்கு உரியவள்.

4. கொடியனைய இந்தப் பெண்ணின் தோள்கள், சிறுசிறு நுண்ணிய புள்ளிகளை உடைய இந்த வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கு உரியனவாம்.

5. இந்தப் பொன் புள்ளிகளை உடைய வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கே, இந்தக் கொடி போன்ற நங்கையின் முலைகள் உரியனவாம்.

6. இந்தக் கொன்றைக் கூந்தலாள், இந்த வெற்றி வாய்ந்த இளங்காளை மேல் ஏறி அடக்குபவனுக்கு உரியவளாவாள்.

7. இந்தப் பூவைப் புதுமலர் சூடியிருப்பவள், இதோ உள்ள இந்தத் தூய வெள்ளைநிறக் காலையைத் தழுவி அடக்குபவனுக்கு உரியவள் - என்றெல்லாம் மாதரி கூறினாள். இவற்றிக்கு உரிய பாடல் பகுதிகள் வருமாறு:-

1. "காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்

வேரி மலர்க் கோதையாள்; சுட்டு

2. நெற்றிச் செசிலை அடர்த்தாற்கு உரிய இப்

பொற்றொடி மரதராள் தோள்
3. மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம்
முல்லையம் பூங்குழ லாள்
4. நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே யாகும்.இப்
பெண் கொடி மாதர்தன் தோள்
5. பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்.இக்
நற்கொடி மென் முலைதான்
6. வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
கொன்றையம் பூங்குழ லாள்
7. தூகிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள்.இப்
பூவைப் புதுமல ராள்”

என்பன பாடல் பகுதிகள். இவ்வாறு மாதரி தன் மகளிடம் கூறிப் பின் கன்னியர் எழுவர்க்கும், பழைய பெயர்கள் இருப்பதல்லாமல், தானாக ஒவ்வொரு புதுப் பெயர்கள் சூட்டினாள். அப்பெயர்கள்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பாடல் பகுதி:

தொழு விடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங்கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்று படு முறையால் நிறுத்தி
இடை முது மகள் இவர்க்குப்
படைத்துக் கோட் பெயரிடுவாள்.
குடமுதல் இடை முறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே”

இது பாடல் பகுதி. படைத்துக் கோள் பெயரிடுதல் - தானாகப் புதிதாகப் படைத்துக் கொண்டு பெயர் வைத்தல்.

இக்காலத்தில் கூறும் ச, ரி, க, ம, ப, த, நி எனச் சுருக்கமாக வழங்கப்பெறும் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழுக்குப் பதிலாக, அக்காலத்தில் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் கூறப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்து. ஆனால், அவற்றிற்கு நேராக இவற்றையோ - இவற்றிற்கு நேராக அவற்றையோ கூற முடியாது என விபுலாநந்த அடிகள் தம் யாழ்நூலில் கூறியுள்ளார். இது ஆராய்ச்சிக்கு உரியது.

கேளாமோ தோழி

அடுத்து, ஆய்ச்சியர் குரவையில் உள்ள மூன்று பாடல் பகுதிகளை விளக்கம் இன்றித் தந்து சுவைத்து மகிழச் செய்ய வேண்டுமென என் அவா உந்துகிறது. இதோ அவை:

1. ‘கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழி’
2. ‘பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
ஆம்பலக் தீங்குழல் கேளாமோ தோழி’
3. ‘கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லைகம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையங் தீங்குழல் கேளாமோ தோழி’

என்பன அவை. திரும்பத் திரும்பப் பாடிச் சுவைக்க வேண்டிய பகுதிகள் இவை. இவ்வாறு பாடிக்கொண்டே ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடினமை, சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போன்றதாகும்.

அடுத்த ஒன்று படர்க்கைப் பரவல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள,

1. ‘சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே’
2. ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே’
3. ‘பஞ்சவர்க்குத் துது
நடந்தானை ஏத்தாத கா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே’

என்பன குறிப்பிடத்தக்கன. செவி, கண், நாக்கு ஆகியவை, அன்புப் பெருக்கால், திருமாலின் பெருமையைக் கேட்க வேண்டுமாம் - கோலத்தைக் காணவேண்டுமாம் - அவரை ஏத்த வேண்டுமாம்.

திருமாலின் கோலத்தைக் காணாத கண்ணைத் தாக்குவதோடு நிறுத்தவில்லை - அவரது கோலத்தை (கண்களை) இமைத்து இமைத்துக் காணும் கண்களும் தாக்கப்பட்டுள்ளன. அதாவது கண்களை ՅՔւգமூடித்திறக்காமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். இது ஒரு நயமான பகுதி.

ஆயர்கள் திருமாலை வழிபடும் வைணவர்களாதலின், ஆய்ச்சியர் குரவையில் இச்செய்திகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த அந்த இடங்களில் அந்த அந்த நடிகராக இளங்கோ அடிகள் நடித்துள்ள அருமை பெருமை மகிழத்தக்கது.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் திருநாவுக்கரசர் தம் உறுப்புகட்கு விடுத்துள்ள கட்டளைகளைக் காண்பாம்:-

“தலையே நீ வணங்காய்” (1)
‘கண்காள் காண்மின்களோ-’ (2)
‘செவிகாள் கேண்மின்களோ-’ (3)
‘மூக்கே முரலாய்-’ (4)
‘வாயே வாழ்த்து கண்டாய்-’ (5)
‘நெஞ்சே கினையாய்–’ (6)
‘கைகாள் கூப்பித் தொழிர்-’ (7)
‘ஆக்கையால் பயனென்-’ (8)
‘கால்களால் பயனென். (9)

அறிவுப் பொறிகள் (ஞானேந்திரியங்கள்), செயல் பொறிகள் (கன்மேந்திரியம்), உள்ளுறுப்பு (அந்தக்கரணம்) ஆகியவற்றுள் ஒன்பது உறுப்புகளின் கடமையைத் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலில் கூறியுள்ளார்.

இளங்கோ அடிகள் செவி, கண், நாக்கு என்னும் மூன்றின் கடமைகளை மட்டும் கூறியுள்ளாரெனில், இது அவராகக் (ஆசிரியர் கூற்றாகக்) கூறவில்லை. கதை மாந்தராகிய ஆய்ச்சியரின் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆய்ச்சியர் கூறியிருப்பதாக அளந்து கூறியுள்ளார். நாவுக்கரசர் தம் சொந்த உறுப்புகட்குக் கூறுவதால், கஞ்சத்தனம் இன்றி . தாராளமாகப் பல உறுப்புகட்கும் கட்டளை பிறப்பித்து உள்ளார்.

ஆய்ச்சியர் குரவைப் பகுதியைப் பாடிப் பாடிச் சுவைத்து இன்புறல் வேண்டும்.

2. குன்றக்குரவை

பிறுகுடியிரே சிறுகுடியிரே?

தம் குன்றுப் பகுதியில் வேங்கை மரத்தின் கீழ் நின்று பின்பு வானுலகம் சென்ற கண்ணகியைக் கண்ட குன்றவர், இவள் போன்ற தெய்வம் நமக்கு வேறு இல்லையாதலின் இவளைப் பாடுவோம் என்று பாடிய பகுதி சுவையான தாதலின், விளக்கம் வேண்டாது அதனைக் காண்பாம்:

“சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியிரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை கன்னிழல் கீழ்ஒர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை கிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் துவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”

குன்றவரின் இயங்களும் பூசனை முறைகளும், இப் பகுதியில், அடிமேல் அடித்தாற்போல் தொடர்ந்து இடம் பெற்றுப் படிப்பவரை மகிழ்விக்கின்றன.

இது நகையாகின்றே

தலைமகன் ஒருவனோடு காதல் கொண்ட தலைமகள் ஒருத்தி விரைவில் மனம் கூடாமையால் மிகவும் வாடி வதங்கி மெலிந்து காணப்படுகிறாள். இந்தக் காதல் திருவிளையாடலை அறியாத தலைவியின் தாய், தன் பெண்ணை ஏதோ தெய்வம் தீண்டி அச்சுறுத்தி விட்டது என்று எண்ணி, வேலன் வெறியாடல் செய்யத் தொடங்கு கிறாள். அத்தெய்வம் முருகன் என எண்ணுகிறாள்.

தாய் முருகனுக்குப் பூசனை போடுவாள்; முருகன் ஏறிய வேலன் என்னும் சாமியாடியை அழைத்து, மகளின் நோய்க் காரணத்தை அறிந்து சொல்லச் செய்து அது தீர்க்கும் வழியையும் அறிவிக்கச் செய்வாள் தாய். வேலன் என்பவன் மேல் முருகன் ஏறி எல்லாம் கூறுவானாம். இதற்குத் தமிழ் அகப்பொருள் துறையில் வேலன் வெறியாட்டு என்பது பெயராகும்.

தலைவி தோழிக்குச் சொல்லுகிறாள்:- தோழியே! என் காதலனால் உண்டான நோயை முருகனால் உண்டான நோயாக அன்னை எண்ணி வெறியாடும் வேலனை வரச் சொல்லியுள்ளாள். இது நகைப்புக்கு உரியது தோழியே! (இது நகையாகின்றே தோழி).

ஆய் வளையல் அணிந்த தோழியே மலை நாடனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வேலன் வருமாயின் உண்மை நோயை அறியாததால் அவனால் தீர்க்க முடியாதாதலின் அவ்வேலன் அறிவிலியாவான். மற்றும், அவ்வேலன்மேல் ஏறியாடச் செய்யும் குருகுபெயர்க் குன்றம் தொலைந்த முருகனும் மடவோனேயாவன். இது நகையாகின்றே.

செறிவளைக் கை நல்லாய்! வெறிகமழ் வெற்பனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வரும் வேலன் மடையன். ஆலமர் செல்வனாகிய சிவனின் மகனாகிய முருகன் அவன்மேல் வரின் அவ்வேலனைவிடப் பெரிய மடையனாவான். இது நகையாகின்றே! நேரிழை நல்லாய் மலை நாடனாகிய என் தலைவனது மார்பு தந்த கொடிய நோயைத் தீர்க்க வரும் வேலன் மடவோனாவான். கடப்ப மாலை யணிந்த முருகன் வேலன் மேல் ஏறி வரின், அவனினும் இவன் கடைந்தெடுத்த பெரிய மடவோனாவான். இது நகையாகின்றே! என்று தலைவி தோழிக்குக் கூறினாள். இனிப் பாடல் பகுதிகள் வருமாறு:

1.          ‘இறைவளை கல்லாய்! இது நகை யாகின்றே

கறிவளர் தண்சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்.’

2. ‘ஆய்வளை கல்லாய்! இது நகை யாகின்றே

மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்;
வருமாயின் வேலன் மடவன்; அவனின்
குருகுபெயர்க்குன்றம் கொன்றான் மடவன்’

3. ‘செறிவளைக் கை நல்லாய்! இது நகையாகின்றே

வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்க வரும் வேலன்;
வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்’.

4. ‘நேரிழை நல்லாய்! நகையாம் மலைநாடன்

மார்பு தரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன்;
தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான்மடவன்
கார்க் கடப்பக் தார் எம:::வுள் வருமாயின்’.

இவை பாடல் பகுதிகள். தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை முற்றும் (கரைத்துக் குடித்துக்) கற்றவராகக் காணப்படுகிறார் ஆசிரியர் இளங்கோ.

மேலும் தலைவி கூறுகிறாள்:

1. நில மயில் மேல் வள்ளியோடும் முருகன்வரின், மலை நாடராகிய என் காதலரோடு என்னை மணம் முடிக்க அருள் புரிக என்று வேண்டுவோம். 2. மலைமகள் மகனாகிய முருகன் வரின், அவனையும் அவன் துணைவி குறமகள் வள்ளியையும் தொழுது, அயலாருக்கு என்னை மணம் முடிக்கச் செய்யாமல், என் காதலருக்கே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம். 3. மலைமகள் உமையின் மகனாகிய முருகன் வரின், அவனையும், அவன் மனைவியாகிய எம் குறக் குலத்து வள்ளியையும் தொழுது, பலரும் அறியும்படியாக என் காதலருடன் என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம். 4. குறமகளும் எம் குலத்து மகளும் ஆகிய வள்ளியையும் முருகனையும் தொழுது, பிழைபட வேறொருவர்க்கு என்னை மணம் முடிக்காமல், என் காதலருடனேயே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம் - என்று தலைவி கூறினாளாம். பாடல் பகுதிகள் வருமாறு:

1. ‘வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து

நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்; வந்தால்
மால்வரை வெற்பன் மனஅணி வேண்டுதுமே’.

2. ‘கயிலைகன் மலையிறை மகனை நின் மதிநுதல்

மயிலியல் மடவரல் மலையர் தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல் மணம்ஒழி; அருள் அவர் மணம் எனவே’.

3. ‘மலைமகள் மகனை கின் மதி நுதல் மடவரல்

குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்கின் இணையடி தொழுதேம்
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே’.

4. குலமகள் அவள் எம குலமகள் அவளொடும்

அறுமுக ஒருவரின் அடியிணை தொழுதேம்
துறை மிசை கினதுஇரு திருவடி தொடுநர்
பெறுக நன் மணம், விடு பிழை மணம் எனவே’.

என்பன பாடல் பகுதிகள்.

முருகனை ஈர்த்துக் கவர, அவன் மனைவி வள்ளி தங்கள் குறக் குலத்தவள் என்று கூறியிருக்கும் நயமான பகுதி சுவைக்கத் தக்கது. இவ்வாறாகக் குன்றக் குரவையில் பல சுவைகளை நுகர்ந்து மகிழலாம்.

ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகிய இரண்டிலும், பல பாடல்களில், இரண்டாம் அடி திரும்பவும் மூன்றாம் அடியாக மடங்கி வரும் செய்யுள் அமைப்பைக் காணலாம். ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வோர் எடுத்துக்காட்டு வருமாறு:

ஆய்ச்சியர் குரவை
‘முந்நீ ரினுள் புக்கு மூவாக் கடம் பெறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னலில் தோளோச்சிக் கடல் கடைந்தான் என்பரால்”.
குன்றக் குரவை
‘எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீண்டி வந்த புதுப்புனல்
கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையர்
உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே’.

வந்த சொல்லே சொற்றொடரே மீண்டும் அடுத்து அடுத்து வருதல் நாடகத்தில் சுவை கூட்டும் ஓர் அமைப்பாகும் என்று The Art of Play Writing என்னும் நூலில் படித்தது இங்கே இப்போது நினைவிற்கு வந்து உவகை ஊட்டுகின்றது.

இவ்வாறாக, சுவையான சிறப்புச் செய்திகள் பல சிலம்பில் உள.