உள்ளடக்கத்துக்குச் செல்

கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/கதை முகம்

விக்கிமூலம் இலிருந்து
கதை முகம்

இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ‘கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ‘முகஞ் செய்தல்’ - என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஒவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும்முன் சுருக்கமாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுவது அவசிய மென்று கருதுவதால் தான் இதை இப்போது எழுதுகிறேன்.

இனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி-வளர்ந்த, வாழ்ந்த ஒரு பொற் காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்தகாலத்தின் பெருமைக்குரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம். ஏக்கத்தை மறு புறமாகக் கொள்ளாத தனிப் பெருமிதம் தான் உலக வரலாற்றில் ஏது?

சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம் பட்டினத்தைப் போன்றதும் - அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலை நகரமான கபாடபுரத்தைப்பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாய மில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்ந்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்து விட்டது. இதன் பின்பே பாண்டியர்களின் தலை நகர் மதுரைக்கு மாறியது. கபாடபுரம் அழிந்த பின்னரும் சோழர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்தனர். ஏனென்றால் கபாடபுர நகரம் கடல் கொள்ளப்பட்ட பல தலை முறைகளுக்கும் பற்பல ஆண்டுகளுக்கும் பின்பு கடைச் சங்க காலத்திற்கும் கூடக் காவிரிப்பூம் பட்டினம் சோழ நாட்டுப் புலவர்கள் பாடும் இலக்கிய நகராக இருந்தது.

பாண்டியர்களின் பொன் மயமான-பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம் பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்திரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கிய மில்லை. தமிழரசர்களின் அழிந்த கோ நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு. அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோ நகராயிருந்து கட்ல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே 'மணிபல்லவம்' - என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணி யுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன். கால முறைப்படிப் பார்த்தால் கபாடபுரத்தைத் தான் நான் முன்னால் எழுதியிருக்க வேண்டும். ஆயினும் கபாடபுரத்தை விடக் காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றி அறிய வரலாறும் இலக்கியங்களும் நிறைய இருந்ததனாலும் கபாடபுரத்தைப் பற்றிய ஒர் இலக்கிய அநுமான ஒவியம் என் மனத்தில் வரையப்பெற்று முற்றுப் பெறச் சிறிது அதிக காலம் பிடித்ததனாலுமே இவ்வளவு காலந்தாழ்ந்தது. இம்முறையே சேரர் கோ நகரை விளக்கி அணி செய்தும் இனி ஒன்று பின்னர் எழுத எண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தக் கதையின் முகத்திற்கு வருவோம்.

முதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங் கரையில் இருந்த தென் மதுரைத் தமிழ்ச்சங்கமும் பாண்டியர் கோ நகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோ நகரைச் சமைத்து ஆளத் தொடங்கினார்கள் பாண்டியர்கள்.

முத்தும் இரத்தினமும் ஏற்றுமதி செய்து - அற்புதமான பலவகைத் தேர்களைச் சமைத்து - இலக்கண இலக்கியங்களைப் பெருக்கி இந்த நகரை உலகெலாம் புகழ் பெறச் செய்த முதல் பாண்டிய மன்னன் வெண் தேர்ச் செழியன். பாண்டியர்களின் தேர்ப்படை இவன் காலத்தில் அற்புதமாக வளர்த்து உருவாக்கப்பட்டது. கபாடபுரத்தின் பெயர் பெற்ற வெண் முத்துக்கள் பதித்த பல அழகிய இரதங்கள் இவனுக்குரியனவாயிருந்தன என்று தெரிகிறது. வெண் முத்துக்கள் பதிக்கப் பெற்று ஒளி வீசும் பிரகாசமான ரதங்களில் வெள்ளை மின்னல்கள் போலும் ஒளிமயமான பல புரவிகளைப் பூட்டி இவன் அமைத்திருந்த தேர்ப்படையே இவனுக்குப் பின்னாளில் இலக்கிய ஆசிரியர்கள் ‘வெண்தேர்ச் செழியன்’ என்று சிறப்புப் பெயரளிக்கக் காரணமாயிருந்தது. கபாடபுரம் என்ற நகரைப் பொருத்தமான இடத்தில் உருவாக்கிய பெருமையும் தேர்ப்படையை வளர்த்த பெருமையும் வெண் தேர்ச் செழியனையே சேரும். இவ்வரசன் கபாடபுரத்தில் அமைத்த தமிழ்ச் சங்கமாகிய இடைச் சங்கத்தில் ஐம்பத்தொன்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் இருந்தனர். நூலாராய்ந்தனர். கவியரங்ககேறினர்.

வெண்தேர்ச் செழியன் அழகிய பொருநை நதி நகரைத் தழுவினாற் போல வந்து கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் இந்த நகர் மிகப் பொலிவாக அமையும்படி உருவாக்கியிருந்தான். இன்றைய ஹாங்காங், சிங்கப்பூர், பம்பாய், கொச்சி போன்ற கடற்கரை நகரங்களை விடப் பெரியதும் கம்பீரமானதுமான கபாடபுரத்தில் முத்துக் குளித்தலும் இரத்தினம் முதலிய மணிகளை எடுத்துப் பட்டை தீட்டி உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தலும் நிகழ்ந்து வாணிகத்தைப் பெருக்கின. ஹாங்காங்கையோ, சிங்கப்பூரையோ, பம்பாயையோ, மனக் கண்ணில் நினைத்துக் கொண்டு அவற்றை விடப் பெரியதும், பொலிவு நிறைந்ததும் ஆனதோர் சரித்திர காலப் பெரு நகரைக் கற்பனை செய்ய முயலுங்கள்! உங்கள் கற்பனை மனக் கண்ணில் வெற்றிகரமாக உருவானால் அந்தப் பெரிய கற்பனை தான் அன்று கபாடபுரமாயிருந்தது. அத்தகைய பெருமை வாய்ந்த கபாடபுரத்தில் இரத்தினக் கற்களைத் தோண்டி எடுக்கும் இரத்தினாகரங்களில் (இரத்தினச் சுரங்கம்) பல நாட்டினர் வந்து உழைத்தனர். எக்காலமும் ஆண்களும், பெண்களுமாக அந்த இரத்தினாகரங்களைப் பார்க்க வருவோர் கூட்டம் மிகுந்திருக்கும். முத்துக்குளிக்கும் துறைகளிலும் அதே கூட்டமிருக்கும்.

கூடை கூடையாகப் பட்டை தீட்ட அள்ளிக்கொண்டு போகப்படும் இரத்தினக் கற்களைப் பார்ப்போர் மனம் ஆசைப்படும் தன் நாட்டில் விளைபவை அவை என்று பெருமையும் படும். கபாடபுரத்தின் துறைமுகத்தில் பல நாட்டுக் கப்பல்கள் வருவதும் போவதுமாக எப்போதும் பெருங் கலகலப்பு நிறைந்திருக்கும். சுங்கச்சாவடிகளில் அடல்வாள் யவனர் காவலுக்கு நின்றிருப்பர். இசை மண்டபங்களிலே பண்ணொலிக்கும். ஆடலரங்குகளிலே அவிநயம் அழகு பரப்பும். சங்கங்களிலே தமிழிலக்கண இலக்கிய ஆராய்ச்சிகள் நிகழும். இத்தகைய வெற்றித் திருநகரை உருவாக்கிய வெண்தேர்ச் செழியனின் தள்ளாத முதுமைக் காலத்தில் அவன் மகன் அநாகுல பாண்டியன் பட்டத்துக்கு வந்த பின் இந்தக் கதை தொடங்குகிறது. இந்தக் கதை தொடங்கும் காலத்தில் அநாகுல பாண்டியனின் ஒரே மகனும் பாண்டிய நாட்டுக் கபாடபுரத்து இளவரசனும் வெண்தேர்ச் செழியனின் பேரனுமாகிய சாரகுமாரன் மாறோக மண்டலத்துக் கொற்கையிலும் பூழியிலும் மணலூரிலுமாகத் தமிழ்ப் புலவர்களிடம் சில ஆண்டுகள் குரு குல வாசம் செய்துவிட்டு நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரத்துக்குத் திரும்புகிறான்.

அந்த ஒரு நன்னாளில் இங்கே அவனைச் சந்திக்கிறோம் நாம். ஆண்டு தோறும் வசந்த காலத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாளன்று கபாடபுரத்தை நிறுவிய வெண்தேர்ச் செழிய மா மன்னர் அந்த மாநகர் உருவான ஞாபகத்தைக் கொண்டாட விரும்பி ஒரு நகர்மங்கல விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆண்டு தோறும் அவர் நிகழ்த்தியதைவிட நன்றாக அவர் கண் காணவே இன்றும் சிறப்பாக - இந்த நகர் மங்கலத்தைக் கொண்டாடி வந்தான் அநாகுலன். முத்துக் குளியலும், இரத்தினாகரங்களில் மணி குவித்தலும் சிறப்பாக நடைபெறும் காலமும் இந்த வசந்த காலமேயாகையினால் கபாடபுரத்தில் பல நாட்டு மக்களும் கூடுகிற மாபெரும் விழாக்காலம் இது தான். இனி வாருங்கள். கபாடபுரத்தின் இந்த நகரணி மங்கல நாளில் நாமும் அங்கு போகலாம். கபாடபுரத்தைக் கண் குளிரக் கண்டு மகிழலாம்.