சோழர் வரலாறு/சங்க காலம்

விக்கிமூலம் இலிருந்து

2. சங்க காலம்

சங்க காலம்

வரலாற்றாசிரியர் பலர் கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டாக இருத்தல் கூடும் என்று முடிவு கட்டியுள்ளனர். இராவ்சாஹிப் மு. இராக வையங்கார் போன்றோர் அச்சங்கத்தின் தொடக்கம் ஏறத்தாழக் கி.மு. நான்காம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தக்க சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர். இன்றுள்ள தொகை நூற்பாடல்களை நடுவு நிலை யினின்று ஆராயின், இன்றுள்ள பாக்களில் சில கி.மு.1000 வரை செல்கின்றன என்பதை அறியலாம். ‘வட மொழியில் ஆதிகாவியம் பாடிய வான்மீகர் புறநானூற் றில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்’ என்று பல சான்றுகள் கொண்டு ‘செந்தமிழ் ஆசிரியராகிய திரு. நாராயண ஐயங்கார் அவர்கள் செந்தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளனர்.[1] வான்மீகியார் காலம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். தருமபுத்திரனை விளித்து நேரே பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் உண்டு. பாரதப் போரில் இருதிறத்தார் படைகட்கும் உணவளித்தவன் என்று சேரலாதன் ஒருவன், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’, என்று புறநானூற்றிற் புகழப்பட்டுள்ளான். இராமாயண கால நிகழ்ச்சிகளில் சில புற-அக நானுறுகளிற் குறிக்கப்பட் டுள்ளன. இவற்றை நன்கு நோக்குகையில் தமிழ்ப் புலவர் ஏறத்தாழக் கி.மு. 1000த்திலிருந்து இருந்து வந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.[2] பல்லவர் என்ற புதிய அரசமரபினர் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஏறக்குறைய கி.பி.400 -450 இல் சோணாடு அச்சுத விக்கந்தன் என்ற களப்பிர குல காவலன் ஆட்சியில் இருந்தது என்பதைப் புத்ததத்தர் என்ற பெளத்தத் துறவியின் கூற்றால் அறியலாம்.[3] ‘களப்பிரர் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர். கி.பி.6ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர அரசனைத் தொலைத்துப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்’ என்ற செய்திகளை வேள்விக் குடிப் பட்டயத்தால் அறியலாம். இவை அனைத்தையும் நோக்க, களப்பிரரும் பல்லவரும் குறிக்கப் பெறாத சங்க நூற்பாக்களின் காலம் ஏறக்குறையக் களப்பிரர்க்கு முற்பட்டாதல் வேண்டும் என்பதை அறியலாம். எனவே சங்கத்தின் இறுதிக்காலம் (பாக்கள் பாடிய காலமும் அவை தொகுக்கப் பெற்ற காலமும்) ஏறத்தாழக் கி.பி.300க்கு முற்பட்டதாகலாம் எனக் கோடலே பொருத்தமாகும்.

தொல்காப்பியர் காலம்

இனித் தொல்காப்பியம் என்பதன் காலவரையறையைக் காண்போம். இந்நூலுள் பெளத்த சமணக் குறிப்புகள் இன்மையால் இதன் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். வட[4]மொழியாளர் தமிழகம் புக்க காலம் ஏறத்தாழக் கி.மு.1000 என்று வின்சென்ட் ஸ்மித் போன்ற பெயர்பெற்ற வரலாற்றாசிரியர் கூறியுள்ளனர்.[5] இங்ஙனம் தமிழகம் புகுந்த வடமொழியாளர் தொல்காப்பியத்தில் - தமிழர் இலக்கண நூலில் இடம் பெறுவதெனின், அவர்கள் தமிழரோடு நன்கு கலந்திருத்தல் வேண்டும். அவர்தம் வடமொழிச் சொற்களும் வழக்கில் வேரூன்றியிருத்தல் வேண்டும். இன்றேல்,

     “வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ
     எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.”

எனவும்,

     “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்”

எனவும்,

முறையே வடசொற் கலப்புக்கும் பிராக்ருதக் கலப்புக்கும் தொல்காப்பியர் விதிகள் செய்திரார் என்க. இந்நிலை உண்டாக ஏறத்தாழ 300 அல்லது 400 ஆண்டுகள் ஆகி இருத்தல் இயல்பே ஆகும் அன்றோ?

மேலும் தொல்காப்பியர் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று புகழப்பட்டவர். ஐந்திர இலக்கண நூலுக்கு மிகவும் பிற்பட்டது பாணினீயம் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. பாணினி காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்பர் கோல்ஸ்டகர் என்னும் அறிஞர். பாணினியமே பிற்கால வடமொழி உலகைக் கொள்ளை கொண்ட இலக்கண நூலாகும். அந்நூல் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இருந்திருப்பின், அவர் ‘பாணினியம் நிறைந்த தொல் காப்பியன்’ எனப் பெயர் பெற்றிருப்பார். அங்ஙனம் இன்மையால், தொல்காப்பியர், பாணினியம் தமிழகத்துக்கு வராத காலத்தில் இருந்தவர் எனக் கொள்ளலாம்.

‘தொல்காப்பியர் காலத்தில் கவாடபுரம் (அலை வாய்) கடல்கோளால் அழிந்தது’ என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. இக்கடல்கோளுக்கும் இலங்கையில் நடந்த கடல்கோள்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை அனைவரும் ஒப்புகின்றனர். இலங்கையை அழித்த கடல்கோள்கள் பல. அவற்றுள் முதலில் நடந்தது கி.மு. 2387-இல் என்றும், இரண்டாம் கடல்கோள் கி.மு. 504-இல் நடந்தது என்றும், மூன்றாம் கடல்கோள் கி.மு. 306-இல் நடந்தது என்றும் மகாவம்சம், இராசாவழி என்னும் இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவற்றுள் இரண்டாம் கடல்கோளாற்றான் இலங்கையின் பெரும் பகுதி அழிந்தது என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இங்ங்னம் இலங்கையின் பெரும் பகுதியை அழித்த அக்கடல்கோளே கபாடபுரத்தை உள்ளிட்ட தமிழகத்துச் சிறு பகுதியை அழித்திருத்தல் கூடும் என்று கோடலில் தவறில்லை. மேலும், மேற்கூறப்பெற்ற பல காரணங்கட்கும் ஏற்புடைத்தான காலம் இரண்டாம் கடல் கோள் நிகழ்ந்த காலமாகவே இருத்தல் வேண்டும் என்பதை நன்கறியலாம். இன்ன பிற காரணங்களால், தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய கி.மு. 5-ஆம் நூற்றாண்டு[6] எனக் கோடல் பல்லாற்றானும் பொருத்தமாதல் காண்க.

தொல்காப்பியர்க்கு முற்பட்ட நூல்கள்

தொல்காப்பியர் தமது பேரிலக்கண நூலில் 100-க்கு 16 வீதம் உள்ள சூத்திரங்களில் தமக்கு முன் இருந்த இலக்கண ஆசிரியரைச் சுட்டிச் சொல்கின்றார். “யாப்பென மொழிவர் யாப்பறி புலவர்” “... புலவர் ஆறே" என்றெல்லாம் கூறுதலை நன்கு சிந்திப்பின், தொல்காப்பியர்க்கு முன் இலக்கணப் புலவர் பலர் இருந்தனர் என்பது வெள்ளிடைமலை, எண்ணிறந்த இலக்கண நூல்கள் இருந்தன எனின், - 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ என்பது உண்மை எனின் அப்பல இலக்கண நூல்கட்கு உணவளித்த இலக்கிய நூல்கள் எத்துணை இத்தமிழகத்தில் இருந்திருத்தல் வேண்டும்! ஆதலின், ஏறத்தாழக் கி.மு.1500 முதல் தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் எனக் கோடல் மிகையாகாது அன்றோ? இம்முடிவு மொழி ஆராய்ச்சிக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் பொருந்தி நிற்றலை நடுவு நிலையாளர் நன்குணர்தல் கூடும்.[7]

முடிவு : இதுகாறும் கூறிய செய்திகளால், தமிழ் நூல்கள் பல நூற்றாண்டுகள் கால எல்லையை உடையன என்பதை நன்கறியலாம். அறியவே, அவ்வக் காலப் புலவர் பாடிய செய்யுட்களை எல்லாம் தம்மகத்தே கொண்டுள்ள புறம், அகம் முதலிய நூல்களைக் ‘கடைச்சங்க நூல்கள்’ எனக் கோடலே தவறாம். முதல்-இடை-கடைச் சங்கங்கள் என்பன இருந்தன என்பதற்குக் களவியல் உரை தவிர வேறு சான்றுகள் இன்மையால், வேறு சான்றுகள் கிடைக்கும் வரை அக்கூற்றை விடுவிப்பதே நன்றாகும்; விடுத்துப் பொதுவாகச் ‘சங்கநூல்கள்’ எனக் கூறலே பொருத்தம் ஆகும். ஆகவே, சங்ககாலம் மிகப் பரந்து பட்ட கால எல்லையை உடையது; அதன் இறுதிக் காலம், வரலாற்றாசிரியர் முடிவுப்படி, ஏறக்குறைய கி.பி. 3-ஆம் நூற்றாண்டாகும், எனக் கோடலே இன்றைய ஆராய்ச்சி அளவிற்குப் பொருந்துவதாகும். இனி இப்பரந்து பட்ட காலத்தில் இருந்து சோழர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

நமக்குள்ள துன்பம்

நமக்குக் கிடைத்துள்ள சங்கச் செய்யுட்களைக் கொண்டு. சோழர் அரச மரபினர் மன்னவர் எனக்கூறலாமேயன்றி, ‘இவர்க்குப் பின் இவர் பட்டம் பெற்றனர்’ என்று தக்க சான்றுகளுடன் கூறத்தக்க வசதி இல்லை. சங்கச் செய்யுட்களைப் பலபட ஆராய்ந்து, அரசர் முறைவைப்பை அரும்பாடு பட்டு அமைக்க முயன்ற பலர் செய்துள்ள பிழைகள் பல ஆகும். ஆதலின், முடியாத இந்த வேலையை மேற்கொண்டு இடர் உறாமல், நன்றாகத் தெரிந்தவரைப் பற்றி மட்டும் விளக்கமாகக் கூறி, பிறரைச் சங்கச் செய்யுட்கள் கூறுமாறு கூறிச் ‘சங்ககாலச் சோழர் வரலாற்’றை ஒருவாறு எழுதி முடித்த நாவலர் பண்டிதர் நாட்டார் அவர்களும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்களும் நமது பாராட்டுக் குரியவரே ஆவர். தக்க சான்றுகள் கிடைக்கும்வரை, இப்பேரறிஞர் கொண்டுள்ள முறையே சிறந்ததாகும் என்பது சாத்திரீய ஆராய்ச்சி உணர்வுடையார்க்கு ஒப்ப முடிந்த ஒன்றாகும்.

நமது கடமை

சங்ககாலச் சோழ அரசருள் நடுநாயகமாக விளங்கியவன் கரிகாலன். அவன் காலத்தை ஏறக்குறைய ஒருவாறு முடிவு கட்டலாம். அவனைப்பற்றிக் கூறும் சங்கச் செய்யுட்களும் பிற்காலச் சோழர்காலத்துச் செய்யுட்களும் சில கல்வெட்டுகளும் இம்முயற்சியில் துணைசெய்யற்பாலன. பிற்காலச் சோழர் நூல்களிலும் கல்வெட்டுகளிலும் கரிகாலனைப் பற்றிக் கூறும் செய்திகள் பல சங்கச் செய்யுட்களில் இல்லை. இக்காரணம் கொண்டே வரலாற்றாசிரியர் சிலர் ‘அவை நம்பத்தக்கன அல்ல’ என உதறிவிட்டுக் கரிகாலன் வரலாற்றைக் கட்டி முடித்துள்ளனர். சங்க காலத்துச் செய்யுட்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்தில, பிற் காலத்தார் தொகுத்து வைத்தவையே ‘சங்க நூல்கள்’ எனப்படுவன. தொகுத்தார் கண்கட்கு அகப்படாத பழைய செய்யுட்கள் பல இருந்திருத்தல் இயலாதென்று யாங்வனம் கூறல் இயலும்? அப்பழைய பாடற் செய்திகளையும் சோழர் மரபினர் வழிவழியாகக் கூறிவந்த செய்திகளையும் உளங்கொண்டே சயங் கொண்டார் போன்ற பொறுப்பு வாய்ந்த புலவர்கள்’ தம் நூல்களில் பல செய்திகளைக் குறித்திருப்பர் என்றெண்ணுவதே ஏற்புடையது; அங்ஙனமே பிற்காலச் சோழர் தம் பட்டயங்களிற் குறித்தனர் எனக் கோடலே தக்கது. அங்ஙனம் தக்க சான்றுகளாக இருப்பவற்றை (அவை பிற்காலத்தன ஆயினும்) மட்டும் கொண்டு நேர்மையான வரலாறு கட்டலே நற்செயலாகும். இந்த நேரிய முறையைக் கொண்டு கரிகாலன் காலத்தைக் கண்டறிய முயன்ற திரு. T. G. ஆராவமுதன் அவர்கள் நமது பாராட்டிற்கு உரியர் ஆவர்.[8]


  1. Vide ‘Sentamil’ Vol. for 1939-’40.
  2. Vide Purananuttru Chorpolivuka!, Lecture 3.
  3. History of Pali Literature by B.C. Law Vol.2, Pages 384,385,and 389.
  4. T.R. Sesha Iyengar's ‘Dravidan India’ p. 109.
  5. Vide his ‘Oxford History of India’, p.5.
  6. Vide ‘Tamil Polil’, Vol. 13 py. 289, 300; Vol. 15, article on ‘Tolkappiyam and the Sangam Literature’. தொல்காப்பியர் காலம் கி.மு. 300 ஆக இருக்கலாம் என்பவர் ரா. இராகவையங்கார். - Vide his Tamil Varalaru.
  7. Karanthaik Katturai. ‘Antiquity of Tamil.
  8. Vide his ‘The Sangam Age’ 395-2
"https://ta.wikisource.org/w/index.php?title=சோழர்_வரலாறு/சங்க_காலம்&oldid=493422" இலிருந்து மீள்விக்கப்பட்டது