சோழர் வரலாறு/கரிகாற் பெருவளத்தான் காலம்
இன்றுள்ள சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள சோழருள் இமயம் சென்ற கரிகாலனுக்கு முற்பட்டவர் சிலர் உளர். பிற்பட்டவர் சிலர் உளர். ஆதலின், இப்பெரு வேந்தன் காலத்தை ஒருவாறு கண்டறிவோமாயின், அக்காலத்திற்கு முற்பட்ட சோழர் இன்னவர் பிற்பட்ட சோழர் இன்னவர் என்பது எளிதில் விளக்கமுறும். ஆதலின், இங்கு அதற்குரிய ஆராய்ச்சியை நிகழ்த்துவோம்.
கரிகாற்சோழன் இலங்கையை வென்று ஆண்டவன் என்று சங்க நூற்கள் குறியாவிடினும், கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. அவன் வடநாடு சென்று மீண்டமை தொகை நூற்பாக்கள் குறியாவிடினும், அவனுக்குப் பிற்பட்டதான சிலப்பதிகாரம் கூறுகின்றது. சேர அரசர் மகனாரான இளங்கோவடிகள் சோழ அரசரான கரிகாலனை நடவாத ஒன்றைக் கூறிப் புகழ்ந்தனர் என்று கோடல் பொருத்தமற்றது. அவர் அங்ஙனம் கூறவேண்டிய காரணம் ஒன்றுமே இல்லை. தமிழ் நாட்டிற்கே பெருமை தந்த அச்செய்தியை அவர் தமிழர் அனைவர்க்கும் சிறப்புத் தரும் செய்தியாகக் கருதியே தமது பெருங் காவியத்தில் குறித்துள்ளார். எனவே, இலங்கைப் படையெடுப்புக்கும் வடநாட்டுப் படையெடுப்புக்கும் எற்றதான ஒரு காலத்தேதான் கரிகாலன் இருந்திருத்தல் வேண்டும். அப்பொருத்தமான காலம் கண்டறியப்படின், அதுவே ‘கரிகாலன் காலம்’ என்று நாம் ஒருவாறு உறுதி செய்யலாம்.
கரிகாலன் படையெடுப்பின் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார், தமது நூலில் “கி.மு. 327 - கி.மு. 232-க்கு உட்பட்ட காலம் சந்திர குப்தன், பிந்து சாரன், அசோகன் ஆகிய மூவர் காலமாதலால், அக்காலத்தில் தமிழ்வேந்தர் வடநாடு சென்றிருத்தல் இயலாது. கி.மு. 184 முதல் கி.மு. 145 புஷ்பமித்திர சுங்காவின் காலம். கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் ஆந்திரர் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த காலம். கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இப்படையெடுப்பு நடந்திருக்கும் என்று திட்டமாகக் கூறல் இயலாது..... ஆதலின், தமிழ்வேந்தர் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிற்பட்ட மோரியர் (கி.மு. 232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்பமித்திர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு.148 - கி.மு.27) காலமாகவோ (3) ஆந்திரம் வலிகுன்றிய கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினர்.[1]
இவர் கூறிய மூன்றாம் காலம் சிறிது திருத்தம் பெறல் நலம். என்னை? கி.பி. 163-இல் இறந்த கெளதமீபுத்திர சதகர்ணியின் மகனான புலுமாயிக்குப் பின் வந்த ஆந்திர அரசர் வலியற்றவர் எனப்படுதலின்[2] என்க. எனவே தமிழரசர் படையெடுக்க வசதியாக இருந்த மூன்று காலங்களாவன: (1) கி.மு. 232 - கி.மு. 184 (2 கி.மு. 148 - கி.மு.27 (3) கி.பி.163 கி.பி.300. இவற்றுள், செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் மூன்றாம் காலமாகும்; அவன் செல்லத் தகுந்த காலம் - கடல் சூழ் இலங்கைக் கயவாகுவின் காலம் - நூற்றுவர் கன்னர் (சாதவாகனர்) இருந்த காலம் ஆகிய கி.பி. 166-193 ஆக இருத்தல் வேண்டும்.[3] செங்குட்டுவன் காலம் - சிலப்பதிகாரம் செய்த காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது வரலாற்று ஆசிரியர் அனைவரும் ஒப்புக்கொண்ட செய்தியாகும். எனவே, அக்காலத்திற்கு முற்பட்டிருந்த கரிகாலன் முதல் இரண்டு காலங்களில் ஒன்றைச் சேர்ந்தவனாதல் வேண்டுமன்றோ?
இலங்கை வரலாற்றின் படி, (1) தமிழ் அரசர் கி.மு.170 முதல் கி.மு.100 வரை இலங்கையை ஆண்டனர்; (2) கி.மு. 44 முதல் கி.மு. 17 வரை ஆண்டனர் என்பது தெரிகிறது.[4] இவற்றுக்குப் பின்னர் தமிழர் இலங்கையின் மீது படையெடுத்த காலங்கள் முறையே கி.பி. 660, கி.பி. 1065, கி.பி.1200 - 1266 என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.[5] எனவே முதல் இரண்டு காலங்களில் ஒன்றிற்றான் கரிகாலன் இலங்கை மீது படையெடுத்தான் என்று கோடல் வேண்டும். அவற்றிலும் முதற் காலம் முன் பகுதியிற் கூறிய ஏழாரன் என்னும் தமிழ் அரசன் படையெடுப்பாகும். ஆதலின், இரண்டாம் காலமே (கி.மு. 44 - கி.மு. 17) கரிகாலன் இலங்கை மீது படையெடுத்த காலமாதல் வேண்டும். இக்காலத்துடன் வடநாட்டுப் படையெடுப்புக்குரிய இரண்டாம் காலம் (கி.மு.148 - கி.மு. 27) ஒத்திருத்தல் காணத்தக்கது. எனவே, ஏறத்தாழ, கி.மு. 60 - கி.மு. 10 என்பது கரிகாற் சோழன் காலம் எனக் கோடல் தவறாகாதன்றோ?
இம்முடிபிற்குக் கடல்வாணிகச் செய்தியும் துணை செய்தல் காண்க. கரிகாலன் பாடப்பெற்ற பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப் பாலையிலும் புகார்ச் சிறப்பும் கடல் வாணிகச் சிறப்பும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழர் ரோமப் பெருநாட்டுடன் வாணிகம் செய்யத் தொடங்கியது கரிகாலனுக்கு முன்னரே ஆயினும், அது வளர்ச்சியுறத் தொடங்கியது, கி.மு. முதல்[6] நூற்றாண்டிற்றான் என்பது உரோமரே எழுதி வைத்துள்ள குறிப்புகளால் நன்குணரலாம். கி.மு.39 முதல் கி.மு.14 வரை உரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானுக்குப் பாண்டிய மன்னன் கி.மு. 20-இல் ‘துதுக்குழு’ ஒன்றை அனுப்பினான் என்பது நோக்கத்தக்கது. இஃதொன்றே தமிழர் உரோமரோடு கடல் வாணிகம் சிறப்புற நடத்தினர் என்பதற்குப் போதிய சான்றாகும்.
இமயப் படையெடுப்பு
கரிகாலன் ஆட்சிக்காலம் என நாம் கொண்ட கி.மு. 60-கி.மு.10 ஆகிய காலத்தில் வடநாடு இருந்த நிலையைக் காணல் வேண்டும். மகதப்பெருநாடு சுங்கர் வசத்தினின்று ‘கண்வ’ மரபினர் கைக்கு மாறிவிட்டது. கி.மு.73-இல் ‘வாசுதேவ கண்வன்’ மகதநாட்டுக்கு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.பி. 28 வரை ஆண்டனர். அவர் அனைவரும் வலியற்ற அரசரே ஆவர்.[7] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைத் தலைநகராகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைக் கோ நகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றனபோலும்; இன்றேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டு மன்னன் பட்டி மண்டபமும், வச்சிர நாட்டு வேந்தன் கொற்றப்பந்தரும், அவந்திநாட்டு அரசன் தோரண வாயிலும் கொடுத்து மரியாதை செய்தனர் என்று சிலப்பதிகாரம் கூறலிற் பொருள் இராதன்றோ?[8] இந்நாட்டரசர் சந்திர குப்த மோரியன் கால முதல் சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[9] கரிகாலன் வடநாட்டுப் படையெடுப்பைப் பற்றித் தமிழ் நூற் குறிப்பைத் தவிர வேறெவ்விதச் சான்றும் இதுவரை கிடைக்கவில்லை.
சங்ககாலக் கரிகாலர் இருவர்
கரிகாலன் என்று பெயர் தாங்கிய சோழர் இருவர் இருந்தனர் என்று ஆராய்ச்சியறிவு மிக்க திருவாளர் சிவராசப்பிள்ளை அவர்கள் கொண்டுள்ள முடிவு போற்றத்தக்கதே ஆகும். “இமயம் சென்ற கரிகாலனுக்கு முன்னிருந்த சோழர் இருவரைப்பாடியுள்ள பரணர், தமக்கு முன்னர் இருந்த கரிகாலன் ஒருவனைப் பற்றித் தம் பாக்களில் குறிப்பிட்டுள்ளார். பரணர், கரிகாலன் காலத்தினர் அல்லர். ஆனால் அவர் குறிக்கின்ற செய்திகள் அனைத்தும் செவிவழி அறிந்த செய்திகள். அவை அவருக்கு முன்னர் இருந்த கரிகாலன் ஒருவனைப் பற்றியன என்பனவே தெரிகின்றன. இந்நுட்பத்தை உணர்ந்த நான், கரிகாலன் என்ற பெயர் கொண்ட இருவரைப் பற்றிய செய்யுட்களையும் நன்கு ஆராய்ந்தேன்; இருவரைப் பற்றிய போர்கள் - போர் செய்த பகைவர், இவரைப் பாடிய புலவர்கள் வேறு வேறு என்பதை அறிந்தேன். முதற் கரிகாலனைப் பாடியவர் கழாத் தலையார், வெண்ணிக் குயத்தியார், என்பவர், பரணர் காலத்தவரான கபிலர், கழாத் தலையார் தமக்குக் காலத்தால் முற்பட்டவர் என்று தெளிவுறக் கூறுகிறார். இவ்விரு புலவரும், பெருஞ்சேரல் ஆதன் அல்லது பெருந்தோள் ஆதன் என்பவனைக் கரிகாலன் தோற்கடித்த செய்தியைக் கூறியுள்ளனர். பெருஞ்சேரலாதன் புறப்புண் நாணி வடக்கு இருந்தான். அப்பொழுது அவனைக் கழாத் தலையார் பாடினர். வென்ற கரிகால் வளவனை வெண்ணிக் குயத்தியார் பாராட்டி யுள்ளனர்.
“இதுபோலவே வேறொரு ‘வெண்ணிப்போர்’ பொருநர் ஆற்றுப்படையுள் கூறப்பட்டுள்ளது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். அப்போர்கரிகாலனுக்கும் சேரன், சோழன் என்பார்க்கும் நடந்தது.போரில் கரிகாலன் அவ்விருவரையும் கொன்று வெற்றிபெற்றான். பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகாலனைப் பாராட்டிப் பாடப்பெற்ற நீண்ட அகவற்பா. அதனில், வெண்ணிப் போரில் மாண்ட சேரன் பெயரோ பாண்டியன் பெயரோ, குறிக்கப்படவில்லை. இப்போர், கழாத் தலையார் குறித்த போராக இருந்திருக்குமாயின், பாண்டியன் போர் செய்ததாக அவர் குறித்தல் வேண்டும். வெண்ணிக் குயத்தியாரும் பாண்டியனைப்பற்றி ஒன்றுமே குறித்திலர். இவ்விருவரும் குறித்த வெண்ணிப் போராக இஃது இருந்ததெனின் சேரன் புறப்புண் நாணி வடக்கிருந்ததை முடத்தாமக் கண்ணியார் குறித்திருத்தல் வேண்டும்.
“மேலும், வெண்ணிவாயிலில் நடந்த பெரும் போரில் கரிகாலன் வேந்தரையும் பதினொரு வேளிரையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். அவரே பிறிதொரு செய்யுளில், “அரசர் ஒன்பதின்மர் ‘வாகை’ என்னும் இடத்தில் கரிகாலனோடு நடத்திய போரில் தோற்றனர்” என்று குறித்துள்ளார். இப்போர்ச் செய்திகள் பிற்காலக் கரிகாலனை (இமயம் சென்று மீண்ட கரிகாலனை)ப்பற்றிய நீண்ட பாக்களாகிய பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்பட்டில. மேலும், சோழன் ஒரிடத்தில் பதினொரு வேளிருடனும் அரசருடனும், மற்றோர் இடத்தில் ஒன்பது அரசருடனும் போரிட வேண்டிய நிலைமை மிகவும் முற்பட்டதாகவே இருத்தல் வேண்டும் அன்றோ? சோழநாடு ஒரரசன் ஆட்சிக்கு உட்படாமல் - பல சிறு நாடுகளாகப் பிரிந்து பலர் ஆட்சியில் இருந்த காலத்திற்றான் இத்தகைய குழப்ப நிலைமை உண்டாதல் இயல்பு. பிற்காலக் கரிகாலன் பொதுவர், அருளாளர் என்பவருடனும் பாண்டியன் முதலியவருடனும் போர் செய்து வென்றதாகத்தான் பொருநர் ஆற்றுப்படை கூறுகிறது. பதினொரு வேளிர் ஒன்பது அரசர் என்பது நன்கு சிந்திக்கத்தக்க எண்கள் ஆகும். தொகை நூற் பாடல்களில் சோழர் என்னும் பன்மைச் சொல் பல இடங்களில் வருதலைக் காணலாம்; உறந்தை, வல்லம், குடந்தை, பருவூர், பெருந்துறை முதலிய பல இடங்களில் சோழ மரபினர் இருந்தனர் என்று தெரிகிறது. இக்குறிப்புகளால், தொடக்க காலமுதல் ஏறக்குறைய இரண்டாம் கரிகாலன் காலம் வரை சோழநாட்டில் சோழ மரபினர் பலர் பல இடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர்; அவருள் மண்ணாசை கொண்ட ஒருவன் மற்றவரை வென்றடக்க முயன்றனன்.இதனால் பல இடங்களில் போர் நடந்தன என்பன ஒருவாறு அறியலாம். இம்மரபினருள் முதற் கரிகாலன் அழுந்துரை ஆண்ட சென்னி மரபினனாக இருக்கலாம்."
இந்நுட்பமான ஆராய்ச்சியால், இமயம் சென்ற கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்பதும், வெண்ணிக் குயத்தியாரால் பாடப்பெற்றவன் முதற் கரிகாலன் என்பதும் அறியக்கிடத்தல் காண்க.[10] இதனால், ஆராய்ச்சியாளர் கணக்குப்படி, முதற்கரிகாலன் ஏறத்தாழ இரண்டாம் கரிகாலனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்டவன் ஆவன்; ஆகவே, அவன் காலம் ஏறத்தாழ, கி.மு. 120 - 90 எனக் கொள்ளலாம்.
சங்ககாலச் சோழர் வரையறை
இக்கால முறையைக் கொண்டு சங்க காலச் சோழர் காலங்களை ஒருவாறு வரையறை செய்வோம்.
தொகை நூல்களிலும் சிலப்பதிகார - மணிமேகலைகளிலும் கூறப்பட்டுள்ள பழைய சோழராவார் பலர். அவருள் மிக்க பழைமையானவர் (1) சிபி. (2) முசுகுந்தன் (3) காந்தன் (4) தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் (5) மநுநீதிச் சோழன் என்போர் ஆவர். இவருள் மதுநீதிச் சோழன் மகனைத் தேர்க் காலிலிட்டுக் கொன்ற வரலாறு கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இலங்கையைப் பிடித்தாண்ட சோழன் ஒருவனது வரலாற்றில் ஒரு பகுதியாகக் காணப்படலால், மநுநீதிச் சோழன் காலம் ஏறத்தாழக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டெனக் கொள்ளலாம். ஏனையோர் அனைவரும் அதற்கு முற்பட்டவர் ஆவர். என்னை? அனைவரும் மிக்க பழைமை வாய்ந்தவர் என்று சங்க நூல்களே கூறலால் என்க.
மோரிய - பிந்துசாரன் படையெடுப்பை எதிர்த்து நின்ற (வரலாறு பிறகு விளக்கப்படும்) செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவன் காலம் கி.மு. 298 - கி.மு. 272, என்னை? அதுவே பிந்துசாரன் காலமாதலின் என்க. முன் பக்கத்திற் சொன்ன முதற் கரிகாலன் காலம் ஏறத்தாழக் கி.மு. 120 - கி.மு. 90 எனக் கொள்ளலாம். இரண்டாம் கரிகாலன் காலம் கி.மு. 60 - கி.மு.10 ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கட் சோழன் வாழ்ந்தான். அவனுக்கு முன் சிலப்பதிகாரத்தில் (கி.பி.150 - 200) நெடுமுடிக் கிள்ளி சோழ அரசனாக இருந்தான். இவனுக்கு முற்பட்டவரும் கரிகாலனுக்குப் பிற்பட்ட வருமாக நலங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலியோரைக் கொள்ளலாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு சங்ககாலப் பட்டியலைக் காலமுறைப்படி (ஒருவாறு) தொகுப்போம்:[குறிப்பு 1]
1. கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்:
(1) சிபி. (2) முசுகுந்தன் (3) காந்தன் (4) துரங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்.
2. கி.மு. 3-ஆம் நூற்றாண்டுச் சோழன்:-
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி. 3. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுச் சோழர்:
(1) மநுநீதிச் சோழன் (2) முதற் கரிகாலன்
4. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன் :
இரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)
5. கி.பி. 1 முதல் கி.பி. 150 வரை இருந்த சோழர் : (1) நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் (2) கிள்ளி வளவன் (3) பெருநற்கிள்ளி (4) கோப்பெருஞ் சோழன் (5) வேறு சோழ மரபினர் சிலர்.
6. கி.பி. 150 - 300 வரை இருந்த சோழர் : (1) நெடுமுடிக்கிள்ளி, இளங்கிள்ளி முதலியோர்.
- ↑ Vide his ‘The Sangam age’, pp. 56,57.
- ↑ C.S. Srinivasacharia’s, A History of India p,49.
- ↑ ‘Tamil Polil’, Vol. 13.pp. 31-34.
- ↑ Dr. W. Griger’s ‘A Short History of Ceylon’ in ‘Buddhistic Studies’ ed. by B.C. Law.
- ↑ Dr. W.A. De Silva ‘History of Buddhism in Ceylon, in ‘B. Studies’ ed. by B.C. Law. pp. 493, 494 and 500.
- ↑ V.A. Smith’s ‘Early History of India,’ p.471.
- ↑ V.A. Smith's ‘Early History of India,’ pp. 215-216.
- ↑ இந்திரவிழவூரெடுத்த காதை, வரி, 99-104.
- ↑ V.A. Smith’s ‘Early History of India’, p.369.
- ↑ K.N.S. Pillai's ‘Chronology of the Early Tamils’, pp. 91-98.
- ↑ இக்கால வரையறை முற்றும் பொருத்தமான தென்றோ, முடிந்த முடிபென்றோ கருதலாகாது.