உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் வரலாறு/இராசேந்திர சோழன்

விக்கிமூலம் இலிருந்து

6. இராசேந்திர சோழன்
(கி.பி. 1012 - 1044)

பிறப்பு : இராசராசனது ஒரே மகனான பரகேசரி இராசேந்திரன் ‘உடைய பிராட்டியார் தம்பிரான் அடிகள் வானவன் மாதேவியாரான திரிபுவன மாதேவியார்க்கு[1] மார்கழித் திங்கள் திரு ஆதிரை நாளிற்[2] பிறந்தவன். வேறு இவனது இளமைப் பருவத்தைப் பற்றிக் கல்வெட்டுகளைக் கொண்டு ஒன்றுமே அறியக் கூடவில்லை. இவன் கல்வெட்டுகள் ‘திருமன்னி வளர’ என்னும் தொடர்புடையன.

பெயர் : இராசராசனது இயற்பெயர் ‘அருள் மொழி’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. அங்ஙனமே இவன் இயற்பெயர் மதுராந்தகன் என்று அச்செப்பேடுகள் குறிக்கின்றன.[3]

வளர்ப்பு : விசயாலயன் வழிவந்த மன்னர்க்குப் பழை யாறையில் அரண்மனை ஒன்று உண்டு.அங்கு இராசராசன் தம்க்கையாரான குந்தவ்வையார் இருந்தார். இராசராசன் பாட்டியாரான (கண்டராதித்தன் மனைவியாரான) செம்பியன் மாதேவியார் இருந்தார்.இவ்விருவரும் சிவபக்தி நிறைந்தவர். இராசேந்திரன் இம்மூதாட்டியரிடம் வளர்ச்சி பெற்றவனாதல் வேண்டும்.[4]

இளவரசன் : இராசராசன் தன் தந்தையான இரண்டாம் பராந்தகன், தமையனான ஆதித்தன், சிற்றப்பனான மதுராந்தகன் ஆகிய மூவரும் ஆண்டு இறந்த பிறகு பட்டம் பெற்றவன் ஆதலின், அவன், தான் பட்டம் பெற்ற கி.பி. 985-லேயே முதியவனாக இருந்திருத்தல் வேண்டும். அதனால், அவன் பட்டம் பெற்ற காலத் திற்றானே அவன் மகனான இராசேந்திரன் வயது வந்த இளைஞனாக இருத்தல் கூடியதே ஆம். அதனாற்றான் இராசராசன் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் (கி.பி. 988) ‘இராசேந்திர சோழ தேவன்’ குறிப்பிடப்பட்டுள்ளான்[5]. இராசராசன் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அரசாட்சி செய்துள்ளான். இராசேந்திரன் அந்தக் காலம் முழுவதும் தந்தையுடன் இருந்து பல போர்களில் ஈடுபட்டிருந்தான். எனவே, இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில் ஏறத்தாழ 50 வயது உடையவனாக இருந்தானாதல் வேண்டும்.

சென்ற பகுதியிற் கூறப்பட்ட இராசராசன் ஆட்சியில் நடந்த போர்களில் எல்லாம் இளவரசனாக இருந்த இராசேந்திரற்குப் பங்குண்டு என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ? இராசேந்திரன் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போர்த்திறத்திலும் அரசியலிலும் நன்கு பண்பட்டிருந்தான். இராசராசன் தன் ஒப்பற்ற மகனான இராசேந்திரனிடமே தனது முதுமைப்பருவத்தில் அரசியலை ஒப்புவித்தான். அவன் உயிருடன் இருந்தபோதே கி.பி.1912-இல் இராசேந்திரற்கு முடிசூட்டினான் என்பது ஐயமற விளங்குகிறது. என்னை? இராசராசன், தன் மகனான இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஒரு தேவதானம் கொடுத்தான் என்று திருமுக்கூடல் கல்வெட்டு[6] கூறுதலால் என்க.

நாட்டு நிலை : இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில் (கி.பி. 1012-ல்)[7] சோழப்பேரரசு வடக்கே கிருஷ்ணை துங்கபத்திரை வரை பரவி இருந்தது. சோழநாடு போகப் புதிதாக வென்ற நாடுகளைத் திறமுற ஆள நம்பிக்கையுடைய அதிகாரிகள் இருந்தனர். சில நாடுகளில் பழைய அரசர்களே ஆட்சி புரிய விடப்பட்டிருந்தனர். நன்றாகப் பயிற்சி பெற்ற ‘தெரிந்த’ படையினர் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இங்ஙனம் புதிய நாடுகளைப் படைப் பலமும் அரசியல் அறிவும் பெற்ற அதிகாரிகள் ஆண்டு வந்தமையின், பேரரசன் கவலை இன்றிப் பிற நாடுகளை வெல்ல வசதி பெற்றிருந்தான்; பேரரசிலும் அமைதி நிலவி இருந்தது.

இளவரசன் - இராசாதிராசன் : இராசராசன் தன் ஆட்சியின் இறுதியிற்றான் இராசேந்திரற்கு முடிசூட்டினான். ஆனால், இராசேந்திரன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டிலேயே (கி.பி.1018-இல்) தன் மகனான இராசகேசரி என்பாற்கு முடிசூட்டி வைத்தான்.[8] அது முதல் தந்தையும் மைந்தனும் ஏறத்தாழ 25 ஆண்டுகள் சேர்ந்தே அரசு புரிந்து வந்தனர் என்பது, இராசாதிராசன் மெய்ப்புகழால் நன்குணரலாம்.[9] இப் பழக்கம் போற்றத்தக்கதும் புதியதும் ஆகுமன்றோ? நாட்டின் பெரும் பகுதியை இராதிராசனே ஆண்டு வந்தான்.[10] திரு மழபாடியில் கிடைத்த இராசாதிராசனது 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ‘தன் தந்தையின் வெண் கொற்றக்குடை நிழலைப்போால இராசாதிராசன் குடை இருந்தது. வடக்கே கங்கையையும் தெற்கே ஈழத்தையும் மேற்கே மகோதையையும் கிழக்கே கடாரத்தையும் கொண்ட இராசேந்திரன் பேரரசை இராசாதிராசனே ஆண்டுவந்தான்,’ என்று கூறுகிறது[11]. மகன் தன் தந்தையின் ஆட்சியிலேயே முடிசூடப் பெற்றது சிறப்பு: அதனுடன் தந்தையுடனே இருந்து ஏறத்தாழ 26 ஆண்டுகள் ஆட்சி அறிவு சிறக்கப்பெற்றமை மிக்க சிறப்பு. இவ்வரிய செயல், இராசேந்திரன் இந்திய அரசர் எவரும் செய்யாத பெரியதொரு அரசியல் நுட்பம் வாய்ந்த வேலை செய்தான்-சிறந்த அரசியல் அறிஞன் என்பதை மெய்ப்பித்துவிட்டது. இராசாதிராசன் முதல் மகனல்லன். இராசேந்திரன் அவனை இளவரசன் ஆக்கிப் பேரரசை ஆளும் பொறுப்பை ஒப்படைத்தான் எனின், இந்த இளவல் ஏனை மக்களினும் பல்லாற்றானும் சிறப்புப் பெற்றவனாக இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? இங்ஙனம் அவரவர் ஆற்றல் அறிந்து அவரவர்க்கேற்ற அரசப் பதவி அளித்த பெருமை இராசேந்திரன் ஒருவர்க்கே உரியதாகும், என்னல் மிகையாகாது. தென் இந்திய வரலாற்றிலே இது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இளவல்-சுந்தரசோழன் : இராசேந்திரன் தன் மற்றொரு மகனான சுந்தரசோழன் என்பானைப்பாண்டிய நாட்டிற்குத் தலைவன் ஆக்கினான். இவ்விளவல் கல்வெட்டுகளில் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனப் படுகிறான். பாண்டிய நாட்டை ஆண்டதால் ‘பாண்டியன்’ எனப்பட்டான்; அப்பாண்டியர் சடாவர்வன், மாறவர்மன் என்பவற்றில் ஒன்றை வைத்திருந்ததைப் போலச் ‘சடாவர்மன்’ எனப் பெயர் தாங்கினான்; தனது இயற் பெயரான ‘சுந்தர சோழன்’ என்பதையும் கொண்டு விளங்கினான். இவ்விளவல் பின்னர்ச் சேர நாட்டையும் சேர்த்து ஆளும் உரிமை பெற்றான். அதனால், சோழ கேரளன் எனப்பட்டான். இங்ஙனம் இவ்விளவரசன் தன் தந்தை காலம் முழுவதும் சேர, பாண்டிய நாடுகளை ஆண்டுவந்தான்.

இங்ஙணம் மண்டலங்களை ஆண்டவர் தம் பேரரசன் மெய்ப்புகழைக் கூறியே தம் பெயரில் கல்வெட்டுகள் விடுதல் மரபு. ஆயின் ஆட்சி ஆண்டு அவரதாகவே இருக்கும். இராசேந்திரன் தன் மக்களிடமும் தன் நம்பிக்கைக்குரிய பிற அரசியல் தலைவர்களிடமுமே மண்டலம் ஆளும் பொறுப்பை விட்டிருந்தான். பேரரசன் தன் மக்களையே மண்டலத் தலைவர்கள் ஆக்கி வைத்தமையால், பேரரசு குழப்பம் இன்றிச் செவ்வனே நடைபெற்று வந்தது.

போர்ச் செயல்கள் : இராசேந்திரன் காலத்துப் போர்ச் செயல்கள் மூன்றுவகையின. அவை (1) இவன் இளவரசனாக இருந்து நடத்தியவை, (2) அரசனாக இருந்து நடத்தியவை, (2) இவன் காலத்தில் இளவரசனான இராசாதிராசன் நடத்தியவை எனப்படும். முதற் பிரிவு இராசராசன் வரலாறு கூறும் பகுதியிற் காணலாம். இரண்டாம் பகுதியை இங்கு விளக்குவோம்.

இடைதுறை நாடு : இது கிருஷ்ணைக்கும் துங்க பத்திரைக்கும் இடைப்பட்ட சமவெளி. அஃதாவது இப்போது ‘ரெய்ச்சூர்’ எனப்படும் கோட்டம் என்னலாம்.[12] இஃது ‘எடதொறே இரண்டாயிரம்’ என்று கன்னடர் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

கொள்ளிப் பாக்கை : இஃது ஐதராபாத்துக்கு நாற்பத்தைந்து கல் வடகிழக்கே உள்ளது. இதன் இன்றைய பெயர் ‘கூல்பாக்’ என்பது. இது ‘கொள்ளிப் பாக்கை ஏழாயிரம்’ எனப்படும். இந்நாடு 13-ஆம் நூற்றாண்டுவரை சிறப்புற்றிருந்தது.[13] இதன் மதில் சுள்ளிமரங்கள் நிறைந்தது. இஃது ஆறாம் விக்கிரமாதித்தனின் காலத்தில் அவனுடைய மகனான மூன்றாம் சோமேசுவரனால் ஆளப்பட்டு வந்தது.

மண்ணைக் கடக்கம் : இஃது இராட்டிரகூடர்க்குக் கோநகராக இருந்த இடம். இது, பிறகு வந்த மேலைச் சாளுக்கியர்க்கும் சிறிதுகாலம் தலை நகரமாக இருந்தது. வடக்கே பரமார அரசரும் தெற்கே சோழரும் இதனைத் தாக்கத் தாக்க, சாளுக்கியர் தமது தலைநகரைக் கலியான புரத்துக்கு மாற்றிக் கொண்டனர். மண்ணைக்கடக்கம் இப்பொழுது மான்யகேடம் எனப்படும். இதன் மதி: கடக்க முடியாத வன்மை உடையது.

இந்நாடுகளை இராசேந்திரன் வென்றான் என்று இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.[14] திருவொற்றியூர் மண்டபம் ஒன்றுக்கு ‘மண்னை கொண்ட சோழன்’ என்னும் பெயர் இடப்பட்டது.[15]

ஈழப்போர் : இராசராசன் காலத்தில் நடந்த ஈழப்போரில் தோற்றோடி ஒளிந்த ஐந்தாம் மஹிந்தன் என்னும் ஈழ அரசன், சில ஆண்டுகள் கழித்துப் பெரும் படை திரட்டிச் சோழர் ஆட்சிக்குட்பட்ட ஈழப்பகுதியை மீட்க முயன்றான். அதைக் கேள்வியுற்ற இராசேந்திரன் பெரும்படையுடன் சென்றான்; போரில் வெற்றி கொண்டான். ஈழத்து அரசனுக்கும் அவன் மனைவியர்க்கும் உரிய முடிகளையும் அணிகலன்களையும் பொன்மணிகளையும் பிற சின்னங்களையும் கைப்பற்றி மீண்டான்; இவற்றுடன் ஒரு நூற்றாண்டுக்கு முன் இராசசிம்ம பாண்டியன் விட்டிருந்த மணிமுடி முதலியவற்றையும் கைப்பற்றினான்.[16] இப்போர் நிகழ்ச்சி கி.பி. 1017-18-இல் நடைபெற்றதாதல் வேண்டும். சோழ சேனைகள் இலங்கையைச் சூறையாடின, தோல்வியுற்ற மஹிந்தன் மீட்டும் காட்டிற்கு ஒடிவிட்டான்’ என்று மகாவம்சம் கூறுகிறது. ஆயினும், அவன் எவ்வாறோ சோணாட்டிற்குப் பிடித்துச் செல்லப்பட்டான். அங்கு அவன் சோழர்க்கு முற்றும் பணிந்துவிட்டான்[17]. அவன் சோழ நாட்டிலே கி.பி. 1029-இல் இறந்தான். இப்போரினால் ஈழநாடு முற்றிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது. இராசேந்திரன் கல்வெட்டுகள் இலங்கையிற் கிடைத்துள்ளன.[18]

சோழ நாட்டில் இறந்த மஹிந்தனது மகன் மறைவாக ஈழத்தவரால் வளர்க்கப்பட்டான். அவன் தன் தந்தை சோணாட்டில் மடிந்ததைக் கேட்டு, ரோஹணப் பகுதிக்குத் தானே அரசனாகி, முதலாம் விக்கிரமபாகு என்னும் பெயருடன் கி.பி. 1029 முதல் 1041 வரை ஆண்டுவரலானான்.[19]

தென்னாட்டுப் போர் : பாண்டியநாடு இராசராசன் காலத்திற்றானே அடிமைப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும், ‘இராசேந்திரன் அங்குச் சென்று பாண்டியனைத் தோற்கடித்து விரட்டி, அந்நாட்டை ஆளத் தன் மகனான சுந்தர சோழனை நிலைநிறுத்தி மீண்டான். பிறகு பரசுராமனது சேர நாட்டைக் கைக்கொள்ளப் பெரும்படையுடன் மலையைத் தாண்டிச் சென்றான்; அங்கு இருந்த அரசருடன் போர் செய்து வென்றான்; கிடைத்த நிதிக்குவியல்களுடன் தன் நாடு திரும்பினான்’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இதனுடன் இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஸ்ரீ வள்ளுவர் என்னும் பெயர்கொண்ட ஸ்ரீ வல்லப பாண்டியன் மனைவி திருவிசலூர்க்கோவிலுக்கு நிவந்தம் கொடுத்தாள்[20] என்பதையும் இராசேந்திரன் மதுரையில் பெரிய அரண்மனை ஒன்றைக் கட்டினான்[21] என்பதையும் நோக்க, சோழர் ஆட்சியில் இருந்தபோதிலும், பாண்டியர் தலைமறைவாகப் பாண்டிய நாட்டில் இருந்து கொண்டே கலகம் விளைத்தனரோ என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இராசேந்திரன், இராசராசனைப் போலக் காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான்.[22] இக்குறிப்புகளால் சேரபாண்டிய நாடுகளில் அமைதியை நிலை நாட்டவே இராசேந்திரன் முனைந்திருத்தல் வேண்டும் என்பதே பெறப்படுகிறது.

சாளுக்கியப் போர் : இராசேந்திரனது 9-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், இராசேந்திரன் காஞ்சியினின்றும் புறப்பட்டுச் சென்று, ‘ஜயசிங்கனது’ இரட்டைப்பாடி ஏழரை லக்கம் வென்று நவநிதிகளைக் கைப்பற்றிய செய்தி காணப்படுகிறது. இப்போர் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காப்பிய நடையில் பத்துச் சுலோகங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளது[23]. கி.பி. 1016-இல் ஐந்தாம் விக்கிரமாதித்தனது தம்பியான ஜயசிம்மன் சாளுக்கிய நாட்டை ஆளத்தொடங்கினான். அவன் பல்லாரி, மைசூர் என்னும் பகுதிகளைக் கைப்பற்றினான்.[24] சேர சோழரை வெற்றி கொண்டதாகக் கூறிக் கொண்டான். இராசேந்திரன் ஜயசிம்மனை முயங்கி (முசங்கி) என்னும் இடத்தில் பொருது வென்றான். ‘முயங்கி’ என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள ‘உச்சங்கி துர்க்கம்’ என்பர் சிலர்[25]. ஐதராபாத் சமஸ்தானத்தில் உள்ள ‘மாஸ்கி’ என்பதாகும் என்பர் சிலர்.[26]

கங்கை கொண்டான் : இராசேந்திரனது 41-ஆம் ஆண்டில் இவனது வட நாட்டுப் படையெடுப்புக் கூறப்பட்டுள்ளது. எனவே, இவன் கி.பி.1023-இல் வடநாடு நோக்கிச் சென்று மீண்டிருத்தல் வேண்டும். இப் படையெடுப்பில் இராசேந்திரனது சேனைத் தலைவன் பல நாடுகளை வென்றான்; இராசேந்திரன் அத்தலைவனைக் கோதாவரிக்கரையில் சந்தித்தான். சேனைத் தலைவன் முதலில் (1) சக்கரக் கோட்டத்தை வென்றான். அந்த இடம் ‘மத்திய பிரதேசத்தில்’ உள்ள பஸ்தர் சமஸ்தானத்தின் தலைநகரமான இராசபுரத்திற்கு 12 கிமீ தொலைவில் உள்ள ‘சித்திரகோடா’ என்னும் ஊராகும்[27]. இந்தப் பகுதியிற்றான் மதுரமண்டலம் (ஒரிஸ்ஸாவில் உள்ள ‘மதுபன்’ என்பது), நாமனைக்கோலம், பஞ்சப் பள்ளி ஆகிய இடங்களும் இருந்திருத்தல் வேண்டும். (2) ஆதிநகரில் இந்திராதனை வென்று கோசல நாட்டையும் காடுகள் செறிந்த ஒட்டரதேசத்தையும் கைக்கொண்டான். திருவாலங்காட்டுச் செப்பேடுகள், இராசேந்திரன் ஒட்டரதேசத்து அரசனைக்கொன்று, அவன் தம்பியிடம் பன்மணிக்குவியலைத் திறைகொண்டான் என்று குறிக்கின்றன. (3) பிறகு, இவன், தன்மபாலனது தண்டபுத்தி இரணசூரன் ஆண்ட தென்லாடம், கோவிந்தசந்திரன் ஆண்டகிழக்கு வங்காளம் இவற்றை முறையே அடைந்தான். தண்டபுத்தி என்பது ஒட்டர தேசத்துக்கும் வங்காளத்துக்கும் நடுவில், சுவர்ணரேகையாற்றுக்கு இருகரையிலும் உள்ள நாடு[28]. இது படைகாப்பாக ஒரு தலைவனுக்குக் கொடுக்கப்பட்டு அவனால் நுகரப்பட்ட நிலம்’ எனக் கொள்ளலாம். வங்காளத்தில் ஒரு பகுதி ராடா எனப்பட்டது. அதுவே கல்வெட்டு குறிக்கும் லாட தேசம் ஆகும். இம்மூன்று நாடுகளையும் ஆண்ட அரசர்கள் ஏறத்தாழ வரலாற்றில் இடம்பெற்றவரே ஆவர். ஆதலின், இவர்கள் பெயர்கள் பொய்ப்பெயர்கள் அல்ல. மகிபாலன் வங்க நாட்டை ஆண்டுவந்தான். அவன் சோழர் தானைத் தலைவனது சங்கொலிக்கு அஞ்சிப் போர்க்களம் விட்டு ஓடிவிட்டான். உடனே சோழர் சேனைத் தலைவன் அவ்வரசனுடைய யானைகளையும் பெண்டிர் பண்டாரங்களையும் பற்றிக் கொண்டு கங்கைக்கரையை அடைந்தான்.

தோல்வியுற்ற வேந்தர் தலைகளில் கங்கைநீர் கொண்டுவரப்பட்டது[29]. இது மிகைபடக் கூறலோ, உண்மையோ, தெரியவில்லை. பெருமகிழ்ச்சியோடு திரும்பிவந்த சேனைத் தலைவனை இராசேந்திரன் கோதாவரி யாற்றங்கரையிற் சந்தித்து மகிழ்ந்தான்.[30] இந்த வட நாட்டுப் படையெடுப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கலாம். இராசேந்திரன் தான் வென்ற வட நாடுகளை ஆள விரும்பவில்லை. அதற்காக அவன் படையெடுத்திலன்; தான் புதிதாக அமைத்த கங்கை கொண்ட சோழபுரத்தையும் சோழகங்கம் என்னும் ஏரியையும் கங்கை நீரால் தூய்மை ஆக்க விரும்பியே படைகளை வடக்கே அனுப்பிக் கங்கை நீரைக் கொண்டுவர முயன்றான். வேற்றரசன் படை தன் நாட்டு வழியே செல்லப் புதிய நாட்டினர் இடந்தரார் ஆதலாலும், வடவரை வென்ற புகழ் தனக்கு இருக்கட்டுமே என இராசேந்திரன் எண்ணியதாலுமே இப்போர்கள் நிகழ்ந்தனவாதல் வேண்டும்.

வங்கத் தமிழ் அரசர் : இப் படையெடுப்பில் ஈடுபட்ட படைத்தலைவனோ அரசியல் தந்திரியோ ஒருவன் (கருநாடகன்) மேற்கு வங்காளத்தில் தங்கிவிட்டான். அவன் வழிவந்தவன் சாமந்த சேனன் என்பவன். அவனே பிற்காலத்தில் வங்காளத்தை ஆண்டுவந்த சேன மரபின் முதல் அரசன் ஆவன்[31]. மிதிலையை ஆண்ட கருநாடர் இங்ஙனம் சென்ற தென்னாட்டவரே ஆவர். கங்கைக் கரை நாடுகளில் இருந்த சிவ பிராமணர் பலர் இராசேந்திரன் காஞ்சியிலும் சோழ நாட்டிலும் குடியேறினர்[32]. அறிவும் ஆற்றலும் உடையவர் எந்நாட்டாராலும் போற்றலுக் குரியரே அல்லரோ?

கடாரம் முதலியன : இராசேந்திரன் கடல் கடந்து கடாரம் முதலியன கொண்ட செய்தி இவனது 13-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற்றான் காண்கிறது.[33] எனவே,  இவன் கி.பி. 1024-25-இல் அவற்றை வென்றிருத்தல் வேண்டும். கடல்கடந்து சென்ற இம்முயற்சியில் இராசராசன், முதலில் கடாரத்து அரசனை வென்று அவனுடைய யானை, செல்வம், வித்தியாதரத் தோரணம் முதலியன கவர்ந்தான்; பின்னர்ப் பல நாடுகளையும் ஊர்களையும் பிடித்தான்; இறுதியிற் கடாரத்தையும் கைக்கொண்டான். இனி இவன் கொண்ட நாடுகளும் ஊர்களும் எவை என்பதைக் காண்போம்.

ஸ்ரீவிஷயம் : இது சுமத்ரா தீவில் உள்ள ‘பாலம்பாங்’ என்னும் மாகாணம் ஆகும். இது மலேயாத் தீவுகளில் வாணிகத் தொடர்பால் கி.பி. 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை சிறப்புற்று விளங்கியது. இதனைச் சீனர் ‘ஸ்ரீ விஜயம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதி கிழக்கு-மேற்கு வாணிக வழிகட்கு நடு இடமாக இருந்து, செழிப்புற்றது. ஸ்ரீ-திரு, விஷயம்-நாடு; திருநாடு என்பது பொருள்.

கடாரம் : இது, தென்திரைக் கடாரம் எனப்படலால், கடற்கரையைச் சேர்ந்த பகுதி என்பது விளங்கும். இது வட மொழியில் ‘கடாஹம்’ என்றும் தமிழில் ‘காழகம், கடாரம்’ எனவும் பட்டது. காழகம் என்பது பத்துப்பாட்டிற் காணப்படலால், சங்கத் தமிழர் நெடுங்காலமாகக் கடாரத்துடன் கடல்வழி வாணிகம் செய்துவந்தமை அறியலாம். சீனரும் நெடுங்காலமாக வாணிகம் செய்துவந்தனர். அவர்கள் எழுதி வைத்த குறிப்புகளால், மலேயா தீபகற்பத்தின் தென்பகுதியில் உள்ள ‘கெடா’ என்னும் இடமே ‘கடாரம்’ ஆதல் வேண்டும் என்பது தெரிகிறது. இதனை ஆண்டவன் ‘சங்கிராம விசயோத்துங்க வர்மன்’ என்பவன்[34]. மாயிருடிங்கம், இலங்காசோகம், மலையூர் என்பன மலேயாத் தீபகற்பத்துப் பகுதிகள் ஆகும். மாப்பப்பாமை, தலைத்தக்கோலம் என்பன ‘க்ரா’ பூசந்திக்குப் பக்கத்துப் பகுதிகள் ஆகும். மாதமாலிங்கம் என்பது மலேயாவின் கீழ்ப்புறத்தில், குவாண்டன் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள தெமிலிங் அல்லது ‘தெம்பெலிங்’ எனப்படுவதாகும். வளைப்பந்துறு என்பது இன்ன இடம் என்பது தெரியவில்லை. பண்ணை என்பது சுமத்ராத் தீவின் கீழ்க் கரையில் உள்ள பனி அல்லது ‘பனெய்’ என்னும் ஊராகும்.

இலாமுரி தேசம் - இது சுமத்ரா தீவின் வடபகுதியில் உள்ள நாடாகும். அரேபியர் இதனை லாமுரி என்று குறித்துளர்.

மாநாக்கவாரம் - இது நிக்கோபார் தீவுகளின் பழம் பெயர் ஆகும்.

இக்காடுகளும் ஊர்களும் அக்காலத்தில் ஸ்ரீ விஷயப் பேரரசிற்கு உட்பட்டு இருந்தன என்று சீன நூல்கள் கூறுகின்றன. இந்தப் பகுதிகளில் நல்ல துறைமுகங்கள் இருந்தன. சீன நாட்டுக் கப்பல்களும் தமிழ் நாட்டுக் கப்பல்களும் சந்திக்கவும், பண்டங்களை மாற்றிக் கொள்ளவும் மலேயா நாடுகளுடன் வாணிகம் செய்யவும் இந்த இடங்கள் பேருதவியாக இருந்தன. இங்கனம் தமிழக வாணிகத்திற்கு உதவியாக இருந்த இடங்களை இராசேந்திர சோழன் வலிந்து வென்றதன் காரணம் இன்னது என்பது விளங்கவில்லை; அங்குத் தங்கி வாணிகம் செய்த தமிழர்[35] உரிமைகளைக் காக்கவோ அல்லது ஸ்ரீ விஷய அரசன் செருக்கை அடக்கவோ தெரியவில்லை. வென்ற அந்நாடு களைச் சோழன் ஆண்டதாகவும் தெரியவில்லை. ஆதலின், மேற் கூறப்பெற்ற காரணங்கள் பொருத்தமாக இருக்கலாம்.

இராசாதிராசன் செய்த போர்கள் : இராசேந்திர சோழன் காலத்திற்றானே இராசாதிராசன் செய்த போர்களும் தந்தையையே சாருமாதலின், அவையும் இவன் செய்த போர்கள் என்றே கொள்ளற்பாலன. இனி, அவற்றின் விவரம் காண்போம்.

ஈழப் போர் : இராசேந்திரன் ஆட்சியின் தொடக்கத்தில் உண்டான ஈழப்போருக்குப் பிறகு கி.பி.1042-இல் மீண்டும் இராசாதிராசன் இலங்கையில் போர் நிகழ்த்த வேண்டி யிருந்தது. விக்கிரமபாகு 13 ஆண்டுகள் அரசாண்டு இறந்தான். அவன் சோழருடன் போர் செய்து இறந்தான் என்று சோழர் கல்வெட்டுகள் செப்புகின்றன. அவனுக்குப் பின் கித்தி என்பவன் எட்டே நாட்கள் ஆண்டான் பிறகு மஹாலான கித்தி என்பவன் மூன்றாண்டுகள் ரோஹன நாட்டை ஆண்டான். அவன் சோழருடன் போரிட்டுத் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டான். துளுவ நாட்டிற்கு ஒடவிட்ட அவன் மகன் விக்கிரம பாண்டியன் (சிங்கள அரசனுக்கும் பாண்டியன் மகளுக்கும் பிறந்தவன்) ரோஹணத்தை அடைந்து அரசன் ஆனான். அவன் ‘ஜகதீபாலன்’ என்பவனுடன் செய்த போரில் இறந்தான். இந்த ஜகதீபாலன் அயோத்தியை ஆண்ட அரசகுமாரன் என்று மகாவம்சம் கூறுகிறது. அவன் கன்யா குப்ஜம் என்னும் நாட்டிலிருந்து ஓடிவந்தான்; அவன் பெயர் ‘வீரசலாமேகன்’ என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. இலங்கை வேந்தரை வென்ற அவனையும் சோழர் கொன்றனர்; அவன் தமக்கை, மனைவியரைச் சிறை கொண்டு, தாயை மூக்கரிந்து அவமானப்படுத்தினர். விக்கிரம பாண்டியன் மகன் பராக்கிரமன், சோழர் அவனையும் வென்று முடிகொண்டனர்[36].

பாண்டியருடன் போர் : பாண்டிய நாட்டில் சுந்தர பாண்டியன் சிற்றரசனாக இருந்து ஒரு பகுதியை ஆண்டுவந்தான். அவன் ஒரு படைதிரட்டிக் கலகம் விளைத்தான். இராசாதிராசன் அவனைப் போரில் முறியடித்து நாட்டை விட்டு விரட்டி விட்டான். இஃது எந்த ஆண்டு நடந்தது என்பது கூறக்கூடவில்லை.

மலைநாட்டுப் போர் : இராசாதிராசன் மலை நாட்டை ஆண்ட அரசர் பலரைப் பொருது வெற்றிகொண்டான் என்று அவனது மெய்ப்புகழ்[37] கூறுகிறது. இராசாதிராசன் பாண்டி மண்டலத்தினின்றும் காந்தளுர்ச்சாலையில் கலம் அறுக்கச் சென்றான்; வழியில் வேள்நாட்டு அரசனைத் தாக்கிக் கொன்று, கூபக நாட்டு (தென் திருவாங்கூர்) அரசனை விடுவித்தான்[38]. எலிமலைக்குப் பக்கத்தில் இருந்த, நாடு ‘இராமகுடம்’ என்பது ‘எலி நாடு’ எனவும் படும். அதன் அரசன் மூவர் திருவடி எனப்பட்டான்[39]. இராசாதிராசன் அவனை வென்று, சேரனைத் துரத்தி அடித்தான், இச்செய்திகளை இவனது “திங்களேர்தரு’ என்று தொடங்கும் கல்வெட்டிற் காணலாம்.

மேலைச் சாளுக்கியப் போர் : இராசேந்திரனது இறுதிக் காலத்தில் மேலைச் சாளுக்கியர் சோழருடன் மீண்டும் போர் தொடுத்தனர். கி.பி.1042-இல் சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜயசிம்மன் இறந்தான். அவன் மகனான முதலாம் சோமேசுவரன் அரசன் ஆனான். அவனுக்கு ஆகவமல்லன், திரைலோக்கிய மல்லன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. சோழர் கல்வெட்டுகளில் அவன் ‘ஆகவமல்லன்’ என்றே குறிக்கப்பட்டான். இதனாற் போர் மூண்டது. இராசாதி ராசன் சாளுக்கிய சேனையைப் புறங்கண்டான். சேனைத் தலைவர்களான தண்டப் பையன், கங்காதரன் என்போரைக் கொன்றான். சோமேசுவரன் மக்களான விக்கிரமாதித்தனும் விசயாதித் தனும் சங்கமையன் என்ற தானைத் தலைவனும் போர்க்களத்தினின்றும் ஓடி மறைந்தனர். இராசாதித்தன் பகைவர் பொருள்களைக் கைக்கொண்டு கொள்ளிப் பாக்கையை எரியூட்டினான்[40]. சிறு துறை, பெருந்துறை, தைவ பீமகசி என்னும் முத்துறைகளிலும் [குறிப்பு 1]யானைகளைக் குளிப்பாட்டிச் சாளுக்கியரது பன்றிக்குறி பொறிக்கப் பட்ட குன்றுகளில் புலிக்குறி பொறித்தான்[41].

சோழரை வெல்ல முடியாதென்பதை உணர்ந்த ஆகவமல்லன் தூதுவர் சிலரை இராசாதிராசனிடம் அனுப்பினான். சோழன் அவருள் இருவரைப்பற்றி ஒருவற்கு ‘ஐங்குடுமி’ வைத்தும், மற்றவர்க்குப் பெண் உடை தரித்தும் அலங்கரித்தான்; அவர்க்கு முறையே ஆகவமல்லன், ஆகவமல்லி’ என்ற பெயரிட்டுத் திருப்பி அனுப்பினான். இதனாற் சிறந்த ஆகவமல்லன் ‘பூண்டி’ என்னுமிடத்திற் போர் செய்து படுதோல்வி அடைந்தான். இராசாதிரா சன் கலியாணபுரத்தைக் கைக்கொண்டு, அங்கு வீராபிடேகம் செய்து விசய ராசேந்திரன் என்ற பட்டம் சூடிக்கொண்டான்[42]. இவன் அப்பெரு நகரத் தையும் சூறையாடிப் பல பொருள்களைக் கைப்பற்றினான். அவற்றுள் குறிப்பிடத்தக்கது வாயிற்காவலர் சிலை ஒன்று. அதன் பீடத்தில், “ஸ்வஸ்தி ரீ உடையார் பூர் விசயராசேந்திர தேவர் கலியாணபுரம் எறிந்து கொடுவந்த துவார பாலகர்” என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அச்சிலை தாராசுரம் ஐராவதேச்சுரர் கோவிலில் இருந்தது; இப்பொழுது தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கிறது[43].

கங்கைகொண்ட சோழபுரம்[குறிப்பு 2] : இஃது இராசேந்திர சோழனால் புதிதாக அமைக்கப்பட்ட பெரிய நகரம் ஆகும். இது திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உடையார் பாளையம் தாலுக்காவில் இப்பொழுது ஒரு சிற்றூராக இருக்கின்றது. இராசேந்திரன் வடநாடு வென்ற பெருமைக்கு அறிகுறியாக கங்கைவரை இருந்த நாடுகளை வெற்றி கொண்டதற்கு அடையாளமாகவே இக் கங்கை கொண்ட சோழபுரம் கட்டினான்[44]; இதிற்கிடைத்த பழைய கல்வெட்டு வீர ராசேந்திர சோழ தேவனதே ஆகும்[45]. இவன் தஞ்சைப் பெரிய கோவிலைப் போலக் ‘கங்கை கொண்ட சோழேச்சரம்’ என்னும் அழகு மிக்க கோவிலைக் கட்டினான்; ‘சோழ கங்கம்’ என்னும் வியத்தகு ஏரி ஒன்றை எடுத்தான்.

இராசேந்திரன் கங்கைநீர் கொணர்ந்து பெரு வெற்றியுடன் மீண்டுவந்த தன் தானைத் தலைவனையும் படைகளையும் கோதாவரிக் கரையில் சந்தித்தான்; திரும்பி வருகையில் தளிதோறும் தங்கித் தரிசித்து இறுதியில் தன் நகரை அடைந்தான்; கங்கை நீரைக் கொண்டு தான் புதிதாகக் கட்டிய மாநகரையும் கோவிலையும் ஏரியையும் தூய்மைப் படுத்தினான். இக்கங்கைப் படையெடுப்பு மக்களால் வரவேற்கப்பட்டது[46].

நகர அமைப்பை அறியத்தக்க சான்றுகள் இல்லை. அங்குச் சோழ, கேரளன் என்னும் அரண்மனை ஒன்று இருந்தது.[47] அரண்மனை ஏவலாளர்தொகுதி ஒன்று இருந்தது. அதன் பெயர் ‘திருமஞ்சனத்தார் வேளம்’ என்பது. பெரிய கடைத்தெருவும் இருந்தது[48]. கோவிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மாளிகை மேடு எனப்படும் திடர் ஒன்று இருக்கிறது.அங்குதான் சோழரது அரண்மனை இருந்ததாம். அத்திடரின் அடியில் கட்டடத்தின் பகுதிகளும் அவற்றின் சின்னங்களும் காணப்படுகின்றன. அந்த இடம் அகழப் பெறுமாயின், பல குறிப்புகள் கிடைக்கலாம். ஏரியின் தென்கரை ஓரத்தில் சிற்றுரர் இருக்கிறது.அதன் பெயர் கங்கை கொண்ட (சோழ) புரம் என்பது. அதைச் சுற்றிக் காடு இருக்கிறது. அதற்கு அண்மையில் அழகிய பாழைடந்த கட்டடச் சிதைவுகள் பல காட்டிற்குள் இருக்கின்றன.இவை பழைய பாபிலோன் நகர அடையாளங்களாக இருந்த மேடுகளைப் போல இருக்கின்றன. இந்நகரம் செழிப்பாக இருந்த காலத்தில் சோழகங்கம் உதவிய நன்னீர் செய்த தொண்டு அளப்பரிதாக இருத்தல் வேண்டும்; இப்பொழுது காடாகக் கிடக்கும் பெரிய நிலப்பரப்பு அக் காலத்தில் பசுமைக் காட்சியைப் பரப்பி இருக்குமன்றோ?[49]

கங்கை கொண்ட சோழேச்சரம் : இது கங்கைகொண்ட சோழன் கட்டியதால் இப்பெயர் பெற்றது. இதன் அமைப்பு முழுவதும் இராசராசன் கட்டிய பெரிய கோவிலைப் போன்றதாகும். இஃது ஆறு கோபுரங்களைக் கொண்டிருந்தது இக்கோவில் பெரிய கோவிலைவிடச் சிறியதாக இருப்பினும், சிற்பவேலையில் அதைவிட மிகச் சிறந்தது. இச்சிறந்த கோவில் இப்பொழுது அழிந்து கிடக்கிறது. இதன் திருச்சுற்றுகள் காணப்படவில்லை. கோபுரங்களில் கீழைக்கோபுரம் ஒன்றே இப்பொழுது இடிந்த நிலையில் இருக்கின்றது. உள்ளறையும் அதைச் சுற்றியுள்ள திருச்சுவருமே இப்பொழுது ஒரளவு காணத்தக்க நிலையில் இருக்கின்றன.

விமானம்: இது தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்றது. இதன் உயரம் 50 மீ. இது 30 மீ. சதுரமாக அமைந்துள்ளது; ஒன்பது அடுக்குகளை உடையது. இவற்றுள் முதல் இரண்டு அடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. மற்றவை மேலே செல்லச் செல்ல சிறுத்துச் சரிவாக அமைந்துள்ளன; விமானத்தின் நாற்புறங்களிலும் வாயில்களும் மாடங்களும் இருக்கின்றன. விமானம் முழுவதும் அழகிய பதுமைகள் காட்சி அளிக்கின்றன. விமான உச்சியில் பெரிய கோவில் விமானத்தில் உள்ளதைப் போலவே ஒரே கல்லாலான சிகரம் ஒன்று இருக்கிறது. அதன் கலசம் இப்பொழுது இல்லை.

சிவலிங்கம் : தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்தைப்போலவே இது பெரியது. இஃது ஒரே கல்லால் ஆனது. இஃது இடி விழுந்து இப்பொழுது இரண்டாகப் பிளந்துள்ளது என்பது கூறப்படுகிறது. இச் சிவலிங்கப் பெருமானைப் பெரிய கோவிற்பெருமானைப் பாடிய கருவூர்த் தேவர் ஒரு பதிகத்தாற் சிறப்பித்துள்ளார். அஃது ஒன்பதாம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் கீழணைக்கட்டுக் கட்டிய பொழுது இக்கோவிற்பகுதிகளும் திருச்சுற்றுகளும் தகர்த்துக்கொண்டு போகப்பட்டனவாம். எளிய சிற்றுாரார் தடுத்தனர். பயன் என்ன? தடுத்தவர் தண்டிக்கப்பட்டனர்.இடித்த கற்சுவருக்குப் பதிலாகச் செங்கற் சுவர் வைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை[50].

இன்றைய காட்சி

திருமதில் : நீளம் ஏறத்தாழ 200 மீ அகலம் 150 மீ; கனம் 1 மீ. முழுவதும் கற்களால் இயன்றதே ஆகும். அத்திரு மதிலை அடுத்து இரண்டு அடுக்குத் திருச்சுற்று மாளிகை இருந்தது. இன்று ஒரு பகுதி மட்டுமே காணக்கிடக்கிறது.

திருச்சுற்று : (திருச்சுற்றில் இன்று பல கோவில்கள் காண்கின்றன; சந்திரசேகரர் கோவில் அழிந்து கிடக்கிறது. இவை யனைத்தும் (சண்டீசர் சிறு கோவில் தவிர) பிற்பட்டவையே ஆகும். அம்மன் கோவில் பிற்காலத்தே உள்ளே கொணர்ந்து கட்டப்பெற்றதாகும்.) திருமதிலின் முன்புற மூலைகள் இரண்டிலும் பின்புறமதிலின் நடுப்பகுதியிலும் அரை வட்டமான ‘காவற்கூடம்’ போன்ற கட்டட அமைப்பு இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குரிய குறிகள் காண்கின்றன.

உட்கோவிலுக்கு எதிரே முற்றும் செங்கற்களாலான பெரிய நந்தி ஒன்று படுத்துள்ளது. அதன் தலை வரை உயரம் 6 மீ. முதுகு வரை உயரம் 4 மீ. அதற்கு வலப்புறம் நேர் எதிரே சிங்கமுகக் கிணறு ஒன்று அற்புதமாக அமைந்துள்ளது. அருகில் உள்ள கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் டகர வரிசையில் அமைந்துள்ளன. அப் படிக்கட்டுக்கு மேல் செங்கற்களாலான சிங்கம் காட்சி அளிக்கிறது. அதன் வயிற்றில் உள்ள வாசல் வழியே படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால், பக்கத்தில் உள்ள கிணற்று நீரைக் காணலாம். ஏறத்தாழ 30 படிக்கட்டுகள் நீருள் இருக்கின்றனவாம்; நீருக்குமேல் 20 படிகள் உள. படிகள் அனைத்தும் கருங்கற்களே யாகும்.

உட்கோவில் : இதன் நீளம் 260 மீ., அகலம் 250மீ, இதனுள் மகா மண்டபம் 57மீ. நீளமும் 30 மீ. அகலமும் உடையது. இறை அறைக்கும் இம்மண்டபத்திற்கும் இடையே உள்ள அர்த்த மண்டபத்தின் இருபக்கங் களிலும் தெற்கிலும் வடக்கிலும் அழகிய திருவாயில்கள் படிகளுடன் உள்ளன. கோவிலை அணுகும் திருவாயில் கிழக்கே உள்ளது. மகா மண்டபத்தில், எட்டுப்பந்தி களாய் 140 கற்றுண்கள் அணி அணியாக உள்ளன. நடுப்பகுதி 6.மீ. உயரமுடையதாய், இரு பக்கங்களும் 5 மீ. உயரம் கொண்டனவாய் மேலே கல் கொண்டு மூடிய மண்டபமாகும். அர்த்த மண்டபம் இருவரிசைகளாலான பெரிய சதுரக் கற்றுாண்களாலானது. விமானம் 60 மீ. உயரமுடையது. கோவிலின் அடிப்பாகம் 30 மீ சதுர மானது. இதன் உயரம் 10 மீ. இரண்டு மேல் மாடிகளை உடையது, இதற்குமேல் உள்ள பகுதி எட்டு மாடிகள் உள்ளதாய் விளங்கும்.

லிங்கம் : லிங்கம் 13 முழச் சுற்றுடையது; பீடம் 30 முழச் சுற்றுடையது; லிங்கத்தின் உயரம் 4 மீ. பீடத்தைத் தாங்கச் சிறிய கற்றுாண்கள் உள்ளன. பீடம் இரண்டாக வெடித்துள்ளது. மூல அறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றின் அகலம் 3 மீ. ஆகும். இது கோவில் தரை மட்டத்திற்குமேல் 6 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

அர்த்த மண்டபம் : அர்த்த மண்டபத்துத் துாண்கட்கு மேல் நடனச் சிலைகள் பல செதுக்கப்பட்டுள்ளன. அவை பலவகை நடன நிலைகளைக் குறிக்கின்றன. இலிங்கத்தை நோக்கிய எதிர்ச்சுவர் மீது (காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சுவரில் உள்ள சிற்பங்கள் போல) 6 வரிசைச் சிற்பங்கள் இருக்கின்றன. அவை, (1) சண்டீசர் வரலாறு (2) தடாதகை திருமணம் (3) பார்த்தனும் பரமனும் போரிடல் (4) மார்க்கண்டன் வரலாறு முதலியன உணர்த்துகின்றன. அவை அனைத்தும் உயிர் ஒவியங்களாகக் காட்சி அளிக்கின்றன.

மகா மண்டபம் : இத்தகைய மண்டபமே பிற்கால ஆயிரக்கால் மண்டபத்திற்கு அடிகோலியதென்னலாம். இங்கு சம்பந்தர் கற்சிலை மிக்க அழகோடு காணப்படுகிறது, துர்க்கையம்மன் சிலை அற்புத வேலைப்பாடு கொண்டது. நவக்கிரக அமைப்பு வேறெங்கும் காணப்படாத புதுமை வாய்ந்தது. சூரியன் தேர்அட்டதிசைப் பாலகர் - அவர்க்கு மேல் நவக்கிரக அமைப்பு-நடுவண் பதும பீடம், இவை அனைத்தும் ஒரே வட்டக்கல்லில் அமைந்துள்ள காட்சி கண்டு வியத்தற் குரியது. மகா மண்டபத்தில் உள்ள இரண்டு அறைகளில் விமானத்தின் கலசமும் பல சிலா விக்கிரகங்களும் திருமேனிகளும் இருக்கின்றன.

வாயிற் காவலர் : ஏறத்தாழ 4 மீ. உயரம் கொண்ட கம்பீரத் தோற்றமுள்ள வாயிற் காவலர் சிலைகள் உள. அவருள் முதல் இருவர் சிலைகள் கோபுரச் சிதைவில் உள. எஞ்சிய பத்தும் கோவில் வாயில், அர்த்த மண்டப வாயில், உள்ளறை வாயில், வடக்கு - தெற்கு வாயில்கள் இவற்றண்டை இருக்கின்றன.

சிற்பங்கள் : விமானத்தில் நிறைந்துள்ள சிற்பங்களும் கோவிலின் வெளிப்பாகத்தில் உள்ள சிற்பந்திகழ் உரு வங்களும் மிக்க வனப்புற்றவை. தென் இந்தியாவிலுள்ள சிற்பங்களிலும், அவற்றைப் பின்பற்றிச் சாவகத்திலுள்ள உயர்ந்த சிற்பங்களும் இவை மேம்பட்டன என்று அறிஞர் கூறுகின்றனர். தென்மேற்கில் சபாபதியும், மேற்கில் இலிங்கோற்பவ அருணாசல ஈசுவரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் திருவாயிலுக்கு அணித்தாய், சண்டேசுவரர்க்கு இறைவன் அருள் புரிகின்ற அருட்கோலமாய்ச் சண்டேசுவர அருள்புரி மூர்த்தியும் அருமையான வேலைப்பாடு உடையன. மற்றும் கணங்களும், அப்சர மாதரும், இராக்கதக் கூட்டங் களுமாக எவ்விடத்தும் அமைந்துள்ளதை நோக்குங்கால், இக்கோவிலின் கம்பீரமான தோற்றத்திற்கு வனப்பை அவை தருவன என்னலாம். இவற்றுட் பெரும்பாலான வற்றிற்கு நரசிம்மவர்மனுடைய மாமல்ல புரத்துச் சிற்பங்களே அடிப்படையானவை; எனினும், இவை அவற்றினும் மேம்பட்டுச் சிற்பக்கலை வளர்ச்சியை நன்கு விளக்குவனவாகும். மற்றும், இக்கோவில் சோழர் காலத்துக் கோவில்களுள், அழகிலும், சிற்பத் திறனிலும் ஒரு தனி நிலை எய்தியுள்ளது என்பதைக் கூறலாம்[51]. இச் சிற்பங்களின் விரிவு சோழர் சிற்பங்கள் என்னும் பிரிவில் விளக்கப்பெறும்.

மாளிகை மேடு[குறிப்பு 3] : இந்த இடம் அரண்மனை இருந்த இடமாகும். இது மிகப் பரந்த இடத்தில் அமைந்துள்ளது, இப்போது இவ்விடம் திருத்திய வயலாக விளங்குகிறது. வயல்களில் ஆங்காங்கு மேடுகள் இருக்கின்றன. அவற்றிலும் வயல்களிலும் உடைந்த மட்பாண்டச் சிதைவுகள் நிரம்பிக் கிடக்கின்றன. செங்கல் 38 செ.மீ. நீளம், 20 செமீ அகலம், 10 செ.மீ. கனம் உடையதாக இருக்கின்றது. பெரிய மாளிகை மேட்டைத் தோண்டிக் கற்றுரண்கள் எடுக்கப் பட்டுப் புதுச்சாவடிக் குளத்தின் படிக்கட்டுகள் கட்டப்பட்டனவாம். காறைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகள் நிரம்பக் கிடைக்கின்றன. இம்மேட்டின் கிழக்கில் வெங்கற்சுவர் நீளமாகப் போவதை இன்றும் காணலாம். வழி நெடுகச் செங்கற் கவர்த் தளம் காணப் படுகிறது. பழைய அரண்மனைக் கழிவு நீர், மழை நீர் செல்ல வாய்க்கால் இருந்தது. ஒருவகைக் கல்லால் ஆகிய மதகின் சிதைவுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. கோவிலுக்குப் பின்னே இன்றுள்ள ஒடை புதியது. அதன் இரு புறமும் செங்கற்சுவர்களின் சிதைவுகள் காண்கின்றன.மாளிகைமேடு தெற்கு வடக்கில் இரண்டு கி.மீ. நீளமுடையது. கிழக்கு மேற்கில் ஒன்றரை கிமீ நீளமுடையது.

பண்டை நகரம் : இராசேந்திரன் அமைத்த புதிய நகரத்தின் நான்கு புறங்களிலும் நான்கு காளிகளை எல்லைத் தெய்வங்களாக நிறுத்தினான் போலும் மேற்கு வாசல் காளி கோவில் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது; வடக்கு வாசல் காளி கோவில் இரண்டு கல் தொலைவில் (சலுப்பை என்னும் சிற்றுாரில்) உள்ளது; செங்கம் மேடு என்ற கிராமத்தில் உள்ளது; கிழக்கு வாசல் காளிகோவில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது. தெற்கு வாசல் காளிகோவில் இரண்டு கல் தொலைவில் (வீராரெட்டி என்னும் கிராமத்தண்டை இருக்கிறது. அங்குத் தீர்த்தக் குளம் (தீர்த்தம் கொடுக்கப் பிரகதீச்சுரர் அங்குப் போதல் வழக்கமாக இருந்ததாம்) இருக்கிறது. இக்குறிப்புகளால், பண்டை நகரம் ஏறத்தாழ 6 கி.மீ. சதுர அமைப்புடைய தாக இருந்த தென்னலாம்.

சுற்றிலும் சிற்றுார்கள் : கோவிலைச் சுற்றிலும் இரண்டு கல் தொலைவு வரை உள்ள சிற்றுார்களாவன: சுண்ணாம்புக் குழி (கோவில் பணிக்குச் சுண்ணாம்பு தயாரித்த இடம்), கணக்கு விநாயகர்கோவில், பொன்னேரி (சோழங்க ஏரியைச் சார்ந்த சிற்றுரர்), பள்ளி ஒடை, பாகல்மேடு, சலுப்பை,செங்கம்மேடு, முத்து சில்பா மடம், சப்போடை மண்மலை (இது முக்கால் கல் தொலைவில் உள்ளது; கோவில் தேர் இங்குத்தான் இருந்ததாம். அங்கு ஒருமேடு தேர்மேடு என்னும் பெயருடன் இருக்கிறது), மெய்க்காவல் புத்துார், வீரசோழபுரம், வாண தரையன் குப்பம் (இஃது இன்று ‘வானடுப்பு’ எனப்படுகிறது), குயவன் பேட்டை, தொட்டி குளம், கழனி குளம், உட்கோட்டை (இது 2 கல் தொலைவில் உள்ளது) என்பன. பரணை மேடு என்னும் சிற்றுார் கோவிலுக்கு 7 கல்தொலைவில் உள்ளது.அங்கிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கிப் பரணை கட்டி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாம்.

சுரங்கம் :- அரண்மனையையும் கோவிலையும் இணைக்கும் சுரங்கம் ஒன்று இருந்தது. அதன் உண்மையை இன்று கோவிற்கும் மாளிகைமேட்டிற்கும் இடையில் உள்ள ஒடையிற் காணலாம். செங்கற் சுவர்களுடைய நிலவறைப் பகுதி ஒடையிற் காணப்படுகின்றது.

கோவிற்கு 365 காணிநிலம் இருக்கின்றது. ஒரு காணிக்கு ரூ. 5-10-0 ஆண்டு வருவாய். இங்ஙனம் இருந்தும் தக்க கண்காணிப்பு இன்மையால், வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோவில் இழிநிலையில் இருக்கின்றது. இந்நிலை நீடிக்குமாயின், இதன் சிறப்பே அழிந்து படும் என்பதில் ஐயமில்லை. நல்லறிவும் பக்தியுமுள்ள பெருமக்களிடம் கோவிற் பணியை ஒப்படைத்துக் கோவிலை நன்னிலையில் வைக்கச் செய்தல் அறநிலையப் பாதுகாப்பாளர் கடமையாகும். -

உறை கிணறுகள் முதலியன :- கோவிலுக்கு ஒரு கல் தொலைவுவரை நாற்புறங்களிலும் உறை கிணறுகள் அகப்படுகின்றன. பழைய செங்கற்கள் நிரம்பக் கிடைக்கின்றன, கருங்கற்கள் எடுக்கப்படுகின்றன.

கோவில் கோபுரம் :- இன்று, இடிந்து கிடக்கும் கோபுரம் ஏறத்தாழ 25மீ. உயரமாக இருந்ததாம். அது முழுவதும் கருங்கல் வேலைப்பாடு கொண்டது; மேலே சாந்தாலான கலசங்கள் ஏழு இருந்தனவாம். அக்கோபுரம், அணைக்கட்டிற்கு கல் வேண்டி 75 ஆண்டுகட்கு முன் வெடி வைத்தபோது இடிந்து விழுந்துவிட்டதாம். அச்சிதைவுகள் அப்புறப்படுத்தப்பட்டில; கோவில் திருச்சுற்று முழுவதும் முட்செடிகள் நிறைந்துள்ளன; செருப்பின்றி நடத்தல் இயலாத கேவல நிலையில் உள்ளது.

சோழ கங்கம் : இஃது இராசேந்திரனால் வெட்டப்பட்ட ஏரி. இஃது இப்போது ‘பொன்னேரி எனப் பெயர் பெற்றுள்ளது. இஃது இப்பொழுது மேடாக இருக்கிறது. ஊருக்கு வடக்கே உள்ள இந்த ஏரி, தெற்கு வடக்காக 25 கி.மீ. நீளமுடையது; உயர்ந்த கரைகளை உடையது. இந்த ஏரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அறுபது கல் தொலைவு. அங்கிருந்து பெரிய கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. அதன் வழிவந்த நீரே இந்த ஏரியை ஒரளவு நிரப்பியது. மற்றொரு கால்வாய் வெள்ளாற்றிலிருந்து வந்தது. தெற்கும் வடக்கும் இருந்த இக்கால்வாய்கள் இரண்டு ஆறுகளிலிருந்தும் நீரைப் பெய்து வந்தமையால் ஏரி எப்பொழுதும் கடல் போலக் காட்சி அளித்தது. இக் கால்வாய்களின் கரைகள் இன்றும் காணக்கூடிய நிலையில் உள்ளன. இந்த ஏரி நீர் திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு கோட்டங்களுக்கு நீரை உதவியதாகும். இதன் பாய்ச்சலால் பயன் பெற்ற விளை நிலங்கள் பலவாகும். ஆனால் இன்று இந்தப் பெரிய ஏரி தன் பழைமையை மட்டுமே உணர்த்திக் கிடப்பது வருந்தற்குரியதே. இந்த ஏரி இப்பொழுது காடடர்ந்த இடமாகிவிட்டது. பிற்காலத்தில் படை எடுத்தவர் இதனைப் பாழாக்கினர் என்று ஒரு மரபு கூறப்படுகிறது.[52]

இந்த ஏரி இப்பொழுது புதுப்பிக்கப்படுகிறது; வேலை நடைபெற்று வருகிறது. இது தன் பண்டைய நிலை எய்துமாயின், நாடு செழிப்புறும்.

மலையோ, குன்றோ இல்லாத சமவெளியில் 26 கி.மீ. நீளம் பலமான கரை போடுதல், நீரைத் தேக்குதல், 100 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டி நீரைக் கொணர்தல் என்பன எளிதான செயல்கள் ஆகா. இவ்வரிய செயல்களைச் செய்து முடித்த இராசேந்திரன் நோக்கம், தன் குடிகள் நல்வாழ்வு வாழக் கண்டு, தான் இன்புறல் வேண்டும் என்பதொன்றே அன்றோ? இத்தகைய பேரரசனைப் பெற்ற தமிழ் நாடு பேறு பெற்றதே அன்றோ?

அரசன் விருதுகள் : இராசேந்திரன் விருதுப் பெயர்கள் பலவாகும். அவற்றுள் மருராந்தகன், உத்தம சோழன், விக்கிரமசோழன், வீரராசேந்திரன்[53] என்பன இவன் முன்னோர்க்கும் பின்னோர்க்கும் இருந்த பெயர்கள். இவனுக்கே உரியவை முடிகொண்ட சோழன்[54], கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான், பண்டித சோழன்[55] என்பன.

அரச குடும்பம் : அரச குடும்பம் பெரும்பாலும் பழையாறையில் இருந்ததுபோலும் பழையாறை அக்காலத்தில் ‘முடிகொண்ட சோழம்’ எனப் பெயர் பெற்று இருந்தது. இராசேந்திரன் முதல் மனைவியான பஞ்சவன் மாதேவிக்கு அங்குப் பள்ளிப்படை அமைக்கப்பட்டது[56]. இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள் பஞ்சவன் மாதேவியார், திருபுவன மாதேவியார் எனப்பட்ட வானவன் மாதேவியார்[57]. முக்கோக்கிழான் அடிகள்[58]. வீர மாதேவியார் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். வீரமாதேவியார் இராசேந்திர னுடன் உடன்கட்டை ஏறினவர் ஆவர்[59]. இப் பேரரசர்க்குப் பிள்ளைகள் பலர் இருந்தனர். அவர் நமக்குத் தெரிந்தவரை இராசாதிராசன், இராசேந்திரதேவன், வீர ராசேந்திரன் என்போர் ஆவர். இம் மூவருள் சடாவர்மன் சுந்தர சோழன் ஒருவனா அல்லது வேறானவனா என்பது விளங்கவில்லை. பிரானார் எனப்படும் அருமொழி நங்கை ஒரு பெண்; அம்மங்கா தேவி ஒரு பெண். அருமொழி நங்கை இராசாதிராசன் ஆட்சி முற்பகுதியில் திருமழப்பாடிக் கோவிலுக்கு விலை உயர்ந்த முத்துக்குடை அளித்தி ருக்கிறாள்[60]. இராசராசன் மகளான குந்தவ்வைக்கும் சாளுக்கிய விமலாதித்தற்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பவன் இராசேந்திரன் மகளான அம்மங்கா தேவியை மணந்து கொண்டான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே பிற்காலப் பேரரசனான முதற் குலோத்துங்கன்.

இராசேந்திரன் தாய் வானவன் மாதேவி என்பவள். இராசேந்திரன் தாய்க்கு ஒரு படிமம் செய்தான்; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினான்; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான்[61]. இறந்தவரைக் கோவிலில் வழிபட ஏற்பாடு செய்தல் பெரிதும் வழக்கமில்லை. இந்த அம்மை சிறந்த சிவபக்தி உடையவளாய் இருந்தமையால், இவள் வடிவம் வழிபடப்பட்டது போலும்!

இராசராச விசயம் : இந்நூல் இராசராசனைப் பற்றியது போலும்; இந்நூல் விசேட காலங்களில் படிக்கப்பட்டது. இதனை அரசற்குப் படித்துக் காட்டியவன் நாராயணன் பட்டாதித்தன் என்பவன். அரசன் அவனுக்கு நிலம் அளித்துள்ளான்[62]. இந்நூல் இப்பொழுது கிடைக்க வில்லை. இஃது இருந்திருக்குமாயின், இராசராசன் வரலாற்றை விரிவாக அறிந்து இன்புறக் கூடுமன்றோ?

அரசன் ஆசிரியர் : இராசராசன் காலத்தில் பெரிய கோவிலில் சர்வசிவ பண்டிதர் இராசராசேந்திரன் பெரு மதிப்புக்கு உரியவராக இருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் எந்த நாட்டில் இருந்தபோதிலும் கொடுக்கும் படி ஆசாரிய போகமாக ஆண்டுதோறும் நெல் அளப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[63] லகுலீச பண்டிதர் என்பவர் மற்றோர் ஆசிரியர்[64]. அவர் சைவத்தின் ஒரு பிரிவாகிய காளாமுக சமயத்தைச் சேர்ந்தவர். இச்சமயத்தவர் பலர் பண்பட்ட பண்டிதராக அக்காலத்தில் விளங்கினர். அவர்களே சில அறநிலையங் களைப் பாதுகாத்து வந்தார்கள்.

பெளத்த விஹாரம் : இராசராசன் காலத்தில் நாகப் பட்டினத்தில் கட்டத்தொடங்கிய பெளத்த விஹாரம் இராசேந்திரன் காலத்தில் சிறப்புற்று இருந்தது. அது முன்சொன்ன ஸ்ரீ விசய நாட்டு அரசனான சைலேந்திர மரபைச் சேர்ந்த மாரவிசயோத்துங்கவர்மன் கட்டிய தாகும். அவன் நாட்டுப் பெளத்தர் நாகையில் தொழுவதற்கென்றே அது கட்டப்பட்டது. அவன் வேண்டுகோட்கிசைந்து இராச ராசன் இடம் தந்து ஆதரித்தான். அஃது இராசேந்திரன் காலத்திற்றான் கட்டி முடிக்கப்பட்டது. ஸ்ரீ விசயநாட்டு அரசன் அக்கோவிலுக்குத் தன் தந்தை பெயரை இட்டான். அதன் பெயர் ‘சூடாமணி வர்ம விஹாரம்’ என்பது. அதற்கு 'ஆனை மங்கலம்’ என்னும் கிராமம் தானமாக (பள்ளிச்சந்தம்) விடப்பட்டது. அத் தானப் பட்டயமே ‘லீடன் பட்டயம்’. எனப்படுவது. ‘லிடன்’ என்பது ஹாலந்து நாட்டில் உள்ள நகரம். ஆனைமங்கலப் பட்டயம் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது; அதனால் இப்பெயர் பெற்றது.

சீனர் உறவு : முன்னர் இராசராசன் சீனத்துக்குத் தூதுக் குழுவைப் பரிசிற் பொருள்களோடு அனுப்பினாற் போலவே, இராசேந்திரன் கி.பி. 1033-இல் தூதுக் குழு ஒன்றைச் சீன அரசனிடம் அனுப்பினான். சீன அரசன் அவர்களை வரவேற்று வேண்டியன செய்தான் என்று சீன நூல்கள் கூறுகின்றன. இந்த உறவால் சோழநாடு சீனத்துடன் கடல் வாணிகம் சிறக்க நடத்திவந்தது என்பதை நன்குணரலாம்.

நாட்டுப் பிரிவுகள் : இராசேந்திரன் காலத்தில் தொண்டை நாடு - சயங்கொண்ட சோழமண்டலம் என்றும், பாண்டி நாடு இராசராசப் பாண்டி மண்டலம் என்றும், இலங்கை - மும்முடிச் சோழ மண்டலம் என்றும், கங்கபாடி - முடிகொண்ட சோழ மண்டலம் என்றும், நுளம்பபாடி - நிகரிலி சோழ மண்டலம் என்றும் பெயர் பெற்றன. சோழ மண்டலம், மலைமண்டலம், கொங்கு மண்டலம், வேங்கி மண்டலம் என்பன பண்டைப் பெயர்களைக் கொண்டே இருந்தன. நாட்டு உட்பிரிவு முதலியன பற்றிய செய்திகள் நான்காம் பாகத்திற் கூறப்படும். ஆண்டுக் காண்க.

அரசியல் அலுவலாளர் சிற்றரசர் : அரசியலை நடத்த அலுவலாளர் பலர் இருந்தனர். அவர்கள் ‘கருமிகள்’ ‘பணியாளர்’ என இருதிறப்பட்டனர். முன்னவருள் பெருந்தரம், சிறுதரம் என இருவகையினர் இருந்தனர்.இவர் அரசியல் தொடர்பான பல பிரிவுகளைக் கவனித்து அரசியலைக் குறைவற நடத்திவந்தனர். உயர் அலுவலாளர் தம் தகுதிக்கேற்ப அரசனிடமிருந்து நிலம் அல்லது அதன் வருவாய் பெற்றுப் பணிசெய்து வந்தனர். இராசேந்திரன் ஆட்சியில் அவன் பெற்ற வெற்றிகட்குக் காரணமாக இருந்தவர் மூவர் ஒருவன் அரையன் இராசராசன். இவன் சாளுக்கியர் போர்களிற் புகழ் பெற்றவன். இவன் படையொடு சென்றதைக் கேட்ட வேங்கி மன்னன். ஒடிவிட்டான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது[65]. இவன் ‘நால்மடி பீமம், சாமந்தா பரணம், வீரபூஷணம், எதிர்த்தவர் காலன்’ முதலிய விருதுகளைப் பெற்றவன். இவன் இராசராசன் கால முதலே சோழர் தளகர்த்தனாக இருந்தவன்[66] கிருஷ்ணன் இராமன் என்பவன் மற்றொரு சேனைத் தலைவன். இவனும் இராசராசன் காலத்தவன். இவன் மகனான மாராயன் அருள்மொழி ஒருவன். இவன், இராசேந்திரன் கி.பி.1033-இல் கோலாரில் பிடாரி கோவில் ஒன்றை எடுப்பித்தபொழுது உடன் இருந்து ஆவன செய்தவன்[67]. இவன் ‘உத்தமசோழப் பிரம்மராயன்’ என்னும் பட்டம் பெற்றவன். அரசன் அவரவர் தகுதிக்கேற்பப் பட்டங்களை அளித்துவந்தான், அமைச்சர், தானைத் தலைவர் முதலிய உயர் அலுவலாளர்க்குத் தனது பட்டத்துடன் அல்லது விருதுடன் ‘மூவேந்த வேளான்’ என்பதைச் சேர்த்து அளித்துவந்தான் வேறு துறையிற்சிறந்தார்க்கு ‘மாராயன், பேரரையன்’ என்பனவற்றை அளித்தான். ‘வாச்சிய மாராயன்’, ‘திருத்தப் பேரரையன்’ போன்றன கல்வெட்டுகளிற் பயில்வனவாகும்.

இராசராசன் தமக்கையான குந்தவ்வையார் கணவனான வல்லவரையர் வாண்டிய தேவர் என்பவன் வடஆர்க்காடு கோட்டத்தில் பிரம்ம தேசத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவனுடைய வேறொரு மனைவி குந்தள தேவி என்பவள்; மற்றொருத்தி குந்தா தேவியார் என்பவள். குந்தவ்வைப் பிராட்டியார் பழையாறையில் இருந்த அரண்மனையிலேயே இருந்தவர்[68]. இவ்வல்லவரையன் சாமந்தர் தலைவன் (பெரிய சேனாதிபதி) போலும்! இவன் பெயர்கொண்ட நாடு சேலம்வரை பரவி இருந்தது[69].

தென் ஆர்க்காடு கோட்டத்தில் திருக்கோவிலுரைச் சார்ந்த மலைநாட்டுப் பகுதிக்கு யாதவ பீமன் என்ற உத்தம சோழ மிலாடுடையார் கி.பி. 1016-இல் சிற்றரசனாக இருந்தான்[70]. கி.பி. 1023-24-இல் கங்கை கொண்ட சோழ மிலாடுடையார் என்பவன் காளத்தியில் உள்ள கோவிலுக்கு விளக்கிட்டதைக் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது[71], சங்காள்வார் என்பவர் மைசூரை ஆண்ட சிற்றரசர். கொங்காள்வார் என்பவர் சிற்றரசர் ஆவர். ஆண்டுகள் செல்லச் செல்லக் கொங்காள்வார் தம்மைச் சோழர் மரபினர் என்றே கூறலாயினர்; அங்ஙனமே சில தெலுங்கு-கன்னட மரபினரும் கூறிக்கொண்டனர்.

படைகள் : அரசனிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் இருந்தன; தேர்ப்படை இல்லை. தேர் இருந்ததாக ஒரு கல்வெட்டிலும் குறிப்பில்லை. எந்த வீரனும் போர்க்களத்தில் தேரைச் செலுத்தி வந்தான் என்னும் குறிப்பே இல்லை. அரசராயினார் யானை அல்லது குதிரை மீது இருந்து போர் செய்தனர் என்பதே காணப்படுவது. காலாட்படை 'கைக்கோளப் பெரும்படை' எனப்பட்டது. ஒவ்வொரு படையும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ‘வில்லிகள், வாள்பெற்ற கைக்கோளர்’ என்னும் பெயர்கள் கல்வெட்டுகளிற் காண்கின்றன. இவற்றால், போரில், வில் அம்பு, வேல், வாள் முதலியனவே பயன்பட்டன என்பது அறியக்கிடக்கிறது. படைகள், வென்று அடக்கிய நாடுகளில் எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்தன. சோழர் கடற்படை குறிப்பிடத்தக்க சிறப்புடையது; கடல் கடந்து சுமத்ரா, மலேசியா முதலிய நாடுகட்கும் படைவீரரைக் கொண்டு சென்றது; கடல் வாணிகத்தைப் பெருக்கி வளர்த்த பெருமை பெற்றது.

காசுகள் : இராசேந்திரன் காலத்து அரசியற் செய்திகள் ‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியிற் காண்க. இவன் தன் பெயரால் காசுகளை அச்சிட்டு வழங்கினான். அவை ‘இராசேந்திரன் மாடை எனவும். இராசேந்திர சோழக் காசு எனவும் கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளன.

கல்வித்துறை-தமிழ் : இராசேந்திரன் ‘பண்டித சோழன்’ எனப் பெயர் பெற்றவன். அதனால் இவன் தமிழில் சிறந்த புலமை எய்தியவனாதல் வேண்டும். இவனுடைய 'மெய்ப் புகழ்' பல கல்வெட்டுகளில் சிறந்த புலமை உணர்ச்சியுடன் வரையப்பட்டுள்ளது. அதனால் இவனது அவையில் தமிழ்ப் புலவர் சிலரேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. யாப்பருங்கலம், காரிகை என்பன செய்த ‘அமித சாகர’ரும் இவற்றுக்கு உரை வகுத்த ‘குணசாகர’ரும் இக்காலத்தவர் எனக் கூறலாம். சிறந்த சிவனடியாரான கருவூர்த் தேவர் இக்காலத்தவரே ஆவர். இராசேந்திரன் மகனான வீரராசேந்திரன் தமிழ்ப் புலமை அவன் பெயரைக் கொண்ட ‘வீர சோ புத்தமித்திரர் இக்காலத்தவரே. திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பியையும் இராசேந்திரன் பார்த் திருத்தல் கூடியதே.

வடமொழி : இராசேந்திரனைப் பற்றிய வடமொழிப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் காவிய நடையில் அமைந்தவை. சிறப்பாகத் திருவாலங்காட்டுச் செப்பேடு களை வரைந்த நாராயண கவி சிறந்த வடமொழிப் புலவர் ஆவர். தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் எண்ணாயிரம் என்பது ஒர் ஊர். அஃது ‘இராசராசச் சதுர்வேதி மங்கலம்’ எனப்பட்டது. அங்கொரு பெரிய வடமொழிக் கல்லூரி நடந்து வந்தது. அதைப்பற்றிய விவரங்களும்[72] பிறவும் ‘சோழர் காலத்துக் கல்வி நிலை’ என்னும் பகுதியிற்பார்க்க. இங்ஙனமே ‘திரிபுவனை’ என்னும் இடத்திலும் வட மொழிக் கல்லூரி நடந்துவந்தது[73]. அதன் விவரங்களும் ஆண்டுக் காண்க.

அரசன் சிறப்பு : இராசராசன் சோழப் பேரரசை நிலை நிறுத்தினான்: இராசேந்திரன் அதனை மேலும் வளப்படுத்தினான்; கடல்கடந்து வெற்றி பெற்றான்; சோழர் புகழை நெடுந்துரம் பரப்பினான். இராசராசன் கோவில் கட்டித் தன் பக்திப் பெருமையை நிலைநாட்டினான்; இராசேந்திரன் அதனைச் செய்ததோடு, புதிய நகரையும் வியத்தகு பெரிய ஏரியையும் அமைத்தான். இராசராசன் சிவபக்தனாக இருந்தது போலவே இவனும் இருந்து வந்தான்; தந்தையைப் போலவே பிற சமயங்களையும் மதித்து நடந்தான் கடல் வாணிகம் பெருக்கினான்.இவனது செப்புச் சிலை ஒன்று தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கின்றது. இராசேந்திரன் எல்லாச் சமயங்களிடத்தும் பொதுவாக நடந்து கொண்டான். இவன் தனது 24-ஆம் ஆட்சி ஆண்டில், சேர அரசனான இராசசிம்மன் திருநெல்வேலி கோட்டத்தில் மன்னார்கோவிலில் கட்டிய  இராசேந்திர சோழ விண்ணகர்க்கு நிலதானம் செய்துள்ளான்[74]. இப்பேரரசன் ஒப்புயர்வற்ற நிலையில் அரசாண்டு கி.பி.1044-இல் விண்ணக வாழ்வை விழைந்தான்.


  1. S.I.I. vol 5, No.982
  2. 271 of 1927.
  3. S.I.I. iii, p.422.
  4. 639 of 1909; 463 of 1908.
  5. விக்டோரியா அம்மையார்க்குப் பின்வந்த ஏழாம் எட்வர்ட் மன்னர் வயது இங்கு நினைவு கூர்தற்குரியது.
  6. 196 of 1917.
  7. Ep. Indica, Vol.8, p.260.
  8. Ep. Ind, Vol. 9. p. 218.
  9. 75 of 1895.
  10. இராசாதிராசன் கல்வெட்டுகள் ‘திங்களேர் தரு’ என்னும் தொடக்கத்தையுடையன.
  11. 75 of 1895.
  12. Ep. Ind. Vol. 12, pp.295-296.
  13. J.A.S., 1916, pp.-17.
  14. ‘நெடிதியல் ஊழியுள இடைதுறை நாடும்
    தொடர்வன வேலிப் படர் வென வாசியும்
    சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
    கண்ணரு முரண மண்ணைக் கடக்கமும்’ என்பது மெய்ப் புகழ்.
  15. 103 of 1912.
  16. 4 of 1890; 247 of 1903
  17. 642 of 1909
  18. 595, 618 of 1912.
  19. Chola Vamsam, Chap. 55
  20. 46 of 1907
  21. 363 of 1917
  22. 363 of 1917
  23. V. 99-108
  24. Ep. Car Vol. 7, sk. 202, 307
  25. S.I.I. Vol. 2.pp. 94-95.
  26. Dr. S.K. Aiyangar Sir Asutosh Mookerjee Commemoration Vol 9, pp. 178-9.
  27. Ep. Ind. Vol. 9, pp. 178-9.
  28. R.D. Banerji’s ‘Palas of Bengal’, p.71
  29. Kanyakumari Inscription
  30. Thiruvalangadu Plates.
  31. R.D. Banerji “Palas of Bengal”, pp.73, 99
  32. K.A.N. Sastry’s ‘Cholas’, Vol.I, P.254.
  33. S.I.I. Vol. 2, p. 109.
  34. பர்மாவில் உள்ள ‘பெகு’ தான் ‘கடாரம்’ என்று பலர் கூறியது தவறு. அங்குக் கிடைத்த இரண்டு துண்கள் இராசேந்திரன் வெற்றித் தூண்கள் அல்ல. Wide A.R.B. 1919 & 1922.
  35. A.R.E. 1892, p. 12
  36. S.I.I. Vol. 3, pp. 26. 56; 172 of 1894, 92 of 1892.
  37. S.I.I. Vol. 3, p. 56.
  38. 75 of 1895; M.E.R. 1913. ii. 26.
  39. M.E.R. 1930. p.86; 523 of 1930.
  40. S.I.I. Vol. 4. No 539; Vol. 5. No.465
  41. 172 of 1894; 92 of 1892.
  42. 172 of 1894; 244 of 1925
  43. இதனை என் நண்பர் திரு. J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் (பெரிய கோவில் நடைமுறை அலுவலாளர்) எனக்குக் காட்டினார்கள்.
  44. Ep. Ind. Vol. 15, p. 49.
  45. 82 of 1892.
  46. M.E.R. 1932, p.50; Kalaimagal Vol.II p.326.
  47. S.I.I. Vol. 2, No. 20.
  48. 102 of 1926.
  49. Ind. Ant. Vol. iv, p.274.
  50. Ind. Ant. Vol. in p.274; K.A.N. Sastry’s ‘Cholas’, p.289.
  51. J.M.S. Pillai’s ‘Solar Koyir Panigal’, pp. 44-45.
  52. Ind Ant. IV. P. 274.
  53. 61 of 1914.
  54. காவிரியின் கிளையாறு ‘முடிகொண்டான்’ என்னும் பெயரை உடையது. அஃது இவனால் வெட்டப் பட்டது போலும்!
  55. S.I.I. Vol.3, No. 127.
  56. 271 of 1927.
  57. 624 of 1920.
  58. 73 of 1921.
  59. 260 of 1915.
  60. 71 of 1920.
  61. 481 of 1925.
  62. 120 of 1931.
  63. S.I.I. Vol.2, No.20
  64. 271 of 1927.
  65. 75 of 1917.
  66. 23 of 1917.
  67. 480 of 1911
  68. 350 óf 1907; 639 of 1909
  69. 157 of 1915.
  70. 20 of 1905
  71. 291 of 1904, Ep. Carnataka, Vol, I, Int. 12-13; Vol. V. Int. 7.
  72. 338 of 1917; M.E.R. 1918, p.147; 343 of 1947
  73. 176 of 1919
  74. 112 of 1905
  1. இவை துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும் ஆறுகள் - K.A.N. Sastry’s ‘Cholas’ I, p.277.
  2. இதனை யான் 25-4-42-இல் சென்று பார்வையிட்டேன். எனக்கு அங்கு வேண்டிய உதவி செய்த பெரு மக்கள் திருவாளர் க. முத்துவேலாயுதம் பிள்ளை, கோவில் நடைமுறை அலுவலாளர் (Executive Officer) ஞானப்பிரகாசம் பிள்ளை என்போர் ஆவர்.
  3. கோவில் வேலை பார்க்கும் சுப்பராயபிள்ளை (72 வயது) யுடன் நான் ஒரு மணி நேரம் இம் மேட்டைப் பார்வையிட்டேன்.