கேள்வி நேரம்/4

விக்கிமூலம் இலிருந்து

* இடம் : இராஜபாளையம்

கேள்வி கேட்பவர் : மு. சிவம்

பங்கு கொள்வோர் :

முத்துக்குமார், தங்கமாரி, ஜோதி

சிவம் : அன்புள்ள முத்துக்குமார், தங்கமாரி, ஜோதி, சிங்கம் ஒரு தடவையில் எத்தனை குட்டிகள் போடும்? உங்களுக்குத் தெரியுமா?

ஜோதி : ஒன்றே ஒன்று.

சிவம் : இல்லை.

ஜோதி : சிங்கம் ஒரு குட்டி, பன்றி பல குட்டி என்று ஒரு பழமொழிகூட இருக்கிறதே, அண்ணா!

சிவம் : அந்தப் பழமொழி தவறு. ஒரே ஈற்றில் சிங்கம் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் கூடப் போடும். மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம் நான்கு ஐந்து குட்டிகள் கூடப் போடும். உணவு தேடி அலையாமல் எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் இருக்கிறதல்லவா அது? அதனால் அது அதிகக் குட்டி களைப் போடுகிறது.

சிவம் : நீங்கள் சர்க்கஸ் என்றால் ஆவலாகப் பார்க்கிறீர்கள். முதன் முதலாக சர்க்கஸ் காட்சிகளை நடத்தியவர்கள் யார் தெரியுமா?

முத்து : ஆங்கிலேயர்.

சிவம் இல்லை.

தங்கம் : கிரேக்கர்கள்.

சிவம் : அவர்களும் இல்லை. ஜோதி! உனக்குத் தெரியுமா?

ஜோதி: தெரியவில்லையே அண்ணா.

சிவம்: ரோமானியர்கள்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கஸ் காட்சிகளை நடத்தினார்கள். அப்போது நாம் இப்போது பார்ப்பது போல் பல்வேறு வித்தைகள் இல்லை. மல்யுத்தமும் குதிரை மேல் ஏறிச் சவாரி செய்யும் வித்தைகளுமே நடை பெற்றன. பிறகு, இங்கிலாந்தில் சர்க்கஸ் பரவியது. நம் நாட்டில் கழைக்கூத்தாடிகள் தெருக்களில் பல வித்தைகளைச் செய்து காட்டி வந்தார்கள். ஆனாலும், ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகுதான் நம் நாட்டிலும் சர்க்கஸ் ந்டத்த ஆரம்பித்தார்கள். இப்போது நால்வரைப் பற்றி ஒரு கேள்வி.

முத்து நம் நால்வரைப் பற்றியா?

சிவம் : இல்லை, இல்லை. சைவசமய ஆசார்யர்கள் நால்வர் என்கிறார்களே. அவர்கள் யார், யார் என்று தெரியுமா?

முத்து : அண்ணா! நான் சொல்கிறேன். அப்பர், சுந்தரர், மாணிக் கவாசகர், அப்புறம், அப்புறம்...

தங்கம் : இன்னொருவர் பெயர் எனக்குத் தெரியும், அவர்தான் திருநாவுக்கரசர்.

சிவம் : தப்பு. அப்பரும் திருநாவுக்கரசரும் ஒருவரேதான். ஜோதி, உனக்குத் தெரியுமா?

முத்து : நானே சொல்லிவிடுகிறேன். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்.

சிவம்: சரியாகச் சொல்லிவிட்டாய், ஆமாம், திருநாவுக்கரசருக்கு அப்பர்' என்ற பெயர் எப்படி வந்தது? உங்களில் யாருக்காவது தெரியுமா?

மூவரும் : தெரியாது அண்ணா. நீங்களே சொல்லி விடுங்கள்.

சிவம் : சீர்காழிக்குப் போய்த் திருஞான சம்பந்தரைத் திருநாவுக்கரசர் சந்தித்தார்.

அப்போது திருஞானசம்பந்தர், அப்பரே!' என்று அவரை அழைத்தார். அது முதல் எல்லோரும் அவ்வாறே அழைத்தார்கள்.

துறைமுகங்களில், இயற்கைத் துறைமுகம், செயற்கைத் துறைமுகம் என்று இரு வகை உண்டு. சென்னைத் துறைமுகம் இயற்கைத் துறைமுகமா, செயற்கைத் துறைமுகமா ?

தங்கம் : இயற்கைத் துறைமுகம்தான்.

சிவம் : இல்லை.

ஜோதி: செயற்கைத் துறைமுகம்தான்.

சிவம் : ஆண் குழந்தை இல்லையென்றால் பெண் குழந்தைதானே! இயற்கைத் துறைமுகம் இல்லை என்றேன். உடனே செயற்கைத் துறைமுகம் என்று சொல்லிவிட்டாய். கெட்டிக்காரிதான்.

சரி...பறவை இனங்களில் பெண் பறவை முட்டை இட்டாலும் ஆண் பறவை, பெண் பறவை இரண்டுமே அடைகாக்கும் ஆனால், ஆண் பறவை மட்டுமே அடைகாக்கும் இனம் ஒன்று உண்டு. அது எந்தப் பறவை என்று சொல்ல முடியுமா?

முத்து : மயில்.

சிவம் : இல்லை.

தங்கம் : நெருப்புக் கோழி.

சிவம் : அதுவும் இல்லை.

ஜோதி : எனக்குத் தெரியும். பெங்குவின்.

சிவம் : கரெக்ட். ஆண் பெங்குவின் எட்டு வாரங்கள் எதுவுமே சாப்பிடாமல் அடை காக்கும்.

அடுத்ததாக ஒரு கேள்வி. மக்கா, மதினா என்ற இரு நகரங்களும் எந்த எந்த நாட்டில் உள்ளன? ஏன் அவற்றைப் புண்ணிய நகரங் களாகக் கருதுகிறார்கள்?

தங்கம் : இரண்டுமே ஒரே நாட்டில் - அரேபியாவில்தான் இருக்கின்றன. நபிகள் நாயகம் பிறந்தது மக்காவில்;காலமானது மதினாவில்.

சிவம் : தங்கமாரி! நீ மிகவும் சரியாகச் சொல்லி விட்டாய்,

ஆமையைப் பற்றி ஒரு கேள்வி. உங்கள் பதிலும் ஆமையைப் போல் மிக மிக மெதுவாக வரக்கூடாது. ஆமைக்கு எத்தனை பற்கள்?

சிவம் : தவறு.

தங்கம் : 28.

சிவம் : ஜோதி, நீ எத்தனை என்று சொல்லப்போகிறாய்? 24 என்றா?

ஜோதி : இல்லை அண்ணா. எனக்கும் தெரியாது.நீங்களே சொல்லிவிடுங்கள்.

சிவம் : ஆமைக்குப் பற்களே இல்லை! ஆனால், அதன் தாடைகளே நன்றாகத் தடித்துப் பற்களைப் போல் உதவுகின்றன. நான் இப்போது ஒரு தலைவரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். 14-வது வயதிலே பத்திரிகை நடத்தியவர் பாரதத்தின் கல்வி அமைச்சராக பத்து ஆண்டுகள் இருந்தார். அவர் பெயர் என்ன ?

முத்து: மெளலானா அபுல் கலாம் ஆஸாத்.

சிவம்: சபாஷ்! இவ்வளவு சரியாகச் சொல்லி விட்டாயே! சரி, உலகிலே மிகச் சிறிய, கண்டம் எது? மிகப் பெரிய தீவு எது?

ஜோதி: இரண்டும் ஒன்றுதான். அது ஆஸ்திரேலியாக் கண்டம்தான்.

சிவம் : வெரி குட் சரியாகச் சொன்னாய்...... தென்னிந்தியாவில் ஒரு பெரிய தெப்பக்குளம் இருக்கிறது. அது எங்கே என்று தெரியுமா?

முத்து: வேலூரில்.

சிவம் : இல்லை.

தங்கம் : மதுரையில்.

சிவம் : தங்கமாரி சொன்னதுதான் சரி. 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னர் மதுரையிலே திருமலை மஹால் என்னும் ஒரு பெரிய அரண்மனை கட்டுவதற்கு மண் தோண்டச் செய்தார். மண் தோண்டிய இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அவர் அதைத் தெப்பக்குளமாக மாற்றிவிட்டார்.

இப்போது சாலை விதிகளைப் பற்றி ஒரு கேள்வி. வலது புறம் திரும்பக் கூடாது என்பதற்குப் பலகையில் எப்படிப் படம் போட்டிருக்கிறார்கள்? வரைந்து காட்ட முடியுமா?

முத்து : சைக்கிளில் போகும்போது அடிக்கடி பார்ப்பேன். ஆனால் வரைந்து காட்டத் தெரியாதே!

சிவம் : இதோ நான் வரைந்து காட்டுகிறேன். நீ பார்த்தது சரிதானா, சொல்.

முத்து: சரிதான் அண்ணா.

சிவம் : மாடம் கியூரி என்ற பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இவர் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி. முதல் தடவை பெளதிகத்திற்கான நோபல் பரிசை மாடம் கியூரியும், அவர் கணவர் பியர் கியூரியும் சேர்ந்து பெற்றார்கள். இரண்டாம் தடவை ரசாயனத்துக்கான நோபல் பரிசை மாடம் கியூரி பெற்றார். அப்பா, அம்மாவைப் போலவே அவர்களின் மகளும், மாப்பிள்ளையும் சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்கள். இவர்கள் பெயர் தெரியுமா ?

மூவரும் : தெரியாது அண்ணா.

சிவம் : சரி. நானே சொல்கிறேன். மாடம் கியூரியின் மகள் பெயர் ஐரீன் கியூரி. மாப்பிள்ளையின் பெயர் ழாலியோ கியூரி. செயற்கை முறையில் கதிரியக்கத்தை

உண்டாக்கும் வழியைக் கண்டு பிடித்ததற்காக இருவருக்கும் 1985ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சரி, கதர்த் துணி என்றால் என்ன ?

முத்து:என்னண்ணா இது, இதுகூடவா தெரியாது: கையினால் நூற்று நெய்த துணிதான் கதர்த் துணி.

சிவம் : முத்துக்குமார், நீ என்ன சொன்னாய்? கையினால் நூற்று என்றது சரி. அப்புறம் நெய்த துணி என்றாயே, அப்படி என்றால் என்ன?

முத்து : ஆமாண்ணா, கையினாலேயே நெய்த துணி என்றும் சொல்லியிருக்க வேண்டும்.

சிவம் : ஆமாம், கையினாலேயே நூற்றுக் கையினாலேயே நெய்த துணிதான் கதர்...சரி, கடல் குதிரையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

தங்கம் : கடல் குதிரையா! நாங்கள் நிலக் குதிரையைத்தான் பார்த்திருக்கிறோம்.

ஜோதி: நான் பார்த்ததில்லை. ஆனாலும் கேள்விப்பட்டிருக்கிறேன் அது கடலில் இருக்கும் ஒரு வகைப் பிராணி. மீன் இனத்தைச் சேர்ந்ததுதானே அண்ணா?

சிவம்: சரியாகச் சொன்னாய் ஜோதி. மீன் இனத்தைச் சேர்ந்தாலும், இது பார்ப்பதற்கு

மீனைப் போல் இருக்காது. முகம் குதிரையைப் போல் இருக்கும். நிமிர்ந்து நின்றபடி நீங்தும்.

இப்போது ஒரு கவிஞரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். முத்துப் பாடல்கள் என்று உங்களுக்காகவே வெளிவந்துள்ள புத்தகத்தை எழுதியவர் யார்?

முத்து: பெ. துரன்.

சிவம் : இல்லை.

ஜோதி : தேசிகவிநாயகம் பிள்ளை.

சிவம் : அவரும் இல்லை.

தங்கம் : மயிலை சிவமுத்து.

சிவம் : மிகவும் சரி. மாணவர் மன்றம்' என்ற மிகவும் புகழ்பெற்ற மன்றத்தை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் இருந்தவர் அவர். உங்களுக்காகவே வாழ்ந்த ஒரு பெரியவர். Chess என்று சொல்லுகிறோமே சதுரங்கம், அது எந்த நாட்டில் முதலில் தோன்றியது?

முத்து : நம் நாட்டில்தான்.

சிவம் : கரெக்ட். கி. பி. 6ஆம் நூற்றாண்டில் நம் இந்தியாவில் தோன்றி அது பாரசீகத்திற்குப் போனது. அங்கிருந்து பல நாடு களுக்கும் பரவி, இப்போது உலக ஆட்டம் ஆகிவிட்டது. சந்திர மண்டலத்தைப் பற்றி

இப்போது கேட்கப் போகிறேன். முதன் முதலாகச் சந்திர மண்டலத்திற்குச் சென்றவர்கள் எந்த நாட்டினர் ?

தங்கம் : அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முதலாகச் சென்றார்கள்.

சிவம்: நீ சொன்னது சரிதான். கடைசியாக ஒரு கேள்வி. நான்கு பேருக்கு ஒரு சமையல் காரரால் ஒரு மணி நேரத்தில் சமையல் செய்ய முடிகிறது. அதே நாலு பேருக்கு ஒரே நிமிஷத்தில் சமைக்க வேண்டுமானால், எத்தனை சமையற்காரர்கள் வேண்டும்?

ஜோதி: அறுபது

(முத்துவும் தங்கமும் சிரிக்கிறார்கள்.)

ஜோதி: ஏன் சிரிக்கிறீர்கள்?

முத்து : ஜோதி சொன்னது, கணக்குப்படி சரிதான். ஆனால், சமையல் ஆகுமோ?

சிவம்: எப்படி ஆகும் 60 பேரும் வந்து நின்றாலே ஒரு நிமிஷம் ஓடிப் போய்விடுமே! அடுப்பு எரிய வேண்டாமா? அரிசி வேக வேண்டாமா?

எல்லோரும் : ஆமாம், ஆமாம்.

(சேர்ந்து சிரிக்கிறார்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/4&oldid=494072" இலிருந்து மீள்விக்கப்பட்டது