பாஞ்சாலி சபதம்/20. தருமபுத்திரன் பதில்
Appearance
என்று விதுரன் இயம்பத் தருமன்
எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்;
'மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா!
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா!
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்;
நம்ப லரிது சுயோதனன் றன்னை. 126
'கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
சூத்திர மான சதிபல செய்தான்!
சொல்லப் படாதவ னாலெமக் கான
துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ?
வெல்லக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங்' கென்றான். 127