பல்லவப் பேரரசர்/பல்லவர் யாவர்?
1. பல்லவர் யாவர்?
பல்லவர் யாவர்? இக்கேள்விக்குத் திட்டமான பதில் கூறக்கூடவில்லை. பல்லவர் ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகள் தென்னிந்தியாவிற் பேரரசு செலுத்தினவர். அவர்கள் என்றும் அழியாத நிலையில் பல குகைக்கோவில்களை அமைத்திருக்கிறார்கள். பாறைகளையே கோவில்களாக மாற்றியிருக்கிறார்கள்; பிராக்ருத மொழியிலும் வடமொழியிலும் கிரந்த - தமிழ் மொழியிலும் தங்கள் பட்டயங்களையும் கல்வெட்டு களையும் வெளியிட்டிருக்கிறார்கள், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம், குமார மார்த்தாண்ட புரம், பல்லவபுரம் (பல்லாவரம்), மஹேந்திரவாடி, பரமேஸ்வர மங்கலம், மஹேந்திர மங்கலம், மஹாமல்லபுரம் என்று பல இடங்கட்குத் தங்கள் பெயர்களை வழங்கியிருக்கிறார்கள் பல கோவில்கட்கு இராஜசிம்மேஸ்வரம், வித்யாவிநீத் பல்லவேஸ்வரம், பரமேஸ்வர் விண்ணகரம், சத்ருமல்லேஸ்வரம், மஹேந்திரவிஷ்ணுக்ருஹம், மஹேந்திரப்பள்ளி என்று தங்கள் பெயர்களை இட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும், அவர்கள் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் என்பதை உணர்த்துகின்றனவே தவிர, அவர்கள் யாவர்? எங்கிருந்து வந்தவர்? என்னும் கேள்விகட்கு விடை அளிப்பனவாக இல்லை. இதனால், ஆராய்ச்சி அறிஞர் பலவாறு முடிபு கூறி வருகின்றனர்.
பல்லவர் - குறும்பர்
“தொண்டைநாட்டுப் பழங்குடிகள் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த குறும்பர் ஆவர். அவர்கள் பால் வாணிபம் செய்துவந்தவர்கள்; அதனால், பாலவர் (பால் + அவர்) எனப்பட்டனர்; அப்பெயர் நாளடைவிற் குறுகிப் பல்லவர் என மாறியிருக்கலாம். எனவே, பல்லவர் தொண்டை நாட்டுக் குறும்பர் இனத்தவரே ஆவர்.” என்பது ஒருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[1]
பல்லவர் - (மணி) பல்லவர்
“யாழ்ப்பாணத் தீவுகளில் ஒன்றான காரைத்தீவு சங்க காலத்தில் மணிபல்லவம் எனப் பெயர் பெற்றிருந்தது. அக்காலத்தில் இலங்கையிலும் மணிபல்லவம் போன்ற தீவுகளிலும் நாகர் மரபினர் வாழ்ந்து வந்தனர். மணிமேகலை என்னும் காவியத்திற் கூறப்பட்ட நெடு முடிக்கிள்ளி என்ற சோழ அரசன் இந்த நாக மரபினர் மகளான பீலிவளை என்பவளை மணந்தான். அவள் . பெற்ற மைந்தனே அலைகளால் தள்ளப்பட்டுக் கரைசேர்ந்தவன். அம்மகன் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டு அனுப்பப்பட்டதால் தொண்டையன் எனப்பட்டான். அவன் (மணி) பல்லவத்திலிருந்து அனுப்பப்பட்டதால் பல்லவன் எனப் பெயர் பெற்றான். அவன் வழிவந்தவர் ‘பல்லவர்’ எனப் பட்டனர். அவர் தம் அடையாளமாலை தொண்டைமாலை ஆகும்.பல்லவருள் முதல் அரசன் சங்க நூல்களிற் குறிக்க்ப்பட்ட தொண்டைமான் இளந்திரையனே ஆவன்.” என்பது மற்றொரு நூல் ஆராய்ச்சியாளர் கருத்து[2]
பல்லவர் யாழ்ப்பாணத்தவர்
“யாழ்ப்பாணம் என்பது இலங்கைத் தீவிற்கு வடக்கே உள்ள கூரிய நீண்ட நிலப்பகுதியாகும். அஃது இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கிச் செல்பவர்க்கு ஒரு ‘போது’ (போத்து-அரும்பு) போலக் காணப்படும்போது, போத்து, பல்லவம் என்பன ஒரு பொருட் சொற்கள். யாழ்ப்பாணம்- ‘போது, போத்து, பல்லவம்’ எனப்படின், அங்கிருப்பவர் ‘போத்தர், பல்லவர்’ எனப்படுவர் அல்லவா? ஆகவே, பல்லவர் என்ற பெயருடன்’ தமிழ்நாட்டை ஆண்டவர் யாழ்ப்பாணத்தவரே ஆவர்.” என்பது பிறிதொருசார் ஆராய்ச்சியாளர் கருத்து.[3]
பல்லவர் - ஆந்திரர்
“வடபெண்ணையாற்றுக்கு அப்பாற்பட்டநாட்டை ஆந்திரப் பேரரசரான சாதவாஹன மரபினர் ஆண்டு வந்தனர். அவர்கள் கங்கை யாறுவரை பரவி இருந்து தங்கள் நாட்டைப் பல மாகாணங்களாக வகுத்து, ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதிகாரி ஒருவரை நியமித்தனர். அம்முறையில் கிருஷ்ணையாற்றுக்கும் வடபெண்ணை யாற்றுக்கும் இடைப்பட்ட மாகாணத்தைப் பல்லவர் என்ற மரபினர் ஆண்டுவந்தனர். அவர்கள் ஆந்திரப் பேரரசு அழிந்த கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தங்கள் மாகாணத்திற்குத் தாங்களே உரிமை பெற்ற அரசர்கள் ஆனார்கள். அவர்கள் தெற்கில் தங்கள் நாட்டை விரிவாக்க விரும்பிச் சோழர்க்குச் சொந்தமான் தொண்டை நாட்டை ஏறத்தாழக் கி.பி. 300- இல் கைப்பற்றினர். அவர் மரபினரே மஹேந்திரவர்மன் முதலிய பிற்காலப் பல்லவர் ஆவர்,” என்பது வேறொருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[4]
பல்லவர் - தமிழரே
“பல்லவர் தமிழர் அல்லர் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஒருவேளை அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவராக இருப்பினும், அவர்கள் கூடியவரை தமிழர்களாகிவிட்டார்கள் என்று அறியவேண்டும். இங்கிலாந்தில் முதலாம் ஜார்ஜ் ஜெர்மானியராக இருந்தபோதிலும் அவரது மரபு ஆங்கிலத்திற் கலந்து ஆங்கிலமாகிவிட்வில்லையா? அதுபோலவே, பல்லவரும் ஒருவேளை, வெளிநாட்டிலிருந்து புகுந்திருந்தபோதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ-வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன. உண்மையில் அம்மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமேயாகும். பல்லவர் என்னும் சொல் தமிழ் அல்லவா? இப்பொழுதும் பல் நீண்டுள்ளவனைப் ‘பல்லவன்’ என்று பரிகசிப்பது இல்லையா? அம்மன்னரில் முதற் புருஷனுக்குப் பல் நீண்டிருக்கலாம். அச்சொல் அம்மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக்காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல்கொண்ட மன்னன் ஒருவனுக்கு அப்பெயர் நிலைத்தது. முடத்திருமாறன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே ஏற்பட்டன.
மேலும், பல்லவர்கள் ‘காடவர்’ முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள். சான்றாக இன்றுள்ள ‘கார்வேட் நகர்’ என்னும் பெயரைக் காண்க. அதன் பழைய வடிவம் ‘காடு வெட்டி நகரம்’ என்பது. ‘காடவர், காடு வெட்டி’ முதலியன தமிழ்ப்பெயர்கள் அல்லவா? ‘போத்தரையர்’ என்பது அவர்களுடைய சிறப்புப் பெயராகும். ‘போது’ என்பது பல்லவருக்கும் எருமைக் கடாவிற்கும் கூறப்படும். இப்பொழுது தொண்டை நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ‘போதராஜாக் கோவில்கள்’ உண்டு. இவை பல்லவர்கால வழக்கு என்பதை அறியக்கூடும். இக்கோவில்களை, அரசமரபினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் (‘நாயகர்’ மரபினர்) போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர்-தமிழ் நாட்டினர் என்று கொள்வதே தகுதி என்னலாம்” என்பது வேறொருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[5]
பல்லவர் - ஆரியரே
“பாரசீகத்திலிருந்து இந்தியாமீது படையெடுத்து வந்த ஆரியர் பார்த்தியர், பஹ்லவர், க்ஷத்ரபர், சாகர் என்னும் பல பெயர்களை உடையவர். அவர்கள் சிந்து மாகாணம், கூர்ச்சரம், கங்கைச் சமவெளிகளில் பரவினர். ருத்ரதாமன் என்ற க்ஷத்ரய அரசனிடம் சுவிசாகன் என்ற பஹ்லவன் அமைச்சனாக இருந்தான். கி.பி. முதல் நூற்றாண்டில் குஷானர் இந்தியாமீது படையெடுத்தனர். அதனால் வட இந்தியாவில் இருந்த ஷத்ரபர் டெக்கான் பீடபூமி நோக்கி வரலாயினர். அப்பொழுது டெக்கானில் சாதவர்ஹனர் மரபினரான தெலுங்கர் பேரரசு செலுத்திவந்தனர். அதனால் சாதவாஹனர்க்கும் க்ஷத்ரபர்க்கும் போர் நடந்தது. க்ஷத்ரபர் செளராஷ்டிரம், பம்பாய் மாகாணத்தின் வடபகுதி, ஐதராபாத் சமஸ்தானத்தின் வடபகுதி ஆகியவற்றைக் கைப்பற்றி ஆளலாயினர். இதனால் சாதவாஹனப் பேரரசு எல்லையிற் சுருங்கிக் கோதாவரி, கிருஷ்ணை ஜில்லாக்கள் அளவிற்கு வந்துவிட்டது. இந்நிலைமை ஏறத்தாழக் கி.பி. 200-ல் உண்டானதெனலாம். அதன் பின்னரே பஹ்லவருள் ஒருவனான வீர கூர்ச்சன் என்பவன் நாக அரசன் மகளை மணந்து நாட்டைப் பெற்று அரசாளத் தொடங்கினான். அவன் மரபினரே பிற்காலப் பல்லவர். இப் பல்லவர் முற்சொன்ன் சுவிசாகன் என்ற அமைச்சனது மரபில் வந்தவ்ர் ஆகலாம். பல்லவர் - முதன்முதல் ஆண்ட பகுதி. கிருஷ்ணை ஜில்லாவின் தென்மேற்குப் பகுதி என்னலாம்.
1. பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது முதல் அவர்தம் பேரரசு வீழ்ச்சி அடையும்வரை அவர்கள் சாளுக்கியர், கதம்பர், சோழர், பாண்டியர், சேரர், களப்பிரர் முதலியவருடன் ஒயாது போரிடவேண்டியவர். ஆயினர். இப்போராட்டங்கள் பல்லவர் வெளி நாட்டார் என்பதைக் குறிக்கின்றன அல்லவா?
2. பல்லவர் முதல் அரசனான சிவஸ்கந்தவர்மன் வைத்துக்கொண்ட மஹாராஜாதிராஜன் என்ற பட்டம் தென்னாட்டிற்கே புதியதாகும். அதனை இந்தியாவிற்குக் கொணர்ந்தவர் பார்த்தியரே ஆவர்.
3. பார்த்தியர் இந்தியர் அல்லர் ஆயினும், இந்தியாவின் பல பகுதிகளில் தங்கி ஆளத்தொடங்கியது முதல் இந்திய முறைகள் எல்லாவற்றையும் கையாளத் தொடங்கினர். (1) அவர்கள் தங்கள் நாணயங்களில் கிரேக்க-வடமொழி எழுத்துகளை உபயோகித்தனர்; (2) நாணயங்கள்மீது கிரேக்கக் கடவுளர் உருவங்களையும் சிவன் உருவத்தையும் பொறித்தனர்; (3) க்ஷத்ரபர், மஹா க்ஷத்ரபர் என்ற பட்டங்களுடன் ‘ராஜன்’ என்ற இந்திய வார்த்தையையும் தங்கள் பெயர்களுடன் இணைத்துக் - கொண்டனர்; (4) தங்கள் பெயர்களையும் இந்திய முறைக்கேற்ப ஜயதர்மன், ருத்ர தர்மன் ருத்ரசிம்மன், தாமசேனன் என்று மாற்றிக் கொண்டனர்; (3) ‘சாமி’ என்னும் பட்டத்தையும் வைத்துக்கொண்டனர்; (6) தமது நாணயங்களில் இந்திய நாட்டுப் பொருள்களாகிய யானை, நந்தி, பெளத்தர் கோவில் இவற்றைப் பொறித்தனர்: (7) தெலுங்குநாட்டில் இருந்தபொழுது பெளத்த சமயத்திற் பற்றுக்கொண்டிருந்தனர்; (8) காஞ்சியில் இருந்த போது சைவ அல்லது வைணவப் பற்றுடன் விளங்கினர்; (9) ஆந்திர நாட்டில் இருந்தபொழுது சாதவாஹனர் வெளியிட்ட பிராக்ருத மொழியிலேயே தங்கள் பட்டயங்களை வெளியிட்டனர், காஞ்சியைக் கைப்பற்றித் தெற்கே வந்தவுடன் காஞ்சியில் சிறப்புற்றிருந்த வடமொழியில் பட்டயங்களை விடுக்கலாயினர்; (10) வடநாட்டுப் பார்த்திய அரசரைப் போலவே தென்னாட்டுப் பார்த்திய (பல்லவ) அரசரும் வைதிக மதத்தைச் சார்ந்து வேத வேள்விகள் செய்தனர்; (11) இவ்வாறு முற்றிலும் தங்களை இந்துக்களாக்கிக் கொள்ளவே, ‘பஹ்லவர்’ என்ற தமது மரபுப் பெயரையும் ‘பல்லவர்’ என எளிதாக ஒர் எழுத்து மாற்றத்தால் மாற்றிக்கொண்டனர்; (12) இவர்கள் க்ஷத்திரியர்கள்; அங்ஙனம் இருந்தும் இவர்கள் தங்களைப் ‘பாரத்வாஜ கோத்திரத்தார்’ (பிராமணர்) என்றே தங்கள் பட்டயங்களிற் கூறிக்கொண்டது நோக்கத்தக்கது. ‘இவர்கள் கூடித்திரியரே’ என்று கதம்ப முதல் அரசனான மயூரசர்மன் என்ற பிராமணன் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.
4. பார்த்தியர் நாணயங்களிற் காணப்படும் சூரியன், சந்திரன் உருவங்கள் பல்லவர் நாணயங்களிலும் காண்கின்றன.
5. பல்லவ அரசனான சிம்மவிஷ்ணுவின் ஆசனம், இந்தியாவிற்கே புதியது. அது பாரசீகநாட்டுப் பழைய ஆசனங்களைப் போன்றது.
இத்தகைய பல சான்றுகளை நோக்கப் பல்லவர்பஹ்லவர் என்று உறுதியாகக் கூறலாம்” என்பது ஹீராஸ் பாதிரியார் கருத்தர்கும்.[6]
இவ்வாறு பலர் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். உண்மை எது என்பது உறுதிப்படவில்லை. ஆதலின், இக் கருத்துகளை உளங்கொண்டு, இனி அடுத்துவரும் பிரிவுகளைக் காண்போம்.