உள்ளடக்கத்துக்குச் செல்

ஏலக்காய்/ஏலக்காய் ராணி

விக்கிமூலம் இலிருந்து
ஏலக்காய்
ஏலக்காய் ராணி! 1

நறுமணப் பொருட்களின் ராணியென ஏற்றிப் போற்றப்படும் ஏலக்காய், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றிலே கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளின் பெருமையையும் பெருமிதத்தையும் கொண்டு விளங்குகிறது! — இந்திய ஏலக்காய், அதன் நறுமண இன்சுவையின் பயனாகவும் பலனாகவும், இன்று உலகத்தின் அரங்கத்திலே கொடிகட்டிப் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக் கிறது! — ஆகவேதான், உலகத்தின் நாடுகள் எல்லாம் இந்திய ஏலக்காயை விரும்பி வரவேற்றுப் பயன்படுத்திப் பயன் அடைந்தும் வருகின்றன!

சிறிய ஏலக்காய்

இந்திய நாட்டிலே, வனப்பும் வளமும் கொழித்திடும் மேற்கு மலைத் தொடர்ப் பகுதிகளில், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இயற்கை அன்னையின் சீதனங்களாகத் திகழ்ந்திடும் காடுகளிலும் காடுகளிலுள்ள மரங்களின் நிழல்களிலும் ஏலக்காய்ச் செடிகள் தழைத்தும் செழித்தும் வளருகின்றன; வளர்ச்சி அடைகின்றன. உணர்ச்சிமிக்க இந்தச் சிறிய ரக ஏலக்காய்ச் செடிகளுக்குத் தாவர இய்லில் 'எல்ட்டேரியா கார்டமோம்' (Elettaria Cardamomum) என்று தனிப்பட்ட பெயர் வழங்கப்படுகிறது; இவற்றுக்கு நிரந்தரப் பசுமை மிகுந்த, இனிமையான இயற்கைச் சூழலின் ஈரப்பதம்தான் ஜீவநாடி. சுமார் 750 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான, குன்றும் குன்று சார்ந்த பிரதேசங்கள்தாம் ஏலச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாழ்வு தரும். 150 செ. மீ. அளவிற்குக் குறைவுபடாத வருடாந்தர மழை பரவலாகப் பெய்வதும் ஏலக்காய்க்கு நல்வாழ்வு தரும்!

பெரிய ஏலக்காய்

பெரிய ரக ஏலக்காய், (Amomum Subultarum) இமயமலைப் பிராந்தியங்களிலே, சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இந்திய மாநிலங்களில் விளைச்சல் செய்யப்படுகிறது.

இதுவும் விலை மதிப்புக் கொண்ட பணப்பயிராகவே கருதப்படும்.

பெரிய ரக ஏலக்காய் விளைச்சலிலும் இந்திய நாடு தான் முன்னணியில் நிற்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் முக்கியமாக பெரிய ஏலக்காய் செல்வாக்குப் பெற்றுள்ளது!

பூடான், நேபாளம் ஆகிய பகுதிகளிலும் இந்த வகை ஏலம் விளையும்.

அருணாசலப் பிரதேசம், நாகாலந்த், மேகாலயா, அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் திரிபுரா பகுதிகளிலும் இந்தியப் பெரிய ஏலக்காய் புதிதாகச் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது.

இந்திய நாட்டின் இமயமலைப் பிராந்தியங்களில் 10 முதல் 33° சி. அளவிலான சீதோஷ்ண நிலையில், 1000 மி. மீ - 1500 மி. மீ. மழை அளவில் பெரிய ஏலச் செடிகள் தழைத்தும் செழித்தும் வளர்ச்சி அடைகின்றன. இஞ்சி இனம்!

இஞ்சி இனம் சார்ந்த ஏலக்காய், வாசனைத் திரவியங்களின் ராணியெனப் பெருமையோடும் பெருமிதத்தோடும் புகழப்படுவதால், இது விலைமதிப்புமிக்க வர்த்தகப் பொருளாகவும் விளங்கி வருகிறது; மேலும் குறிப்பிடத்தக்க பனப்பயிராகவும் மதிக்கப்படுவதால், ஏலப்பயிர்ச் சாகுபடி கூடுதலான செலவினங்களைக் கொண்டதாகவும் அமைகிறது.

1966 காலக் கட்டத்தில், ஏலக்காய்ச் சாகுபடியின் பரப்பளவு ஏறத்தாழ 72,000 ஹெக்டேர் அளவில் அமைந்தது. தற்போது, 1985 காலக் கட்டத்தில் அது, கிட்டத்தட்ட 1,00,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்துள்ளது!

ஆரம்பக் காலத்தில், தாவரங்களைப் போலவே, ஏலச் செடிகளும் பயிர் செய்யப்பட்டன! — செடிகளின் நடுத்தண்டுகளை நட்டு வளர்த்ததால், நோய்த் தாக்குதல் அதிகரித்தது; எனவே, விதைப்பு முறை பின்னர் நடை முறைப்படுத்தப்பட்டது. நாற்றுப் பண்ணைகளிலே விதை விதைத்து, நாற்றுக்களை வளர்த்து, வளர்த்த நாற்றுக்களைப் பிடுங்கி அவற்றைத் தாய் நிலங்களில் நடவு செ ய்து பேணிக் காத்து வளர்க்கும் வேளாண்மை முறைதான் இக்காலத்திலே சிலாக்கியமானதாகக் கருதப்பட்டு வருகிறது!

ஏலக்காய்ப் பயிர் விளைச்சலின் கால அட்டவனை கீழ்க்கண்டவாறு அமையும்:

அக்டோபர் – நவம்பரில், விதைப்பு.
ஜூன் – ஜூலையில், மறுநடவு.
ஆகஸ்ட் – செப்டம்பரில், காய் எடுப்பு — அறுவடை!

ஆமாம்; பொதுவான கால நிர்ணயம் இது! — ஏலக்காய்ப் பயிர்ச் சாகுபடிக்கான நடைமுறையின் பொதுப் படையான கால அட்டவணையில், ஏலக்காயின் விதைப்பு நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் ஏலச் செடிகள் பலன் கொடுக்கத் தலைப்படும் என்பதும், ஏலச் செடிகளின் காய் எடுப்பு — அறுவடை பொதுவாகவே ஆகஸ்ட் – செப்டம்பர் காலக் கட்டத்திலேயே அமையும் என்பதும் தலைப்புச் செய்தாகிறது.

தென் இந்திய மாநிலங்களில், ஏலக்காய் விவசாயத்தில் அன்றும் சரி, இன்றும் சரி, கேரளம்தான் முன்னணியில் அமைந்து வருகிறது! — கி.பி. 1896 ஆம் ஆண்டு வரையிலும், ஏலப்பயிர் விளைச்சலில் கேரள மாநிலம்தான் ஏகபோகச் செல்வாக்குப் பெற்று விளங்கியது! - இந்திய நாட்டின் மொத்த விவசாயப் பரப்பிலே, 60 சதவீத அளவிலும், இந்தியத் தேசத்தின் மொத்த ஏலச் சாகுபடியில் 74 சதவீத அளவிலும், கேரளத்தின் பங்கு — பணி அமைந்திருப்பதாகவும் நடப்புப் புள்ளிக்கணக்கு சொல்லும்!

தென் இந்தியாவிலே, சிறிய ரக ஏலக்காயின் சாகுபடி தான் பொதுவாகவும் பரவலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழியில், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் குன்று சார்ந்த பசுமை மிகுந்த வனப்புறங்களில் ஏலக்காய் வேளாண்மை முதன்மை பெற்று விளங்கும்.

மாவீரனை மயங்கச் செய்த அதிசயம்!

பாருக்குள்ளே நல்ல நாடாகத் திகழும் பாரதத் திருநாட்டில், ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான மரபு வழிப்பட்ட வரலாற்றுச் சீரோடும் சிறப்போடும் உயிர் வாழும் ஏலக்காய், நறுமணப் பொருட்களான கிராம்பு, மிளகு, மஞ்சள் போன்றவற்றின் ராணியாகவும் திகழ்வது பொருத்தம் உடையதுதானே?

சரித்திர மாவீரன் அலெக்சாந்தரை அன்றைக்கு இந்திய நாட்டின்மீது படையெடுக்கத் தூண்டிய ஓர் அதிசயப் பொருள் என்ன, தெரியுமா?— அதுதான், நறு மணமும் இன்சுவையும் பூண்ட இந்திய ஏலக்காய்!– இச்செய்தி, ஏலக்காயின் கதைக்கு வரலாற்று அந்தஸ்தை வழங்கி இன்றைக்கும் பெருமை அடைந்து வருவதும் உண்மைதான்!

இன்னுமொரு வரலாற்று நிகழ்ச்சியும் உண்டு.

கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு, கடைசியில் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கத் தூண்டுதல் காரணமாக அமைந்ததும். இந்திய நாட்டின் ஏற்றமிகு ஏலக்காய்தானே!

ஜனவரி முதல் அடிநிலத்துத் தண்டினின்றும் உருவாகிப் புறப்பட்டு மண்ணிற்கு வெளியே தலைநீட்டத் தொடங்கும் இந்தக் கொம்புகளின் கணு இடைப் பகுதிகளிலே, ஏப்ரல் தொடங்கிப் பூக்கள் பூக்கத் தொடங்கும்; பூச்சரங்கள் உருவாகத் தலைப்படும்; பூத்த மூன்று மாதங்களுக்கெல்லாம் காய்கள் உருவாகிவிடுகின்றன. சிறுசிறு காம்புகளோடு தோன்றுகின்ற ஏலக்காய் வித்துறைகள் தாய் நிலத்தின் மண்ணின் மேற்பரப்பில் தவழ்ந்து விளை யாடவும் ஆரம்பித்துவிடும்.

ஆரோக்கியமான ஏலச்செடி சராசரியாக 2 மீட்டர் முதல் 4 மீட்டர் வரையிலான உயரத்திலே வளர்கிறது: வளர்ச்சி அடைகிறது. சம அளவில் ஒடுங்கி நீண்ட இலைகள் ஈட்டி போன்ற அமைப்புடன் இருவரிசைகளிலும் சின்னஞ்சிறிய இலைக்காம்புகளுடன் தோன்றும்.

பருவமழை ஜூன்–ஜூலையில் தொடங்கியவுடன், நாற்றுக்கள் மறுநடவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் பொதுவாக ஏலச்செடி பூத்துக் காய்க்கத் தொடங்கிய போதிலும், வர்த்தக ரீதியிலே லாபகரமான விளைச்சல் நான்காவது ஆண்டிலேதான் கிடைக்கத் தொடங்கும். ஏலக்காய் விளைச்சலின் காய் எடுப்புக்கு, அதாவது அறுவடைக்கு உகந்தகாலம் ஆகஸ்ட்–செப்டம்பரிலேயே அமையும்.

பொதுப்படைத் தோற்றம்

உலகம் முழுமைக்கும் பொதுவாகவும் பொதுப்படையாகவும் விளங்கும் தாவிரனத்தில் எத்தனை எத்தனையோ வகைகளும் உட்பிரிவுகளும் இயற்கையிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான்—அவற்றிலே, பல்லாண்டுக் காலத்திற்கு உயிர் வாழக்கூடிய தனி இயல்பு கொண்டதாக விளங்கும் ஏலக்காய்ச் செடிக்கு வாய்த்திட்ட இச்சிறப்பை இயற்கையின் அருட்கொடை என்றேதான் மதிப்பிடல் வேண்டும்!

ஏலச்செடியின் வேர்கள் புறப்படுவதற்கான அடிநிலத்தண்டு, சாகுபடி நிலப்பரப்பின் அடியிலேயே நிலைத்திருக்கும். இந்தத் தண்டிலிருந்து தோன்றும் இளந்தளிர்க் கொம்புகள் காற்றோட்டத்திலே அசைந்தாடியவாறும்; சாய்ந்தாடியபடியும் வெளிப்புறத்திலேயே அமைந்திருக்கும், இப்பொது விதி மீண்டும் நினைவுக்குரிய குறிப்பாகவே அமையும்!

ஏலச்செடி நுட்பமான தன்மை உடைய அபூர்வமான தாவரம்!

ஊட்டச்சத்துக்கள் மிகுந்த மண் வளமும், சகஜமான ஈரப்பத நிலையும், சீரான நிழல் அமைப்பும், மிதமான தட்பவெப்ப நிலவரமும் ஏலச்செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பெருந்துணை செய்யும். ஆகவே, ஏலச்சாகுபடி முறையில், முறையான செடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விஞ்ஞானப்பூர்வமான நடைமுறைச் செயற்பணிகளையும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஏல விவசாயிகள் மேற்கொண்டால், விளைச்சல் அமோகமாகப் பெருகும் வாய்ப்பும், ஆதாயம் கணிசமாகக் கூடுதலடையும் வசதியும் ஏற்படவே செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஏலக்காய்/ஏலக்காய்_ராணி&oldid=506003" இலிருந்து மீள்விக்கப்பட்டது