ஏலக்காய்/சாகுபடியில் ஏலக்காய்
சாகுபடியில் ஏலக்காய்
ஏலக்காய் ராணி என்கிற உலகளாவிய உன்னதமான புகழைச் சம்பாதித்த நறுமண இன்சுவை மிக்க ஏலக்காய் விலைமதிப்பு மிக்கதாகவே கருதப்படுகிறது; அதுபோலவே, நுட்பமான உணர்ச்சி மிக்கதாக அமையும் ஏலக்காயின் சாகுபடியும் செலவு மிகுந்ததாகவே கணக்கிடப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நடுத்தண்டுகள் மற்றும் இளங்கொம்புகளை நட்டு வளர்க்கப்படுகின்ற தாவரங்களைப் போன்று செழித்தும் தழைத்தும் வளர்ச்சி அடைவதற்கும், விதைகளின் விதைப்பின்மூலம் இனப்பெருக்கம் அடைவதற்கும் இணங்கக் கூடியதாக ஏலக்காய்ச்செடி அமைந்திருப் பதனால்தான், அது இருதரப்புக்களிலும் பற்பல மடங்குகளாக இனவிருத்தி அடைவதற்கும் ஏற்றதான வாய்ப்பையும் வசதியையும் அன்றும் பெற்றிருந்தது; இன்றும் பெற்றிருக்கிறது.
பழைமையான விவசாய முறை
நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்த ஏலச்செடிகளின் நடுத்தண்டுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை இரண்டு மூன்று இளங்கொம்புகளை உடையதாகத் துண்டு செய்து, தயார் செய்யப்பட்ட குழிகளிலே அவற்றை நட்டு வளர்த்து இனவிருத்தி செய்யும் இந்தப் பழைய பழக்க வழக்கம் எளிதானதுதான்; நேரம் காலம் மிச்சமாவதும் உண்மை தான். பழைமையான இந்த விவசாயமுறையின் கீழ் அதிகப்படியான அளவிலே உற்பத்தி செய்யப்படும் செடிகள், விதை விதைத்து, முளை கிளம்பி, நாற்று பறித்து, பின்னர் நாற்றுக்களை மறுநடவு செய்து, அவற்றினின்றும் மரபுத் தோன்றல்களாக விளைச்சல் செய்யப்படுகின்ற செடிகளை முந்திக் கொண்டு பலன் தரவும் தொடங்கி விடுகின்றன என்பதும் யதார்த்தமான நடப்புத் தான்! — ஆனாலும், இத்தகைய இனப்பெருக்க முறையிலே, தொற்றிப் பரவும் நச்சு நோய்ப் பூச்சி புழுக்கள் மற்றும் நுண் கிருமிகளின் தாக்குதல்கள் பயங்கரமான சோதனைகளாகவே உருவெடுத்து அச்சுறுத்தின. நட்டு வளர்க்கப்பட்ட நடுத்தண்டுகள் ஆரோக்கியத்தை இழந்ததாலேயே, இவற்றின் வாயிலாக நோய் வளரவும் வாழவும் ஏதுவாகி, தடுப்புக்களையும் கட்டுப்பாடுகளையும் மீறின. ஆரோக்கியமற்ற இந்தப் பயங்கரச் சூழல், ஏல விவசாயிகளைக் கஷ்டப்படச் செய்ததோடு திருப்தி அடையாமல், நஷ்டப்படவும் வைத்துவிட்டது. ஆகவேதான், மற்றத் தாவரங்களைப் போலே ஏலச் செடிகளையும் இனவிருத்தி செய்யும் பண்டையப் பழக்கம் பெரும்பாலான ஏலச் சாகுபடிப் பகுதிகளிலே கைவிடப்படவும் நேர்ந்தது!
விதைப்பு முறை
இந்நிலையிலேதான், விதைப்பின் மூலம் ஏலச் செடிகள் உற்பத்தி செய்யப்படும் நவீன விவசாயச் செயல்முறை இப்போது ஏலக்காய்ச் சமூகத்தினரிடையே பரவலாகவும் பான்மையுடனும் பின்பற்றப்படுகிறது!
நல்ல விதைகள்தாம் நல்ல விளைச்சலைத் தரமுடியும். 5 ஆண்டு முதல் 8 ஆண்டு வரையிலும் நோய்ப் பீடிப்புக்கு இலக்காகாமல் ஆரோக்கியமாகப் பேணி வளர்த்துப் பாதுகாக்கப்பட்ட நல்ல மகசூலை நல்கும் உயர் ரக ஏலச் செடிகளினின்றும் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்களே விதைப்புக்கு உகந்த ஏல விதைகளாக அமையக்கூடும். 'கண்டுமுதல்' செய்யப்படும் ஏலக்காய்களிலிருந்து முற்றிப் பழுத்த வித்துறைகள் சேகரம் செய்யப்பட்டு, பின்னர், அந்த வித்துறைகளின் தோலை நீக்கி, விதைகளின் மீது உட்புறத்தில் படிந்துள்ள அழுக்கு, கறை முதலியவை நீங்கும்படி அவ்விதைகளைப் பிரித்துக் கழுவிச் சுத்தப் படுத்தவேண்டும். இவ்வாறு துப்புரவு செய்யப்பட்ட விதை மணிகளை மரச்சும்பலோடு கலந்து, 2 - 3 நாட்கள் வரை நிழலில் உலர்த்திக் காய வைக்கவேண்டும். 6 x 1 மீட்டர் அளவிலே ஏற்பாடு செய்யப்பட்ட பாத்திகளில் குறிப்பாக அக்டோபர் - நவம்பர் காலப் பிரிவிலே விதைகள் விதைக்கப்படும். விதைப்புக்குப் புத்தம் புதிய விதைகளே உகந்தவை; சிறந்தவை.
இப்படி விதைக்கப்படுகின்ற விதைகளினின்றும் 'முளை' அரும்பி நாற்று கிளம்பத் தொடங்கி, 6 - 8 மாதக் காலம் வரையிலும் முதல் நிலை நாற்றுக்கள் வளர்க்கப் படுகின்றன. பிறகு, பொதுவாக, ஜூன்-ஜூலை கெடுவில் முதல் நிலைப் பாத்திகளிலிருந்து அந்த நாற்றுக்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு இரண்டாம் நிலைப் பாத்திகளில் மீண்டும் நடவு செய்யப்படும். மறுபடி நடவு செய்யப்படுகின்ற நாற்று வரிசைகளுக்கும் பாத்திகளின் கரைகளுக்கும் இடையிலே சுற்றிலும் 9 x 9 அளவிற்கு இடைவெளி இருப்பது நல்லது.
பிறகு, மேற்கண்ட இரண்டாம் நிலை ஏல நாற்றுக்கள் 12 மாதங்கள் வளர்ந்தவுடன், அவற்றை மீண்டும் பிடுங்கி எடுத்து, அவற்றைப் பிரதானமான சாகுபடி வயலில் திரும்பவும் நடவு செய்தாக வேண்டும். இப்பணி, ஜூன் - ஜூலை காலக் கட்டத்தில், முக்கியமாக, பருவமழை ஆரம்பமான கையோடு நடத்தப்படுகிறது. இவ்வகைச் செயல்கள், பருவமழையின் மாறுதல் காரணமாக, கேரளம் - கர்நாடகம் - தமிழ்நாடு போன்ற மாநிலங் களிலுள்ள ஏலக்காய்ச் சாகுபடிப் பகுதிகளிலே சற்றே. மாறுபடுவதும், மாறுதலடைவதும் சகஜம்!
காற்றங்கால் முறை'
விதைப்பதற்காகத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் விதை மணிகளை அடர்த்தியான கந்தகக் காடியில் 2 நிமிடங்களுக்கோ அல்லது, செறிவுள்ள வெடியக்காடியில் 5 நிமிடங்களுக்கோ அமிழ்த்தி வேதிமுறையில் பக்குவப்படுத்துவதன் விளைவாக, விதைகள் ஒரே சீராக வெடித்து அரும்பி முளைவிட்டுத் தளிர்க்கவும், எதிர்காலத்தில் விளைச்சலில் நல்ல பலன்கள் கிட்டவும் ஏதுவாகும்.
விதைப்புப் பணிக்கு உரியதான முதல்நிலை நாற்றங்காலுக்கெனத் தேர்வு செய்யப்பட்ட வேளாண்மை நிலத்தைச் செய்நேர்த்தி பண்ணி முடித்ததும், நிலத்தைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து 30 செ. மீ. ஆழத்துக்கு உழவு செய்து, படுகைகள் எனப்படும் பாத்திகளை 6x1 மீட்டர் அளவுக்குத் தயார் செய்தபிறகு, அவற்றை நிலத்தின் மண்ணைக் கொண்டு 20-30 செ.மீ. அளவிற்கு உயர்த்தி விட வேண்டும். அப்புறம், மக்கிய சத்துமிக்க காட்டு மண்ணைப் பாத்திகளில் அணைபரப்புவதும் அவசியம். விதைகளைப் பாத்திகளிலே தூவி விடலாம்; அல்லது, வரிசை வரிசையாக விதைக்கலாம். கேரளம், தமிழ்நாடு மாநிலங்களைச் சார்ந்த ஏலச்சாகுபடிப் பிராந்தியங்களில் அமைக்கப்படும் முதல்நிலை நாற்றுப் பண்ணைகளிலே ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்னும் மதிப்பின் அளவில் விதைப்புச் செய்வதற்கு விதைகள் பயன்படுத்தப்படல் வேண்டும். விதைப்புப் பணிமுறை முடிந்ததும், விதைக்கப்பட்ட விதைகளை உயர்ந்த நில மண்ணைக் கொண்டு மூடி, பிறகு அப்பகுதிகளில் தகுந்த இலை தழைகளை ஈரமாக்கி உரமாகப் பிரயோகிப்பது நலம். பயக்கும் நெல் வைக்கோல், அல்லது 'போதா' எனப்படும். புல்வகையும் உதவும். விதைக்கப்பட்ட பாத்திகளில் நீர்ப் பாசனம் காலையிலும் மாலையிலும் அவசியம் நடைபெற வேண்டும். விதைப்பு நடந்த 20-30 நாட்கள் கழித்து, விதைகளிலிருந்து முளை–அரும்பு கிளம்பத் தொடங்கி விட்டால், மேற்புறத்தில் மண்ணால் மூடி இட்டுநிரப்பப்பட்ட தழை இலைகளை அப்புறப்படுத்திவிட வேண்டும். மேலும், நிழல் பந்தல் அமைத்து, வெய்யில்–மழையிலிருந்து வளரும் நாற்றுக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் வேண்டும்.
கேரளம், தமிழ்நாடு மாநிலங்களில் நாற்றுக்கள் சுமார் 6 மாதங்கள் வளர்ச்சி அடைந்த பிறகு, அவை இரண்டாம் நிலை நாற்றங்காலில் திரும்பவும் நடப்படும்!
ஆனால், கர்நாடகத்தில் மறு நடவுப்பழக்கம் வழக்கத்தில் இல்லை; ஆகவே, குறிப்பாக 10 மாத வளர்ச்சி அடைந்துவிட்டால், அவை பிரதானமான நாற்றங்காலிலிருந்து நேரிடையாகவே வயல்களில் நடவு செய்யப்பட்டு விடுகின்றன.
நாற்றுப் பண்ணையில் இரண்டாவது நிலை
இரண்டாம் நிலைப்பட்ட நாற்றங்காலில் மறுநடவு செய்யப்படுவதற்கு மே, ஜூன் மாதங்கள் பொருத்தமாகக் கருதப்படுவதால், நாற்றுக்களைப் பருவமழையும் வரவேற்கக் காரணம் ஆகிறது. தழை உரம் இடுதல், தண்ணிர் இறைத்தல், நிழல் பந்தல் அமைத்தல் போன்ற வேளாண் செயல்முறைகள் நடைபெறுவதும் உசிதம். நாற்றுக்கள் மண்ணிலே நன்கு கால் ஊன்றிவிட்டால், வான் நிலையை அனுசரித்து, வாரத்தில் 2, 3 தடவைகளில் நீர் பாய்ச்சினாலே போதும். நாற்றுக்கள் 'குருத்து' விட்டு வளர்ச்சி அடைந்தவுடன், மேற்புறப் பந்தல்களை வெளிச்சம் பாயும் வகையில் ஒரளவிற்கு நீக்கிச் சீர்ப்படுத்தி விடலாம். இரண்டாம் தரமான நாற்றுப் பண்ணைகளில் களைகள் தோன்றிப் பயிர் வளர்ச்சியைப் பாதித்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதும் இன்றியமையாதது ஆகும்.
இரண்டாம் தரமான நாற்றுப் பண்ணைகளில் ஊன்றி வளர்கின்ற நாற்றுக்கள், கிட்டத்தட்ட பன்னிரண்டு மாதங்களைக் கடத்திய பிற்பாடு, இளங்கன்றுகள் ஆகி, சாகுபடிக்குரிய தாய் நிலங்களுக்கு மாற்றப்பட்டு அங்கே அவை நடவு செய்யப்பட்டு, சில பல ஆண்டுகள் வளர்ச்சி அடைந்திடவேண்டிய பொறுப்பும் கடமையும் ஏற்பட்டு விடுகின்றன. ஆகையால்தான் இரண்டாம் நிலை நாற்றுப் பண்ணைகளில் பராமரிப்பு–பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரம் அடைய நேருகின்றன.
கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலே, முதல் நிலை நாற்றங்கால், மற்றும் இரண்டாம் நிலை நாற்றங் கால்களில் நாற்றுக்கள் மொத்தம் பதினெட்டு மாதங்களுக்குக் குறையாமல் வளர்ந்து ஆளாகி, தாய் வயல்களிலே நிரந்தரமாக நடவு செய்யப்படக்கூடிய தகுதியையும் உறவையும் அடைய வேண்டியிருப்பதால், அவை மண்வளப் பாதுகாப்போடும் நச்சு நோய்க் கட்டுப்பாட்டோடும் பேணிக் காக்கப்படுகின்றன! கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலும் தாற்றுக்கள் 10 மாதங்கள்தாம் பிரதான சாகுபடிக்கு ஏற்ற வகையில் வளர்க்கப்படுகின்றன. சிற்சில இடங்களில் 22 மாதங்கள் வரையிலும் கூட, நாற்றுக்கள் விவசாயம் செய்யப்படுவதற்காக வளர்க்கப்படுவதும் உண்டு.
கடவுப் பணிகள்
இப்பொழுது:
ஏல நாற்றுக்கள் முதல் நிலை, இரண்டாம் நிலை நாற்றுப் பண்ணைகளிலே அந்தந்தப் பிராந்தியங்களில் அனுசரிக்கப்படும் வேளாண்மை மரபுகளுக்குத் தக்கபடி வயதின் வளர்ச்சியை அடைந்து, விளைச்சல் தரவல்ல சாகுபடிக் கட்டமைப்புக்களோடும் நெறிமுறைகளோடும் 'செய்நேர்த்தி' பண்ணப்பட்ட பிரதானமான வயலில் நடவு செய்யப்படுவதற்குத் தயாராகி விடுகின்றன. அவ்வாறு, ஏலத் தோட்ட விவசாய நிலமும் மேற்கண்ட நாற்றுக்கள் நடவு செய்யப்படுவதற்கான விவசாய அந்தஸ்தை அடைந்து விடும்போது, ஏலச் சாகுபடி வருங்காலத்திலே வளமுடன் திகழும் என்பதற்கான நன்னம்பிக்கைக்கு அப்போதே பிள்ளையார் சுழி போடப்பட்டு விடுகிறது என்றும் கொள்ளலாம் அல்லவா?
இனி:
ஏலக்காய் வேளாண்மையின் நடவுப் பணிக்கான நெறி முறைகள் புள்ளிக்கு உதவக்கூடிய பள்ளிக் கணக்காகத் தொடர்கின்றன; தொடர் சேர்க்கின்றன.
நாளது தேதிவரையிலும் பயிர் செய்யப்படாத காடுகள் தழுவிய கன்னி நிலப் பிரதேசங்களிலுங்கூட, ஏலக்காய் விவசாயம் வெற்றிகரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்பதும் நடைமுறை உண்மையேதான்! அப்படிப்பட்ட பகுதிகளிலே, அங்கங்கே மண்டியிட்டு மண்டிக் கிடக்கின்ற முட்புதர்கள், செடிகள் மற்றும் புல்பூண்டு வகைகளை முதன்முதலில் அப்புறப்படுத்தி, அந்த நிலப்பரப்பைச் சுத்தப்படுத்திச் சமன் செய்து, பிறகு நன்றாக உழுது செய்நேர்த்தி செய்தாக வேண்டும். காட்டு மரங்களின் மேலே பரந்து விரிந்து கிடக்கின்ற கிளைகளையும் கொம்பு களையும் சீவிச் சாய்த்து, செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாழ்வு தரும் மிதமான வெப்பத்தை வழங்கக் கூடிய விதத்தில் நிழலைச் சீர் செய்ய வேண்டியது அடுத்த அலுவல். சரி; அங்கே நிழல் பற்றாக்குறையா? அப்படியென்றால் நிழல் தரும் செடி இனங்களை ஊன்றி வளர்த்தால், பிரச்னை தீர்ந்து விடாதா என்ன? சாகுபடி வயல் சமதள நிலப்பகுதியாக இருந்தால், நாற்றுக்களை நடவுசெய்வதற்குக் குழிகளை ஒரே நேர் வரிசையில் 60 x 60 x 35 செ.மீ. என்னும் அளவில் ஏப்ரல் -மே மாதங்களுக்கு இடையிலே தோண்டலாம்; கேரளம், மற்றும் தமிழகப் பக்கங்களில் நடவேண்டிய நாற்றுக் களையும் மண்ணின் வளப்பத்தையும் உத்தேசம் பண்ணி, 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரையிலும் இடைவெளிகளை அமைக்கலாம். 60 x 60 x 35 செ.மீ. அளவில் தோண்டப் பட்ட குழிகளில் நடவேண்டிய நாற்றுக்களுக்கு மண்ணின் வளத்தின் வாயிலாக ஊட்டம் ஏற்படுமாறு, அந்தக் குழிகளிலே 15 செ. மீ. ஆழத்தில் நன்றாக அழுகிய கால்நடை எரு, கூட்டுஉரம், மக்கிய இலை தழைச் சத்துக்களை மழை பெய்தபின், உசிதம்போல கலவை செய்து இடுவது நல்லது. தேவையானால், எரியகிச் சத்துக்களையும் 100 கிராம் அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் மண் இறுகி வளம் பெற வழி பிறக்கும்.
சரிவான நிலப் பகுதிகளாக இருந்தால், ஏற்ற இறக்கம் கொண்ட மேல் தளங்களை அமைத்து, மேடாகவும் பள்ளமாகவும் அமைந்த எல்லைக் கோடுகளில் 60x60x30 செ. மீ. அளவில் குழிகள் பறிக்கப்பட வேண்டும். மண்ணின் செழிப்பம் விருத்தி அடைந்திட சாணம், தழை இலைகள், காட்டுமண் ஆகியவற்றை பாதி அளவுக்கு ஆழத்தில் இட்டு நிரப்பவும் வேண்டும். இடைவெளிகள் இங்கே 4 மீட்டர் முதல் 6 மீட்டர் வரை இருப்பது சாலவும் சிறந்தது.
தாய் நிலத்தில் நடவு ஆரம்பம்
இனிமேல், நாற்றுக்களை நடவு செய்ய வேண்டியது தானே?
மே-ஜூன் மாதங்களில் பருவக்காலத்தின் மழை ஆரம்பமானதும், தடவுப் பணிகளும் ஆரம்பமாகி விட வேண்டும். ஆனால், பலத்த மழை பெய்யக் கூடிய ஜூன்-ஆகஸ்ட் காலப்பிரிவில் நடவுக் காரியத்தைத் தொடவும் கூடாது; தொடரவும் கூடாது.
முதல் நிலையில் நாற்றங்காலில் வளர்க்கப்பட்டு பிறகு இரண்டாம் நிலையிலும் நாற்றங்காலில் ஆளாக்கப்பட்ட ஏலக்காயின் நாற்றுக்களை முதன்மையான சாகுபடி நிலங்களில் நடவு செய்கையில், மரமுளைகளின் துணைத் தாங்கலோடு நிமிர்ந்த அமைப்பு நிலையில் ஊன்றி நடுவதில் விவசாயிகள் அக்கறையோடு செயற்படவேண்டும்.
செடிகளின் பராமரிப்பு!
நடவு முடிகிறது.
இப்போது, நடப்பட்ட வளர்ச்சி அடைந்த நாற்றுக் களை, அதாவது இளஞ்செடிகளைப் பேணிக் காக்கும் வகையிலும், அவற்றின் வேர்களைப் பராமரிக்கும் வழியிலும் அச்செடிகளின் அடிப்பாகங்களிலே வைக்கோல், சருகு, இலை தழைக்கூளங்களை ஈரமாக்கிப் பரப்பிவிட வேண்டும். அப்போதுதான், வறட்சியின் பாதிப்புக்கு இலக்காகாமலும், மழை வீச்சுக்கு ஆளாகாமலும் மண் வளம் சமன்நிலை எய்திடவும் இயலும். மண்ணில் ஈரம் அடிமட்டத்தில் நிலைப்பதில் உரங்களின் பணி கூடுதல்தான். மண்ணில் ஈரம் நிலவினால்தானே, செடிகளின் வேர்கள் நன்கு உருவாகி பலம் அடைய முடியும்!
நாட்கள் ஓடுகின்றன.
நடவு கழிந்து, ஏலக்காய்க்கான கலவை உரங்களைப் பயன்படுத்துவது, வறட்சி நிலையைத் தாங்கிச் சமாளிக்க நீர் பாய்ச்சுவது, சீரான நிழல் அமைப்பது போன்ற செயல்கள் தொடரும். செடிகளைச் சுற்றிலும் 30 செ. மீ. இடைவெளிவிட்டு, அப்பகுதிகளைக் கொத்திக் கிளறிவிட்டு, செடிகளின் அடிப்புறங்களில் ஏலக்காய்க் கலவை உரங்களை சாகுபடி ஆலோசனைகளுக்கு ஏற்றபடி தூவி வைக்கவும் வேண்டும். அவ்வப்போது, மண்ணின் ஈரத்தைக் கருதித் தூவிய உரங்களையும் லேசாகக் கிளறிவிட்டால், செடிகள் பின்னர் வெப்பநிலையை எதிர்த்துச் சமாளித்துத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி மண்ணிற்குக் கிடைக்கக் கூடும்.
இரண்டாவது சுற்றாக உரங்களை இடும் பணிகள் மறு ஆண்டின் மே-ஜூன் காலக்கட்டத்தில் இடம் பெறும்: எரு இடுதல், சருகு இடுதல் மற்றும் தழைச்சத்து உரம் இடுதல் முதலான செய்முறைகள் காலக் கிரமப்படியும் திட்டமிட்ட வேளாண்மை நடைமுறைகளுக்கு உகந்தபடியும் தொடரும். செடிகளுக்கு ஊடே அமைக்கப்பட்ட இடைவெளிப் பகுதிகளையும் உழுது பண்படுத்துதல் அவசியம்,
காலம் வளர்கிறது.
ஏலச்செடியும் வளர்கிறது.
வேர்க்கிழங்குகள் வளர்ச்சி அடைந்து பூமிக்கு மேல் வரும்போதும், இளங்கொம்புகளில் பூங்கொத்துக்கள் தோன்றும் பொழுதும், செடிகளின் அடிப்பகுதிகளைச் சுற்றிலும் அளவோடு மண் பரப்பப்படுவதால், செடிகளைச் சுற்றி இளஞ்செடிகள் உற்பத்தியாகவும் வாய்ப்பு வசதி ஏற்படலாம்.
நிழல் சீரமைப்பு!
மண்ணில் பொன்விளையும் புண்ணியப் பூமி பாரதம், சரித்திரபூர்வமான இந்த உண்மை ஏலக்காய்க்கு மிக நன்றாகவே பொருந்தும். ஏலம் விளையும் மண், பொன் விளையும் மண் இல்லையா?
உண்மை பொய்த்தது கிடையாது.
ஆனால், இயற்கை அந்தக் காலத்தின் நிர்ணயத்திலிருந்து: இப்போது நிலை மாறித்தான் விட்டது.
இல்லையென்றால், பருவமழை காலம் தவறுமா?
தட்பவெப்பம் தடுமாறுமா? வெள்ளம் பெருகுமா?
காடுகள் அழிக்கப்படுமா?
இப்படிப்பட்ட அவலங்களும் தொல்லைகளும் மண்ணைச் சோதித்த காரணம் கொண்டுதான், மண்ணும் மக்களைச் சோதிக்க நேர்கிறது.
எனினும் —
இயற்கைத் தாய் புண்ணியவதி. பூமி அன்னை பொறுமைக்கு வடிவம். ஆகவேதான், மக்கள் இன்னமும் மண்ணை நம்புகிறார்கள்; மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள்!
ஒரு செய்தி!– ஏலக்காய் மண்ணுக்குப் பொதுவாக ஒரு குணம் உண்டு. உழவு நிலத்தில், நிலத்து மண்ணில் வெடியம் மற்றும் சாம்பரச் சத்துக்கள் அதிகமாகவும் எரியச் சத்துக்கள் குறைவாகவும் இருக்கும். ஆதலால், ஒவ்வொரு ஹெக்டேர் பரப்பு உடைய நிலத்திலும் 30 கிலோ வெடியம், 60 கிலோ எரியகக்காடி, 30 கிலோ சாம்பரம் என்கிற அளவு வீதத்தில் கலவை செய்து உரங்களாக உபயோகிக்கலாம். இச்செயல்முறை காரணமாகவே, மண் வளத்தின் குறை நிறைகள் சமம் அடைகின்றன. உரம் வைப்பது மே-ஜூன் மாதங்களில் முதல் சுற்று ஆகவும், செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சுற்று ஆகவும் அமைவது நலம் பயக்கும்.
அழகான நிழலை அழகாக விரும்பி, ரசனையோடு வரவேற்கும் நுண்ணிய உணர்வு கொண்டது ஏலச்செடி. இதனால்தான், நேரிடையான சூரிய வெளிச்சத்தை, அதனால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்நிலையில், அதற்குச் சீரான நிழல் சரியானமுறையில் அவசியம் ஆகிறது. மேலும், மரங்களின் நிழல்கள் அடர்த்தியாகவும் கனமாகவும் அமைய நேர்ந்தால், செடிகளின் உயிர்ப்பொருள் மாற்றத்தின் செயலாற்றல் தடைப்பட்டு, செடிகள் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைவது தடைப்பட நேரிடும். ஆகவே, ஊட்டச்சத்துக்களை ஒருநிலைப் படுத்தி உயிர்ப்பொருள் மாற்றத்தின் இயக்கம் நல்லபடியாகப் பயன்படுத்தப்பட்டுப் பயன்தரும் வகையில், கதிரவனின் ஒளியைப் போதுமான அளவில் செடிகளுக்குக் கிடைக்கச் செய்வதும் அவசியம் ஆகிறது. மழையால் செடிகள் தாக்கப்படாதவாறு பாதுகாப்புடன் இருப்பதற்கும் நிழல் நிர்வாகம் உதவ வேண்டும். அதுபோன்றே, கோடை வெயில் நாட்களிலும் நிழல் பராமரிப்பு செடிகளுக்குத் தேவைதான்.
ஏலத்தோட்டங்களில் நிழற் பணிமுறைகளுக்கு உதவுவதாகச் சிவப்புத் தேவதாரு, சந்தனவயம்பு, பலா, குரங் கட்டி, பாலி, முல்லா மற்றும் வருணா போன்ற செடி இனங்கள் கருதப்படும். புதர்சார்ந்த செடி வகைகளில் கோகோ மற்றும் இலவங்கச் செடிகளும் நல்ல நிழலைத்தரும்.
நிலத்தின் அமைப்பு, மண்ணின் இயல்பு, சாகுபடிப் பரப்பின் உயரம், காற்று அடிக்கும் போக்கு, வேளாண் மைத் தட்ப வெப்பநிலை, மழை நிலவரம், வளரும் செடிகளின் சுற்றுப்புறச்சூழல் ஆகிய சார்புநிலைகளுக்கு ஏற்ப நிழலின் தேவைகள் நிர்ணயிக்கப்படலாம்.
சீரான நிழலின் அமைப்பில் உருவாகத்தக்க சீரான சீதோஷ்ணத்தில், செடிகளின் ஆரோக்கியம் பேணப்படும். தரமான பூச்சரங்கள் தோன்றும்; ஏலக்காய்கள் எடுப்பாகவும் பருமனாகவும் அமைந்திடும். ஆனால், நிழல் பராமரிப்பு சரிவர அமையாமல், செடிகளிலே கூடுதல் வெளிச்சம் பாய்ந்தால், செடிகளின் வளர்ச்சி குன்றும்; தூரடியில் தேவையற்ற முளைகள் பெருவாரியாகத் தோன்றும். இளங்குருத்துக்கள் உறுதி கெடும்: பூங்கொத்துக்கள் சிறுத்துவிடும்; பின் ஏல நெற்றுக்கள்வித்துறைகள் பலவீனம் அடைந்திடும்! செடித்தொகுதிகள் வாடி வதங்கிவிட்டால், செடிகளின் வளர்ச்சி தடைப்பட வேண்டியதுதானே?
அடுத்த பணி - களை எடுப்பு
சாகுபடி செய்யப்படும் வயல்களில் ஊட்டச் சத்துக்களை ஆதாரமாகவும் ஆகாரமாகவும் கொண்டு வளர்கின்ற ஏலச் செடிகளுக்குப் போட்டியாகவும் மண்வளத்தின் துணையோடும் களைகள் வளருவதும் சகஜமே. களைகள் அப்புறப்படுத்தப்பட்டால் தான், மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, ஏலக்காய்ச் செடிகள் செழித்தும் தழைத்தும் வளர ஏதுவாகும். ஆகவே, ஓர் ஆண்டில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் களை எடுப்பது நல்லது தான.
மே - ஜூன் மாதங்களில் உரம் இடுவதற்கு முன்பாகவே முதல் தடவையாகவும், மழைக்குப் பின்பும் உரம் இடுவதற்கு முன்பும் இரண்டாம் முறையாகவும், வடகிழக்குப் பருவக்காற்று நின்றவுடன் நவம்பர் - டிசம்பரில் மூன்றாவது தவணையாகவும் களை எடுப்புக் காரியங்களை நடத்தி முடிக்க வேண்டும், இந்த நடவடிக்கைகளுக்குக் களை களைக் கொல்லும் மருந்துகளும் ஒத்தாசை செய்யும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நச்சுநோய்ப் பூச்சி புழுக்களைக் கட்டுப்படுத்தப் பூச்சிநாசினி ரசாயன மருந்துகளைப் பிரயோகம் செய்கையில் மேற்கொள்ளப்படும் அதே கவனத்தோடு, வேதியியல் சார்ந்த களை நாசினி மருந்துகளையும் பிரயோகம் செய்தல் வேண்டும். ஆனால், மேற்படி மருந்தை களைகள் இயற்கையில் தோன்றக்கூடிய செடிகளின் அடிப்பகுதிகளைச் சுற்றி -60 செ.மீ. இடையீடு விட்டு, இடைவரிசைப் பகுதிகளில் மாத்திரமே தெளிப்பது உசிதம். ஹெக்டருக்கு 1.25 அளவில் க்ரோமாக்ஸோன் எனப்படும் களைக்கொல்லி மருந்தை 500 லிட்டர் தண்ணிரில் கலந்து ஒரேயொரு சுற்றுத் தெளித்து விட்டாலே போதும்! - குழாய் முனைகளோடு கூடியதும், தொடர்ந்து இயக்கப்படுவதற்கு வசதி கொண்டதுமான தெளிப்பான் கருவிகள் களைநாசினி மருந்தை முறைப்படி தெளிப்பதற்கென்று சிபாரிசு செய்யப்படும்.
மேலும், ஏலத்தோட்டங்களில் ஒர் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் சாகுபடியாளர்கள் பின்பற்ற வேண்டிய வேளாண்மைச் செயல் முறைகள் பற்றிய ஆலோசனைப் பிரசுரங்களை வாரியம் வழங்கி வருகிறது. ஏலம் விளைந்திடும் தென் மாநிலங்களில் இயங்கும் வாரியத்தின் கள அலுவலகங்களில் அவை கிட்டும். தென் மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்று சார்ந்த கேரளம்-தமிழ்நாடு-கர்நாடகம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய விவசாய நடவடிக்கை களை அறிந்தும் உணர்ந்தும் விவசாயிகள் செயற்பட்டால், ஆதாயம் தேடிவரும் சீதேவியாக அவர்களைத் தேடி வராதா, என்ன?