உள்ளடக்கத்துக்குச் செல்

ஏலக்காய்/நச்சுநோய்ப் பூச்சிப் புழுக்கள்

விக்கிமூலம் இலிருந்து

நகச்சுநோய்ப் பூச்சிப் புழுக்கள்! 6


ஏலக்காய்த் தோட்ட விவசாயத்தின் பொருளாதார மேன்மையை நிர்ணயிப்பதிலும் தீர்மானிப்பதிலும் திட்டமிடப்பட்ட சாகுபடி நடைமுறைகளின் உயிராதாரமாகவே பயிர்ப் பாதுகாப்புச் செயல்முறைகள் விளங்கும் . மனிதனை மட்டும் இயற்கை சோதிப்பது கிடையாது. அது ஏலக்காயையும் சோதிக்கும். விதியின் பொதுவிதி இது.

ஏலக்காய்க்கும் நோய் உண்டு. இது உடன்பிறவாத வியாதி.

நச்சுப் பூச்சிப்புழுக்கள் நுண்மங்கள் மற்றும் பற்றித் தொற்றிப் பரவும் நோய்க்கிருமிகள் ஏலக்காயை நோய் வாய்ப்படச் செய்கின்றன.

நோய் எனில், அதற்குக் காரண காரியங்கள் இல்லாமல் இருக்குமா?—இருக்கலாமோ?

ஏலம் விளைச்சல் செய்யப்படுகிற சாகுபடி வயல் மற்றும் நிலப்பரப்புக்களிலே நிலவிடும் வேளாண்மைத் தட்பவெப்ப நிலைகளில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாகவும், திட்டமிடாத வெவ்வேறு வகைப்பட்ட விவசாயப் பழக்க வழக்கங்களின் விளைவாகவும், அக்கறை இல்லாத செடி பாதுகாப்பு நடப்புக்களின் தொடர்பாகவும் பெரும் பாலான பயிர் விளைச்சல் பகுதிகளிலே பீடை நோய்க் கிருமிகள் தோன்றுகின்றன; பற்றியும் தொற்றியும் பரவுகின்றன. அத்துடன் நின்று விடுகின்றனவா? - அதுதான் இல்லை! அவை ஏலக்காயின் பெருமைக்கும் சிறப்புக்கும் வாய்த்திட்ட விதிச் சோதிப்பாக மாத்திரமன்றி, பயங்கரமான அச்சுறுத்தலாகவும் அமைந்து விடுகின்றனவே!

ஏலக்காய் நாற்றுப் பண்ணைகளிலேயே நோய்த் தாக்குதல்களுக்கு ஆரம்பவிழா நடத்தத் தொடங்கிவிடும். இந்த நச்சு நோய்க்கிருமிகள் ஏலத்தோட்டப் பண்ணைகளிலும் முற்றுகை களைத் தொடர்வதால் ஆண்டுதோறும். ஏற்படக் கூடிய விளைச்சல் நஷ்டங்களும் பாதிப்புக்களும் ஏல விவசாயிகளுக்கு நச்சுச் சோதனைகளாகவே அமைந்து விடுகின்றன! பயங்கரமான இத்தகைய சூழல்களில் நோய்களையும் நோய்ப் புழு பூச்சிகளையும் அடக்கி ஒடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் அவசரமும் அவசியமுமான முக்கியத்தைப் பெறுவதாகவும் அமைகின்றன!

நாட்டின் நல்லமைதியைச் சோதித்து வருகிற தேசவிரோதச் சக்திகளான பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மாதிரியே, அந்நியச் செலாவணியை, அதிக அளவிலே தாய்நாட்டுக்கு ஈட்டித் தருவதில் அன்றும் இன்றும் முக்கியத்துவம் பெற்றுத் திகழும் ஏலக்காயை நாற்று நிலையிலும் செடி நிலையிலும் தாக்கிச் சோதிக்கும் நச்சு நோய்ப் பூச்சிப் புழுக்களும் கிருமிகளும் பயங்கரமானவையாகவே ஏலக்காய்ச் சமுதாயத்தில் கருதப்படுகின்றன; அஞ்சவும் படுகின்றன.

பொதுவான இந்தப் புழுப் பூச்சிகள் மற்றும் நோய் நுண்மங்களில்தான் எத்தனை, எத்தனை வகைகள்!...

அந்துப்பூச்சி அந்துப்பூச்சி வகைகளின் முட்டைப் புழுக்கள் ஏலச் செடிகளின் வேர்களிலும், அடிநிலத் தண்டுகளிலும் ஊடுருவி, செடிகளின் அடிமுடிப் பாகங்களில் எல்லாம் கேள்விமுறை இல்லாமல் உட்புகுந்து பரவுவதால், செடிகள் வாடிவதங்கிச் சத்துக்களை இழக்கின்றன. செடிகளில் ஊடுருவிப் படரும் முட்டைப் புழுக்களின் ஆதிக்கத்தின் கெட்ட விளைவாகப் பரப்பப்படும் இவ்வகைத் தொற்றுநோய் பூஞ்சணக் காளான் நோயாகி. செடித் தொகுதிகள் அழுகிவிடுகின்றன. மேலும், அடிநிலத் தண்டுகளில் ஆரம்பமாகும் இந்நோய், அதன் ஆரம்பக் கட்டத்திலே ஏலச்செடிகளையே அழித்துவிடும் சக்தி கொண்ட இப்புழுக்கள் ஏப்ரல் கெடுவில் முதற் பருவமழை ஆரம்பமானவுடன் வெளிக் கிளம்பி 7, 8 மாதங்களே உயிர் வாழும்.

ஆகவே, மேற்கண்ட அந்துப்பூச்சி இனங்களின் முட்டைப் புழுக்களைத் தடுத்துக் கட்டுப்படுத்த, இளமை மிக்க ஏலச் செடிகளின் அடிப்பகுதிகளிலே வீரியம் மிகுந்த பி. எச். சி. மருந்துக் கலவையை 2% அளவிலும், ஆல்ட்ரின் அல்லது, க்ளோர்டென் பூச்சி மருந்துச் சேர்க்கையை 1% விதத்திலும் தெளிப்பது அவசியம். நான்கு வாரங்கள் கழிந்த பிற்பாடும் மேற்கண்ட தொற்று நோய்ப் பூச்சிகளின் நடமாட்டம் தோட்டப் பண்ணைகளில் தென்படுமேயானால், மேற்கண்ட கருத்துக் கலவைகளை மேற்சொன்ன அளவு விகிதத்தில் மறுமுறையும் தெளிக்கலாம்!


அடுத்த ரகம் - கம்பளிப்புழுக்கள்

இவை செடிகளின் வெளிப்புறத்தண்டின் மையப் பகுதியைத் துளைத்துச் செடிகளைச் சத்து இழக்கச் செய்வதன்மூலம் பட்டுப் போய்விடவும் செய்கின்றன. கோடைக்காலத்தில், குறிப்பாக, டிசம்பர் முதல் மே வரை இவற்றின் பாடு கொண்டாட்டம்தான்! இவ்வகை நோயைக் கட்டுப்பாடு செய்ய, நோய்க்கு ஆளான செடிகளைச் சேகரம் செய்து பிடுங்கி எடுத்துத் தொலைவிலே அழித்து விடவேண்டும்.

அத்துடன், 1% அளவில் மானோக்ரொடோஃபஸ் அல்லது 1% அளவில் என்டோஸல்ஃபஸ் பூச்சிக்கொல்லி மருந்தை நோய் பீடிக்கப்பட்ட பகுதிகளில் மாதந்தோறும் தெளித்திடவேண்டும். நச்சுத் தன்மை படைத்த இப் புழுக்களுக்கு மங்களகரமான மஞ்சள் நிறத்தை ஆண்டவன் கொடுத்திருப்பதும் சிருஷ்டிப் புதிரில் சேர்த்திதானோ என்னவோ?

இந்தக் கம்பளிப்புழுக்களில் தண்டுகளை அறுக்கக் கூடிய ஒர் இனமும் உண்டு. இருண்ட பழுப்பு நிறம் பூண்ட இவை செடி இலைகளை உண்டு உயிர் வாழும் இயல்பு கொண்டவை. ராத்திரியில் மட்டுமே நடமாடும் விசித்திரச் சுபாவம் உடையவை. நிலத்து மண்ணில் முட்டைப்புழுக்களாக உருவாகும் இவற்றின் ஆயுட்காலம் வெறும் 17 நாட்கள்தாம்!'

இக்கம்பளிப் புழுக்களை உடனுக்குடன் பிடித்து நசுக்கி விட்டால், தீர்ந்தது கதை. தவிர, ஃபாஸ்லோன் வேதியல் மருந்துக் கலவையை 1% அளவில் நீரில் கலந்து தெளிக்கவும் செய்யலாம்.

வேறு சில சின்னஞ்சிறிய பூச்சி ரகங்கள் — பெயர் வைக்கப்படாத பூச்சிகள் — செடி இலைகளின் அடிப்புறங்களில் ஒளிந்திருந்து இலைகளின் நரம்புகளைக் கிழித்து, அவற்றிலிருந்து கசிந்து சொட்டும் சாற்றை உறிஞ்சிக் குடிக்கும். நாற்றுப் பண்ணைகளில் இவை பரவலாகவே காணப்படும்.

'கெல்தான்' என்ற மருந்தை 1% விகிதாசாரத்தில் கலக்கிப் பயன்படுத்துவது மரபு. நூற்புழுக்கள்!

அப்பால், 'நெமாடோட்' எனப்படும் நூற்புழுக்கள் சாகுபடித் தோட்டங்களிலே வெகு சகஜமாகவே தென்படும். இவற்றின் படையெடுப்பு வேர் முடிச்சுக்களில் ஆரம்பிக்கப்படும்.

நோய் பீடிக்கப்பட்டால், செடிகளுக்கு வளம் ஊட்டும் வேர்களில் வீக்கம் உண்டாகும்; பின், அங்கே, கரணைகள் தோன்றும். தூரடிப் பயிர்கள் - முளைகள் அதிகமாகும். செடிகளின் வளர்ச்சி குன்றும். ஆகவே, அவை குட்டையாகி விடவும் நேரும். இலை முனைகளிலும் ஓரங்களிலும் மஞ்சள் நிறம் படர்ந்து, பிறகு, அவை உலரவும், உதிரவும் செய்யும்.

நூற்புழுக்களைத் தோன்றச் செய்யாமல் இருக்க, பாத்திகளில் விதைப்பு நடத்துவதற்கு முந்தியோ, அல்லது, நாற்றங்காலில் நடவு செய்வதற்கு முன்பாகவோ ஆறு சதுர மீட்டருக்கு 140 மில்லி என்னும் அளவில் 'மெதாம். சோடியம்’ என்னும்படியான உப்பின் மூலத் தனிமத்தைக் கொண்டு 2, 3 வாரங்களுக்குக் குறையாமல் புகையூட்டலாம். இது முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் அமையும். புகையூட்ட வாய்ப்பு வசதி இல்லாமல், போனால், 'டாமிக் 10 ஜி' என்னும் மருந்தை சிகிச்சை முறை விதிகளின் பிரகாரம் ஹெக்டருக்கு 5 கிலோ விதம் துரவலாம். மேலும், வேப்பம்புண்ணாக்கு போன்ற உயிர் இயக்க விளைவு சார்ந்த இயற்கை உரங்களின் நச்சுத்தனம் நூற்புழுக்களைக் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பி, விடும்!

'த்ரிப்ஸ்' பூச்சி இனம்

இந்திய மண்ணுக்கே உரியதான ஏலக்காய்ச் செடியினின்றும் தோன்றுகின்ற ஏலக்காய்க்கு உரித்தான கொடிய நோய்க்கீடங்களில், த்ரிப்ஸ் (Thrips) என்னும், சாறு உறிஞ்சிப் புழுப்பூச்சிகள் மிகப் பயங்கரமானவை. செடிகளைத் தாக்கி, மகசூலையும் பாதித்து ஏலச் சாகுபடியையே அச்சுறுத்தும் இவை இலைத் தொகுதிகளின் பரப்புக்களில் அவற்றின் மேலுறைப் பகுதிகளில் உயிர் வாழ்ந்து, செடிகளிலே பொதிந்திருக்கும் சத்து நீரை உறிஞ்சி உண்ணும் சக்தி கொண்டு விளங்கும். நீண்ட வடிவ அமைப்புடன் சாம்பல் பழுப்பாகவும் வெளிர் மஞ்சளாகவும் வெகு நுட்பமாகவே காட்சியளிக்கும் இவை 27 - 30 நாட்கள் மட்டிலுமே மண்ணில் உயிர் தறிக்க முடியும். சொறிப்பேன் இனத்தைச் சார்ந்த இவை ஏலக்காய் விதை உறைகளின் மேற்புற இழைமங்களைக் கீறிக்கிழித்து, அவற்றின் ரசத்தை லாவகமாக உறிஞ்சிச் சுவைத்துக் குடித்து விடுவதால், வித்துறைகளின் மேற்பகுதிகளில் தழும்புகள் உண்டாகின்றன; அவை அசல் சொறிசிரங்குகள் மாதிரியே உருவாகும். ஏலக்காய்களின் அமைப்பு அலங்கோலமாக உருமாறும். நெற்றுகளிலுள்ள விதைகளின் சத்து உறிஞ்சப்பட்டு விடுவதால், அவற்றிற்கு முளைவிடும் திறனும் குறைய நேரும். பூக்காம்புகளைத் தாக்கும்போது, அவை உதிர்ந்து விழவும் ஏதுவாகிறது. த்ரிப்ஸ் பூச்சிகள் உண்டுபண்ணும் சேதம் 80 - 90 சதவீதமாகவும் உயரலாம், டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இவை திரள் திரளாகத் தோன்றும்.

சாறு உறிஞ்சிப் பூச்சிப் புழுக்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், 'ஏலாக்ஸ்-க்வினால்ஃபஸ்' மருந்தை ஆற்றல் மிக்கதாக 0.05 சதவீத அளவில் கலவை செய்து தெளிக்க வேண்டும். 'ஃபான்டல்' மற்றும் 'ஸெவின்' வகைகளும் சாரம் மிகுந்தவைதாம்.

பூச்சி நாசினி ரசாயன மருந்துகளை பூங்கொத்துக்கள், செடித் தொகுதிகளின் கீழ்ப்பாகங்கள் ஆகியவற்றில் கவனத்துடன் தெளிப்பது அவசியம். தூள்வடிவிலான பூச்சி நோய் மருந்தையும் ஹெக்டருக்கு 25 கிலோ அளவில் தூவி விடலாம்.

நோய்ப் பராமரிப்பில் அக்கறை கூடினால், 'த்ரிப்ஸ்’ பூச்சிகளின் நடமாட்டம் குறையும்!


ரோமக் கம்பளிப் புழுக்கள்!

'ரோமக் கம்பளிப் புழுக்கள்', பற்பல ஆண்டுகளுக்கு ஒரு தடவை, ஏராளமாகத் தோன்றும் சித்திர விசித்திரப் பழக்கம் உடையவை. கூட்டம் கூட்டமாகக் கூடிவாழும் இயல்பும் இவற்றுக்கு உண்டு. நிழல் தரும் மரங்களின் அடிப்பகுதிகளில் கும்பல் கும்பலாகத் தோன்றி, பின்பு அவை ஏலச் செடிகளுக்குத் தாவுவது வழக்கம். இலைகள் தாம் உணவு. ஆகவேதான், நோய்க்கு வசப்படும் இலைகள் மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளாக்வே அழிந்து சேதம் அடைகின்றன.

இவ்வகைக் கம்பளிப் புழுக்களைச் சாகசமாகவும் சாமர்த்தியமாகவும் பிடித்து நசுக்கிவிடுவது சுலபமான தடுப்பு முறையாக அமையலாம்.

'மெதில் பராதியான்' அல்லது,' மனோக்ரோ டோஃபஸ்' வேதியல் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை 1 % அளவில் அடிமரங்களின், அதாவது நிழல் மரங்களின் அடியிலுள்ள கீழ்ப்பகுதிகளில், மந்தை மந்தையாகக் கூடியுள்ள பகுதிகளில் தெளித்தால், அவை அங்கேயே இயற்கை எய்தும்.


கொம்புத் துளைப்பான் பூச்சிகள்!

இளங் கொம்புத் துளைப்பான் பூச்சி, மற்றும் வித்துறைத் துளைப்பான் பூச்சிகளாலும் நாற்றங்கால் செடிகளுக்குப் பங்கமும் பாதகமும் ஏற்படும். செடிகளின் வெளிப்புறத் தண்டுகளைத் துளைத்து ஊடுருவிச் செடிகளை முழுமையாகவே அழித்துவிடும் இயல்பு கொண்டவை முதல்வகைத் துளைப்பான் பூச்சிகள். இரண்டாம் ரகத் துளைப்பான் பூச்சிகள் விதை உறைகளைத் துளைத்து, உள்ளே அடங்கியிருக்கும் விதை மணிகளைப் புசித்து உயிர் வாழும். இந்நிலையில், மேற்கண்ட வித்துறைகளில் சாஸ்திரத்துக்குக் கூட ஒருமணி விதையும் மிஞ்சாது!

இருவகைத் துளைப்பான் பூச்சிகள் தாக்கிய செடிகளைத் துாருடன் பெயர்த்து எடுத்து அழித்து விடுவது நல்லது.

தடுப்பாற்றல் முறையின் கீழ், 'குவினால் ஃபாஸ்எகாலஸ்' மருந்தை 1% அளவில் மாதாந்தர இடைவெளிகளில் தெளித்தல் வேண்டும்.

இந்தத் துளைப்பான் பூச்சிகள் பலவகையான உணவுகளைத் தின்னும் பழக்கம் உடையவை. ஆதலால், ஏலத் தோட்டங்களில் ஏலச்செடி சார்ந்த இஞ்சி, மஞ்சள் போன்ற செடிகள் வளர்ந்திருந்தால், அவற்றையும் அப் புறப்படுத்திவிட்டால், பூச்சிகளின் தொகை கணிசமாகக் குறையவும் நியாயம் உண்டு.

துளைக்கும் வண்டுகள்

'துளைக்கும் வண்டுகள்' பிறிதொரு ரகம், நீள் உருளை வடிவு: பழுப்பு நிறம்: உடம்பு பூராவும் ரோமக்காடு. இவற்றிற்கும் ஏலவிதைக் காய்கள் என்றால் வெகுபிரியம். 'ரோகர்' போன்ற மருந்து இவற்றையும் கட்டுப்படுத்தும்.

'வெள்ளை ஈக்கள்' என்று ஒரு புதியவகை நச்சுப் பூச்சியும் தற்போது புதிதாகத் தோட்டப்புறங்களில் பதிவாகியிருக்கிறது. இலைகளைத் தின்று வாழக்கூடிய இவை வறட்சிப் பருவங்களில் செழிப்போடு நடமாடும். டெமக்ரான் பூச்சிநாசினியை 0.05% என்னும் வீத அளவில் பயன்படுத்துவதால், நோய் கட்டுப்பட்டுப் பயன் கிட்டும் மேலும், அடிநிலத் தண்டுகளைத் தாக்கும் அந்துப் பூச்சிகள், வேர்த்துளைப்பான் கிருமிகள் மற்றும் கம்பளிப் புழுக்களும் ஏலச் செடிகளின் நாசத்தில் பங்கு பற்றும் .

'பி.எச் சி.' மருந்தை 0.2 % அளவிலோ, அல்லது, 'ஆல்ட்ரின்' கலவையை 0.1 % வீதத்திலோ பிரயோகம் செய்யலாம்.


செடிப் பேன்கள்!

செடிப்பேன்கள் (Apids) என்னும் தொற்று நோய் துண்மங்கள் செடிகளின் ஜீவரசத்தைக் குடித்து சேதப்படுத்தும். 'கட்டே' நோய்க்கு இவைதாம் மூல ஆதாரம், என்பது நினைவிற்குரிய எச்சரிக்கைக் குறிப்பு ஆகும். பரிந்துரைக்கப்பட்ட 'டிமிதொட்டே-ரோகார் போன்ற முறையான பூச்சி மருந்தை 0.05 சதவீத அளவில் கலந்து தெளிப்பது அவசியம்.

மிகமிக நுட்பமான நூற்புழு இனத்தைச் சார்ந்த புதிய வகை நுண்கிருமிகளுக்கும் ஏலச் செடிகளை அழுகச்செய்து நாசப்படுத்துவதில் பெருத்த பங்கு கிடைக்கும். ஹெக்டருக்கு 10 கிலோ என்னும் வீத அளவில் 'டெமிக் 10 ஜி' என்னும் கிருமிக் கொல்லி ரசாயன மருந்துத்துளைச் செடிகளின் அடி வேர்ப்புறங்களில் துரவி, இந்த நச்சுப் புழுக்களை நாசப்படுத்திவிடலாம்!

இப்படிப் பல்வேறு நச்சுப்பூச்சி மற்றும் புழுக்கள் ஏலத் தோட்டப் பண்ணைகளை பல்வேறு காலங்களில் பல்வேறு நிலைகளில் சேதப்படுத்தி வருகின்றன. -

அறிவியல் பூர்வமான விஞ்ஞான முறைகள் மேற் கண்ட நோய்களைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்படுகின்றன. அந்த முறைகளைப் பின்பற்றி நச்சு நோய்களை அடக்கி ஒடுக்குவதிலும் ஏல விவசாயிகள் அக்கறையுடன் செயற்படவேண்டும்!