ஏலக்காய்/நச்சுநோய்ப் பூச்சி நோய்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நச்சுநோய்ப் பூச்சி நோய்கள்!


நச்சு நோய்ப் பூச்சிகளைத் தவிர, நச்சுப் பூச்சி நோய்களும் ஏலக்காயைச் சோதிக்கும்! ஏலக்காய், சோதிப்புக்கு உள்ளானால், உற்பத்தி சோதிக்கப்படுவது இயற்கை. உற்பத்தி, சோதனைக்கு இலக்காகும் பட்சத்தில், நாட்டின் தேசிய வருமானமும் சோதனையின் உயிர்க்கழுவில் ஊசலாடாமல் தப்புவது இல்லை தானே?

ஆதலால்:

ஏலச் சாகுபடியின் ஒழுங்குக் கட்டுப்பாடுகளில், நச்சுப் பூச்சி நோய்களின் தடுப்புச் செயல்வினைகள் கண்ணும் கருத்துமாக மதிக்கப்படுகின்றன.


ஈரடி நோய்

விதை விதைத்து. நாற்றுப் பறித்து, இரு நிலைப்பட்ட நாற்றுப் பண்ணைகளிலே ஏலச்செடிகள் வளர்கின்ற போதும், பின்னர் அவை தாய்வயலுக்கு மாற்றப்பட்டு மறுநடவு செய்யப்பட்டு வளர்ச்சி அடைகின்றபொழுதும் இந்த நோய் மழைக் காலத்திலேயே பரவும் தன்மை உடையது. போதுமானதும் தேவையானதுமான தண்ணிர் வடிகால் வசதிகள் இல்லாவிட்டாலும், நாற்றங்கால்களிலே நாற்றுக்கள் விவசாயச் சட்டத்தை மீறி கும்பல் கும்பலாக நடப்பட்டாலும், மண்ணின் பரப்பில் ஈரம் அத்துமீறித் தங்கவும் தேங்கவும் நேருவதாலும், ஈரடி நோய் உண்டாகும்.

'பிதியம்' என்னும் துணுக்கமான பீடை நோய்க் கிருமிகளால் பூஞ்சண் நோயின் சார்பில் தோன்றும் இந்நோயால் தாக்கப்படும்போது, தண்டும் வேரும் சந்திக்கும் செடிப்பகுதிதான் முதன் முதலில் பாதிக்கப்படும். உடன், இலைகள் 'சோகை' பிடித்த பாவனையில் மஞ்சள் பூத்து, நாற்றுக்களும் சரி, இளஞ்செடிகளும் சரி உணங்கி - வதங்கி விடும். வேரும் தண்டும் கூடும் பகுதியிலுள்ள 'திசுக்கள்' — நரம்புகள் மற்றும் அடிநில வேர்த்தண்டும் அழுகிவிடவே, நாற்றுக்கள் உயிர் இழந்து பயனற்றுப் போய்விடும்.

ஆகவே, வடிகால் முறை செம்மைப் படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகிறது. பாத்திகளிலே விதைகள் நெருக்கம் இல்லாமல், இடைவெளிகளுடன் விதைக்கப்பட வேண்டும். அப்போதுதான், நாற்றுக்கள் கலகலப்பாக வளரமுடியும். மழைப்பருவத்தில் தாற்றுப் பண்ணைப்படுகைகளிலே ஒருசதவீத அளவிற்கு 'போர்டோ' கலவை மருந்தைத் தெளிக்கலாம்; அல்லது, அக்கலவையை ஊற்றியும் வைக்கலாம். இத்தகைய கட்டுப்பாட்டு முறைக்கு இணங்காமல் ஈரடி நோய் தீவிரம் அடைந்தால், நோய்வாய்ப்பட்ட நாற்றுக்களை - அல்லது இளஞ் செடிகளை வேரோடு பிடுங்கி எட்டத்தில் வீசி எறிந்து விடலாம். நோய்த்தடம் காணப்படும் இடங்களில் பூஞ்சணக் காளான் கொல்லி வேதியியல் கலவை மருந்தையும் உடன் தெளிப்பதும் விவேகமான காரியமாகவே அமையக்கூடும்.


இலைப்புள்ளி நோய்

மூலகாரணமாக 'ஃபிலோஸ்டிக்டா—எலெட்டேரியா சவுத்' என்ற விசித்திரப் பீடைக் கிருமிகள் விளங்குகின்றன. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் நாற்றுக்கள் கேடு அடையும். ஏப்ரலில் முதல் கோடைமழை பெய்ததும் தோன்றும் இவ்வியாதி, ஜூன் - ஜூலையில் உச்சம் அடையும். நோய்க்கான அடையாளங்களாக, தண்ணிரில் நனைந்து ஊறிய மாதிரி இலைகளிலே புள்ளிகள் சிறுகச் சிறுகத் தோன்றும்; பின்னர், இவை படிப்படியாகப் பெரிதாகி, இறுதியில் ஒட்டுப் போட்ட பாவனையில் அலங்கோலமாக அழுகி விடும். புள்ளிகள் உருவான பகுதிகள் அப்புறம் துவாரங்களாக மாறி விடவும் நேரும். கடைசியில், அந்த இலைகள் உதிர வேண்டியதுதானே?

'காஃப்டஃபோல் - டிஃபால்டன்' என்ற இரசாயன முறை மருந்துக் கலவையை ஜூன் மாதத்திலிருந்து மாதம் இரண்டுதடவைகளாகத் தொடர்ந்து தெளித்தால், இலைப் புள்ளி கட்டுப்படும்; கட்டுப்படுத்தப்படும்.


கட்டே நோய்

இந்திய நாட்டில், ஏலம் விளைகின்ற பெரும்பாலான விவசாயத் தோட்டப் பண்ணைகளிலே செடிகளைத் தொற்றிப்பற்றும் நச்சுத்தன்மை கொண்ட செடிப்பேன்களால் பரவக்கூடிய 'கட்டே' எனப்படும் இந்த நச்சு நோய் மிகவும் பயங்கரமானது மட்டுமல்ல, மிகவும் கொடியதும் கூட! – சாகுபடிப் பக்கங்கள் எல்லாவற்றிலுமே பரவலாகவே வியாபிக்கும் குணம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஏலச்செடிகள், வயதின் வளர்ச்சியை அடைகின்ற எல்லாக் கட்டங்களிலுமே அவை 'கட்டே' நோயால் பீடிக்கப்படும். தளிர் இலைகளின் நடுநரம்பிலிருந்து ஓரங்கள் வரை, மெலிந்த - வெளுத்த பச்சை நிறக் கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாகவும் வரிவரியாகவும் இந்நோய் அடையாளமிட்டுத் தென்படும். நோய் முற்றினால், வளர்ந்து முதிர்ந்த இலைகளின் மேலே பளிங்கு போன்ற பல வண்ணப் பட்டைகள் உருவாகிப் பரவும். இலை உறைகளும் வெளித் தண்டுகளும் இந்நோய்க்குத் தப்பமுடியாது. ஒரு செடியில் பற்றும் இவ்வகை நோய். மற்றச் செடிகள் எல்லாவற்றையும் ஒழுங்காகவும் முறையாகவும் தொற்றும். கண்டிப்பு மிகுந்த 'கட்டே' நோயின் கண்பட்டால் போதும்; செடிகள் வளர்ச்சி குன்றிச் சிறுத்து விடும்! — பாவம்!

நாற்றுக்கள் பண்ணைகளில் தவழ்ந்து விளையாடும் பச்சிளங் குழந்தைகளாக வளர்கின்ற பருவத்திலோ, அல்லது, வயலில் நடவு செய்யப்பட்டுப் பிள்ளைக்கனியமுதாக வளர்ச்சியடைகின்ற முதலாவது ஆண்டுக்காலத்திலோ ஏலச்செடிகளை 'கட்டே நோய்' (Katte Disease) பீடித்துப் பாதிக்கும் பட்சத்தில், அவை பலன் எதையும் தரவே தராது! ஒரு சில ஆண்டுகள் வளர்ந்து 'பருவம்' அடைந்து முதிர்ந்த நிலையில் நோய் பற்றினால், குருத்துக்கள் ஒன்றிரண்டு மட்டுமே தோன்றுவதுடன், அவை சிறுமை அடைய நேர்வதால், பெருமை தரக்கூடிய வித்துறைகள் வெகு சொற்பமாகவே தோன்றும். நோயின் விளைவாக, விளைச்சலில் உண்டாகும் நஷ்டம் முதல் ஆண்டில் 10 சதவீதம் முதல் 67 சதவீதம் வரையிலும், இரண்டாம் ஆண்டில் 25 முதல் 90 சதவீதம் வரையிலும், மூன்றாவ்து ஆண்டில் 32 முதல் 97 சதவிகிதம் வரையிலும் கூட வேறுபடுவதும் உண்மை நடப்பு!

ஆகவே, சம்பந்தம் கொண்ட முதல் செடிப்பேன் இனம் காணப்பட்ட மறுவினாடியே, அந்நோய்க்குக் கண்ணுக்குப் புலப்படாமலே இலக்காகிவிடும். செடிகளை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஏனென்றால், இந்நோய் ஒரு சில நிமிஷங்களுக்குள்ளாகவே ஜெட் விமானமாக விரைந்து பறந்து நிலம் பூராவிலுமே பரவிவிடும்!

இவ்வளவு விஷத்தன்மை படைத்திட்ட செடிப்பேன்களால் பரவும் கட்டே நோய்க்கான அறிகுறிகள் காணப்படும் செடிகளைக் கண்டறிந்து அவற்றின்மீது செறிவு மிக்க 'டிமதொட்ரோகர்' பூச்சி மருந்தை 0.05% அளவில் தண்ணிரில் கலந்து கரைத்துத் தெளிப்பது சிலாக்கியம். மருந்துத் தெளிப்பு முடிந்த மூன்று தினங்கள் கழிந்ததும், நோய்ச் செடிகளை வேரோடு எடுத்து அப்புறப்படுத்தி எரித்து விடுவதும் நல்லது. ஏலச்செடிகளின் மரபு வழிப் பட்ட துணைச் செடிகள் மற்றும் ஆதாரச் செடிகள் தோன்றியிருந்தால் அவற்றையும் நோய் நுண்மங்கள் விட்டு வைப்பது கிடையாது; ஆதலால், அவற்றையும் வயல்களில் விட்டு வைப்பது தப்பு!

'கட்டே' நோயின் வாடையே படாத ஆரோக்கியமான சாகுபடிப் புறங்களில் கண்காணிப்போடு வளர்ந்து முதிர்கின்ற நல்ல ஏலச்செடிகளினின்றும் சேகரம் செய்யப்படும் விதைகள்தாம் ஆரோக்கியமான நடவுச் சாதனமாகப் பயன்படவும், பயன்தரவும் முடியும்!


அழுகல் கோய்

பூஞ்சணநோய்ப் பட்டியலில் இடம்பெறும் அழுகல் நோய் கேரள மண்ணின் மலைப்புறங்களில் கூடுதலாகவே ஆர்ப்பாட்டமும் அட்டூழியமும் செய்யும், 'பிதியம்' நோய் நுண்மங்களின் ரத்தப்பந்தம் கொண்டவை; ஜூலை பிறந்துவிட்டால், இந்நோயும் பிறந்துவிடும். நவம்பர்டிசம்பர் வரை நீடிக்குமாம்! இளம் வித்துறைகள் மீது இந்தோய்க்குக் காதலோ, காமமோ கூடுதல். ஆகவே தான், அவற்றிலே நைவுப்புண்கள் தாஜ்மகால்களாக உருவாகின்றன. தண்ணிரில் ஊறவைத்தது போலத் தோன்றும் இந்த நோய்க் கொப்புளங்கள் பெரிதாகும் பொழுது, மேற்கண்ட வித்துறைகள் பூச்சரக்காம்புகளிலிருந்து உதிர்ந்து விழுந்துவிடும். பூங்கொத்துக்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதிகளைத் தொற்றிப் பரவும் நோய் முடிந்த முடிவில் அச்செடிகளையே அழித்துவிடும்! அழுகல் நோய்க்கும் 'போர்டோ' மருந்துக்கலவை கண் கண்ட - கைகண்ட தடுப்பு மருந்தாக விளங்கும்; நோயும் கட்டுப்படும். மே - ஜூன் காலப்பிரிவில் தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கியவுடன், களைஎடுத்தல் மற்றும் 'கவாத்து எடுத்தல்" எனப்படும் துப்புரவுப் பணிகள் நடந்து முடிந்த பிறகு, செடித்தொகுதிகளைச் சுற்றி போர்டோ கலவை மருந்தை ஊற்றி ஊறவைப்பது உபயோகமான நடைமுறைச் செயற்பணியாகவே அமையலாம். மழை நின்று, ஆகஸ்ட் ஆரம்பத்தில் இரண்டாம் தரமாக மருந்து தெளித்தும் நோய் கட்டுக்குள் அடங்காமல் திமிறினால், செப்டம்பர் கெடுவில் மூன்றாம் முறையாகவும் மேற்படி மருந்துக் கலவையின் உதவியை நாடுவதில் தவறு ஏதும் இல்லைதான்!

அப்பால், செடித்தொகுதி அழுகல் மற்றும் அடிநில வேர்த்தண்டு அழுகல் நோய்கள்கூட, பூஞ்சண நோயைச் சார்ந்தவைதான்; சேர்ந்தவைதாம்! இந்நோய்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியாக இலைகளே விளங்கும், அவை வெளுத்து, ரத்தச்சோகை பிடித்த பாங்கிலே மஞ்சள் பூத்துவிடும். இலைகள் உதிர்ந்தபின், செடிகளின் அடித்தளம், வேர்த்தண்டோடு இணைந்த முனைப்பாகம் எல்லாமே நோயின் ஆக்கிரமிப்புக் காரணமாகச் சோர்ந்து, வலுவிழந்து போய்விடுகின்றன.

நாற்றங்காலிலுள்ள பாத்திகளில் 1% அளவில் 'போர்டோ' கலவை தெளிக்கப்படல் வேண்டும். வயலிலுள்ள செடித் தொகுதிகளில் எரியகக்காடி உப்பு வகைகளோடு சுண்ணாம்பையும் கலந்து பயன்படுத்தலாம்!


செந்தாள் நோய்

அடுத்ததான 'செந்தாள் நோய்' கூட, செடி இலைகளில்தான் முதலில் முற்றுகை செய்யும். இங்கேயும், நைவுப்புண்கள்தான் குறியீடு, பாக்டீரியா என்று சொல்லப்படும் நோய் நுண்மங்கள்தாம் இந்நோய்க்குத் தாய் தந்தையர். இலைகளைத் தொடர்ந்து, பூச்சரங்களும், பின்னே வித்துறைகளும் பாதிக்கப்படும்; நோய்க்குப் பலியான தோட்டம், தீக்கு இரையான மாதிரி கருகிவிடவும் நேரும்.

மாமூலாகப் பயன்படுத்தும் தடுப்பு மருந்துகள்தான் இந்நோய்க்கும் தீர்வு சொல்லும். மேலும், ஏலத் தோட்டங்களில் தேவையான நிழல் கிடைக்க செயல் ரீதியில் வழிசெய்தாலே போதும்; நல்ல வழி பிறந்துவிடும்!


இலைக்கொப்புள நோய்!

கடைசியாக, இலைக்கொப்புள நோய் என்று ஒரு நோயும் ஏலக்காயைத் தாக்கவல்லது. இது புதிதான நோய்; சமீபத்தில்தான் அறிமுகம் ஆனது. இந்நோய் பரவினால், இலைகளின் புறப்பகுதிகளில் கொப்புளங்கள் தோன்றும். இலைகள் உருமாறும்; பின் அழுகும், ஈரப் பதம் கூடினால், நோய்த் தாக்குதல் கூடும், 'போர்டோ' கலவைதான் (Bordeawy Mixture) இந்நோயையும் தடுத்துக் கட்டுப்படுத்தி அடக்கும்.

ஏலச் சாகுபடியைச் சீரழித்துச் சோதிக்கும் பயங்கரமான நச்சு நோய்ப் பூச்சி புழுக்கள் மற்றும் தொற்றுநோய்களைப் பொறுத்தமட்டிலே, வருமுன் காப்பதும் வந்தபின் காப்பதும் இன்றியமையாத நடைமுறைச் செயற்பணிகளாகவே அமைய வேண்டும்!


ஏலக்காயின் தோழர்கள் தேனீக்கள்!

ஏலக்காய்ச் செடி தன்னைச் சுற்றிலும் நுணுக்கமான வேறுபாடுகள் அல்லது, மாறுபாடுகள் ஏற்பட்டாலுங்கூட, அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்படும் இயல்பைக் கொண்டது. ஆனாலும் இந்த ஏலக்காய்ச் செடி இன்னொரு வழியிலும் விந்தைமிகு செடியாகவே இயற்கையின் விதிவசத்தால் அமைந்துவிட்டது! அதாவது, ஏலக்காய்ப் பூக்களில் இயல்பிலேயே சுயமகரந்தச் சேர்க்கை ஏற்படுவதற்கான பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. ஆதலால், அது கலப்பு மகரந்தச் சேர்க்கைச் சார்புடைய செடியாகவும் விளங்கவேண்டியதாயிற்று.

ஏலக்காய்ப் பூக்களில் மகரந்தச் சேர்க்கையை உண்டு பண்ணும் தேனிக்கள் ஏலக்காயின் ஆப்த நண்பர்களாகவே செயலாற்றும். இதன் விளைவாக, ஏலச்செடிகளில் கூடுதல் அளவில் காய்கள் தோன்றவும், விளைச்சல் பெருகவும் ஏதுவாகிறது.

ஆகவே, ஒவ்வொரு ஏலச் சாகுபடிப் பகுதியிலும் குறைந்தது நான்கு தேன்கூடுகளையாவது அமைத்துச் சரி வரப் பராமரித்தால், ஏலக்காய் மகசூல் தனிப்பட்ட முறையில் உயர்வடையவும் கூடும்.

சாகுபடித் தோட்டங்களை அச்சுறுத்தும் விஷப் பூச்சிகள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுத்துக் கட்டுப்படுத்தப் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் போது, தேனிக்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏல விவசாயிகள் செயற்படவேண்டும். அப்போது தான் பிள்ளையார் பிடித்தால், அது பிள்ளையாராகவே அமைய முடியும்!

ஆகவே :

ஏலத் தோட்டப் பண்ணைகளில் தேனீக்களின் நடமாட்டம் மிகுந்திருக்கும் காலை நேரங்களை அந்தத் தேனிக்கான மகரந்தச் சேர்க்கை அலுவல் நேரமாக ஒதுக்கிவிட்டு, தேனிக்கள் தென்படாத மாலை வேளை களில் பூச்சி மருந்துகளை சீராகவும் மிதமாகவும் பயன் படுத்துவதிலும் ஏல விவசாயிகள் எச்சரிக்கையோடு நடந்து, கொள்வதும் நல்லது!

காலம் காலமாகவே வரலாற்றில் உயிர் வாழ்ந்து வரும் இந்திய நாடு, வாசனைத் திரவியங்களின் தாய் நிலமாக உலக அரங்கத்தில் விளங்கி வருகிறது. அதுபோலவே, அந்நாட்களில் அரண்மனைகளிலே விலை மதிப்புக் கொண்டனவாக மதிக்கப்பட்டு வந்த நவரத்தினங்களைப் போலவே, இந்திய நறுமணப் பொருட்களும் உயர்வோடும் உன்னதத்தோடும் கருதப்பட்டன! அவை, பலவிதமான உணவுகளின் பலவிதமான தயாரிப்புக்களிலும், மருந்துகளின் பக்குவங்களிலும் பயன்படுத்தப்பட்டுச் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் ஒன்று நிலவியதும் உண்மைதான்!

கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரள நாடுகளில் பரந்து விரிந்திருந்த மேற்குமலைத் தொடர்ச்சிகள், எழுபதுக்கும் அதிகமான வாசனைத் திரவியப் பொருட் களின் தாய்வீடாக அன்றும் இருந்தன; இன்றும் இருக்கின்றன.

மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, வாசனைப் பொருட்களின் வெளிநாட்டு வாணிபத்திலும் இந்திய நாடு முதன்மை பெற்றுத் திகழ்ந்தது! தவிரவும், ஐயாயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்பாகவே இந்திய நாட்டின் நறுமண விளைபொருட்கள் மத்தியக்கிழக்கு நாடுகளிலே புழங்கப்பட்டு வந்தன என்பதும் உண்மைதான்!

இந்தியா மேற்கொண்டிருந்த சர்வதேச வாணிபத்தில் அங்கம் வகித்த பல்வேறு வாசனைத் திரவியங்களுக்கு மத்தியில், வாசனைப் பொருட்களின் ராணியென மாட்சிமை பெற்றிருந்த ஏலக்காய்தான் முதன்மை, பெற்று விளங்கியது. இந்நிலையில், அரேபியக் கலா சாரத்தில் முக்கியமானதொரு பங்கைப் பெறத் தொடங்கிய ஏலக்காய், அரபு மக்களின் அன்றாட உணவுகளிலும் பழக்கவழக்கங்களிலும் இன்றியமையாப் பொருளாக ஆகி, அவர்களது சமுதாய அந்தஸ்தை நிர்ணயிக்கும் ஓர் உயிர்ப் பொருளாகவும் உயர்ந்துவிட்டது! ஆகவே, நறுமணப் பொருட்களின், குறிப்பாக, ஏலக்காயின் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுடன் முதன்முதலில் தொடர்பு கொண்ட பெருமையும் அரேபியர்களுக்கே கிடைத்தது. பின்னர், எகிப்தியர்கள் பின் தொடர்ந்தனர். அப்பால், எகிப்தின் மீது படையெடுத்து வென்றது ரோம். பின்பு, ரோம் நாட்டினர் ஏலக்காய் மற்றும் வாசனைத் திரவியங்களை வாணிபம் செய்திட இந்தியாவோடு தொடர்பு கொள்ளலாயினர்!