உள்ளடக்கத்துக்குச் செல்

அலிபாபா (2002)/திருடர்களின் சூழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து



3
திருடர்களின் சூழ்ச்சிகள்

வனத்திலே திருடர்கள் தங்கள் வழக்கம் போல் ஒரு நாள் குகைக்குள்ளே சென்றிருக்கையில், அங்கே இவர்கள் மாட்டி வைத்திருந்த காஸிமின் உடலைக் காணாமல் ஆச்சரியடைந்தனர். ஓர் அங்கம், ஓர் எலும்பு கூட இல்லாமல், எல்லா அங்கங்களும் எப்படி மாயமாய் மறைந்தன என்று அவர்கள் கூடி யோசித்தனர்.


இறந்தவனுக்குப் பாறையைத் திறக்கும் மந்திரம் தெரிந்திருந்தது; இல்லாவிட்டால், அவன் குகைக்குள் நுழைந்திருக்கவே முடியாது. இப்பொழுது அவனுடைய உடலை வேறு ஒருவன் எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். ஆகவே, இறந்தவனைத் தவிர, மற்றொருவனுக்கும் இரகசிய மந்திரம் தெரிந்திருந்தது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். காஸிமின் உடலை எடுத்துச் சென்றவன் ஏராளமான தங்க நாணயங்களையும் எடுத்துச் சென்றிருந்தான் என்பதையும் அவர்கள் கவனித்துக் கொண்டனர். திருடர் தலைவன், இத்தனைக்கும் காரணமானவனை உடனே கண்டு பிடித்துப் பழி வாங்காமல் விட்டிருந்தால், அவன் மேற்கொண்டும் அடிக்கடி வந்து பொக்கிஷத்தை அள்ளிக் கொண்டு போய் விடுவான் என்றும், பல தலைமுறைகளாகச் சேர்த்து வைத்திருந்த  தங்கள் செல்வம் முழுவதும் அதனால் கரைந்து போய்விடும் என்றும் எடுத்துக்காட்டிப் பேசினான். திருடர்களிலே ஒருவன், தான் நகரிலே சென்று, ஒரு வணிகனைப்போல நடித்து, தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும் விசாரித்து, தங்களுக்குத் துரோகம் இழைத்த வனைக் கண்டுபிடிப்பதாகக் கூறினான்: “நான் கண்டுபிடித்து வருகிறேன்; தவறினால் என் உயிரை இழக்கத் தயாராயிருக்கிறேன்!” என்று அவன் வீரமும் பேசினான். தலைவனும் அதற்கு இசைந்ததால், அத்திருடன், மாறுவேடம் பூண்டு, இரவு நேரத்தில் நகரத்திற்குச் சென்றான்.

மறுநாள் காலையில் நன்றாக விடியுமுன்பே அவன் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்; பெரும்பாலும் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு தையற்கடை மட்டும் திறந்திருப்பதைக் கண்டு, அவன் அதனுள் சென்று கவனித்தான். அது முஸ்தபாவின் கடை. அவன் அங்கே ஏதோ உடை ஒன்றைத் தைத்துக்கொண்டிருந்தான். திருடன் அவனைப் பார்த்து, “இந்த மங்கிய ஒளியில் தைப்பதற்கு உங்களுக்குக் கண் தெரிகிறதா?” என்று கேட்டான். உடனே முஸ்தபா, “என்னைப்பற்றி இந்த நகரம் முழுவதும் நன்கு அறியும். நீர் ஊருக்குப் புதிது போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படிக் கேட்கமாட்டீர்! எனக்கு வயது அதிகமான போதிலும் கண் பார்வை மிகவும் கூர்மையாகவே உள்ளது. நேற்றுக்கூட ஓர் இருட்டறையில் இருந்துகொண்டே, நான் ஒரு பிணத்தைத் தைத்துக் கொடுத்தேன்! என் கண் போகிற வழியிலே என் கையிலுள்ள ஊசியும் தவறாமல் செல்லும்! என்று பெருமையுடன் பேசினான். அதைக் கேட்ட திருடன், அந்த ஆசாமியிடமிருந்து மேலும் செய்திகளை அறிய முடியும் என்று கருதி, “நீங்கள் விளையாட்டாகப் பேசுகிறீர்கள் என்றே எண்ணுகிறேன். பினங்களுக்குப் போர்த்தும் துணிகள் தைப்பதே உங்கள் தொழில் என்று சொல்லுகிறீர்களா? துணிக்குப் பதிலாக, ஏதோ பிணத்தையே தைத்ததாகச் சொன்னீர்களே!” என்று கேட்டான்.

முஸ்தபா, “அதைப்பற்றி உமக்குச் சம்பந்தமில்லை. மேற்கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டா!” என்றான். அந்த நிமிடத்திலேயே திருடன் அவன் கையில் ஒரு தங்க நாணயத்தை எடுத்து வைத்தான். தங்கத்தால் ஆகாதது தரணியில் என்ன இருக்கிறது? மேஸ்திரியின் முகம் மலர்ந்தது. திருடன் துணிந்து பேசத் தொடங்கினான். “மேஸ்திரி யாரே! உங்களிடமிருந்து இரகசியம் எதையும் அறிந்துவிட நான் விரும்பவில்லை. ஆனால், நீங்கள் எந்த வீட்டிற்குச்சென்று தைத்திர்கள் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அந்த வீடு எங்கே இருக்கிறது என்று சொன்னால் போதும், அல்லது நீங்களே வந்து காட்டினாலும் நலம்!”

முஸ்தபா, பணத்தை ஆவலோடு சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு பேசலானான்: “எனக்கு அந்த வீடு தெரியாது. அந்த வீட்டிலிருந்த அடிமைப்பெண் ஒருத்தி  என்னை அழைத்துச் சென்றாள். இங்கிருந்து சிறிது துரம்வரை நான் கண்களைத் திறந்துகொண்டே சென்றேன். ஆனால், அங்கே ஓரிடத்தில் நிறுத்தி வைத்து, அவள் என் கண்களைக் கட்டிவிட்டாள். அந்த இடத்தை இப்பொழுதும் நான் காட்ட முடியும். அதற்குப் பின்னால் அவள் என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். குறித்த வீடு வந்ததும், என்னை உள்ளே அழைத்துப்போய், ஓர் இருட்டறையில், நான்கு துண்டுகளாகக் கிடந்த ஒரு பிரேதத்தை ஒன்றாகச் சேர்த்துத் தைக்கும்படி சொன்னாள். நான் அப்படியே செய்தேன். அத்துடன் சவத்தைப் போர்த்தும் கபனும் தைத்துக் கொடுத்தேன். அதன்பின், அவள் மறுபடி என் கண்களைக் கட்டி, முதலில் நின்ற இடம்வரை அப்படியே அழைத்துவந்த பிறகுதான் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டாள்!”

திருடன், “சரிதான்! முதலில் உங்களுடைய கண்களைக் கட்டிய இடத்திற்குப் போவோம். அங்கே நானும் உங்களுடைய கண்களைத் துணியால் கட்டி, உங்களை மெதுவாக அழைத்துப் போகிறேன். முன்னால் நடந்து சென்றதை நினைவில் வைத்துக்கொண்டு, குறித்த வீடு வந்துவிட்டதாக உங்களுக்குத் தோன்றும் இடத்தில் நடையை நிறுத்தி விடுங்கள்!” என்று சொல்லி, இரண்டாவது தங்க நாணயம் ஒன்றை அவன் கையிலே வைத்தான். உடனே, முஸ்தபா அவனுடன் கடையை விட்டு வெளியே சென்று, தன் கண்கள் கட்டப்பெற்ற இடத்தைக் காட்டினான். அங்கிருந்து திருடன் அவனுடைய

கண்களைத துணியால் மறைத்து அழைத்துச் சென்றான். முஸ்தபா அடிகளை எண்ணிக் கொண்டு நிதானமாக நடந்து சென்றான். திடீரென்று ஒரு வீட்டின் முன்பு அவன் நின்று விட்டான். “இதுவரைதான் நான் அவளுடன் வந்தேன்!” என்று அவன் திருடனிடம் கூறினான். அந்த வீடு காஸிமுடைய வீடு. அங்கேதான் இப்பொழுது அவனுடைய தம்பி அலிபாபா வசித்து வந்தான்.

அந்த வீட்டின் கதவில், திருடன் சுண்ணாம்பினால் அடையாளங்கள் செய்து விட்டு, முஸ்தபாவின் கண்களைத் திறந்து வைத்து, “இது யார் வீடு, தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு முஸ்தபா தனக்கு அந்தப் பகுதியில் அதிகப் பழக்கமில்லை என்று சொன்னான். மேற்கொண்டு 

அவனிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி எதுவுமில்லாததால், திருடன் அவனைத் தையற் கடையிலே கொண்டு விட்டு, அவனுக்குப் பல தடவைகள் நன்றி கூறி விட்டுச் சென்றான். காட்டிலே உள்ள தோழர்களுக்குத் தான் அதுவரை அறிந்த செய்தியைச் சொல்லுவதற்காக அவன் போய் விட்டான்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்குப் பின், மார்கியானா வீட்டு வாயிற் பக்கம் வந்து நிற்கையில், கதவின் வெளிப்பாகத்தில் சுண்ணாம்பினால் புதிதாக அடையாளங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்தாள். எவரோ பகைவர், பின்னால் அடையாளம் தெரிந்து கொண்டு வருவதற்காகச் சுண்ணாம்பினால் அப்படிக் குறிகள் போட்டிருக்க வேண்டும் என்று அவள் யூகித்துக் கொண்டாள். உடனே, அவளும் 

சுண்ணாம்புக் கட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்திலிருந்த எல்லா வீடுகளின் கதவுகளிலும் அதே மாதிரியான குறிகளைப் போட்டு விட்டாள்.

நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்ற திருடன், தலைவனிடமும், மற்றவர்களிடமும் தான் தெரிந்துகொண்ட செய்தியை அறிவித்தான். அவன் அடையாளம் செய்திருந்த வீட்டுக்கு எல்லோரும் இரவிலே செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப் பெற்றது. இரவிலே திருடர்கள், கூட்டம் கூட்டமாகப் பிரிந்து சென்று நகருக்குள்ளே சந்தித்துக் கொண்டனர். புலன் விசாரித்த திருடனுடைய கையைப் பிடித்துக் கொண்டு தலைவன் முன்னால் நடந்து சென்றான். மற்றவர்களும் தொடர்ந்து சென்றனர். திருடன் ஒரு வீட்டுக் கதவில் சுண்ணாம்புக் குறிகளைக் கண்டதும், அங்கே நின்று “இதுதான் அந்த வீடு!” என்று தலைவனிடம் கூறினான். தலைவன் பக்கத்திலிருந்த வேறு சில வீடுகளின் கதவுகளை உற்றுக் கவனித்தான். அவைகளிலும் ஒரே மாதிரியான சுண்ணாம்புக் குறிகள் காணப்பெற்றதால், அவன் திகைப்படைந்து, தோழனிடம் அதை தெரிவித்தான். தான் முன்பு போட்டிருந்த குறிகளே பல வீடுகளிலும் இருந்ததால், அவன் தான் பார்த்த வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, அவன் ஏதோ கோளாறு நேர்ந்திருக்க வேண்டும் என்று அஞ்சினான். தலைவன், மறுபடி எல்லோரையும் வனத்திலே குகைக்கு வந்து சேரும்படி சொல்லிவிட்டு, தானும் வேறு ஒரு வழியாகப் பயணமானான்.

குகையிலே கூடிய திருடர் கூட்டத்தில் முதலாவதாகப் புலன் விசாரிக்கத் சென்று தோல்வியடைந்த திருடனைக் காவலில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பெற்றது. அடுத்தாற்போல் நகருக்குள் சென்று விசாரித்துவர யார் தயார் என்று தலைவன் கேட்கையில், ஒருவன் முன் வந்தான். அவனைத் தலைவன் மிகவும் பாராட்டி, சில பரிசுகளும் அளித்து, வாழ்த்தி, அனுப்பி வைத்தான்.

அவனும் நகரில் முதன் முதலாகப் பாபா முஸ்தபாவையே சந்தித்து, அவனுக்குத் தங்க நாணயங்கள் கொடுத்து, அலிபாபா தங்கியிருந்த வீட்டைத் தெரிந்துகொண்டான். முதலாவது திருடன் செய்தது போலன்றி, அவன் கதவு நிலையில் சிவப்புக்காவியால் தெளிவான அடையாளம் செய்துவிட்டு, வனத்திற்குத் திரும்பினான். இரவில் முன்போலவே திருடர் அனைவரும் தலைவனுடன் வந்து அவ்வீட்டைத் தேடிப் பார்த்தனர். எல்லா வீடுகளின் நிலைகளிலும் சிவப்புக் குறிகள் இருந்தமையால் மீண்டும் அவர்கள் ஏமாற்றமடைந்து, திரும்பிச் சென்றனர். எல்லா வீடுகளுக்கும் சிவப்புக் குறிகள் அமைத்தது மார்கியானா தான் என்று சொல்லத் தேவையில்லை. மதிநுட்பம் வாய்ந்த அந்தப் பெண் முன்னதாகவே அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாள். திருடர் தலைவன் இரண்டாவது திருடனையும் சிறையில் வைத்தான்.