உள்ளடக்கத்துக்குச் செல்

எங்கே போகிறோம்/4. வளர்ச்சி-மாற்றம்

விக்கிமூலம் இலிருந்து

4. வளர்ச்சி-மாற்றம்


மனிதகுலத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்குரியது. மாற்றத்திற்குக் காரணம் வளர்ச்சி. வளர்ச்சிக்கு உந்துசக்தி-ஒன்று, காலத்தின் பரிணாம வளர்ச்சி. பிறிதொன்று மாற்றம். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண். எந்த ஒன்றும் தேங்கிவிட்டால் அழிந்து விடும், பயனற்றுப் போகும்.

நாள்தோறும் ஊற்றெடுக்கும் கிணறுகளின் தண்ணீரே பயன்படுகிறது. இடையீடில்லாது ஓடிக்கொண்டேயிருக்கிற ஆறே ஜீவநதி, மனிதகுலத்துக்குப்பயன்படுவது. புண்ணிய தீர்த்தங்களாகக்கூட இடையீடில்லாது ஓடிக் கொண்டேயிருக்கின்ற ஆறுகளே அங்கீகரிக்கப்படுகின்றன.

தேங்குவன எல்லாம் குட்டை. குட்டையில் கிடக்கும் தண்ணீர் பயன்படாது. பயன்படாதது மட்டுமின்றி நோயும் தரும். ஆதலால், மனிதகுலம் வளர்ச்சியடைய வேண்டும். வளர்ச்சி, மாற்றத்தை உருவாக்கும்.

மனிதகுலம், மாற்றங்களை விரும்பினால் வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை அவாவுதல் வேண்டும். இந்த உலகம் எப்படி இருந்தது என்று எவரும் கூறலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணுகின்ற, சொல்லுகின்ற, அமைக்கின்ற திசையில் மக்கள் செல்லவேண்டும்.

அறிவு தேக்கமடைந்து போனால், உலக வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். அறிவு வளரும் தன்மையது நாள்தோறும் அறிவை வளர்த்துக்கொள்ளும் சமுதாயத்தில்தான் வளர்ச்சிக்கு வழி உண்டு; வாயில்கள் உண்டு. மாற்றங்களும் ஏற்படும்.

வளரும் சமுதாயத்தில் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவதே புதுமை. புதுமை செயற்கையன்று. இயல்பாக வாழ்க்கைப் போக்கில்-பரிணாம வளர்ச்சியில் தோன்றும் புதுமைகள். விவாதங்களைக் கடந்தவை. “முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்” என்றார் மாணிக்கவாசகர்.

பின்னைப் புதுமை, இனி எதிர்வரும் புதுமை. நம்முடைய சமுதாயத்தில் புதுமையை வரவேற்கும் இயல்பில்லாதவர்கள் பல ஆயிரம் பேர்கள் உண்டு. அவர்களையும் கடந்துதான் புதுமை வளர்ந்து வருகிறது; இனியும் வளரும். ஆனாலும் நாட்டில் வளர்ச்சியும் மாற்றங்களும் குறைவு.

நாம் நாளை வாழ்வோம் என்ற நம்பிக்கைகூடப் பெறாதவர்களால் நிலையாமைத் தத்துவம் பிழைபட உணர்த்தப்பட்டுள்ளது. உலகத்துக்கும் உனக்கும் உள்ள உறவு நிலையில்லாதது. ஆயினும், உலகமும் உன்னுடைய வழி வழி தலைமுறைகளும் வாழப்போவது உறுதி.

ஆதலால், நமக்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி, எதிர்கால நம்பிக்கை வேண்டும். வளர்ச்சியுடன் கூடியமாறுதல் தேவை. சென்ற காலத்தைவிட எதிர்காலம் விழுமிய சிறப்புடையதாக இருக்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். “இனி எதிர்காலத்தின் சிறப்பும்” என்பார் சேக்கிழார். பாவேந்தன் பாரதிதாசனும், “புதியதோர் உலகம் செய்வோம்” என்றான்.

ஆதலால், இப்போது நாம் சென்று கொண்டிருக்கிற-நிறைவான வளர்ச்சியும். மாற்றமும் இல்லாத திசையில் தொடர்ந்து செல்லக்கூடாது. புறத்தோற்றத்தில் மட்டுமே: புதுமை காட்டும் போக்கும் அறவே கூடாது. மனிதனே மாறவேண்டும். மனிதகுலம் மாறவேண்டும். அன்றாடம், வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய திசையில் செல்ல வேண்டும்.

வளர்ச்சி-மாற்றம் என்றால் என்ன? மனிதனின் அறிவு வளரவேண்டும். வளர்ந்து வரும் உலகியலில், மானுடவியலில் எத்தனை எத்தனையோ அறைகூவல்கள் தோன்றுகின்றன. அவற்றைக் தாக்குப்பிடித்து நின்று போராடி முன்னேற வேண்டும்.

அறிவின் வளர்ச்சிக்குப் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். இலக்கியங்கள், புராணங்கள் மிகப் பழமையானவைகளைக் கற்கவேண்டும். அப்படிக் கற்பது. வாழ்நிலையின் அடித்தளத்தை வலுப்படுத்தும்-வேர்கள். மரத்தை வலுப்படுத்துவது போல!

அறிவியலில் புத்தம் புதிய நூல்களைக் கற்க வேண்டும். அறிவியல், அனுபவம் வளர வளர வளரும் தன்மையுடையது. அறிவியல் முற்றாக உலகியலை, உடலியலைச் சார்ந்தது. இந்த அறிவியல் உலகந்தழி இயது என்றுகூடக் கூறலாம்.

கலாச்சாரம், பண்பாடு முதலியன நாடுகள் தோறும் மாறும் இவை தலைமுறை தலைமுறையாக வருவன. இப்படி வழி வழி வரும் கலாச்சாரம், பண்பாடு ஆகியன வளரும் புதிய சமுதாயத்திற்கு மாறுபடாது. சென்ற கால வரலாற்றில் மாறுபட்டதில்லை.

ஒரு பழமை, புதுமையை ஈன்றுதர மறுக்குமாயின் அந்தப் பழமையில் ஏதோ குறையிருப்பதாகத்தான் பொருள். ஒரே வழி பழமைவாதிகள் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ளப் புதிய சிந்தனையை புதியவற்றை எதிர்ப்பார்கள்.

கிரேக்க ஞானி சாக்ரட்டிஸ், கலீலியோ, ஏசு பெருமான், அப்பரடிகள், வள்ளலார் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்றாகும். ஆனாலும் அவர்கள் கண்ட புதுமைதான் வென்றது.

அறிவு வளரும்போதே, ஆன்மாவும் ஒருங்கிணைந்து வளரவேண்டும். ஆன்மாவை வளர்த்துப் பேணிக்காக்கும் அறிவே, அறிவு. ஆன்மாவுக்குத் தொடர்பில்லாத அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்யாது; மாற்றங்களுக்கும் காரணமாக அமையாது.

சிந்தனையில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, அறிவிய லில் வளர்ச்சி, வாழ் நிலையில் வளர்ச்சி, சமூகத்தில் வளர்ச்சி இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் நிகழுமாயின் மாற்றங்கள் ஏற்படும்.

வளர்ச்சியும் மாற்றங்களுமே மனிதகுல மேம்பாட்டுக்கு உந்துசக்திகள். மனிதன் பழக்கங்களுக்கும் வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.

நாளும் மனிதன், புத்துயிர்ப்புப் பெறவேண்டும்; புது மனிதனாகப் பிறப்பெடுக்க வேண்டும். மனிதன் உழுத காலிலேயே உழுது கொண்டிருக்கும் வரை, நிலம் வளம் அடையாது.

அதுபோலவே படித்த சுலோகங்களையும் கோஷங்களையும் திரும்பத் திரும்பப் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி பாதிப்பதன் மூலம், மாற்றங்களும் ஏற்படாது.

அதனால், சாதி, சம்பிரதாய, மூடப் பழக்கங்களும் நிறைந்து வறுமையில் கிடந்துழலும் கூட்டமாக மக்கள் மாறுவர். இது நாட்டுக்கு ஏற்றதல்ல.

ஆதலால், ஒவ்வொரு நாளும் சென்ற காலத்திலிருந்து: படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, நாளையை நோக்கி நடைபோட வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல; பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதுவும்: அல்ல. எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி; மாற்றம்!

இந்தியா பழமை வாய்ந்த ஒரு நாடு. இந்திய நாகரிகத்தின் தொடக்கம் சொல்லமுடியாத அளவுக்குப் பழமை உடையது. மிகத் தொன்மை வாய்ந்த காலத்திலேயே மொழி, இலக்கிய ஆக்கங்களைப் பெற்றுச் சிறந்து விளங்கிய நாடு.

குறிப்பாகத் தமிழ் நாகரிகத்தின் பழமை, சிந்துவெளி நாகரிகத்தில் தொடங்குகிறது. தமிழ் நாகரிகம் -மெள்ள வளர்ந்து வந்து, இந்திய வரலாற்றுக்குத் தனது பங்கைச் செலுத்திச் செழுமைப்படுத்தி உள்ளது. இலக்கியங்கள் தோன்றிப் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பர் மொழியியலார்.

இன்று தமிழில் உள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பது அறிஞர் கருத்து.

அப்படியானால், அக்காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கியங்கள் தோன்றித் தமிழரிடையில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; தமிழர் தம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், தமிழர் வாழ்வு உண்மையான வளர்ச்சியை அடைந்ததா? மாற்றங்களைப் பெற்றதா? என்றால், இல்லை.

ஏன்? முதல் தடை பழமையின் மீது பாசம். இரண்டாவது தடை, படையெடுத்து வந்த அயல் வழக்குகளை ஆய்வு செய்யாமல் அப்படியே ஏற்பது. குறிப்பாகச் சொல்லப்போனால், இன்று தமிழர்கள் சாமர்த்தியசாலிகளாக விளங்குகின்றனர்.

சாமர்த்தியம் என்ற சொல், தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் பெருவழக்காக வழங்குகின்றது. சாமர்த்தியம் என்ற சொல்லுக்கு நேரிடையான தமிழ்ச் சொல் இல்லை. சாமர்த்தியம் என்பது வேறு திறமை என்பது வேறு. திறமை, நல்ல காரியங்களுக்குப் பயன்படுவது.

தமிழ் மொழிக்கும், பழங்காலத் தமிழர்களுக்கும் சாமர்த்தியம் இருந்ததில்லை. ஆனால், இன்றைய தமிழர்களுக்கு சாமர்த்தியம் கை வந்த கலையாக இருக்கிறது. இன்று தமிழரில் பலர் சாமர்த்தியத்திலேயே வாழவாழ்ந்து முடிக்க விரும்புகின்றனர்.

இன்று யாரும் சாதனைகளைப் பற்றி, மனித உறவுகளைப் பற்றி, சமூக மேம்பாடுகளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இன்று நம்மிடையில் சாமர்த்தியசாலிகள் பலர் உண்டு. திறமைசாலிகள் மிகவும் குறைவு.

சாதனைகள் செய்வதன் மூலம் புவியை நடத்துகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. குறைபாடுகளைக் களையும் நோக்கத்தைவிட குறைபாடுகளை நியாயப்படுத்தும் வகையில் சமாதானம் கூறிவிட்டு நழுவிவிடுபவர்களே இன்று மிகுதி.

இன்று எங்கும் கேட்கும் முழக்கொலி 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்', “ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” என்பவை. ஆனால் உண்மையில் நடப்பதோ, நாளும் சாதிச் சங்கங்களும் அவ்வழி கலகங்களும் தோன்றி வளர்ந்து வருகின்றன.

மத நிறுவனங்கள் அனுட்டானத்தைவிட, பிரச்சாரப் புயலில் சிக்கித் தவிக்கின்றன. நாடோ, ஊரோ, வீடோ இன்று ஒன்றாக-ஓருருவாகவில்லை. கிராமத்தின் எல்லையில் நம்மை வரவேற்பது பசுமையும், இலைகளும், பூக்களும் நிறைந்த மரங்கள் அல்ல. கட்சிக் கொடிகளே வரவேற்கின்றன. அரசியற்கட்சிகளின் கொடிகளும் அல்ல.

உள் அமைப்பு ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் உத்தியாகக் கொள்ளாது தேக்கமடைந்ததால் ஏற்பட்ட கோப தாபங்களால் பிரசவிக்கப் பெற்றவைகளே இன்றுள்ள பெரும்பான்மையான கட்சிகள்.

மதவாதிகள் மட்டமா, என்ன? தெருவுக்கு ஒரு கோயில்! சாதிக்கு ஒரு சாமி! இவை எல்லாமாக ஒன்று சேர்ந்து வாழ்க்கையில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; வளர்ச்சிக்குக் குந்தகம் செய்கின்றன; மாற்றங்களுக்குத் தடையாக உள்ளன.

அருமைப் பெரியோர்களே! இளைய பாரதத்தினரே! இந்தப் பாதையில்தான் நாம் தொடர்ந்து, செல்ல வேண்டுமா? வேண்டாம் வேண்டாம் வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய பாதையில் செல்ல அடியெடுத்து வைப்போம் நடப்போம்! தொடர்ந்து நடப்போம்!

மனிதன் மாறாவிட்டால் இந்த உலகில் வளர்ச்சி இல்லை. மாற்றங்களும் நிகழா. பல நாடுகளில் இன்னமும் வளர்ச்சியடையாத மாந்தர்கள் உள்ளனர். அதற்குக் காரணம் மனிதர்களின் மாற்றத்திற்குரிய பணிகளில் ஈடுபடும் அறிஞர்கள் தோன்றவில்லை.

ஒருவகையில் இந்தியா புண்ணியம் செய்த பூமி! இங்கு, சிந்தனையாளர்கள் பலர் தோன்றித் திரும்பத் திரும்ப மக்களிடம் மாற்றத்தை உண்டாக்க அரும்பாடுபட்டனர்.

கபீர்தாசரிலிருந்து கவிஞர் கண்ணதாசன் வரையில், பசவேசர் முதல் பாரதி வரை, குருநானக் முதல் குணங்குடி மஸ்தான் வரை, கணியன் பூங்குன்றன் முதல் தாகூர் வரை, அப்பரடிகள் முதல் அரதத்த சிவாச்சாரியார் வரை, வேமண்ணா முதல் வள்ளலார் வரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆயினும், இவர்களுடைய முயற்சியில் தேக்கம் சற்று அகன்றதே தவிர, மாற்றங்கள் முழுமையாக ஏற்படவில்லை.

அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் சமூக மாற்றத்திற்குக் கடுமையாக உழைத்தார்கள். தீண்டாமையை அகற்றவும் சமயங்களிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அண்ணல் காந்தியடிகள் தீவிரமாக முயன்றார்.

ஆயினும் சமய அடிப்படையில், இவற்றுக்கு எதிராகத் தூண்டப்படும் செயல்களைத் தவிர்க்க இயலவில்லை. அதுமட்டுமா? அண்ணல் காந்தியடிகளின் உயிரையே மதவெறி குடித்துவிட்டது. அண்ணல் காந்தியடிகள் காட்டிய திசையில் பாரதம் செல்ல மறுத்துவிட்டது. மறுத்ததோடன்றி அதற்கு எதிர்த் திசையில் சென்றது; சென்று கொண்டிருக்கிறது.

இன்று எங்குப் பார்த்தாலும் சாதிப் பிணக்குகள், மதச் சண்டைகள் நடைபெறுகின்றன. இதனால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கிறது. மாற்றங்கள் நிகழவில்லை! இன்றும் பலர் பழைய யுகத்திலேயே வாழ்கின்றனர். புது யுகக் காற்றைச் சுவாசிக்க மறுக்கின்றனர்.

ஒரு காலத்தில் அரசியற் கட்சிகள் சாதி, மதங்களைச் சார்ந்து இருப்பதை விரும்பவில்லை, மறுத்தன. இன்று அரசியற் கட்சிகள் வெளிப்படையாகவே சாதிகளை, மதங்களை, அவற்றிற்கிடையே மோதல்கள் ஏற்படுவதை விரும்பி வரவேற்கின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சாதியை, மதத்தை அரசியல் காரணமாகப் பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும், கலாச்சாரம் என்ற போர்வையில் சாதி, மத வெறுப்புணர்வுகள் தலையெடுத்தாலும் தடைசெய்ய வேண்டும். அனுமதிக்கக் கூடாது.

மனிதனின் சிந்தனைக்கு விலங்கு போடாமல் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்பட அனுமதித்தால் வளர்ச்சி தோன்றும்; மாறுதல்களும் ஏற்படும். மனிதன் பயத்திலிருந்து விடுதலை பெற்று, பகுத்தறிவுத் தடத்தில் என்று செல்லத் தலைப்படுகின்றானோ, அன்றே வளர்ச்சிக்குரிய வாயில் தோன்றும்; தென்படும்.

இருட்டறையிலிருந்து என்று வெளியுலகுக்கு மனிதன் வருகின்றானோ அன்றுதான் மனிதன் உண்மையிலேயே மாறுவான். வளர்ச்சியும் நிகழும்; மாற்றங்களும் ஏற்படும்.

மனிதன், வரலாற்றை உந்திச் செலுத்தும் ஆற்றல் வாய்ந்தவன், மனிதனே வரலாற்றின் உயிர்ப்பு. அவனுடைய மாற்றமே வரலாறு; இயக்கம்! மனிதன் இரண்டு எஜமான்களுக்குச் சேவை செய்ய இயலாது. சுயநலம் தவிர, மற்றொன்று அறியாத மனிதன், நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய இயலாது.

அதனால் வளர்ச்சியும் ஏற்படாது. மாற்றங்களும், வாழ்வதற்குரிய வாய்ப்புக்களும் அருகிப்போகும். நாம் மாறுவோம்! மனித குலத்தை மாற்றுவோம். வளர்ச்சிக்குரிய திசையில் செல்வோம்! மாற்றங்கள் உருவாகும்.

ஏ, என் அருமைத் திருநாடே! எழுந்திரு விழித்துக்கொள்! வரலாற்றைப் புரட்டி வளர்ச்சியடைய காணும் திசையில் ஊக்கத்துடன் செயல்படுவாயாக! இதுவே நாம் செல்லவேண்டிய திசை தடம்!

மனிதனுடைய வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் துணையாக இருக்கவேண்டிய சமூகம் இன்று, மனிதனுக்கு விரோதமாகச் செயல்படுகிறது. ஆதலால், சமூக மாறுதல் ஏற்பட்டாலொழிய வளர்ச்சி ஏற்படாது; மாற்றங்களும் நிகழா.

சமூக மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படப் பொதுமக்களின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் தேவை. எந்த ஒரு மாற்றமும் தங்களுடைய முன்னேற்றத்திற்குப் பயன்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மனத்தில் உருவாக்கிவிட்டால் வளர்ச்சி இயல்பாக நடக்கும், மாற்றங்கள் நிகழும்.

வளர்ச்சியும் மாற்றமும் மக்கள் மத்தியில் தோன்றி இடம்பெற வேண்டுமாயின் இலாபத்தையும் உடைமையையும் சேர்க்கும் பழைய சமூகத்தின் நடைமுறை, மதிப்பீடுகள் இவைகளுக்குப் பதிலாகப் புதிய மதிப்பீடுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

எவ்வளவு முயன்றாலும் பூரண மாறுதல் ஏற்பட, கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். இங்ங்ணம் சொல்லுவதால் மாறுதல் மிக மிக மெதுவாக நடக்க வேண்டும் என்று சொல்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது. மாறுதல் மெதுவாகவும் இருக்கக் கூடாது. சிறுகச் சிறுக ஏற்படும் மாறுதல்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடம் கொடுக்காது.

ஆதலால், சமூக மாற்றங்களை விரைந்து செய்து முடிப்பதே நல்லது. ஆனால், பழமையில் ஊறிய சமூகம் முழுமூச்சுடன் மாற்றங்கள் எந்த உருவில் வந்தாலும் எதிர்க்கும். சில சமூகங்கள், அறியாமையின் காரணமாகவும் ஏழ்மையின் காரணமாகவும் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளத் திறனற்றுப் போய்விட்டன.

இந்த மாதிரிச் சூழ்நிலைகளில் புதிய புதிய உத்திகளையும் திறன்களையும் மக்களிடையில் அறிமுகப்படுத்தி விழித்தெழச் செய்யவேண்டும். இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் வளர்ச்சி நிகழும், மாற்றமும் ஏற்படும்.

இங்ஙனம் சமுதாயத்தில் மாற்றங்களைச் செய்யும் பொழுது, இருக்கிற ஒன்றை-ஒரு தீமையை அகற்றினால் போதாது. அந்த இடத்தில் ஒரு நல்லதை வைக்கத் தவறிவிடக் கூடாது. தீமையை விலக்குவதற்குள்ள ஒரே வழி, நல்லதைக் காட்டுவதேயாம்.

இங்ஙனம் மாற்று வழி காட்டத் தவறிவிட்டால் மக்கள் மீண்டும் பழைய தடத்திலேயே செல்வர். சமூக மாற்றம் எளிதில் நிகழ முடியும். ஆனால், பழைய சமூக அமைப்பில் ஓர் அந்தஸ்தைப் பெற்றவர்கள்-அனுபவித்தவர்கள் எதிர்ப்பார்கள். தொடக்கத்தில் அது கடுமையான எதிர்ப்பாகத் தோனறினாலும் காலப்போக்கில் சமுதாய மாற்ற முயற்சிகள் வெற்றி பெறும்.

போதும், போதும் தேக்கம்! வேண்டாம், வேண்டாம் வளர்ச்சியே இல்லாத சமூக அமைப்பு வளர்ச்சியும் மாற்றங்களும் நிகழக்கூடிய திசையில் நடப்போம்!

நாம், அடிக்கடி பின்னோக்கிப் போகின்றோம். வழி வழியாக நமக்குக் கிடைத்துள்ள கருத்துக்கள் கூட, நம்மைப் பின்னுக்கு இழுக்கின்றன. விஞ்ஞானம், தொழில் நுட்பம் இல்லாமல் எப்படி வளர்ச்சியைக் காண முடியும்? மாற்றங்களைச் செய்ய முடியும்

அதேபோழ்து கடந்தகாலப் பண்பாட்டினை மறந்தும், முன்னேற்றமடைய முடியாது. அப்படியே முடிந்தாலும் அந்த முன்னேற்றம் பயனுள்ளதாக அமையாது.

மனிதகுலத்தின் வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்தது. இது தவிர்க்க முடியாதது. அணுவைப் பிளக்கும் இந்த யுகத்தில் நம்முன் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை நேற்றைய சம்பிரதாயங்களின் வழி தீர்வுகாண இயலாது. மதவிவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள், பிரச்சாரப் போரின்றி, சந்தடியின்றி முடிவுக்குக்கொண்டு வரப்படுதல் வேண்டும்.

எத்துறையேனும் சரி, அத்துறை, பிரசாரப் போரைத் தொடங்கிவிட்டால் பயமும் குரோதமும் வளரும். அதனால், மனிதகுலத்தின் வளர்ச்சியும், வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பும் கிடைப்பதற்குப் பதிலாக, அபாயங்களும் விபத்துக்களுமே அதிகரிக்கிறது.

ஆதலால், பழமைவாதம், பிரச்சாரப்போர் ஒருபோதும் வளர்ச்சிக்குத் துணை செய்யாது, என்பதை உணர்தல் வேண்டும். மனிதகுலத்தில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணத் திட்டமான இலக்குகள் வேண்டும். அந்தத் திட்ட இலக்குகளை அடைவதற்குரிய அறிவறிந்த ஆளுமையும் வேண்டும்.

மக்கட் சமுதாயத்தில் வர்க்கப் போராட்டங்கள் நிலவுகின்றன. வர்க்கப் போராட்டங்கள் மூலம்தான் வளர்ச்சியைக் காணமுடியும்; வளர்ச்சியை உறுதிப்படுத்தி உத்தரவாதம் தரமுடியும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் பெருமுயற்சி எடுத்துக்கொண்டால் வர்க்கப் போராட்டம் இல்லாமலே கூட அமைதி வழியில் வளர்ச்சியைக் காண முடியும்.

தமிழக வரலாற்றில் நடைபெறும் ஒரு பெரிய விவாதம் மரபு-புதுமை என்பது. மரபு, புதுமைகளுக்கிடையே மோதல் இயல்பாக நிகழாது; நிகழவும் கூடாது. இன்றைய புதுமை, வளர்ச்சிக்குரிய வித்துக்கள் உள்ளடங்கியதாக இருப்பின் சமூகத்தால் அங்கீகரிக்கப் பெற்று மரபாக ஏற்றுக்கொள்ளப் பெறும்.

மரபு, புதுமைக்குத் தாய்! புதிய செடி பழைய வித்திலிருந்தே உணவை எடுத்துக்கொண்டு வளர்கிறது. அது போலப் புதுமைகள் பழைய மரபுகளிலிருந்தே ஊட்டத்தைப் பெற்றுப் புதுமைகளாகிப் பின் மரபுகளாகி வரலாற்றுக்கு அணி செய்கின்றன.

மரபை மறுத்து வரும் புதுமை, எளிதில் மக்கள் சமுதாயத்தில் கால் கொள்வதில்லை. மார்க்சியம் பழமையைக் கண்மூடித்தனமாக மறுப்பதில்லை. ஆயினும், மாமுனிவர் கார்ல்மார்க்ஸ் கண்ட புதுமைச் சமுதாயம் மக்களிடத்தில் பூரணமாகக் கால்கொள்வதற்குரிய காலம் இன்னமும் கனியவில்லை.

ஆதலால், பழமையில் புதுமைக்கும், வளர்ச்சிக்கும். மாற்றங்களுக்கும் ஆக்கம் தரும் பகுதிகள் உண்டு என்பதை உணர்ந்து, அவற்றை எடுத்துக்கொண்டு சமுதாயத்தை நடத்துவது எளிதில் வளர்ச்சியை அடைவதற்குறிய வழி.

ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில், துறை தோறும் வளர்ச்சி ஏற்படவேண்டும். சமுதாயம் பொருளாதாரம், கல்வி, கலை முதலிய அனைத்துத் துறைகளிலும் காலத்தின் தேவைக்கேற்ப, மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சி அடையவேண்டும்.

சமுதாயத்தில் ஏற்படும் மாற்றமும் வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாத வளர்ச்சியினால் என்ன பயன்? இன்று நம் நாடு வளர்ந்துள்ளது. நமது நாட்டு சராசரி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே!

வாழ்க்கைத்தரம் உயரும்வரை வளர்ச்சிக்குரிய முயற்சிகள் இடையீடின்றி நடக்கவேண்டும். மக்கள் நலவளர்ச்சிப் பணிகளில் பழையபோக்கில் உள்ளவர்களும், புத்தறிவு பெற்றவர்களும் ஒருமை எண்ணத்துடன் ஈடுபடுவார்கள் ஆயின் வெற்றி எளிது.

இன்று நாம் சென்று கொண்டிருக்கும் பாதையில் வளர்ச்சியின் வேகம் போதாது. மாற்றங்கள் அறவே ஏற்படவில்லை. நாம் வாழும் காலம், பேராற்றல் வாய்ந்தது. கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கின்றோம். காலத்தின் பேராற்றலை முறையாகப் பயன்படுத்தினால் வளர்ச்சி உறுதியாக வாய்க்கும். காலவேகத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சிப்பணிகள் நிகழ வேண்டும்.

சமுதாயம் தனது வேலைசெய்யும் பாங்கையும் விரைவுபடுத்திக்கொள்ள வேண்டும். கால வேகத்திற்கு ஏற்ப, சமுதாயம் தனது வேகத்தைக் கூட்டிக்கொள்ளத் தவறினால் சமுதாயம் பின்தங்கிவிடும். ஆதலால், விவேகத்துடன் வேகமாக நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்வோமாக!

நாம் கடுமையான விதிமுறைகளையும், கடின உழைப்பையும் மேற்கொள்ளாவிட்டால் 2001-லும் இப்படித்தான் இருப்போம்! தலையின்மீது வறுமைக் கோடு கடன்சுமை! நியாயவிலைக் கடைகளின் முன் நீண்ட வரிசை இந்த அவலம் நமக்கு வேண்டுமா? வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

அறியாமையை அகற்றி, வறுமையை அறவே அகற்றி, உரியவளர்ச்சிப் பணிகளுக்கு முதலிடம் தருவோம்! நமது முன்னேற்றத்திற்கு வளர்ச்சியும் மாற்றமும் தேவை. நமது பழக்கங்களில் அணுகுமுறையில், வேலைசெய்யும் பாங்கில் மாற்றங்கள் ஏற்பட்டால்தான் வளர்ச்சி நிகழும்; வாழ்வு சிறக்கும்; பழைய பைத்தியம் படீர் என்று தெளிய வேண்டும்.

புதிய இந்தியாவை, வளம் நிறைந்த இந்தியாவை உருவாக்க உறுதிகொள்வோம். இன்றுள்ள தேக்கமும் பின்னடைவும் நீங்கி வளர்ச்சியும் முன்னேற்றமும் உறுதிப் படுத்தப் பெறும், புதியவழியில் செல்வோம்! மாற்றமும் வளர்ச்சியும் காண்போம்!


3-9-1994 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை