எங்கே போகிறோம்/11. சமுதாய மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு

விக்கிமூலம் இலிருந்து



11. சமுதாய மேம்பாட்டில்
ஆன்மிகத்தின் பங்கு


பலர் கூடி வாழ்வது சமுதாயம். பலர் கூடி வாழ்தல் வேண்டும். அப்போதுதான் சமுதாயம் தோன்றும். வாழ்க்கை வரையறுத்த கால எல்லையையுடையது. அந்த எல்லைக்குள் மற்றவர்கள் நலனுக்குரியன செய்து, அவ்வழி ஆன்மாவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; முன்னேற வேண்டும். நமது வாழ்க்கை கண்ணாடி வளையல்கள்போல உலைந்து போகக்கூடியது. வாழ்க்கை நிலையில்லாதது. நிலையில்லாதனவற்றைக் கொண்டு, நிலையானவற்றை அடைதலே வாழ்க்கையின் குறிக்கோள்.

நன்றாக வாழவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு விதி தனியாக இல்லை. எதைச் செய்தாலும், அழகாகச் செய்தலும், பயனுறச் செய்தலுமே நல்வாழ்க்கை. குறித்த ஒரு நோக்கத்துக்காகத் தான் வாழ்க்கையை நடத்தவேண்டும். குறிக்கோளுடைய வாழ்க்கையை நடத்துவதுதான் அதிர்ஷ்டம். வாழ்க்கை முழுவதும் விரும்பக் கூடியது ஊழியம் புரியும் சக்தியேயாம். அதுவும் சுயநலமற்ற நிலையில் ஊழியம் புரியும் சக்தியாக அமைய வேண்டும்.

வாழ்க்கையை முறையாக வாழ்ந்தால், உழைப்போடு கூடிய வாழ்க்கை நடத்தினால், அவ்வாழ்க்கையே ஒரு தொழில்தான். வாழ்க்கை இன்பமானது அன்று; இன்பமாக அமையவும் அமையாது. தைரியத்தோடும், துணிச்சலோடும் வாழ்க்கையை நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொள்வதிலும், அல்லது கொலை செய்வதிலும் தைரியம் என்பது இல்லை. வாழ்வதில்தான் தைரியம் இருக்கிறது.

உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி, இவற்றை விருப்பும், வெறுப்பும் இன்றி அனுபவிக்கத் தெரிந்துகொண்டால் மனிதனாகலாம். வாழ்க்கையின் உந்து சக்தி நம்பிக்கை. நோக்கம், கடமை, பரிவு ஆகியன வாழ்க்கைக்கு ஒளியூட்டுவன. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வேலை செய்யவேண்டும்; யாராவது ஒருவரிடமாவது அன்பு காட்டவேண்டும்.

வாழ்க்கையில் வெற்றிகளை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக்கொண்டால் அது வாழ்க்கையாகி விடும். ஏன்? இத்தகு வாழ்க்கையே வாழ்வாங்கு வாழ்தல். ஒரே ஒருமுறைதான் பிறக்கின்றோம். என்றாவது ஒருநாள் மூச்சுவிட மறந்துபோவோம்; அல்லது உயிர்ப்பு அடங்கும். இந்த இடைவெளிக் காலத்திற்குள் நாம் வாழ்ந்துவிட வேண்டும். நாம் வாழப் பிறந்தோம். “வாய்த்தது நந்தமக்கோர் ஈதோர் பிறவி மதித்திடுயின்” என்றார் அப்பரடிகள். சாவது எளிது.

பிறவி என்பது என்ன? ஆன்மா என்பது என்ன? நான் யார்? என் உள்ளம் யார்? என்ற ஆராய்ச்சி இல்லாமல், தெளிவான அறிவு இல்லாமல், எப்படி வாழ முடியும்? இந்த “ஆன்மா” விஷயத்தில், தத்துவச் சிந்தனையாளர்களிடையிலும், மதஸ்தாபகர்களிடையிலும் நிலவுவது மாறுபட்ட சிந்தனை போக்குத்தான். ஆன்மா, பிறப்பு, இறப்பு. குறித்து தமிழ் மரபு வழிச் சிந்தனையே அறிவியல் அடிப்படையில் சரியானது என்று துணிய முடிகிறது.

“உள்ளது போகாது. இல்லது வாராது” என்பது ஒரு தர்க்க அடிப்படை. இந்தத் தர்க்க நியாயத்தின்படி ஆன்மா உண்டென்பதும், அது நிலையானது என்பதும் பெறப்படும் உண்மைகள். கடவுள் ஆன்மாக்களைப் படைத்தான் என்ற கொள்கை ஏற்புடையதன்று. கடவுள் குறைவிலா நிறைவு. நிறைவிலிருந்து குறை தோன்ற முடியாது. ஆதலால், கடவுள் ஆன்மாக்களை, உயிர்களைப் படைத்திருக்க முடியாது. “எனது” என்றும், “நான்” என்றும் உரிமை கொண்டாடும் ஒன்று உளது. அதுவே ஆன்மா.

ஆன்மா என்பது சமஸ்கிருதச் சொல். உயிர் என்பது தமிழ்ச் சொல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையில் உடன்பாடு மிகுதியும் உடையது தமிழ் மரபு. உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், உயிர்கள் ஓரறிவுயிர் தொடங்கி, பரிபக்குவ நிலையினுக்கு ஏற்ப மாறி மாறிப் பிறந்து, கடைசியாக ஆறறிவு உடைய மனிதனாகப் பிறக்கிறது என்பது தமிழ்ச் சிந்தனை!

அறிவு சார்ந்த பரிணாம வளர்ச்சியில், பாம்பு. சட்டையை உரித்துப் போட்டுவிட்டுப் புதுச் சட்டையுடன் உலாவருதலைப் போல், உயிர் உடலை மாற்றிக் கொண்டே வந்து, மானுடப் பிறப்பை எய்தியது. அதனால்தான் சாதலையும், பிறத்தலையும், திருவள்ளுவர்

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்றார்.

ஆன்மிகம் என்பது முற்றிலும் ஆன்மாவைச் சார்ந்தது. அதாவது, ஆன்மாவின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் வாழ்க்கை முறை. இந்த உடல், உடலின் பொறிகள் வழி குணங்கள் இல்லை. குணங்களும், திறன்களும், பண்புகளும், ஆன்மாவைச் சார்ந்தவையே என்பது வெளிப்படை.

எல்லோருக்கும் உறுப்புக்கள் ஒத்து உள்ளன. ஆனால் பண்புகள் ஒத்து இல்லை. இதற்கு ஆன்மாக்களிடையே உள்ள தராதரமே காரணம். அறிவு, ஆன்மாவைச் சார்ந்தது. ஆன்மாவை அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளுதலே வாழ்க்கையின் முதற்படி.

காணாதனவற்றைக் காண, கண்ணிற்கு ஒளியாக, அறிவொளியாக இருந்து துணை செய்வது ஆன்மா. கேளாதனவற்றைக் கேட்க, காதுகளுக்குப் புலனாக அமைந்து துணை செய்வது ஆன்மா. ஆன்மா உருவமற்றது. ஆன்மாக்கள் எண்ணிக்கையில் பல. ஆன்மா அதன் வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்டது உடல்.

ஆன்மாவை, ஆன்மாவின் வளர்ச்சியை, மறந்துவிட்டு உடலால் மட்டும் வாழும் மனித மிருகங்களும் உண்டு. இவர்களே துஷ்டர்கள்; கொலைக்காரர்கள்; சமூகத்திற்குரியன செய்யாதவர்கள். ஆதலால்தான் சான்றோர் ஆன்மாவில் வாழ்தலை, ஆன்மாவைச் சார்ந்து வாழ்தலை வாழ்நிலை என்றனர்.

நெருப்பு தனக்குள் வரும் பொருள்களை எரித்து, அவற்றின் பலத்தைக் கொண்டு, மேலும் உயரமாகக் கிளம்பி எரிகிறது. அதுபோல, ஆன்ம சக்தி உடையவர்கள், தங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாய் உள்ளவைகளையே தன் வளர்ச்சிக்குச் சாதனங்களாக்கிக் கொண்டு வளர்வார்கள். ஆன்ம சக்தி உள்ளவர்கள், அடிபடும் பந்து மேலெழுவதைக் போல், துன்பங்கள் சூழச் சூழ மேலெழுவார்கள்.

ஆன்ம சக்தி வளரக் கல்வி தேவை; ஆற்றல் தேவை: கலைஞானம் தேவை; அறிவு தேவை; பண்பு தேவை: சான்றாண்மை தேவை; ஒப்புரவுப் பண்பு தேவை. இவையெல்லாவற்றையும் ஒருங்கே பெற்ற ஆன்மா ஆனந்தமாக வளரும்; வாழும்; வாழ வைக்கும். அதனால்தான் தம்மை உணர்ந்த நிலையிலேயே தலைவனாகிய கடவுளை உணரமுடியும் என்றனர் ஞானிகள்!

ஆன்மிகம் என்பது முற்றாகச் சமயமும் அல்ல; சமயம் சாராததும் அல்ல. ஆனால், ஆயிரத்தில் ஓரிருவர் கடவுள் பக்தியில்லாமலும், அறிவியல் மேதைகளாக, நல்லவர்களாக, சான்றோர்களாக, வையகத்தை வாழ்வித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோரின் ஆன்ம வளர்ச்சிக்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் ஒரு சாதனமாகும்.

கடவுள் வழிபாடு, பக்தி உடையவர்களில் பலர் ஆன்ம சக்தியே இல்லாதவர்களாக, கொடியவர்களாகக் கூட இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடவுள் பக்தி மனிதர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல. மீனுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல, மனிதனுக்குக் கடவுள் பக்தி அமைய வேண்டும்.

ஆன்மாவின் தூய்மையே மனத் தூய்மை. மனத்தால் புலன்களும் அழுக்கற்றதாகும்; புலன்களில் தூய்மை, பொறிகளில் தூய்மை, இதுவே சீரான வளர்ச்சி. பொறிகளின் துய்மையால், ஆன்மா தூய்மையடைதலும் உண்டு. ஆனால் இது கடினம். பல சமயங்களில் வழுக்கல் ஏற்பட்டுத் தோற்றுப் போதலும் உண்டு. ஆன்மிக வாழ்க்கைக்கு இல்லறமா? துறவறமா? என்ற விவாதம். கிடையாது. இரண்டிலும் ஆன்மிக வளர்ச்சி சாத்தியமே. வாழ்பவர்களைப் பொறுத்ததே ஆன்மிக வளர்ச்சி.

ஆன்மிகம் என்பது துறவு நெறியைச் சார்ந்ததென்று பலர் கருதுகின்றனர். இது தவறு. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல; உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம். அப்பரடிகள் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை,

“அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ
இப்பொன் நீ இம் மணிநீ இம்முத்துநீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே!”

என்று அருளியுள்ளமையை அறிக. எவன் ஒருவன் தன்னையும், தன்னுடைய பொறி புலன்களையும், தன்னைச் சுற்றி உள்ள உலகத்தையும், தன்வசப்படுத்திப் பயன் கொள்கின்றானோ, அவன் ஆன்மிகத்தில் வளர்ந்தவன்; உயர்ந்தவன். ஆன்மாவிற்குள் ஆசை வெள்ளம், பொறிகள் வாயிலாக வந்து புகுந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மா அமைதியாக விளங்கும்; தேர்வு செய்யும்; ஏற்பன ஏற்கும். இதுவே ஆன்மிக வாழ்க்கையின் இயல்பு.

ஆன்மிகத்தில் வளர்ந்தவர்கள் மானுட சமூகத்தை இறைவன் ஒரு குடும்பமாக அமைத்தே வழி நடத்துகின்றான்; வாழ்விக்கின்றான்; என்று நம்புவார்கள். ஆன்மிகத்தின் கொள்கை ஒருமைப்பாடே! ஆன்மா சுருங்கிப் போவதல்ல. ஆன்ம மதிப்பீடு இல்லாத உடல் வாழ்வு மட்டுமே வாழ்பவர்கள் பிரிவினை வாதிகள்.

கடவுள் ஒருவரே. கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதுபோல முத்தியும் ஒன்றே. “கடவுள் ஒன்றல்ல; இரண்டு” என்று சொன்னால், அந்த நம்பிக்கை ஆன்மிகத்தின்–ஆன்மிக வாழ்க்கையின் குறிக்கோளை முறியடித்துவிடும். இத்தகைய பிரிவினைவாதிகள் மக்களை மதிக்க மாட்டார்கள். கெட்ட போரிடும் உலகத்தை உருவாக்குவர். இத்தகைய வெற்று மனிதர்கள் ஆன்மிக வேடங் கொண்டிருந்தாலும், ஆன்மிகவாதிகள் அல்ல.

ஆன்மிக வாழ்க்கையில் வளர்ந்தவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். எளிதில் மகிழ்வர்; அன்பு செய்வர்; பிறருக்கு மகிழ்வூட்டுவர். ஆன்மா, அஹிம்சை, அஞ்சாமை, தியாகம், தயை, கள்ளாமை, நன்னடத்தை ஆகியவற்றைத் தனது அணிகலன்களாகக் கொண்டு பலருடன் கூடி வாழ்ந்தால் சமுதாயம் மேம்பாடுறும்.

இன்று பெரும்பாலும் ஆன்மிகம் கடவுளைச் சார்ந்து கூட இல்லை. மதங்களைச் சார்ந்திருக்கிறது. மதங்களைக் கூட அல்ல-மத நிறுவன அமைப்புக்களைச் சார்ந்திருப்பதையே இன்று ஆன்மிகம் என்று தவறாகப் பலர் கருதுகின்றனர். மதங்கள் தம்முள் முரண்பட்டே விளங்குகின்றன.

ஒரோ வழி மதங்கள் அன்பை, சமாதானத்தை, சகோதரத்துவத்தைப் போதிப்பது உண்மையானாலும், இந்தப் புனிதக் கொள்கைகளை விட, மதம் என்ற அமைப்பு-நிறுவனம் இவற்றின் ஆதிபத்திய அக்கறை மதங்களுக்கு மிகுந்து விட்டது. ஆதலால் மதங்களின் பெயரால், சண்டைகள், கலகங்கள், கொலைகள் தோன்றுகின்றன, கல்லாடம் சமயப் பிணக்கை மறுக்கிறது.

வள்ளற் பெருமான் சமயப் பிணக்குகளையும், பேதங்களையும் பார்த்து வெறுத்துப் போய் “மதமென்னும் பேய்” என்றார். இந்த உலகில் மதங்களின் பெயரால் நடந்த ஆதிபத்திய சண்டைகளே மிகுதி. ஆதலால், கடவுள் நம்பிக்கையையும் பிரார்த்தனையையும், கடவுள் வழிபாட்டையும், மதத்தோடு இணைத்துப் பார்க்கக் கூடாது. ஆன்மிக உலகம் வேறு; மத உலகம் வேறு.

ஒரு செடியிலிருந்து மணமுள்ள மலர், ஆரவாரமின்றி, முகிழ்த்து வெளி வந்து, எல்லோரும் மணத்தை அனுபவிக்கும்படி, மணத்தைப் பரப்புவதைப் போல, ஆன்மாவில் அன்பாக, அருளாக, தியாகமாக, சந்தடியின்றி, ஆரவாரமின்றி முகிழ்த்து, வாழ்வித்து வாழ்வது ஆன்மிகம்.

ஆன்மிகம் மற்றவர்களுக்கு உதவுவதில் முந்தும்; ஆறுதல் தரும். ஆன்மிகம் பயத்திற்கு அப்பாற்பட்டது; ஆளுமை உடையது. விசாலமான இதயம் உடையது. உறுதியும், உண்மையும் உள்ள உள்ளம், விருப்பத்துடன் வேலை செய்யும் பண்பு இவையே ஆன்மிகத்தின் அடையாளங்கள். இறைவன் கற்கோயிலில் எழுந்தருளுவதைவிட, மனக்கோவிலில் எழுந்தருளுவதையே விரும்புகின்றான். இறைவனை, “உடலிடங் கொண்டாய்”, “மனத்தகத்தான்” என்றெல்லாம் திருமுறைகள் போற்றும். கற்கோயிலை விட மனக்கோயிலிலேயே இறைவன் எழுந்தருளுகின்றான் என்பதற்கு பூசலார் நாயனார் வரலாறே சான்று.

எந்த மனிதனிடம், சாந்தம், சத்தியம், புலனடக்கம், துணிவு, சமபுத்தி உள்ளனவோ, அந்த மனிதனே ஆன்மிகத்தில் சிறந்தவன். இத்தகைய மனிதரால், இவ்வுலகில் கோடிக்கணக்கான குலங்கள் வளரும்; வாழும். அவர்களின் உடலிலேயே இறைவன் குடி கொண்டு, அவர்களின் மூலம் தன் விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றிக் கொள்ளுகின்றான். அதனால், எல்லாவற்றையும், உன்னைப் போலவே உன் ஆன்மாவைப் போலவே காண்க.

ஆன்மிகம் விலை மதிப்பிட முடியாத ஒரு செல்வம். ஆன்மிகத்தில் செழித்தவர்கள் முகத்தில் ஒரு பொலிவு—புன்முறுவல் தோன்றும்; பரிவு வெளிப்படும்; பண்பாடு இருக்கும். ஒருவன் ஆன்ம சக்தி உடையவன் என்பதை அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் காணலாம்.

எடுப்பான தோற்றம் ஆன்மிகம் வழங்கும் கொடை. ஆன்மிக நலம் பொருந்தியவன் வழங்கும் சொற்கள் அவனுடைய ஆன்மா அன்பில் நனைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஆன்ம சக்தியால் வளர முடியும். வாழ முடியும். சொற்கள், செயல்கள் இவையெல்லாம் உயர்ந்த ஆன்மாவை இனம் காட்டும் அடையாளங்கள், நமது ஆன்ம சக்தியை மற்றவர்களுக்கு உணர்த்தும் சாளரங்களே கண்கள். சொற்களே தூதர்கள். முகத்தால் அமர்ந்தினிது நோக்கி, இன்சொல் கூறி, ஈத்துவந்து. மகிழ்தலையே திருவள்ளுவம் பாராட்டும்.

மருந்து மரம் தன் நன்மை நோக்காது, தனக்கு வரும் வெட்டுக்களையும் ஏற்றுக்கொண்டு, மற்றவர் நோய்க்கு மருந்து வழங்கும். இதுவே ஆன்மிகத்தின் பண்பு.

ஆன்மிகம் எப்போதும் அறிவைத் தேடும்; அன்பை வழங்கும்; வாழ்விக்கும். ஆன்மிகம் அருள் பழுத்த வாழ்வு; சின்னங்களும், அடையாளங்களும் மட்டும் ஆன்மிகம் அல்ல. அவை ஆன்மிக வளர்ச்சிக்குத் துணை செய்யும் சாதனங்களாக அமையக் கூடும். அப்படி அமைந்தால் வரவேற்கத்தக்கதே, இன்று பெரு வழக்காக மதத்தின் பெயரில் நடைபெறும் சடங்குகள் ஆன்மாவைத் தொடுவது கூட இல்லை .

ஆன்மிகம் மனிதத்தின் விழுமிய பயன். ஆன்மிகத்தின் மறு பெயர்தான் மனித நேயம். ஆன்மிகம் ஆன்மநேய ஒருமைப்பாடுடையது. ஆன்மிகம் சன்மார்க்க நெறி; பொது நெறி. ஆன்மிகம் பகுத்தறிவுக்குப் புறம்பானதல்ல; ஆன்மிகம் ஞானம்; ஆன்மிகம் உலகந்தழீ இயது.

“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே”

என்றார் தாயுயுமானார். இதுவே ஆன்மிகத்தின் குரல். இந்த குரல் இன்று இந்தியாவிலேயே ஒலிக்கவில்லை. தமிழகத்திலேயே ஒலிக்கவில்லை. நாளும் திருக்கோயில்கள் பெருகி வளர்கின்றன; திருவிழாக்கள் நடக்கின்றன; குடமுழுக்கு விழாக்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மனிதநேயம், தாழ்வெனும் தன்மை நோக்கிச் சமயம் சாரும் இயல்பைத் தந்தனவா? வறுமை, சிறுமைகளிலிருந்து தப்ப வழி வகை கற்றுக் கொடுத்ததா?

மானுடப்பதம் தந்து வாழ்வளித்த வள்ளற்பெருமானாகிய இறைவனிடமே இரவலனாகத்தானே மனிதன் செல்கின்றான்? திருக்கோயிலிலும் போட்டா போட்டிகள்! மரியாதைகள்! சாதிப்புன்மைகள்! பணத்தின் திருவிளையாடல்கள்!

எங்கே பழங்காலத் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஆன்மிகம்? நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ன்ன்மிகம் எங்கே? சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கிய சீலம் எங்கே? “எந்நாட்பவர்க்கும் இறைவா” என்ற உலகம் பொதுமை தழுவிய மாணிக்க வாசகரின் ஆன்மிகம் எங்கே? “தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை” என்றவாறு தொண்டு நெறியில் வளர்ந்த ஆன்மிகம் எங்கே?

“பலர் வைகுந்தத்திற்குப் போக நான் நரகத்திற்குப் போகச் சித்தமாயுள்ளேன்” என்று மதில் மேல் ஏறி, இறைவன் நாமத்தை எடுத்து ஓதிய இராமானுசரின் ஆன்மிகம் எங்கே? “சேர வாரும் செகத்திரே” என்று, வேறுபாடின்றி அனைவரையும் அழைத்த ஆன்மிகம் எங்கு போயிற்று? தேடுங்கள்!

ஆன்மாவின் வழி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்? எவ்வுயிரும் தம்முயிர் போல் போற்றும் பெருநெறி கடைப்பிடித்து ஒழுகுங்கள்! வல்லார்க்கும், வல்லமை இல்லாதாருக்கும், ஒரு சேர வாழ்வளியுங்கள்! உயிர்க்குலம் – திருக்குலம் வாழ, வளரத் தொண்டு செய்யுங்கள் இந்த மண்ணுலகத்திலேயே விண்ணுலகத்தைக் காணுங்கள்!

ஆன்மிகம் சமுதாயத்தைக் கூட்டு விக்கும். ஆன்மிகம். சமுதாயமேம்பாட்டுக்குத் துணைசெய்யும்! கடவுளை நம்பு! பிரார்த்தனை செய்! கடவுளிடம் சர்வ வல்லமைமையைத் தந்தருளும்படி கேட்டுக் கொள்! ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள் சமாதானத்தின் காவலர்கள். ஆன்மிகவாதிகள் சமநிலை காண்பவர்கள், எல்லோரையும் வாழவைக்கும். ஆன்மிகம் வளர்க! வாழ்க! ஆன்மிகத்தில் வளர்ந்து சமுதாய மேம்பாட்டைக் காண்போமாக!

உடலுக்கு வலிமை; ஆன்மாவுக்குத் துணிவு. உடலில் நோயின்மை; ஆன்மாவில் குற்றமின்மை. உடலுக்கு ஒழுங்குகள்; ஆன்மாவுக்கு ஒழுக்கம். உடலுக்குத் திறமை: ஆன்மாவுக்கு அறிவு. உடலுக்கு உணவு; ஆன்மாவுக்கு, பக்தி. உடல் உழைப்பு மக்களுக்கு; ஆன்மாவின் உழைப்பு கடவுளுக்கு. உடலுக்குத் தனிமை, ஆன்மாவுக்கு மக்கள் திரளுடன் கூடுதல். உடலுக்கு சுயநலம்; ஆன்மாவுக்கு பிறர் நலம் - என்பன இயற்கையில் அமைந்த நியதிகள். இவற்றில் பல உடன்பட்டவை.

வலிமை—துணிவு, நலம்—குற்றமின்மை; ஒழுங்கு — ஒழுக்கம்; திறமை —அறிவு; மக்களுக்கு — கடவுளுக்கு இவை உடன்பாடுடையன. ஆனால் உடல் பெரும்பாலும் சுயநலத்தையே நாடும். நல்ல ஆன்மா பிறர் நலத்தையே போற்றும். உடல் பெரும்பாலும் ஆன்மாவை ஆட்டிப்படைத்துத் தனது ஆதிக்கத்திற்குள் வைத்துக்கொள்ள ஆசைப்படும். ஆன்மாவுக்கு அடங்கி நடக்கும் உடலே நல்லது. ஆன்மாவின் வழி வாழ்தலே வாழ்க்கை.

ஆன்மாவினாலேயே சமுதாயத்தைக் காண இயலும்; பேண இயலும். குறைவிலா நிறைவாக, அன்பில் பழுத்து உலகம் தழீஇ வாழ்தலே ஆன்மிகம். இந்த வழியில் இனி. மேலாவது நடப்போமாக!

இந்த ஆன்மிக வழியில் நடவாமல் இப்போது அசுர வழியில் போய்க்கொண்டிருக்கிறோம். அதன் விளைவு பாதுகாப்பும், உத்திரவாதமும் இன்மை! வறுமைக்கோடு! துன்பங்கள்! துயரங்கள்! இனிமேலாவது நாளும் நமது ஆன்மாவின் தரத்தை, நலத்தை வளர்த்துக் கொள்வோம் இம் மாநிலம் பயனுறும் வழியில் வாழ்வோமாக! ஒருவன் உலகத்தையே பெற்றாலும், தனது ஆன்மாவை இழந்து விடுவானாயின் என்ன பயன்?

இன்று ஆன்மாவை இழந்து, பொக்குகளாக, வெற்றர்களாக; வாழ்வோர் பலர். இவர்களை “இந்த வையகம் சுமப்பதுவும் வம்பு” என்றார் ஆண்டாள் நாச்சியார் சமுதாயம் தழீஇய ஆன்மிக வாழ்க்கையே வாழ்க்கை. சமுதாயத்தைப் பற்றியுள்ள துன்பங்கள் அனைத்தும் அகலத் தன்னந்தனியாகவும், கூட்டமாகவும், ஆன்ம வாழ்க்கை வாழ்வோம்! வளர்க. ஆன்மிகம்! வளர்க சமுதாயம்!

கடவுளே கூட வான் பழித்து, இம்மண்ணிற்கு வந்தது மனிதனோடு கூடிவாழத்தான்! அதில் ஒரு தனி இன்பம். அந்த இன்பம் நிறைந்த வாழ்க்கைக்குத்தான் ஆன்மிகம் என்று பெயர்.

★★★

22-10-94 அன்று மதுரை வானொலியில் ஒலிப்பரப்பாள உரை.