உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/அறிமுகவுரை

விக்கிமூலம் இலிருந்து

அறிமுகவுரை


1918 முதல் 1972 வரை நாடகத்துறைக்கே வாழ்வைக் காணிக்கையாக்கிய ஒரு நடிகனின் வாழ்க்கைக் குறிப்பு இது. நான் அறிந்த வரையில் இப்படி ஒரு விரிவான நாடகக் கலைஞனின் குறிப்பு இந்திய மொழிகள் எதிலுமே வந்ததாகத் தெரியவில்லை. புதிய முயற்சி இது. கலைஞனின் கன்னி முயற்சி!

ஆசிரியர் திரு பி. எஸ். செட்டியார் அவர்கள் நடத்தி வந்த ‘சினிமா உலகம்’ ஆண்டு மலரில் 1942இல் எங்கள் வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாக எழுதினேன், இரண்டாவதாக, என் அருமை நண்பர் திரு பி. மகாலிங்கம் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து வெளியிட்ட ‘தேவி’ என்னும் திங்கள் இதழில் 1943இல் ‘எங்கள் நாடக வாழ்க்கை’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாக எழுதினேன். அதன் பிறகு சகோதரர் கவி. கா. மு. ஷெரீப் அவர்கள் சென்னையிலிருந்து வெளியிட்ட ‘சாட்டை’ வார இதழில் 8-11-59 முதல் 26-3-61 வரை தொடர்ச்சியாக, ‘என் நாடக வாழ்க்கை’ யை மேலும் சற்று விரிவாக வரைந்தேன். எனவே அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இப்போது வெளியிடப் பெற்றுள்ள எனது நாடக வாழ்க்கை அவற்றைவிட விரிவாகவும் தெளிவாகவும் சரியான தேதிக் குறிப்புக்களோடும் தீட்டப் பெற்றிருப்பதாகக் கருதுகிறேன்.

எனது 54 ஆண்டுகால நாடக வாழ்க்கையில், 30ஆண்டு வாழ்க்கையினைப் பற்றி எனக்கு நினைவிருந்த வரையில் இதில் சொல்ல முயன்றிருக்கிறேன். இன்னும் 24ஆண்டுகால வாழ்வினை இதன் தொடர்பாக வெளிவரும் எனது நாடக வாழ்க்கை இரண்டாவது பாகத்தில் சொல்வேன்.

தலைநகராகிய சென்னைக்கு வந்தபின் நாடகம், அரசியல் ஆகிய இரு வாழ்விலும் பிணைந்து பணியாற்றியிருக்கிறேன்.   1950-இல் நாடகக் குழுவுக்கு, ‘மூடுவிழா’ நடத்தியதும், மீண்டும் தொடர்ந்து ‘ஸ்பெஷல்’ நாடக முறையில் புதிய பல நாடகங்களை நடத்தி வந்ததும் எங்கள் நாடக வாழ்வின் பொற் காலமாகும். வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் சென்று உலாவந்த பெருமைக்குரிய நிகழ்ச்சிகள், அந்தக் காலகட்டத்தில் தான் வருகின்றன. எனவே இரண்டாம் பாகம் மேலும் சுவையாகவும் பயனுடையதாகவும் இருக்குமென்பதில் ஐயமில்லை.

அதனை எழுத என்னை வாழ்விக்குமாறு இறைவனை வேண்டுகிறேன்.

எனது நாடக வாழ்க்கையை எனது கண்ணோட்டத்திலே தான் எழுதியிருக்கிறேன். இதன் முழுப்பொறுப்பும் என்னைச் சார்ந்தது. சகோதரர்களின் கண்ணோட்டத்தில் பல செய்திகள் இதில் விட்டுப் போயிருக்கவும் கூடும்.

எங்கள் குழுவிலிருந்த. என்னோடு தொடர்புகொண்ட-நான் கண்டு மகிழ்ந்த எல்லா நாடக நடிக-நடிகையரைப் பற்றிய செய்திகளும் ஒரளவுதான் இதில் இடம் பெற்றுள்ளன. பெருமைக் குரிய நாடகக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் நான் தனியாகவே கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் தனி நூல்களாக வெளிவரும்.

என்னோடு தொடர்பு கொண்ட எத்தனையோ நண்பர்கள் இதில் விடுபட்டுப் போயிருக்கலாம். எனக்கே தெரிகிறது. பாரங்கள் அச்சான பிறகுதான் சிலருடைய பெயர்கள் நினைவுக்கு வந்தன. நூலில் இடம் பெறுவதற்குத் தகுதியும் உரிமையும் உடைய கலைஞர்கள், நண்பர்கள் அன்பு கூர்ந்து எனக்கு நினைவூட்டுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். அவர்களின் பெயர்களை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வேன்.

மணிவிழாவிலே எனது நாடக வாழ்க்கை கட்டாயம் வெளிவர வேண்டும் என்று என்னைவற்புறுத்திய தலைவர் சிலம்புச்செல்வர் அவர்கட்கும், பெருமைக்குரிய மாணவர் கலைஞர் ஏ.பி. நாகராஜன், மருகர் நகைச்சுவைச்செல்வர் டி. என். சிவதாணு, தம்பி பகவதி ஆகியோருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த நூலை வெளியிடுவதில் வானதி பதிப்பக உரிமையாளர் அன்பர் திருநாவுக்கரசு அவர்கள் காட்டிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அடேயப்பா! என்ன சுறுசுறுப்பு! விரைவாகச் செயலாற்றுவதில் அவருக்கு இணை அவரேதான். திருநாவுக்கரசு அவர்களை ஒரு பதிப்பக உரிமையாளராக - வணிகராக மட்டும் நான் கருதவில்லை. அவர் ஒர் அருங்கலைஞர். ஆம், பல்வேறு கலைப் படைப்புகளைத் தமிழுலகுக்குத் தந்த அவர், எனது நாடக வாழ்க்கையினையும் ஒர் உயர்ந்த கலைப்படைப்பாகவே வெளியிட்டிருக்கிறார்.

அந்த அருமைக் கலைஞருக்கு என் உளமார்ந்த நன்றி.

இந்நூலை வெளியிடுவதில் எனக்குப் பேருதவியாளராக உடனிருந்து பணியாற்றியவர் கவிஞர் தே. ப. பெருமாள் அவர்கள். அவர் எனது நீண்டநாளைய நண்பர். என் உள்ளத்தை உணர்ந்தவர். அவ்வப்போது எனக்கு ஆலோசனைகள் கூறி உறுதுணை புரிந்தவர். உன்னிப்போடு பிழைதிருத்திப் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவருக்கு என் நன்றி உரித்தாகட்டும்.

நூலினை அச்சிட்ட மூவேந்தர் அச்சக உரிமையாளர் திரு முத்து அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். ஊக்கம் நிறைந்தவர். எத்தனைமுறை பிழைதிருத்தம் செய்தாலும்முகங்கோணாமல் மிகுந்தபொறுமையோடும் பொறுப்போடும் இந்நூலை அச்சிட்டுத்தந்தார். அவருக்கும், அச்சகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

இனி, பாடுபட்டு உழைத்து உருவாக்கியுள்ள இக்கலைப் படைப்பினை வாசக நண்பர்களும், படிப்பகத்தாரும், நூலகத் தாரும் வாங்கி, விரைவில் அடுத்த பதிப்பு வெளிவரவும், இரண்டாவதுபாகத்தை உற்சகாத்தோடுவெளியிடவும் அன்பர்திருநாவுக்கரசு அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இந்நூலுக்கு முன்னுரை எழுதி என்னைச் சிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்கும், அணிந்துரை தந்து எனக்கு ஆசி கூறிய தலைவர் சிலம்புச் செல்வர் அவர்கட்கும் என் இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


‘அவ்வை அகம்’

தி. க. ஷண்முகம்
திருவள்ளுவர் ஆண்டு 2003 சித்திரை 8௳

சென்னை–86