எனது நாடக வாழ்க்கை/சங்கரதாஸ் ஸ்வாமிகள்

விக்கிமூலம் இலிருந்து
சங்கரதாஸ் சுவாமிகள்

அந்தநாளில் தமிழ் நாடக உலகில் சுவாமிகள்’ என்றாலே போதும், அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்தில் இருந்த மிகப் பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர், சித்திரக்கவி சுப்பராய முதலியார், ஏகை சிவசண்முகம் பிள்ளை, குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலைவணங்கிப் பாராட்டினார்கள்.

நடிகர்கள் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் சுவாமிகள் மிகவும் அக்கறையுடையவராக இருந்தார். வெற்றிலை போடுவது, பொடி போடுவது, பீடி சிகரெட் முதலிய லாகிரிப் பொருட்களை உபயோகிப்பது இவை யெல்லாம் சுவாமிகளுக்குப் பிடிக்காது. நடிகர்கள் யாராவது இவற்றை உபயோகிப்பதாகத் தெரிந்தால் அவன் பாடு தீர்ந்தது. பிறகு யார் தடுத்தாலும் பயனில்லை; பயங்கரமான அடி விழும். சுவாமிகளின் இந்த அடிக்குப் பயந்து கம்பெனியை விட்டு ஓடிய நடிகர்கள் பலருண்டு.

சுவாமிகள் தாமே நடிப்புச் சொல்லிக் கொடுப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எமதருமன், இரணியன், கடோற் கஜன் முதலிய வேடங்களுக்கு அவரேதாம் நடிப்புப் பயிற்சி அளிப்பார். கம்பீரமான அவரது குரல் வெண்கல நாதம்போல் ஒலிக்கும்.

ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் மகத்தான ஆற்றல் சுவாமிகளுக்கு இருந்தது. இது வெறும் புகழ்ச்சியன்று; என் கண்கண்ட உண்மை.

நாடகப் புலமை

அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்ததாக முன்பு குறிப்பிட்டேனல்லவா? ஒருநாள் பழனியா பிள்ளை, ‘சுவாமி! நம்முடைய சண்முகம் கதாநாயகனுக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுத வேண்டும்’ என்று கூறினார்.

சுவாமிகள் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். அந்த விநாடியே அவரது சிந்தனை செயல்பட ஆரம்பித்துவிட்டது. பழனியாபிள்ளை சொல்லிய வார்த்தைகள் சுவாமிகளின் நாடக இதயத்தை தொட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுதிருந்தே அவர் வானத்தையும் பூமியையும் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.

அன்று மாலேயே சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்றார். ‘அபிமன்யு சுந்தரி’ அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ‘அரிக்கன் விளக்கை’ வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய படுக்கையருகே அவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப் பெற்றிருந்தது. என்ன ஆச்சரியம்! ....

இந்தக் காலத்தில் ஒரு நாடகம் எழுதுவது என்றால் எத்தனை எத்தனை முன் ஏற்பாடுகள்; ஆலோசனைகள்; விவாதங்கள். வசனம் எழுதுவது ஒருவர்; பாடல் இயற்றுவது வேறொருவர்; இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இயற்றிய நாடகம் மேடையில் நடிப்பதற்குப் பொருத்தமாக இருக்குமாவென்பது வேறு விஷயம். சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே நாள் இரவில் நூற்றுக் கணக்கான பாடல்கள் உரையாடல்களுடன் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதியிருந்த அபிமன்யு சுந்தரி நாடகத்தைக் கண்டு எல்லோரும் அதிசயப்பட்டார்கள். ஒரு நாடகத்தை நகல் எடுப்பதற்குக்கூட ஒருநாள் இரவில் முடியாது. நான்கு மணி நேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தைக் கற்பனையாகவே ஒர் இரவுக்குள் எழுதி முடித்துவிட்டார் சுவாமிகள். அவரை முருகன் அருள் பெற்ற அருட்பெரும்புலவர் என்றே எல்லோரும் வியந்து பாராட்டினார்கள்.

‘அடே சின்னப் பயலே! இந்த அபிமன்யு நாடகம் உனக் காகவே எழுதப் பெற்றது’ என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது அது எனக்குப் பெரிதாகத் தோன்ற வில்லை. இன்று அதை எண்ணியெண்ணிப் பெருமைப்படுகிறேன். பெருமிதம் கொள்கிறேன்.

தந்தையார் நடித்த நாடகம்

முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி முடிந்த பிறகு, நான்கு நாட்கள் ஒய்வு கொடுக்கப்பட்டது. இடையே ஒருநாள் நாங்கள் நடித்த அதே கொட்டகையில் சுவாமிகளின் கோவலன் நாடகம் நடைபெற்றது. ஸ்பெஷல் நாடக நடிகர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

திரு. எம்.எஸ்.தாமோதரராவ் கோவலனாக நடித்தார். மாதவியாக ரத தினசாமிப் பிள்ளையும் கண்ணகி, காளியாக என் தந்தை டி. எஸ் கண்ணாசாமிப்பிள்ளையும் நடித்தார்கள். என்னுடைய நான்கு வயதுப் பருவத்தில் ஒரு முறை என் தந்தையார் நல்ல தங்காள் நாடகத்தில் நல்லதங்கையாக நடித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது நான் நல்லதங்கையின் கடைசிப் பிள்ளையாக நடித்த நினைவிருக்கிறது. நாஞ்சில் நாட்டிலுள்ள தாமரைக் குளம் என்ற ஊரில் அந்த நாடகம் நடந்தது. ஆனால், அது ஏதோ கனவுபோலத்தான் நினைவில் இருந்தது. இப்போது கோவலன் நாடகத்தில் அவர் கண்ணகியாக நடித்ததைத்தான் முதலும் கடைசியுமாய்ப் பார்த்ததாகக் கொள்ளவேண்டும். இந்த நாடகமும் சுவாமிகளின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றதால் நாங்கள் எல்லோரும் நாடகம் பார்த்தோம்.

எம். எஸ். தாமோதரராவ் அந்தநாளில் மிகச் சிறந்தநடிகராக விளங்கியவர், அவருடைய நாடகங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனாரின் மனோகரன், நாடகத்தில் மனோகரனக அற்புதமாக நடிப்பார் தாமோதரராவ் சங்கிலி யறுக்கும் காட்சியில் அவர் நடிப்பதைப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும். பழம்பெறும் நடிகர்களிலே ஒருவர் அவர்.

என் தந்தையார் நடிகராகக் கலந்து கொண்டது கடைசியாக அந்தக் கோவலன் நாடகத்தில்தான். அதன்பிறகு நடிக்கும் சந்தர்ப்பம் அவர் வாழ்க்கையில் ஏற்படவே இல்லை. பின்பாட்டுக் காரராகவே இறுதி வரையும் வாழ்ந்தார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபையின் நாடகங்கள் மதுரையில் தொடர்ந்து ஒரு மாதகாலம் நடைபெற்றன. பவளக் கொடி, சதியனு சூயா, சுலோசன சதி, சீமந்தனி, பிரகலாதன், கோவலன், பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களெல்லாம் நடிக்கப் பெற்றன. சிறுவர்கள் நடிக்கும் நாடகம் ஆனதால் சிறந்த வரவேற்பைப் பெற்றனவென்றே சொல்லவேண்டும்.

தங்கப் பதக்கம் பரிசு

அடுத்த ஊர் விருதுப்பட்டி ஆம், விருதுப்பட்டிதான்; நமது தலைவர் திரு. காமராசர் அவர்கள் பிறந்த ஊர்தான். விருதுநகர் என்ற பெயர் அப்போது இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏற்பட்டது. விருதுப்பட்டியை நான் மறக்க முடியாது. அங்குதான் 1936 இல் மனிதகுல மாணிக்கம் பண்டித நேரு அவர்களைத் தரிசித்தேன். வீராங்கனையாக இன்று விளங்கும் திருமதி இந்திரா அவர்களை இளம்பருவத்திலே கண்ட இடமும் விருதுப் பட்டிதான்.

விருதுப்பட்டியில் நாடகங்கள் ஆரம்பமாயின. எங்கள் அன்னயார் மதுரையிலே இருந்தார். தந்தையாருடன் நாங்கள் மூவரும் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம் விருதுப்பட்டியில் தான் எனக்கு முதன்முதலாக ஒரு தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்தது. விருதுப்பட்டி ரயில்வே அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அளித்த பரிசு அது. பின்னால் எங்களுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் நேர்ந்த காலங்களில்கூட அந்த முதற் பரிசை மட்டும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருந்தோம்.

புலங்திரன் எங்கே?

பவளக்கொடி நாடகத்தில் நான் புலந்திரனக நடிப்பேன். முதல் காட்சியில் வந்து, தாயார் அல்லி மகாராணியிடம் பவள ரதம் வேண்டுமென்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். பிறகு நாடகத்தின் கடைசியில்தான் புலந்திரன் வரவேண்டும். சுமார் நான்கு மணிநேர இடைவேளை இருக்கிறது. அத்தனைநேரம் என்னால் எப்படி விழித்துக் கொண்டிருக்க முடியும்! நாடகம் அந்த நாளிலெல்லாம் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகி ஏறத்தாழ இரவு 2.30 மணிக்கு முடிவுபெறும். பக்கத் தட்டிகளின் ஒரத்தில் நின்று பார்ப்பேன். தவிர்க்க முடியாத நிலையில் தூக்கம் வந்து என் கண்களைத் தழுவிக் கொள்ளும். யாருக்கும் தெரியாதபடி எங்காவது ஒரு மறைவில் படுத்து உறங்கிவிடுவேன். நான் வர வேண்டிய காட்சிக்கு முன்பாகவே என் தந்தையார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து எழுப்பி விடுவார். இதுவே வழக்கம்.

விருதுப்பட்டியில் ஒரு நாள் பவளக்கொடி நாடகம் நடை பெற்றபோது நான் படுத்துறங்கிய இடம் யாருக்கும் தெரியாது போயிற்று புலந்திரன் காட்சி வருவதற்கு முன்பே என்னைத் தேடத் தொடங்கியவர்கள், அந்தக் காட்சி வரும்வரையில் கண்டு பிடிக்கவில்லை. காட்சியும் வந்துவிட்டது. புலந்திரனைக் காணோம். என்ன செய்வார்கள்!

“எங்கே புலந்திரன்? எங்கே ஷண்முகம்?” என்று தேடினார்கள். கடைசியாக அல்லிவேடம் புனைந்திருந்த நடிகரே என்னைக் கண்டுபிடித்தார். உறக்கம் கலைக்கப்பட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் தெளிவுபெற்றேன். சுவாமிகள் என்ன செய்வாரோ வென்று பயந்து நடுங்கினேன். காட்சி முடிந்து வந்ததும் சுவாமிகள் என்னைத் தட்டிக் கொடுத்து “டே சின்னப் பயலே! இனிமேல் எல்லோருக்கும் தெரியும் படியான இடத்தில் படுத்துறங்கு. இப்படி மூலை முடுக்குகளில் கிடந்து உறங்காதே” என்று அன்போடு கூறினார். அன்று முதல் பவளக்கொடி நாடகத்தில் மட்டும் பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் உறங்க எனக்கு அனுமதி யளிக்கப்பட்டது.

விளம்பரங்கள்

நாடக சினிமா விளம்பரங்கள் இந்தக் காலத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கின்றன. புதிய புதிய: முறைகளில் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்கிறார்கள். எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதைச் சரியானமுறையில் விளம்பரம் செய்யாவிட்டால் விலை போகாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

புதிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதனால் அதைப் பொது மக்களிடையே விளம்பரப்படுத்த, இன்று மிகவும் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய பெரிய சினிமாசுவரொட்டி களுக்கிடையே இன்றையச் சிறிய நாடகச் சுவரொட்டிகள் மங்கி விடுகின்றன. முழுப் பக்கம், அரைப்பக்கம், கால்பக்கம் என்று சினிமா விளம்பரங்கள் வரும் பத்திரிகைகளில் ‘இஞ்சு’ க் கணக்கில் வெளியிடப்படும் நாடக விளம்பரங்கள் மக்களுக்குத் தெரிவதில்லை. இன்று நாடக உலகம் இருக்கும் நிலையில் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்வது முடியாமல் இருக்கிறது. நாடகத்திற்காக ஏற்படும்செலவினங்களே அதிகமாக இருப்பதால் விளம்பரத்திற்கென்று ஒரு பெருந்தொகை ஒதுக்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இந்தக் கால நாடக விளம்பர நிலை இப்படி ....

அந்தநாளில் நாடகத்தை விளம்பரப்படுத்துவது எவ்வளவு சுலபமாக இருந்தது தெரியுமா? சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபைக்கு எழுதிய விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் மிக வேடிக்கையாக இருக்கும். ‘பிரகலாதன்’ நாடகத்திற்கு அவர் எழுதிய விளம்பரத்தாள் ஒன்று இரண்டாண்டுகளுக்கு முன்புவரை என்னிடம் இருந்தது.

“இவன் யார்? ஏன் இப்படிப் பார்க்கிறான்? வலது புறம் திரும்பும்போது கண்களில் நீர் ததும்புகிறது இடது புறம் திரும் பும்போது கண்களில் கோபாக்னி வீசுகிறதே! ....”

“ஆம், இவன் இரணியகசிபு -தன் தம்பி இரண்யாட்சன் இறந்து போன செய்தியைத் தூதர் மூலம் அறிந்து வருந்துகிறான். அதே சமயம் தன் தம்பியைக் கொன்ற மாயாவியான ஹரியைப் பழி வாங்க வேண்டுமென்ற ஆவேச உணர்ச்சியால் கோபாக்னி வீசுகிறது”

“வீரம், சோகம், கோபம் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் மாறி மாறித் தோன்றும்படியாகச் செய்வது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது”.

இவ்வாறு கேள்வியும், விடையுமாக நாடகத்தின் முக்கிய கட்டங்களைப்பற்றியெல்லாம் குறிப்பிட்டு, நீளமான விளம்பர அறிக்கை வெளியிடுவார் சுவாமிகள். இந்த விளம்பரங்களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரும் பைத்தியம்.

மாட்டு வண்டிப் பயணம்

இப்போது நான் சொல்லப் போகும் செய்தி உங்களுக்குப் பெரும் வியப்பாக இருக்கும். கற்பனையல்ல; உண்மையாக நடந்த சம்பவம்.

விருதுப்பட்டிக்குச் சில மைல் தூரத்தில் மல்லாங்கிணறு: என்று ஒரு சிற்றுார். விருதுப்பட்டியில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்தியபின் மல்லாங்கிணறு சென்றோம். அப்போது அந்த ஊருக்குப் போவதற்கு நல்ல பாதையில்லை. பஸ் போக்கு வரத்தெல்லாம் கிடையாது. கரடு முரடான அந்தப் பாதையில் இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்ச் சேர்ந்தோம். பெரியவர்கள் சிலர் வண்டியின் ஆட்டத்திற்குப் பயந்து தமாஷாகப் பேசிக்கொண்டே நடந்து வந்து சேர்ந்தார்கள்.

வேட்டு விளம்பரம்

நாங்கள்போன மறுநாள் நாடகம் வைக்கப்பெற்றிருந்தது. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி. விளம்பர அறிக்கை களைச் சேகரித்து வைப்பதில் அந்த நாளில் எனக்குப் பெரிய பைத்தியமென்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? நாடக நோட்டீஸ் வேண்டுமென்று சில பெரியவர்களிடம் கேட்டேன். கிடைக்கவில்லை. “இந்த ஊரில் நோட்டிஸ் போடும் வழக்கம் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பெரிய அதிசயமாக இருந்தது. விளம்பரம் ஒன்றும் இல்லாமல் நாடகத்திற்கு மக்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி மனத்தில் எழுந்தது. எவரிடமிருந்தும் சரியான விடை கிடைக்வில்லை.

நாடகம் இரவு பத்து மணிக்கு ஆரம்பம் என்று சொன்னார்கள். இரவு 7.30 மணிக்கு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று காது செவிடு படும்படியாக ஒரு பெரிய வேட்டுச் சத்தம் கேட்டது ஊரே அதிர்ந்து விடும் போல இருந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் எல்லோரும் பயத்துடன் நான்கு புறமும் பார்த்தோம். உடனே சங்கரதாஸ் சுவாமிகள்,“ டேய்! ஒன்றுமில்லை. நாடக விளம்பரத்திற்காக வேட்டுப் போடுகிறார்கள்” என்றார், அப்போதுதான் எங்களுக்கு விஷயம் புரிந்தது.

அந்த ஊரில் கொட்டகை வாசலில் வேட்டுப் போடுவதற்காக ஒர் இடம் அமைக்கப்பட்டிருந்ததைப் போகும்போது பார்த்தோம், இரவு 7.30 மணிக்குமேல் மூன்று முறை வேட்டுப் போடுவார்களாம். அந்த ஊரிலும், சுற்றுப்புறத்தில் சுமார் ஏழு எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றுார் மக்கள் இந்த வேட்டுச் சத்தத்தைக் கேட்டுவிட்டு, மல்லாங்கிணறு கூத்து மேடையில் நாடகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்களாம். எவ்வளவு எளிமையான விளம்பர முறை பார்த்தீர்களா?

வெளிச்சம் போடும் முறை

இரவு 8.30 மணிக்கு எல்லோரும் கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதெல்லாம் மதுரையிலேயே கூட மின்சார விளக்கு கிடையாது. ஆக மொத்தம் நான்கு கியாஸ் லைட்டுகள் தாம் கொட்டகை முழுதும் வெளிச்சம் கொடுக்க வேண்டும். பிரதான வாயிலில் ஒன்று; மேடையுள்ளே வேடம் புனையும் இடத்தில் ஒன்று, மேடையின் இருபுறமும் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேலே கட்டித் தொங்கவிடப்பெற்றிருக்கும். கொஞ்சம் பெரிய நகரமாய் இருந்தால் இன்னும் இரண்டு கியாஸ் லைட்டுகள் வரும். சபை நடுவில் ஒன்று; மேடை நடுவில் ஒன்று. மல்லாங் கிணறு சிற்றுாரானதால் நான்கு லேட்டுகள்தாம் இருந்தன. இந்த வெளிச்சத்தில் எப்படி நாடகம் பார்த்தார்கள் என்பதை இன்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. நம் கண்களுக்கு இன்னும் நுண்ணிய பார்வை இருந்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். மின்சார வெளிச்சம் வந்த பின் கண் பார்வைக்கிருந்த வலிமை போய்விட்டது. ஒலி பரப்பும் மைக் வந்தபின் அதைக் கேட்டுக் கேட்டு, நம் செவிகளின் வலிமையும் குறைந்து விட்டது.

திறந்த வெளி அரங்கம்

இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நாலா பக்கங்களிலுமிருந்து இரட்டை மாட்டு வண்டிகளிலும், கால் நடையிலுமாகப் பெருந் திரளாக மக்கள்வந்து கூடிவிட்டார்கள், பத்தரை மணி சுமாருக்கு நாடகம் தொடங்கியது. திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தார்கள்.

திறந்த வெளியிலே நாடக அரங்கம் அமைப்பது நமக்குப் புதிதன்று. பண்டைக் காலத்திலேயே நாடகம், நடனம், பிற கூத்து வகைகள் எல்லாம் திறந்த வெளி மேடைகளில் தாம் நடைபெற்று வந்தன. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய ஆலயங்களிலெல்லாம் விழாக் காலங்களில், அன்றும் இன்றும் கல நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திறந்த வெளிகளிலேதான் நடை பெற்று வருகின்றன. இந்தத் திறந்த வெளி அரங்குகளைத் ‘தெருக்கூத்து மேடைகள்’ என்று மக்கள் குறைவாகக் கருதி வந்தார்கள். சென்ற பல ஆண்டுகளாகத் திறந்த வெளி அரங்கின் நினைவு மாறாமல், அழியாமல் பாதுகாத்து வந்தவர்கள் தெருக் கூத்து ஆடியவர்கள்தாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அது மட்டுமன்று, பாரத விடுதலைப் போராட்டத்தில் தன்னை முதல் பலியாகக் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மணத் தமிழர் மறந்துவிடாதபடி நினைவூட்டிக் கொண்டிருந்தவர்கள், இந்தத் திறந்த வெளி மேடைகளிலே கூத்து நடத்திய கலைஞர்களே என்றால் அதுவும் நன்றியறிதலோடு ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. எனவே, திறந்த வெளி அரங்கம் புதுமை யானதன்று, பழமையெல்லாம் இன்று புதுமையாகக் கருதப் படுவதுபோலத்தான் இதையும் கொள்ளவேண்டும்.

பயங்கர அமைதி

நாடகம் நடந்து கொண்டிருந்தது. இல்லை. நாடகத்தை மக்கள் கொஞ்சங்கூட ரசித்ததாகத் தெரியவில்லை. உள்ளே இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் இதைப்பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். நான் சின்னப் பையனாக இருந்ததால் மேடைக்கு வந்தவுடனேயே ஜனங்கள் கைதட்டி வரவேற்பது வழக்கம். சபையோர் மந்த மாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள்,

“எல்லாம் சண்முகம் பயல் மேடைக்குப் போனவுடன் சரியாய்ப் போய்விடும்.”

என்று கூறியது என் காதில் விழுந்தது. நாரதர் வர வேண்டிய காட்சியும் வந்தது. “சங்கீத சுகமே பெரிய சுகம்” என்று பாடிக்கொண்டு நான் அரங்கில் பிரவேசித்தேன். வழக்கம் போல் பெருத்த கரகோஷத்தை எதிர்பார்த்த எனக்குப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. சபையில் முழு அமைதி நிலவியது. தூரத்தில் கற்றாழைப் புதர்கள்; குறைவான வெளிச்சம், எதிரே பயங்கரமான அமைதி. எனக்கு என்னமோ போலிருந்தது. திறந்த வெளியில் நடிப்பது எனக்குப் புதிய அனுபவம். அவையோரின் மரண அமைதி எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. முகத்தில் சோகச்சுவை ததும்ப, நான் உள்ளே வந்து சேர்ந்தேன்.

எமதருமன் தோன்ற வேண்டிய காட்சி வந்தது. சிந்தனை யிலேயே உட்புறம் உலாவிக் கொண்டிருந்த சுவாமிகள், எம தருமனக வேடம் புனேந்திருந்த கந்தசாமியிடம் போய் ஏதோ காதில் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே எமதருமன் காலில் ‘சலங்கை’ கட்டப் பெற்றது. காட்சி தொடங்கியது.

எமதருமன் ஆட்டம்

“விண்டலமும் மண்டலமும் எண்டிசை யடங்களுக் விளங்கும் கீதி மார்க்கம் அடுப்பேன்”

என்று தொடங்கும் பாடலே முழக்கிக் கொண்டு எமன் கந்தசாமி மேடைக்கு வந்தார். வழக்கத்திற்கு மாருகக் கையிலிருந்த குலா யுதத்தைச் சுழற்றிக் கொண்டு. ‘தை தக்க தை தக்க தை’ என்று குதித்துக் கொண்டு, ‘ஜல் ஜல்’ எனச் சலங்கைகள் ஒலி செய்ய, அரங்கம் முழுவதும் ஆட்டம் போடத் தொடங்கினார்.

சபையில் ஒரே கரகோஷம்! அமைதியாயிருந்த சபையில் ஆரவாரம்!! பலே பலே என்ற சத்தம் !!!

அப்போதுதான் எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. நடிகர்கள் ஆடிக்கொண்டு வரவேண்டும் என்பதையும், ஆடாத நாடகம் அதுவரை மல்லாங்கிணற்றில் நடந்ததே இல்லை யென்பதையும் தெரிந்து கொண்டோம்.

இந்த நாளிலே கூட நாடகத்தை ‘ஆட்டம்’ என்று சொல்வது வழக்கில் இருந்து வருவதைப் பார்க்கிறோமல்லவா?

அன்றைய நாடகத்தில் எமனுக நடித்த கந்தசாமிக்குப் பிரமாதமான பேர். அவரைத் தவிர மற்ற நடிகர்கள் நன்றாயில்லை யென்று பலரும் பேசிக் கொண்டார்களாம்.

எப்படி வேட்டில் விளம்பரமும் வினோத ஆட்டமும்?

மல்லாங்கிணற்றில் நாடகங்கள் அதிக நாட்கள் நடைபெற வில்லை. வெகு விரைவிலேயே சாத்துரர் போய்ச் சேர்ந்தோம், சாத்துரில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

கம்பெனியின் நடிகர்கள்

அந்த நாட்களில் இப்பொழுது நடைபெறுவதைப் போல் தினசரி நாடகம் கிடையாது, வாரத்திற்கு மூன்று நாட்கள் தான் நாடகங்கள் நடைபெறும். இன்னொரு வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை நாடகம் வைப்பது வழக்கமில்லை. இப்பொழுதெல்லாம் சனி, ஞாயிறுதாம் முக்கியமான நாடக நாட்கள்; அந்தக் கிழமைகளில்தான் வசூலாகும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது . அந்தக் காலத்தில் “பிரதி செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் நாடகம் நடைபெறும்”, “ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை”, “அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்” என்றெல்லாம் விளம்பர அறிவிப்பிலேயே போட்டு விடுவார்கள். ஆக மொத்தம் ஒரு மாதத்தில் பன்னிரண்டு அல்லது பதிமூன்று நாடகங்கள் நடைபெறுவது வழக்கம்.

நடந்தே சென்றோம்

நடிகர்களும் மற்றத் தொழிலாளர்களும் எல்லோருமாக ஏறத்தாழ நாடக சபையின் மொத்த எண்ணிக்கை நூறு பேரிருக்கலாம். நாங்கள் தங்கியிருக்கும் வீடு நாடகக் கொட்டகைக்கு அருகிலிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் எல்லோரும் நடந்தே தான் போய் வருவோம். மாலை நாடகம் என்பதெல்லாம் கிடையாது. எப்போதும் இரவு 9.30 மணிக்குத் தான நாடக ஆரம்பம். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் புறப்படத் தயாராகி விடுவோம். பெரியவர் யாராவது ஒருவர், ஒரு அரிக்கன் விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு முன்னே செல்வார். அவரைப் பின்பற்றி நாங்கள் எல்லோரும் செல்வோம். வீதிகளில் ஆங்காங்கு மினுக்-மினுக்’ கென்று வெளிச்சம் தெரியும், சில இடங்களில் வெளிச்சமே இராது. இருள் சூழ்ந்திருக்கும். பாதை தெரிந்து நடப்பதே கஷ்டமாக இருக்கும்.

எல்லோருக்கும் தலைமுடி

அநேகமாக எல்லா நடிகர்களும் தலைமுடியை நீளமாக வளர்த்திருந்தார்கள். இந்த நாளைப்போல் ‘டோப்பா’ வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற்பட்டதில்லை. ஆண் வேடதாரிகள் தலைமுடியைப் பின்னல் சுருட்டி விட்டுக் கொள்வார்கள். பெண் வேடதாரிகள் கொண்டையோ அல்லது சடையோ போட்டுக் கொள்வார்கள். அபூர்வமாக யாராவது ‘கிராப்புத் தலை ஆசாமி, பெண் வேடம் புனைய வேண்டிய நெருக்கடி ஏற்படுவதுண்டு. அப்பேர்ப்பட்ட சமயத்தில் கம்பெனி யிலிருக்கும் ‘டோப்பா’ அவரது தலையை அலங்கரித்து, அகோரமாகக் காட்சி அளிக்கும். அந்த நடிகரும் தமது டோப்பா வைத்த அழகிய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உடனடியாகத் தலைமுடி வளர்க்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்வார்.

கம்பெனியில் அப்போது முக்கிய வேடங்களைத் தாங்கிய நடிகர்கள் சிலரைப்பற்றி இங்கே குறிப்பிடுவது கடமையெனக் கருதுகிறேன்.

பாட்டா ராமகிருஷ்ணன்

அப்போது நாடக சபையில் முக்கிய கதாநாயகனாகவிளங்கியவர் திரு டி. ஆர். ராமகிருஷ்ணன். இவர் சங்கரதாஸ் சுவாமிகளின் பேரன். இவரை நாங்கள் எல்லோரும் ‘பாட்டா’ என்றே அழைப்பது வழக்கம். சங்கரதாஸ் சுவாமிகளை நாங்கள் எல்லோரும் சுவாமி என்று கூப்பிடுவோம். இவர் சுவாமிகளின் பேரன் என்ற முறையில் அவரைப் ‘பாட்டா’ என்றே அழைப்பார். எனவே நாளடைவில் இவரையே நாங்கள் ‘பாட்டா’ என்று கூப்பிடத் தொடங்கி விட்டோம். பாட்டா என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. சுவாமிகளும் இவரைப் பாட்டா என்றே கூப்பிடுவார்.

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் பாட்டா இராம கிருஷ்ணன் சத்தியவானாகத் திறம்படப் பாடி நடிப்பார்.

சாரீரம் கணிரென்றிருக்கும். சீமந்தனி நாடகத்தில் சந்திராங்கதனுகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானுகவும், சுலோசன சதியில் ஆதிசேடனுகவும் நடிப்பார். ஆண் வேடத்தில் எப்படித் திறமையாக நடிப்பாரோ அப்படியே பெண் வேடத்திலும் பெயர் பெற்றவர். பவளக்கொடியில் அல்லியாகவும், சதியனுசூயாவில் அனுசூயாவாகவும் தோன்றுவார்.

1922-இல் நாடக சபை திண்டிவனத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த போது, இவர் கம்பெனியிலிருந்து விலக நேர்ந்தது. அதன் பிறகு பல நாடக சபைகளில் பணி புரிந்திருக்கிறார், ஸ்பெஷல் நாடக நடிகராக இலங்கையில் சில ஆண்டுகள் இருந்து, இறுதியாக நாடகத்துறையை விட்டே விலகி, இப்போது சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து வருகிறார்.

பெரியண்ணா டி. கே. சங்கரன்

என் மூத்த அண்ணா டி. கே. சங்கரன் நாடக சபையில் மற்றொரு கதாநாயகனாக விளங்கினார். ‘சுலோசன சதி’ நாடகத்தில் அண்ணாதான் இந்திரஜித்துவாக நடிப்பார். சாரீரம் கெம்பீரமாக இருக்கும். வசனங்களைத் தெளிவாகப் பேசுவதில் இவருக்கு ஒரு தனித் திறமை இருந்தது. சுலோசனையை இந்திர ஜித்து சிறையெடுத்துப் போவதாகத்தான் கதை. சுவாமிகளும் அப்படியேதான் மற்றவர்களுக்கு, சுலோசன சதி நாடகத்தை எழுதிக் கொடுத்திருந்தார். ஆனால் பெரியண்ணாவின் பேச்சுத் திறமையைக் கண்டு மகிழ்ந்த சுவாமிகள், சிறையெடுத்துப் போவதை மாற்றி, சுலோசனை தானுக மனமிசைந்து இந்திரஜித்துவுடன் செல்லுவதாகக் கதையை அமைத்துக் கொண்டார். இதற்காக இந்திரஜித்துவுக்கு ஒரு நீண்ட வசனம் எழுதினார். இந்த வசனத்தைப் பேசி முடிக்கச் சுமார் பத்து நிமிடங்கள் ஆகும். இந்த வசனத்தில் தமிழின் சிறப்பும், தமிழர்களின் திருமண வாழ்க்கை பற்றிய செய்திகளும் விரிவாக இடம் பெற்றிருந்தன. ஒரு மங்கை தன் மனத்திற் கிசைந்த ஆடவனோடு தனித்துச் செல்வது தவருகாது என்பதை இந்திரஜித்து சுலோசனைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ள வசனம் இது. இந்த வசனத்தை அந்த நாளில் பெரியண்ணா பேசி முடித்ததும் சபையோர் மகிழ்வோடு கைதட்டிப் பாராட்டு வார்கள். ‘தமிழ் வசனம்’ என்றே நாங்கள் இதைக் குறிப்பது வழக்கம்.

இன்னும் சீமந்தனியிலே அவலோகன்: பவளக்கொடியில் அருச்சுனன்; பிரகலாதாவில் இந்திரன்; அபிமன்யு சுந்தரியில் துரியோதனன் ஆகிய வேடங்களில் அண்ணா நடித்து வந்தார். இடைக் காலத்தில் 1924-இல் இவர் நடிப்பைக் கைவிட்டுக் கம்பெனியில் கணக்கு வேலைகளைப் பார்த்து வந்தார். பிறகு நாங்கள் இசாந்தக் கம்பெனி துவக்கியபோது மீண்டும் நடிப்புத் துறைக்கு வந்து விட்டார்.

கதாநாயகி சிங்காரவேலு

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் முன் சாவித்திரியாக நடித்தவர் திரு சிங்காரவேலு. இவர் தம்முடைய பெயருக்கு ஏற்ற படி சிங்கார பாகங்களில் மிகத் திறமையாக நடிப்பார். அந்தநாளில் முன், பின் என்று ஒரே பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொடுப்பது வழக்கம். அநேகமாகக் காதல் காட்சிகளெல்லாம் இவருக்கே கொடுப்பார்கள். சுலோசன சதியிலும் இவர் முன் சுலோசனையாக நடிப்பார். பவளக்கொடி, அபிமன்யுசுந்தரி இரு நாடகங்களிலும் இவர் சுபத்திரையாகத் தோன்றுவார். 1921- இல்சென்னையில் நடித்துக் கொண்டிருந்த சமயம் சிங்காரவேலு ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ க்குப் போய் விட்டார். அங்கு, பல ஆண்டுகள் நடித்துப் புகழ் பெற்றார்.

நல்ல பாடகர் நல்லகண்ணு

திரு நல்லகண்ணு திருநெல்வேலியில் பிறந்தவர். பின் சாவித்திரியாகவும், பின் சுலோசனையாகவும் நடிப்பார். இனிமையான குரல்; அருமையாகப் பாடுவார். சோகமாக நடிக்க வேண்டிய பாகங்களில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். சதியனுசூயாவில் நருமதையாகவும், பவளக்கொடியில் பவளக் கொடியாகவும் தோன்றுவார். இவர் 1922-இல் கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்தபோது விலகிக்கொண்டார். வேறு சில நாடக சபைகளில் இருந்த பின்பு, திருநெல்வேலியில் தையற் கடை வைத்துக் கொண்டிருந்தபோது நான் இவரைச் சந்திக்க நேர்ந்தது.

எமன் கந்தசாமி

எமனக நின்று என்னைப் பயமுறுத்திய திரு கந்தசாமியை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இவர் தான் என் நினைவில் இன்னும் பசுமையாக இருப்பவர், இரணியன் கடோற்கஜன் முதலிய இராட்சதவேடங்கள் இவரது தனி உரிமை இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவர் 1922-இல் கம்பெனியிலிருந்து விலகினார். பிறகு வேறு துறைகளில் ஈடுபட்ட தாகக் கேள்வி.

பயூன் ராமசாமி

கம்பெனியின் ஒரே நகைச்சுவை நடிகராகத்தனியரசு புரிந்தவர் திரு ராமசாமி. எல்லா நாடகங்களிலும் இவர் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிப்பார். அந்த நாளில் அவசிய மென்று கருதப்பட்ட ‘பபூன்’ ஆகவும் அடிக்கடி வந்து பாடிப் போவார். அவருக்கென்றே சுவாமிகள் சில புதிய நகைச்சுவைப் பாடல்களை இயற்றினார். இவர் ஆஞ்சநேயராக நடிப்பதற் கென்றே ‘இலங்காதகனம்’, நாடகமும் தயாரிக்கப் பெற்றது. கம்பெனி பூவிருந்தவல்லியில் இருந்த பொழுது இவரும் விலகிக் கொண்டார். நாங்கள் தூத்துக்குடிக்குப் போகும் போதெல்லாம் இவரைச் சந்திப்பதுண்டு.

சின்னண்ணா டி.கே. முத்துசாமி

சின்னண்ணா திரு. டி. கே. முத்துசாமி கம்பெனியின் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்கள்தாம் புனைந்து வந்தார். சுலோசன சதியில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுக வும் நடிப்போம். சீமந்தனியிலே அவர் சுமேதாவாக நடிப்பார். நான் சாமவானக நடிப்பேன். மற்ற நாடகங்களில் எல்லாம் சின்னண்ணாவுக்குப் பெரும்பாலும் தோழி வேடந்தான். 1921இல் சென்னைக்கு வந்தபிறகுதான் அவர் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். சின்னண்ணாவுக்கு ஆரம்பத்தில் நன்றாகப் பாட வராது. அந்தக் குறையைப் போக்க அவர் அரும்பாடு பட்டுச் சங்கீதம் கற்றுக் கொண்டார். பின்னல் அவர் நன்முகப் பாடவும், ஆர்மோனியம் வாசிக்கவும், ஆசிரியராக இருந்து, மற்றவர்களேத் தயாரிக்கவுமாகத் தம்மை வளர்த்துக் கொண்டார். 1935-இல் நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நடித்த மேனகா பேசும் படத் திற்குச் சின்னண்ணா சங்கீத டைரக்டராகவும் இருந்தார் என்பதை இங்கே மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.

சாத்துளரிலும் சிவகாசியிலும் நாடகங்கள் நடித்துவிட்டு மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். புதிய நாடகங்கள் சில தயாரிக்கப் பெற்றன. புதிய நடிகர்களும் சிலர் கம்பெனியில் சேர்ந்தார்கள். மதுரையில் மீண்டும் ஒரு மாத காலம் நடித்து விட்டுச் சிவகங்கைக்குப் பயணமானோம்.

பாட்டி முத்தம்மாள்

சிவகாசி வரையில் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே வசித்து வந்தோம். தாயார் மதுரையிலே இருந்தார்கள். அவர்களைப் பிரிந்திருப்பது எனக்கு வேதனையாகத்தான் இருந்தது. தந்தை யாரைப் பெற்ற தாயார் திருமதி முத்தம்மாள் அன்னையாருக்குத் துணையாக இருந்தார்கள். 1920-இல் எங்களுக்கு ஒரு தங்கை பிறந்தாள். சுப்பம்மாள் என்று அவருக்குப் பெயர் சூட்டப் பெற்றது.தாய்க்கும் பாட்டிக்கும் மாமி, மருமகள் உறவு ஒத்துப் போகவில்லை. சின்னண்ணா பெரியண்ணா இருவரும் திருவனந்த புரத்தில் பாட்டியிடமே வளர்ந்தவர்கள். மதுரைக்கு வரும்போது நானும் பகவதியும் தானிருந்தோம். மதுரை வாசம் உறுதிப்பட்ட பிறகு, பாட்டியார் அவர்களை அழைத்து வந்தார்கள். மதுரைக்கு வந்த பாட்டியார், இறுதிக்காலம் வரை எங்களோடு இருக்கத் திட்டமிட்டுத்தான் வந்தார்கள். அதற்குத் தடையாக இருந்தது, வீட்டில் எந்நேரமும் சச்சரவு. தாயார் எவ்வளவு அடங்கிப்போனலும் சண்டை ஓய்வதில்லை. இந்த நிலையில் பாட்டி, தம் சின்ன மகனிடம் போகவேண்டுமென்று நச்சரித்தார்கள்.தந்தையாரால் பாட்டியின் தொல்லையைப் பொறுக்க முடியவில்லை. விருதுப்பட்டியிலிருந்தபோது பாட்டியாரைத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார் தந்தை. அதன்படி இரண்டு நாள் ஒய்வில் மதுரை சென்று, பாட்டியையும் அழைத்துக் கொண்டு செங்கோட்டை வரை ரயிலில் சென்றார். பிறகு திடீரென்று என்ன நினைத்தாரோ, தெரியவில்லை. பாட்டியாரைத் தனியே அனுப்பிவிட்டு, அங்கேயே தலையை மொட்டை போட்டுக் கொண்டு, உச்சிக் குடுமியோடு விருதுப்பட்டி வந்து சேர்ந்தார். “எதற்காக இந்த மொட்டை?” என்றார்கள் அவரது நண்பர்கள். “தாயாரை ஊருக்கு அனுப்பி விட்டேன். இனிமேல் மீண்டும் அவர்களைப் பார்ப்பேனென்ற நம்பிக்கை இல்லை. எனவே இறுதிக் கடமையை முடித்துக் கொண்டேன்” என்று சமாதானம் கூறினார். இப்போது சிவகங்கைக்குப்பயணமானவுடன் அன்னயாரும் உடன் வந்தார்கள். சிவகங்கையில் தாயாருடன் தனி வீட்டிலேயே வசித்து வந்தோம்.