உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/மறுபிறப்பு

விக்கிமூலம் இலிருந்து
மறு பிறப்பு

சுமார் ஆறுமாத கால ஓய்வுக்குப் பின்னார் புதிய உற்சாகத் தோடு கம்பெனியைத் துவக்கினோம். 1936 மே மாதம் 19ம் நாள் மீண்டும் ஈரோட்டிலேயே கம்பெனி புனார்ஜென்மம் எடுத்தது. எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் பெரும்பாலோரும் வேறு கம்பெனிகளுக்குச் செல்ல மனமின்றி இருந்ததால் கம்பெனியை மீண்டும் தோற்றுவிப்பதுஎளிதாக இருந்தது. பழைய நடிகர்கள் பலரும் வந்து சேர்ந்தார்கள்.

எங்கள்மீது அன்புகொண்ட பெரியார் ஈ.வே. ரா. அவர்கள் விளம்பரச் சுவரொட்டிகளைத் தம் அச்சகத்தில் இலவசமாகவே அடித்துக் கொடுத்து உதவினார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் நட்பு

இந்தச் சந்தர்ப்பத்தில் 1934 முதல் எங்களோடு நட்புரிமை பூண்ட டாக்டர் கிருஷ்ணசாமி எனக்குப் பெரிதும் உதவினார். 1929 முதலே வலது கையில் எனக்கு ஒரு வலி ஏற்பட்டிருந்தது. அந்த வலிக்கு ஊசி போட்டுக் கொள்வதற்காக நண்பர் ஈஸ்வரன் எனக்கு டாக்டரை அறிமுகப்படுத்தினார். அது முதல் டாக்டர் சிருஷ்ணசாமிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. உடன் பிறந்த சகோதரரைப்போல் எண்ணி, டாக்டர் எனக்குச் சிகிச்சையளித்தார். மருந்துக் கூடப் பணம் பெறாமல் தாமே அனைத்தும் செய்தார். டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பொதுவுடமை வாதி. தோழர் ஜீவா, பி. இராமமூர்த்தி, பெரியார் ஈ வே. ரா. ஆகியோருடன் தொடர்புடையவர். மேனகா படத்திற்காக தாங்கள் பம்பாய்சென்றிருந்தபோது அவரும்பம்பாய்க்குவந்திருந் தார், நாங்கள் கம்பெனியை நிறுத்தியபோது மிகவும் வருந்திய  வர்களில் டாக்டரும் ஒருவர். எனவே இப்போது மீண்டும் கம்பெனியைத் தொடங்கியதால் அவர் உற்சாகத்தோடு தேவையான உதவிகளைச் செய்தார்.

கொட்டகை வாடகை, விளம்பரம் முதலிய செலவுகளுக்குப் பயந்து பெரிய நகரங்களுக்குச் செல்லவில்லை. சிறிய ஊர்களுக்கே சென்றுவந்தோம். இம்முறை கம்பெனி முன்னேறிச் செல்லாவிட்டாலும் பின்னோக்கிப் போகவில்லை. நம்பிக்கையளிக் கும் முறையில் நடை பெற்றுவந்தது.

ஜூபிடர் அழைப்பு

தாராபுரத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது மேனகா படத்தில் பங்காளிகளாக இருந்த எஸ். கே. மொய்தீனும், எம்.சோமசுந்தரமும் வந்தார்கள். தாங்கள் ஜூபிடர் பிகசர்ஸ் என்னும் பெயரால் ஒரு படக் கம்பெனியைத் துவக்கியிருப்பதாகவும் சந்திர காந்தா நாடகத்தைப் படமெடுக்கப் போவதாகவும் கூறினார்கள். அப்போது நாங்கள் சந்திரகாந்தா நாடகத்தை நிறுத்தியிருந்தோம். என்னையும் தம்பி பகவதியையும் சுண்டுர் இளவரசனுக்கும் ராகவரெட்டிக்கும் ஒப்பந்தம் செய்ய விருப்புவதாகச் சொல்லி, அந்த நாடகத்தை ஒருமுறை பார்க்க வேண்டுமென்றும் கூறினார்கள். அப்போது சந்திரகாந்தா நாடகத்துக்குரிய காட்சியமைப்புகள் எதுவும் இல்லை. என்றாலும் அவர்கள் வேண்டுதலை மறுக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு நாடகத்தைத் தாயாரித்தோம். சந்திரகாந்தா நாடகம் ஒருநாள் நடந்தது. ஜூபிடர் பிக்சர்ஸார், சந்திரகாந்தா நாவலின் ஆசிரியர் ஜே. ஆர். ரங்கராஜு முதலியோர் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகம் முடிந்த பிறகு சென்னைக்குப்போய் விபரமாகக் கடிதம் எழுதுவதாகக் கூறிச் சென்றார்கள். சந்திர காந்தாவுக்கு டைரக்டராக ராஜா சாண்டோவையே ஏற்பாடு செய்திருந்தார்கள்.அவர் எங்கள் நால்வரையும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் அவசியம் ஏற்படு செய்யும்படி சொல்லி யிருந்தாராம். இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் ஜூபிடரிலிருந்து கடிதம் வந்தது.

ராகவ ரெட்டி வேடத்திற்கு வேறு ஒருவரைப் போடும்படி படியாக ரங்கராஜு கூறிவிட்டாரென்றும், சுண்டுர் இளவரசனுக்கு மட்டும் என்னைப்போட உறுதி செய்திருப்பதாகவும் அதற்குச் சம்மதிக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தது. பெரியண்ணாவுக்கு என்னைத் தனியே அனுப்ப விருப்பமில்லை.

“வுண்முகத்தையும் பகவதியையும் அழைத்து போவ தானல் அனுப்புகிறேன். ஷண்முகத்தை மட்டும் அனுப்பிவிட்டுக் கம்பெனியை நிறுத்திவைக்க நான் விரும்பவில்லை” என்று ஜூபிடருக்குப் பதில் எழுதினார் பெரியண்ணா. எனக்கு மட்டும் ஐயாயிரம் ரூபாய்கள் கொடுப்பதாகவும் ராஜா சாண்டோ வற்புறுத்திக் கூறியிருப்பதாகவும் அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் மீண்டும் கடிதம் வந்ததது. பெரியண்ணா இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். வேறு வழியின்றி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் குண்டுர் இளவரசனுக நடித்த பி.யு. சின்னப்பாவை ரூபாய் ஐநூறுக்கு ஒப்பந்தம் செய்ததாக அறிந்தோம். சின்னப்பா அவர்களுக்கு சந்தரக்காந்தாதான் முதல் படம் என்பதும், அவருடைய வளர்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.