எனது நாடக வாழ்க்கை/சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து
சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள்

திருச்சியில் நாங்கள் இருந்த 1945-46இல் சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. அவற்றில் நாடகத் துறையின் வளர்ச்சியினை விரும்பும் கலா ரசிகர்களுக்கு, மகிழ்வளிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று ஈரோடு மாநாட்டினைப் பின்பற்றி 31-3.45இல் தஞ்சையிலுள்ள கரந்தை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த இரண்டாவது நாடகக்கலை மாநாடு. சங்கத் தலைவர் திரு ஐ. குமாரசாமிப்பிள்ளை முன்னின்று இதனை நடத்தினார். இந்த மாநாட்டில் எங்கள் நாடக சபையின் சார்பில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி கலந்து கொண்டார். முதல் நாடகக்கலை மாநாட்டின் செயலாளர் டி. என். சிவதாணு இம் மாநாட்டிலும் செயலாளராக இருந்து மாநாட்டைச் சிறப்புற நடத்தி வைத்தார்.

இரண்டு, 9.2.46இல் சென்னையில் நடைபெற்ற முன்றாவது நாடகக்கலை மாநாடு. இதனை முன்னின்று நடத்தியவர் நாடகமணி எம். என். எம். பாவலர். இந்த மாநாட்டிலே தான் கே. ஆர் இராமசாமிக்கு கடிப்பிசைப் புலவர் என்றபட்டம் வழங்கப்பட்டது இந்த மாநாட்டிலும் டி. என், சிவதாணு கலந்து கொண்டார். இம் மூன்று மாநாடுகளுக்குப் பின், சென்ற 28 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நாடக வளர்ச்சிக்கென்று மாநாடு எதுவும் இன்று வரை நடைபெற வில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பழைய முதலாளி பழனியாபிள்ளை

எங்கள் பழைய நாடக முதலாளி திரு. பழனியாபிள்ளை திருச்சியில் எங்களைச் சந்தித்தார். அவர் மிகவும் சிரமமான நிலையிலிருந்தார். ஸ்ரீமீனலோசனி பால சற்குண நாடக சபா என்னும் பெயரால் ஒரு நாடக சபையைப் பல ஆண்டுகள் சிறப் பாக நடத்தியவர். இலங்கைக்கும் சென்று பெரும்புகழ் பெற்றவர். திரு. டி. எஸ். துரைராஜ்,எம். ஆர். சாமிநாதன் சி.வி. முத்தப்பா, சபாபதி முதலிய எத்தனையோ நடிகர்கள் அந்தக்குழுவிலிருந்து பெருமைப் பெற்றார்கள். அந்தப் பெரியவர், கம்பெனி யெல்லாம் கலைந்துவிட்ட நிலையில் தன்னந்தனியாக வந்திருந்தார். அவருக்கு உதவ வேண்டியது எங்கள் கடமையென்பதை உணர்ந்தோம். 5-3-45இல் நடந்த குமாஸ்தாவின் பெண் நாடகத்தின் வசூல் முழுவதையும் அவருக்குக் காணிக்கையாக மேடையிலேயே அளித்தோம்.

கவியின் கனவு

23-4-45இல் ஸ்ரீசக்திநாடக சபாவின்கவியின் கனவு நாடகம் பார்ப்பதற்காக நாகப்படடினம் சென்றிருந்தேன். திரு. சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் பெரு முயற்சியால் அந்த நாடக சபை புதிதாக உருவாயிருந்தது. காட்சிகளையெல்லாம் புதிய முறையில் அமைத்திருந்தார்கள். கவியின் கனவு ஒரு புரட்சிக்கரமானதேசிய சரித்திர நாடகம். இந்நாடகத்தை எழுதியவர் இப்போது சங்கீத நாடக சங்கத்தின் செயலாளராகப் பணி புரிந்துவரும் கவிஞர் கலைமாமணி எஸ்.டி.சுந்தரம் அவர்கள், மக்களுககு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டத்தக்க முறையில் நாடகத்தின் உரையாடல்கள் அமைந்திருந்தன. பாலக்காட்டில் எங்களை விட்டுப் பிரிந்த எஸ். வி. சுப்பையா அவர்களை மீண்டும் அந்த மேடையிலேதான் நான் பார்த்தேன். நாடகத்தில் அவர் புரட்சிக் கவிஞனாகவந்து அற்புதமாக நடித்தார். திரு. எம். என். நம்பியார் சர்வாதிகாரியாக நடித்தார். அவருடைய திறமையான நடிப்பு, வட இந்தியத் திரைப்பட நடிகர் சந்திரமோகனை நினைவூட்டியது. நாடகத்தை நான் மிகவும் ரசித்தேன்.

நாடகம் முடிந்ததும் திரு. எஸ். டி. சுந்தரம், திரு. சக்தி கிருஷ்ணசாமி இருவரையும் மனமாரப் பாராட்டினேன். நண்பர் எஸ். வி. சுப்பையாவுக்கு வாழ்த்துக் கூறினேன். மறுநாள் நாகையிலேயே தங்கி, அவர்கள் கம்பெனி வீட்டிலேயே விருந்துண்டு 24- 4. 45இல் திருவாரூர் வந்தேன். அங்கு காரைக்குடி ஸ்ரீராம பாலகான சபையாரின் எதிர்பார்த்தது என்னும் சமூக நாடகம் பார்த்தேன். இந்நாடகம் திரு. நா. சோமசுந்தரம் அவர்களால் எழுதப் பெற்றது. உரையாடல்கள் புதியநடையில் எழுதப்பெற். றிருந்தன. நாடகம் நன்றாயிருந்தது. நடிகர்களும் சிறப்பாக நடித்தார்கள். கவியின் கனவு, எதிர்பார்த்தது ஆகிய இரு நாடகங்களும் எனக்குப் புதிய உற்சாகத்தை தந்தன. இரு நல்ல நாடகங்களைப் பார்த்த களிப்புடன் திருச்சிக்குத் திரும்பினேன்.

பூவளூர் பொன்னம்பலனார்

பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கத்தோழர்களில் பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்கள் குறிப்பிடத்தக்க தலைவராவார். சிறந்த சொற்பொழிவாளர். கோட்டையூரில் சண்டமாருதம் என்னும் வார ஏட்டினை அவர் நடத்தி வந்தார். எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். பெரியண்ணாவுக்குப் பொன்னம்பலஞரிடம் பெருமதிப்பு உண்டு. நீண்ட காலமாக அவர்தம்முடைய ஊருக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்தை ஏற்று, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பே. விசுவகாதம் அவர்களுடன் 1.5-45 இல் நானும் பெரியண்ணா, பகவதி எல்லோரும் பூவாளுர் சென்றோம். பொன்னம்பலனார் இல்லத்தில் விருந்து புசித்தோம். பூவாளுர் உடற் பயிற்சிக் கழகத்தார் எங்களுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத் தினார்கள். அங்கிருந்து லால்குடி சென்றோம். லால்குடி திரு வள்ளுவர்கழகத்தில் எங்களுக்கு வரவேற்பு நடந்தது. திரும்பு கையில் திருச்சி வரும்வரை முத்தமிழ்க்காவலரும் நானும் மிகவும் பயனுள்ள ஒரு நாடகக் கதை அமைப்பினைப்பற்றி உரையாடிக் கொண்டு வந்தோம். சில ஆண்டுகளுக்குப் பின் முத்தமிழ்க் காவலர் அவர்கள் உருவாக்கிய தமிழ்ச்செல்வம் நாடகக்கதை அன்றைய உரையாடலிலே உருவானதுதான் என்பதுகுறிப்பிடத் தக்கதாகும்.

மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு வருகை

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 2. 2. 46ல் திருச்சிக்கு வருகை புரிந்திருந்தார். அன்று திருச்சி மாநகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. நாங்கள் செய்த தவப்பேற்றின் காரணமாக அன்றுதான் எங்கள் தேசபக்தி நாடகமும் திருச்சியில் ஆரம்பமானது. 1931இல் நாங்கள் மரையில் அரங்கேற்றியபோது தேச பக்தியின் மூலக்கதையான பாணபுரத்து வீரன் நாடகாசிரியர் திரு வெ. சாமிகாத சர்மா அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. பர்மாவில் இருந்தார். அப்போது அந் நாடகநூல்தடை செய்யப்பட்டிருந்த தால் அவரைத் தேடிப்பிடித்துச் சிறப்பிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை. எனவே, திருச்சியில் அந்தச் சிறப்பினச் செய்ய விழைந்தோம். காந்திஜியின் அன்றைய திருச்சி வருகை அதற்கு மேலும் உயர்வளிப்பதாக அமைந்தது. அன்றிரவு தேச பக்திநாடகம் நடைபெற்றது. அன்றைய வசூல் 1122-12.0 ஐயும் வெ. சாமிநாதசர்மா அவர்களுக்குக் காணிக்கையாகக் கொடுத் தோம். அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்திஜியைத் தரிசித்தேன். ஏற்கனவே ஒருமுறை அடிகளை நாகர் கோவிலில் பார்த்திருக்கிறேன். என்றாலும் அன்று அவரைத் தரிசித்தது எனக்குப் புதிய உணர்வினைத் தந்தது.

தேசபக்தி நாடகம் முன்பெல்லாம் நடைபெற்றதைவிடச் சிறப்பான முறையில் இப்போது தயாரிக்கப் பெற்றிருந்தது. “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” என்ற பாடலைப் புதிதாகச் சேர்த்து, பாணபுரம் விடுதலை பெற்றபின் சிறுமியர் ஆடிப் பாடுவதாகக் கூட்டு நடனம் அமைத்திருந்தோம். இந்த நாட்டியத்தை அழகிய முறையில் தயாரித்திருந்தார். டி. என். சிவதாணு. நாமக்கல் கவினார் அவர்களின் ‘சுதந்திரம் இல்லாமல் இருப்பேனோ’ என்ற பாடலை முக்கியமான ஒரு கட்டத்தில் சேர்த்திருந்தோம்.

பேராசிரியர் வ. ரா.

தேசபக்திநாடகம் 19.2.46இல் நடைபெற்றபோது பிரபல எழுத்தாளர் பேராசிரியர் வ. ரா. அவர்கள் தலைமை தாங்கினார். நாடகத்தை ரசித்த அவர் பாராட்டிப் பேசுகையில், இப் படிப்பட்ட ஒரு புரட்சிகரமான நாடகத்தை 1931 முதல் நடித்து வரும் டி. கே. எஸ். சகோதரர்களை நான் எவ்வளவு பாராட்டினலும் போதாது.இந்த தேசம் விடுதலை பெற்றபின் சுதந்திர இந்தியாவில் இந்தக் கலைஞர்களெல்லாம் கட்டாயம் கெளரவிக்கப்படவேண்டும். என்றுகூறினார்.பேராசிரியர் வ.ரா. மிகப் பெரிய சிந்தனையாளர். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது புதிய புதிய கருத்துக்களையெல்லாம் அயைாசமாகக் கொட்டுவார். அவருடைய எழுத்தோவியத்தை நான் முதலா வதாகப் படித்தது காலணு விலையுள்ள காந்தி பத்திரிகையில். திரு. வி. க., பெரியார் ஈ. வே. ரா. முதலியோரைப் பற்றி அவர் எழுதி வந்த குறிப்புகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அதன் பிறகு நான் மணிகொடி இலக்கிய ஏட்டின் தோழனானேன். வ. ரா. விடம் எனக்கு ஒரு தனி மதிப்பு. அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். கோவையில் நடைபெற்ற தமிழ் மாகாண மாநாட்டுக்குச் சென்று, பாரதி பாடல்களைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்த மாநாட்டிலேதான் உடலுழைப்பில்லாத காங்கிரஸ் உறுப்பினார்கள் நூல்சந்தா கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராஜாஜி அவர்கள் அந்தத்தீர்மானத்தைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்த பொழுது, “அந்தத் தீர்மானந்தின் வாசகம் சரியில்லை. திருத்தம் வேண்டும்” என்று பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து ஒர் உருவமும் எழுந்து நின்றது. உடனே ராஜாஜி, எழுந்து நின்ற அந்த உருவத்தை நோக்கி “ஸ்ரீமான் வ. ராமசாமி ஐயங்கார் வாசகத்தைச் சரியாகத் திருத்திக் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’. என்று கூறினார். அன்றுதான் வ. ரா. அவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். ‘ஐயங்கார்’ என்றதும் பட்டைநாமம் , பஞ்சகச்சம், இவைகலெல்லாம் என் கண்முன் நின்றன. பார்த்தேன்; உண்மையாகவே பிரமித்துப் போனேன். அருகிலிருந்த நண்பரிடம் வ. ரா. அவர்கள் ‘ஐயங்காரா?’ என்று கேட்டேன், “பூணூலைக்கூட வெகு நாட்களுக்கு முன்பே அறுத்தெறிந்து விட்ட புரட்சி வீரர்” என்றார் நண்பர். இதைக் கேட்டதும் வ. ரா. அவர்களிடம் நான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் பன் மடங்கு உயர்ந்தன. 1945இல் தான் நான் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. சில மணி நேரங்களே அவருடன் கழித்தேன். அது மறக்க முடியாத நாள். எனக்கேற்பட்டிருந்த மனத் தளர்ச்சி, உற்சாகக் குறைவு எல்லாம் எங்கேயோ ஒடி மறைந்துவிட்டன. வ. ரா. அவர்களின் எழுத்தில் நான் கண்ட அதிசயம் ஒன்று. புத்தகத்தைப் படிக்கிறோம் என்ற உணர்ச்சி மறைந்து, அவர் நம்முடன் பேசிக் கொண்டிருப்பது போலவே உணருவோம். மகாகவி பாரதியாரின் புகழைப் பரப்பியவர்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் வ. ரா. அவர்களே ஆவர். நாம் இருவர்-தாகசாந்தி

பேராசிரியர் வ. ரா அவர்களைப் பார்க்கச் சென்னைக்குச் சென்றிருந்த பொழுது என்னெஸ்கே நாடக சபையின் நாம் இருவரை ஒற்றைவாடை அரங்கில் பார்த்தேன். ப. நீலகண்டன் அவர்களின் இரண்டாவது நாடகம் இது. முள்ளில் ரோஜா திருச்சியில் நடந்து கொண்டிருக்கும் போதே சகோதரர் எஸ். வி. சகஸ்ர நாமத்தின் அழைப்பினை ஏற்று என்னெஸ்கே நாடக சபைக்கு நாம் இருவர் நாடகத்தைக் கொடுத்திருந்தார் ப. நீலகண்டன். நாடகத்தை மிகவும் உன்னதமாகத் தயாரித்திருந்தார் சகஸ்நாமம். இப்போது கே. ஆர். இராமசாமி தனியே கிருஷ்ணன் நாடக சபை என்ற ஒரு புதிய சபையைத் தஞ்சாவூரில் தொடங்கி விட்டதால் நாம் இருவரில் சகஸ்ரநாமமே கதா நாயகனாக நடித்தார். திரு வி. கே. ராமசாமி டி. ஏ. ஜெயலட்சுமி முதலியோரும் இதில் நடித்தனார். நாடகம் ப. நீலக்கண்டனின் நாடகப்புகழை மேலும் பலபடிகள் உயர்த்தியது. மறுநாளும் சென்னையில் தங்கினேன். ஸ்ரீ ராம பாலகான சபையாரின் தாகசாக்தி நாடகத்தை சென்னை சுகுண விலாச சபா நாடக அரங்கில் பார்த்ததாக எனக்கு நினைவு. இப்போது பிளாசா டாக்கீஸ் என்ற பெயரில் நடந்து வரும் அதே தியேட்டர்தான் அப்போது சுகுணவிலாச சபைக்குச் சொந்தமான நாடக அரங்காக இருந்தது. தாகசாந்தி நாடகத்தை நாஞ்சில் இராஜப்பா நல்ல முறையில் தயாரித்திருந்தார்.

காஞ்சில் இராஜப்பா

வைரம் அருணாசலம் செட்டியாரின் ஸ்ரீ ராமபால கான சபாவில் நாஞ்சில் இராஜப்பா நடிகராகவும் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகரும் எழுத்தாளரும் ஆவர். பக்தசாருக தாசராக இவர் நடித்ததை நான் ஒரு முறை காரைக் குடியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். புயலுக்குப்பின் என்று மற்றொரு சரித்திர நாடகத்தையும் பார்த்திருக்கிறேன். இதில் திரு. கே. ஆர். ராம்சிங் அவர்கள் மிக அற்புதமாக நடித்தார். இவருடைய அபாரமான நடிப்பு பிரபாத் டாக்கீசாரின் அமர்ஜோதியில் நடித்த சக்திரமோகனின் நடிப்பை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். வைரம் செட்டியார் கம்பெனியில் பல நடிகமணிகள் தோன்றிப் புகழ் பெற்றனார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எம்.கே. முஸ்தபா, குலதெய்வம் ராஜகோபால், சட்டாம்பிள்ளை வெங் கட்ராமன், சாயிராம், ஏ. ஆர். அருணாசலம் எம். எஸ். எஸ். பாக்கியம், கே. மனோரமா, ஆர். முத்துராமன் ஆகியோராவர்.

அறிஞர் அண்ணா சந்திப்பு

திருச்சியில் நாடகம் தொடங்கியபோது வீடு கிடைக்காமல் தியேட்டரிலேயே தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டேனல்லவா? சில மாதங்களுக்கு பின் தென்னுாரில் வீடு கிடைத்தது. இப்போது தென்னுாரில் வெண்ணெய் மலைச் செட்டியார் இல்லத்தில் குடி யிருந்தோம், 4-3-46இல் முற்பகல் 10 மணி இருக்கும். திடீரென்று அன்புத் தோழர் அறிஞர் அண்ணா அவர்கள் வந்தார். ஈரோடு நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னங்களிடையே சந்திப்பு ஏற்பட வில்லை. கடிதத் தொடர்பும் நின்றுவிட்டது. எனவே, எதிர் பாராத அவரது வருகை எனக்கு வியப்பைத் தந்தது. நான் மகிழ்வோடு வரவேற்றுப் பேசினேன். “புதிய நாடகங்களையெல்லாம் தாங்கள் எப்போது பார்க்கப் போகிறீர்கள்? அந்தமான் கைதி, முள்ளில் ரோஜாவெல்லம் தங்களுக்கு நிரம்பப் பிடிக்கும். திராவிட நாட்டில் அவற்றிற்கெல்லாம் விமர்சனம் வரவில்லையே. ஏன்?” என்று கேட்டேன். வேலைகள் அதிகமாகி விட்டதென்றும், இப்போதெல்லாம் ஒய்வே கிடைக்கவில்லையென்றும் கூறினார். கே. ஆர். இராமசாமிக்கு நாடகம் எழுதிக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்குத்தான் அந்தப் பேறு கிடைக்கவில்லை. ஆலுைம் பரவாயில்லை. எங்கள் ராமசாமிக்குத் தானே கொடுக்கிறீர்கள்! தங்கள் நாடகம் அமோகமாக வெற்றி பெற இறைவனே வேண்டுகிறேன் என்றேன். இறைவனை வேண்டுவதைவிடத் தோழர் ராமசாமியை வேண்டினல் பய னுண்டு. நாடகத்தை நனருக நடத்தும்படி கே. ஆர். ஆருக்கு எழுதுங்கள்’ என்றார். ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசிகொண்டிருந்துவிட்டு விடை பெற்றுச் சென்றார். நீண்ட காலத்திற்குப்பின் அண்ணா அவர்களைச் சந் தித்தது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

கிருஷ்ணன் நாடக சபா

நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தஞ்சையில் ஒரு நாடக சபையைத் தொடங்கினார். சிறையிலிருக்கும் கலைவாண ரின் நினைவாக அந்த நாடக சபைக்கு, கிருஷ்ணன் நாடக சபை என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நடிப்பிசைப் புலவ ரின் நன்றியுணர்வினைக் காட்டியது. கிருஷ்ணன் நாடக சபையின் முதல்நாடகமாக மனோகரா தொடர்ந்து நடைபெற்றது.7.3.46ல் மனோகரா நாடகம் பார்க்க நான் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். சுதர்சன சபா ஹாலில் மனோகரா நடைபெற்றது. கே. ஆர். இராமசாமி என்னெஸ்கே நாடக சபையில் மனோகரனக நடித்த போது அதனைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. தொடர்ந்து பலநாட்களாக அவர்மனோகரனாகநடித்தது எனக்கு வியப்பாகவே இருந்தது. நான் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து மனோகரனாகநடித்ததேயில்லை. அப்படி நடிக்க என்னல் முடிவதில்லை. எங்கள் கம்பெனியில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை மனோகரனக நடிக்க எத்தனையோ முறை வற்புறுத்தியிருக்கிறேன். பணிவோடு மறுத்துவிட்டார். அவரது மனோகரன் நடிப்பைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரே ஆர்வமாக இருந்து. பார்த்தேன்; ரசித்தேன்; வியந்தேன்; பாராட்டினேன்.

வி. சி. கணேசனின் பத்மாவதி நடிப்பு

அன்று மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்த இளைஞரின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. 1922ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நான் மனோகரன் பாத்திரத்தை ஏற்று நடித்து வந்திருக்கிறேன். ஆண்களும் பெண்களுமாக எத்தனையோ நடிக-நடிகையர் என்னுடன் பத்மாவதியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அன்று பத்மாவதியாக நடித்த அந்த இளைஞரைப்போல் அவ்வளவு துணுக்கமாகவும் திறமையாகவும் யாருமே நடித்ததில்லையென உறுதியாகக்கூறலாம். அநேகமாகப் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் எல்லோரையும் ஒரளவுக்கு நான் அறிவேன்.இந்த இளைஞர் எனக்குப் புதியவராகஇருந்தார். அருகிலிருந்த கம்பெனியின் நாடக ஆசிரியர் எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் என்னுடைய பழைய நண்பர். என்னோடு சுவாமிகள் கம்பெனியில் நடித்தவர். அவரிடம் கேட்டேன். “இந்த பத்மாவதி யார்?” என்று. “இவரைத் தெரியாதா? இவர்தான் வி, சி. கனேசனின்” என்றார் அவர், அன்றுதான் முதல்முறையாக திரு. கணேசனின் நடிப்பைப் பார்த்தேன். நாடகம் முடிந்ததும் கே. ஆர். இராம சாமியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பத்மாவதியின் நடிப்பைப்பற்றி மிகவும் பாராட்டினேன். இந்த இளைனார் விரைவாக முன்னுக்கு வரக்கூடியவர். இவரை விட்டு விட வேண்டாம்” என்று கூறினேன்.

முன்னாள் நடிகமணிகள்

இதன் பிறகு கே. ஆர். இராமசாமி, தான் என்னெஸ்கே நாடக சபையிலிருந்து பிரிந்து தனியே கம்பெனி தொடங்கி யதற்கான காரணங்களை விளக்கினார். அவர் கூறிய காரணங்கள் சரியோ, தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் சிறையிலிருக்கும் கலைவாணர் பெயரால் என்னெஸ்கே நாடகசபை என்று ஒன்றும் கிருஷ்ண நாடகசபை என்று ஒன்றுமாக இரு நாடகக் குழுக்கள் இயங்கி வருவதும் இவ்விரு குழுக்களையும் நடத்துபவர்கள் எங்கள் குழுவின் முன்னாள் நடிகமணிகள் எஸ். வி. சகஸ்ரநாமமும், கே. ஆர். இராமசாமியும் என்பதிலே நான் பெருமை அடைவதாகவும் கூறினேன். உடனே இராமசாமி சட்டென்று “யார் பெயரால் நடத்துகிறோமோ அந்தப் பெயருக்குரிய கலைவாணரும் நம் கம்பெனியின் நடிகர்தானே!” என்றார். அவர் அவ்வாறுமணம் விட்டுக் கூறியது என்னை மேலும் பெருமைப் படுத்துவதாக இருந்தது. நன்றி கூறிவிட்டுத் திருச்சிக்குத் திரும்பினேன்.

வானொலி நிலையத் தொடர்பு

நாங்கள் திருச்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே திருச்சி வானொலி நிலையத்தோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது. எங்கள் குழுவின் இளம் நடிகர்கள் பக்ததுருவன், கந்தலீலா ஆகிய இரு நாடகங்களில் நடித்தார்கள். தம்பி பகவதி பக்தமீராவில் ராணாவாக நடித்தார். 23. 3- 45இல் மனோகரா நாடகத்தைப் பெரும்பாலும் நாங்களே நடித்தோம். பெ. கோ. சுந்தரராஜன் அவர்களின் ஸ்ரீஹர்ஷன் என்னும் சரித்திர நாடகத்திலும் நான் நடித்தேன். நிலையத்திலுள்ள எழுத்தாள நண்பர்கள் சுகி. சுப்பிரமணியம், கே. பி. கணபதி (மாறன்) எம். பி. சோமு, ஆறுமுகம் குகன், இசை இயக்குநர் கே. சி. தியாகராஜன் முதலியவர்களுட னெல்லாம் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அகிலன், ‘சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம், ‘கிராம ஊழியன்’ ஆசி ரியர் வல்லிக்கண்ணன், ‘கலாமோகினி’ ஆசிரியர் இராஜ கோபால் முதலிய திருச்சி எழுத்தாளர்களோடெல்லாம் எங்களுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. திருச்சியில் ஒவ்வொரு நாளும் நாடகம் முடிந்த பிறகு தியேட்டருக்கு முன்புறமுள்ள முற்ற வெளியில் ஒர் இலக்கியக் கூட்டமே நடைபெறும். எங்கள் நாடகங்களைப் பற்றிய பல்வேறு வகையான விமர்சனங்களை நாங்கள் ரசனையோடு கேட்டுக் கொண்டிருப்போம். அந்த இன்ப நாட்களையெல்லாம் இப்போது நினைத்தாலும் இதயம்பூரிக்கிறது. திருச்சியில் ஒன்றரை ஆண்டு காலமாக நாடகம் முடிந்த பிறகு இவ்வாறு இலக்கியச் சிந்தனைகளில் ஒவ்வொரு நாளும் திளைத்திருந்தோம்.

வாழ்வு சிறிது வளர்கலை பெரிது

“உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்ற வாக்கியத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முன்திரையில் எழுதித் தொங்கவிட்டிருப்பது பற்றிச் சில நண்பர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஒரு நாள் மாலை நாடகம் முடிந்த பிறகு வழக்கம்போல் கூடும் இலக்கிய நண்பர்கள் கூட்டத்தில் இதைப்பற்றி விவாதித்தோம், கலை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வாக்கியத்தை அமைப்பது நல்லதென சிவாஜி ஆசிரியர் திருலோக சீதாராம் யோசனை கூறினார். எங்களுக்கும் அவருடைய யோசனை சரி யாகப்பட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களைத் திருச்சியில் சந்தித்தபோது அவருடனும் கலந்து பேசினோம். கலைத்தொடர்புடைய ஒரு வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டோம். “Life is short, art is great” என்னும் ஆங்கில வாக்கியத்தை அவரே எடுத்துச் சொன்னார். அந்த வாக்கியத்தைத் தமிழில் அழகாக மொழி பெயர்த்தார் திருலோக சீதாராம். மறுநாளே வாக்கியம் முன்திரையில் எழுதப் பட்டது. வாழ்வு சிறிது; வளர்கலைப் பெரிதே!

ஆம், இந்த வாக்கியம் கலை சம்பந்தமான எங்கள் குறிக்கோளின் விளக்கமாகவும் அமைந்தது. திருச்சியில் 31. 3. 46 இல் பட்டாபிஷேக நாடகமாக மனோகராவை நடத்தி விட்டுக் கோவைக்குப் பயணமானோம்.