எனது நாடக வாழ்க்கை/முள்ளில் ரோஜா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
முள்ளில் ரோஜா

அந்தமான் கைதியில் எனக்குக் கிடைத்த ஓய்வை நான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு முழங் காலுக்குக் கீழே ஒரு கழலை இருந்தது, அதனல் வலியோ வேறு தொந்தரவோ இல்லையென்றாலும் ஒரு சிறுகட்டிபோல் இருந்தது ஒருநாள் எங்கள் நண்பர் டாக்டர் பாலு அதைப் பார்த்தார். “இதைச் சுலபமாக எடுத்துவிடலாமே ஒரு வாரம் ஓய்விருந்தால்போதும்” என்றார். அந்தமான்கைதி அரங்கேறிய மறுவாரம் நான் டாக்டர் பாலுவிடம் அந்தக் கழலைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அப்போது தென்னுாரில் ஒரு தனி வீட்டில் தங்கியிருந்தேன்.

திரைப்பட இயக்குகர் ப. நீலகண்டன்

திருச்சியில் சிவலிலா வெற்றியோடு நடைபெற்றபோதுபுதுக் கோட்டை கலைவாணி ஆசிரியர் ப. நீலகண்டன் அவர்கள் 5-1-45 இல் சிவலீலா பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் நானும் அவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திரைப்படத் துறையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. “ஏதாவது ஒரு நாடகம் எழுதிக்கொடுங்கள். அதன் மூலம் திரைப்படத் துறை தங்களைத் தானாக வரவேற்கும்” என்று கூறினேன். ஏற்கனவே அவர் ‘தாசிப்பெண்’ என்னும் பெயரில் ஒரு குறுநாவல் எழுதியிருந்தார். அதை நான் முன்பே படித்திருந்தேன். அதையே நாடகமாக்கலாம் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். “என்னுடன் கூடவேயிருந்து நாடகம் எழுதினால் நன்றாக அமையலாம். அப்படி எழுதத் தங்களுக்கு வசதி படுமா?” எனக் கேட்டேன். அவரும் அதையே விரும்பினார். கு. சா. கி. யும் ப. நீ. யும் நெருங்கிய நண்பர்கள். ‘அந்தமான் கைதி’ நாடகத் திற்குப் ப. நீ. யும் வந்திருந்தார். அறுவை இகிச்சையில் கிடைத்த ஒய்வு நாட்களைப் புதிய நாடகம் எழுதப் பயன் படுத்திக் கொண்டோம்.

இருவரும் நீண்டநேரம் விவாதித்து முள்ளில் ரோஜா என்று நாடகத்திற்குப் பெயர் வைத்தோம். நண்பர் ப. நீலகண்டன் விரைவாக எழுதுவார். எழுத்துக்கள் பிழையில்லாமல் தெளிவாக இருக்கும். “நான் எழுதியிருப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லே யென்றால் கூச்சப்படாமல் சொல்லுங்கள் வேறு எழுதுகிறேன்” என்று முன்கூட்டியே சொல்வி விடுவார்.

சிறந்த ரசிகர் அவர். தான்படிக்கும்போது என்முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். என் உள்ளத்தின் ரசனையை முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வார். சரி, பிடிக்கவில்லை போலிருக்கிறது. சொல்வதற்குக் கூச்சப்படுகிறீர்கள். வேறு எழுதிவிடுகிறேன்” என்று சொல்வி உடனே தாம் எழுதிய காகிதத்தைக் கிழித்து போட்டு விடுவார்.

முள்ளில் ரோஜாவில் ஒரு உணர்ச்சிக்கரமானகாட்சி. ராம நாதனை அவனுடைய தோழர்கள் தாசி விட்டுக்கு அனுப்புகிறார்கள். அவன் அனுபவமில்லாதவன். அப்பாவி. தாசி செல்லத்தின் படுக்கையறைக்குள் நுழைகிறான். உள்ளே வந்து மிரள மிரள விழிக்கிறான். கைகள் நடுங்குகின்றன. செல்வத்தைப் பார்க்கிறான். கிரிக்கமுயல்கிறான். உண்மையான சிரிப்பு வரவில்லை. அசடு வழிகிறது. செல்லம் “எங்கே வந்நீர்கள்?” என்று கேட்கிறாள். ராமநாதன் திகைக்கிறான். இந்தக் காட்சியில் செல்லம் அவனுக்கு அறிவுரை கூறும் முறையில் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் பேசுகிறாள். ‘அந்தப் பேச்சு இயல்பாக இருக்க வேண்டும். எழுச்சியோடு அமையவேண்டும். வார்த்தைகள்தங்கு தடையில்லாமல் வரவேண்டும். புரியாத வார்த்தைகளைப் போட்டுக் குழப்பாமல் எளிமையாகப் பேச வேண்டும். ஆனால் கொச்சை நடையாக இருக்கக் கூடாது’ என்றெல்லாம் சொல்லி விட்டு எழுதுங்கள் என்றேன். எழுதினார். முழுதும் எழுதிவிட்டுப் படித்தார், நான் முகத்தை சுளித்தேன். உடனே கிழித்துப் போட்டார். மீண்டும் எழுதினார். ஏறத்தாழப் பத்துமுறையாவது அந்த ஆவேசப் பேச்சை எழுதியிருப்பாரென நினைக்கிறேன். கடைசியாக எழுதி முடித்த பேச்சு அற்புதமாக அமைத்தது. அதைப் பலமுறை சொல்விச்சொல்லி நானே ரசித்தேன்.

முள்ளில் ரோஜா பாடம் கொடுக்கப்பட்டது. எங்கள் கம்பெனியின் கவினார் க. ஆ. ஆறுமுகனார் முள்ளில் ரோஜாவுக்கு அருமையான பாடல்களை இயற்றித்தந்தார். மகாகவி பாரதியாரின் ‘மோகத்தைக் கொன்றுவிடு,’ அன்பென்று கொட்டு முரசே,’ புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின், ‘பெண்களால் முன்னேறக்கூடும்,” “அண்ணி வந்தார்கள் எங்கள் அண்ணாவுக்காக” ஆகிய பாடல்களையும் பொருத்தமான இடங்களில் சேர்த்துக் கொண்டோம். இந்தப் பாடல்கள் நான்கும் நாடகத்திற்காகவே எழுதப் பெற்ற பாடல்களைப்போல் சிறப்பாக அமைந்தன.

முள்ளில் ரோஜாவின் கதாநாயகன் இராமனாதன் பாத்திரமும் எஸ். எஸ். இராஜேந்திரனுக்கே கொடுக்கப் பெற்றது. அந்த நாடகத்திலும் நான் ஒய்வெடுத்துக் கொண்டேன். ஒய்வு என்றால் வேடம் புனைவதிலிருந்து ஒய்வு பெற்றேனே தவிர நாடகத்தின் பொறுப்பு முழுவதையும் நான்தான் ஏற்றுக் கொண்டிருந்தேன்.

22. 12-42-இல் முள்ளில் ரோஜா நாடகம் அரங்கேறியது.

நாடகம் என்மனத்திற்கு முழுநிறைவினைத் தந்தது. பொது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்தார்கள். அன்றைய நாடக வசூல் 1070.60. இத் தொகையை ஒரு தாம்பாளத்தில் வைத்து நாடகாசிரியர் ப. நீல கண்டன் அவர்களின் நாடகத் திறமையைப் பாராட்டி, அவர் மேலும் தொடர்ந்து பல நாடகங்களைத் தமிழுக்கு அளிக்க வேண்டுமென்று வாழ்த்தி அவரிடம் கொடுத்தேன்.

அந்தமான் கைதி ஒரு துன்பியல் நாடகமாக அமைந்தது. அதேபோல முள்ளில் ரோஜாவையும் துன்ப நாடகமாகவே முடித்திருந்தோம். அந்தமான் கைதியில் நடராஜன் அந்தமான் கைதியாக இருக்கும் நிலையில், தன் தங்கையும் அவள் காதலனும் மறுமணம் புரிந்து கொண்டு மகிழ்வோடு வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறான்.அப்போது அவன் மனத்தில் எண்ணுவதை மேகத்தில் காட்சி வடிவாகக் காட்டுவோம். அவன் தங்கை லீலாவும் பாலுவும் மணமாலை சூட்டிய தம்பதிகளாக மேகக் கூட்டத்தில் காட்சியளிப்பார்கள். முள்ளில் ரோஜாவில் அந்தச் சிறு மகிழ்ச்சிகூட இல்லை. கதாநாயகி செல்லம் தன் காதலன் இராமனாதனுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பிவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலே செய்து கொள்கிறாள். அவள் கடிதத்தைப் படித்த இராமனாதன் அலறிக் கொண்டு ஓடுகிறான். ஆற்றுப் பாலத்தின் மீதிருந்து செல்லம் குதித்ததும் அவளைத் தொடர்ந்து ஒடி வந்த இராமனாதனும் ஆற்றில் குதிக்கிறான். அடுத்த காட்சியில் கைகோர்த்தபடி இருக்கும் இரு சடலங்களையும் கரையில் எடுத்து போட்ட நிலையில் உறவினரும் பொதுமக்களும் கண்ணிர் விட்டபடி நிற்கிறார்கள். “மலர்ந்த ரோஜா மலரே மடிந்தாயோ” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அத்தோடு நாடகம் முடிகிறது.

முதல் நாள் நாடகம் முடிந்ததும் முள்ளில் ரோஜா நாடக முடிவினைப்பற்றி பொது மக்கள் தங்கள் கருத்தினை எழுதி யனுப்ப வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி நூற்றுக்கணக்கான விமர்சனக் கடிதங்கள் வந்தன. சமுதாயத்தோடு போராடி வெற்றி பெறாமல் தற்கொலை செய்து கொள்வதாக நாடகத்தை முடித்திருப்பது சீர்திருத்தவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதாக இல்லையென்றும், காதலர் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக நாடகத்தை முடிக்கவேண்டுமென்றும் சிலர் எழுதியிருந்தார்கள். இப்படிக் கருத்தறிவித்த கடிதங்கள் ஏறத்தாழ 50க்கு மேலிருந்தன. ரசிகர்கள் வேண்டுதலுக்கிணங்கத் துன்பியலிலேயே முடிந்த முள்ளில் ரோஜாவை இன்பியலிலேயே முடிப்பதாக விளம்பரம் செய்தோம். இரண்டாவது வாரமுதல் ஆற்றிலே விழப்போகும் செல்லத்தை இராமனதன் ஓடிவந்து காப்பாற்றுவதாகவும், அடுத்த காட்சியில் இருவருக்கும் திருமணம் நிகழ்வதாகவும் நாடகத்தை முடித்தோம். இந்த முடிவு ரசிகர்களின் உள்ளத்தில் அனுதாபத்தை உண்டாக்கவில்லை.

இன்பியலில் நாடகத்தை முடிக்க வேண்டுமென்று கடிதம் எழுதிய ரசிகர்களில் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் துன் பியலிலேயே முடிந்ததுதான் பொது மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்றதென்று கடிதம் எழுதினார்.

சீர்திருத்தக் கருத்துக்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானல் அவர்கள் மனத்திலே மாற்றம் காணச் செய்வது தான் நல்ல வழி. அதற்கு மாறாகப் பெற்றோர்களையோ சமுதாயத்தையோ எதிர்த்து இளைஞர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள் என்று காட்டுவது இளம் உள்ளங்களை மட்டுமே நிறைவு செய்யும். பெரும்பாலானவர்கள் சமுக சீர்திருத்தத்தை ஏற்க வேண்டுமானால் - அதற்காக நடைபெறும் நாடகங்கள் துன்பியலில்தான் முடியவேண்டும் என்பது அறிஞர்கள் கருத்து. நாடக ஆசிரியரின் கருத்தும் இதற்கு ஒத்திருந்தது. எனவே மூன்றாவது வாரம் முதல் முள்ளில் ரோஜா நாடகத்தைத் துன்பியலிலேயே முடித்தோம்.