எனது நாடக வாழ்க்கை/அந்தமான் கைதி

விக்கிமூலம் இலிருந்து

அந்தமான் கைதி

ஒளவையார் நாடகம் நடந்து கொண்டிருக்கும்பொழுது கவிஞர் கு. சா. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நான் நாடக அரங்கில் என்னைச் சந்தித்தார். 1941இல் என்ன மதுரையில் சந்தித்து ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததாகவும் நினைவு படுத்தினார். ‘எனக்கு நினைவிவில்லை, மன்னியுங்கள்’ என்றேன். “இல்லை, பாதகமில்லை. அந்த நாடகத்தையே இப்போது அச்சுவடிவில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்” என்றார். நாடக நூலை வாங்கி முதல் பக்கத்தைப் புரட்டினேன். கலை மன்னன் ராஜா சாண்டோவின் படமும், நாடக நூலை அவருடைய நினைவுக்குக் காணிக்கை யாக்கியிருப்பதாகப் படத்தின் கீழே ஒரு கவிதையும் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே கவினார் கு. சா. கி. யை எனக்குப் பிடித்துவிட்டது. “படிக்கிறேன்; நன்றாயிருந்தால் நடிக்கிறேன்” என்று கூறினேன். பிறகு ராஜா சாண்டோ அவர்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

நாடகம் நன்றாயிருந்தது

நாடகத்தைப் படித்தேன். நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் அவரைச் சந்தித்தேன். “நாடகம் திருத்தம் எதுவும் செய்யாமல் அப்படியே மேடையேற்றக் கூடியவகையில் அமைந்திருக்கிறது. இதுவரை இப்படி ஒருவரும் நாடகம் கொண்டு வந்து கொடுத்ததில்லை. இதனை எப்படித் தங்களால் உருவாக்க முடிந்தது?” என்று கேட்டேன். அவர் சிசித்துக் கொண்டே ‘நானும் ஒரு நடிகன்தானே’ என்றார். பிறகு பாய்ஸ் கம்பெனிகளின் அனுபவங்கள் பற்றியும், எங்கள் ஆசிரியர் கந்தசாமி முதலியார் அவர்களிடம் அவர் நடிப்புப் பயிற்சி பெற்ற விபரங்களைப் பற்றியும், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அந்தமான் கைதி நாடகம் எனக்கு நிரம்பவும் பிடிந்திருந்தது நாங்கள் நடத்த வேண்டுமென்று விரும்பிய கல்கியின் சுபத்திரையின் சகோதரன் கதைக் கருவை உள்ளடக்கியதாக நாடகம் அமைந்திருந்தது. நாடகம் சரியாக நடத்தப்பட்டால் மகத்தான வெற்றிபெறும் என்று கவினார் கு. சா. கி. அவர்களுக்கு நான் அப்போதே உறுதி கூறினேன்.

சிவாஜி நாடகத்தில் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகன் ஜெய்வந்தாக மிகவும் நன்றாக நடித்ததால் அந்தமான் கைதியிலும் அவரே கதாநாயகன் பாலுவாக நடிக்கலாம் என்று நான் கூறினேன். “அப்படியானால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை ஏற்கப் போகிறீர்கள்?” என்றார் கு.சா. கி. “இந்த நாடகத்தில் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றேன். அவருக்குத் கொஞ்சம் வருத்தம். நான் நடிக்காவிட்டால் நாடகம் வெற்றி பெறுமா? என்பதில் அவருக்குச் சந்தேகம். “அப்படியானல், நடராஜன் பாத்திரத்தை நீங்கள் போடலாமே” என்றார் கவினார். என்னைவிடத் தம்பி பகவதி அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். தங்களுக்குக் சிறிதும் கவலை வேண்டாம். நாடகத்தை வெற்றியோடு நடத்திய பிறகுதான் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப்போவேன் என்றேன்.

குண்டு கருப்பையா

எல்லோருக்கும் பாடம் கொடுக்கப் பெற்றது, நகைச்சுவை நடிகர் குண்டு கருப்பையா திருச்சியில்தான் எங்கள் குழுவிற்கு வந்துசேர்ந்தார். அவருடைய சரீரமே நகைச்சுவைக்கு வாய்ப்பாக இருந்ததால் புதிய நாடகத்தில் அவருக்கும் ஒருவேடம் கொடுக்க எண்ணினோம். அதேபோல் குட்டி நகைச்சுவை நடிகர்களில் அப்போது எங்கள் குழுவில் முதன்மையாக இருந்தவர் துவரங்குறிச்சி சுப்பையன். அவருக்கும் அந்தமான் கைதியில் ஒரு பாத்திரத்தைப் படைக்க முனைந்தோம். சமையல் கணபதி ஐயர் என்ற பாத்திரத்தை நகைச்சுவையோடு உருவாக்கிக் குண்டு கருப்பையாவுக்கும், திவான் பகதூரின் வேலையாள் வேடத்தை சுப்பையனுக்கும் கொடுத்தோம். இவ்விரண்டு வேடங்களும் நகைச்சுவை காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டவும், காட்சிகள் தாமதமின்றி நடைபெறவும் துணையாக அமைந்தன.

நாடகத்திற்கான பாடல்கள் சிலவற்றைக் கவினார் கு. சா கி. யே புதிதாக எழுதினார். புரட்சிக் கவினார் பாரதிதாசனின் “அந்த வாழ்வுதான், எந்த நாள் வரும்” “சோலையிலோர் நாள் எனயே” “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்னும் மூன்று பாடல்களிையும் தக்க இடங்களில் சேர்த்துக் கொண்டோம். பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை மிகுந்த சுவையாக நடராஜன் தன் தங்கை லீலாவுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் அமைத்துக் கொண்டோம். தேவையான ஒரு சில காட்சிகளும் தயாராயின. அந்தமான் கைதியைப் பொறுத்த வரையில் காட்சிகளுக்கு நாங்கள் முதன்மை அளிக்கவில்லை. சமூக நாடகமாதலால் ஆடை அணிபணிகளுக்கும் அவசியம் ஏற்படவில்லை. சுருக்கமான செலவில் கதையை முதன்மையாக வைத்து நாடகம் தயாராயிற்று. 20-9-45இல் அந்தமான் கைதி அரங்கேறியது.

குமாஸ்தாவின் பெண்ணுக்குப்பின் சிறந்த சமூகநாடகமாகக் அந்தமான் கைதி விளங்கியது. பேராசிரியர் வ. ரா. அவர்கள் ஒருநாள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “கவினார் கு. சா. கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் அறியாத சாது போல இருந்துகொண்டு ஒரு அற்புதமான நாடகத்தைப் படைத்து விட்டாரே!” என்று கூறிப் பாராட்டினார்.

அறிஞர் அண்ணா அவர்கள் இந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென நான் ஆசைப்பட்டேன். அவருக்குக் கடிதமும் எழுதினேன். நாடகக்கலை மாநாட்டுக்குப் பின் ஏற்பட்ட சில விரும்பத்தகாத விளைவுகளின் காரணமாக அவர் எனக்குப் பதில் எழுத வில்லை. அந்தமான் கைதி நடைபெற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். நான் அவரைச் சந்திக்க முயன்றேன்; இயலவில்லை. மாநாட்டுக்கூட்டம் அந்தமான் கைதிக்கு வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது.

லீலா தன் காதலனிடம் அண்ணனைப் புகழ்ந்து பேசுகிறாள். காதலன் பாலு, அவருடைய சொற்பொழிவுத் திறனைப் பற்றி அவளிடம் பாராட்டிப் பேசுகிறான்;

பாலு;— அடடா, இன்றையக் கூட்டத்தில் உன் அண்ணா பேசியிருக்கிறார் பார். அதைப்பற்றி என்ன அபிப்பிராயம்சொல்வதென்றே எனக்கு விளங்கவில்லை.

லீலா;— தாங்கள் முழுமையும் கேட்டீர்களா? அடடா; நான் கேட்கமுடியாமல் போய்விட்டதே: எதைப்பற்றிப் பேசினார்? என்னென்ன பேசினார்?

பாலு;— பால்ய விவாகத்தின் தீமைகளைப் பற்றியும், காதல் மணம், மறுமணம் இவற்றின் அவசியத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இன்னும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அடிமை வாழ்வின் கேவலநிலை; சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம், பெண்கள் முன்னேற்றம், விபசாரத்தின் இழிவுத்தன்மை, தற்காலக்கல்வி முறையின் சீர்கேடு, கைத் தொழில், கிராம முன்னேற்றம் அடடா, இனிமேல் சொல்ல வேண்டியது என்பதாக ஒன்றும் பாக்கியில்லை. அப்பப்பா! என்ன கம்பீரமான பேச்சு, உயர்ந்த உபமானங்கள்; ஆணித் தரமான எடுத்துக்காட்டுகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் சபையில் கரகோஷமும் ஆரவாரமும்தான். உன் அண்ணாவும் இவ்வளவு உயர்வாகப் பேசுவாரென்று நான் எதிர் பார்க்கவேயில்லை. எனக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது, போயேன்!

இந்த உரையாடலில் அண்ணா என்ற சொல் வரும் நேரத்தில் சபையில் பெருத்த கைத்தட்டல் ஏற்பட்டது. ஒரே ஆரவாரம்! இதைச் சொல்பவர் எஸ்.எஸ். இராஜேந்திரன். அவர் ஏற்கனவே அறிஞர் அண்ணா முதலியவர்களோடு தொடர்பு கொண்டவர். கேட்க வேண்டுமா? மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களிலும் இந்தக் காட்சியில் மக்களின் பாராட்டு அதிகமாக இருந்தது.

அந்தமான் கைதி 1938 இல் எழுதப்பெற்ற நாடகம்! நாங்கள் அதனை நடிக்குமுன்பே அமைச்சூர் சபையினரால் நான்கு முறை நடிக்கப் பெற்றுள்ளது. எங்கள் குழுவில் நடிக்கப்பட்டப் பின் நாடகம் மகத்தான வெற்றி பெற்றது.

அந்தமான் கைதியைப் படைத்ததன் மூலம் கவினார் கு. சா. கி. தமிழ் நாடக உலகில் அழியாத இடம் பெற்றுவிட்டார். தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிறமாநிலங்களிலும் சிங்கப்பூர், மலைசியா, இலங்கை, பர்மா, தென்னப்பிரிக்கா முதலிய தமிழர் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் அந்த நாளில் அந்தமான் கைதியை நடத்தாத அமைச்சூர் சபைகளே இல்லையெனலாம். திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழரசுக் கழகம் இன்னும் சமுதாய முற்போக்குக் கொள்கைகளை ஆதரிக்கும் எல்லாக் கட்சியினரும் தமது நாடக சபைகளில் அந்தமான் கைதியை நடித்திருக்கின்றனார். நம்முடைய நண்பர் திரு ஏ.வி. பி. ஆசைத்தம்பி எம். எல். ஏ. அவர்கள் இதில் நடராஜன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக் குரியதாகும். இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் வெளிவரும் நாடக இலக்கியங்களுக்குப் பரிசு வழங்கும் முறையில் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தமான் கைதி நாடக நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.