எனது நாடக வாழ்க்கை/பாரதி மண்டபத்துக்கு ஒளவையார்

விக்கிமூலம் இலிருந்து
பாரதி மண்டபத்துக்கு ஒளவையார்

ஒருவார காலம் கலைவாணர் பாகவதர் ஆகியோரின் தீவாந்திர தண்டனையைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.நீண்ட கால உழைப்பினல் சோர்வுற்றிருந்த பெரியண்ணா டி.கே. சங்கரன் அவர்கள் கம்பெனித் தொல்லைகளிலிருந்து சிறிது ஓய்வு பெற எண்ணினார். சின்னன்ணா டி. கே. முத்துசாமி அவர்களிடம் நிர் வாகப் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு 16.5.45இல் அவர் நாகர்கோவில் சென்றார்.

கல்கி தலைமையில் ஒளவையார்

எட்டையபுரம் பாரதி மண்டப நிதிக்காக 19-5.45 இல் ஒளவையார் நாடகம் நடைப்பெற்றது. இந் நாடகத்திற்கு ‘கல்கிஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி மிக அருமை யாகப் பேசினார். சென்னை, தஞ்சை, திருச்சி முதலிய நகரங்களி லுள்ள பத்திரிகை ஆசிரியர்கள் பலருக்கும் ஒளவையாரை வந்து பார்த்து வாழ்த்துமாறு அழைப்புகள் விடுத்திருந்தோம். பல அன்பர்கள் வந்து பார்த்தார்கள். பத்திரிகையில் விமர்சனங்கள் வரைந்தார்கள். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் திருவாளர்கள் நாரண துரைகண்ணன் (பிரசண்டவிகடன்) நவீனன் (நவ யுவன்) வல்லிக்கண்ணன் (கிராம ஊழியன்) ஏ. எஸ். ரங்கநாத சிரோமணி (ஹிந்துஸ்தான்) ராஜகோபாலன் (கலாமோகினி) ப. நீலகண்டன் (கலைவாணி) சீனிவாசராவ் (நாரதர்) சாவி (மாலதி) திருலோகசீதாராம் (சிவாஜி) மேற்குறிப்பிட்ட பத்திரி கைகள்தாம் திருச்சியில் எங்களுக்குக் கிடைத்தவை. இன்னும் பலர் எழுதியிருக்கலாம். ஆக, பத்திரிகையாளர்களின் இந்த விமர்சனங்களெல்லாம் சேர்ந்து ஒளவையாருக்கு 1942இல்மதுரை யில் கிடைக்காத வருவாயை 1945ல் திருச்சியில் கிடைக்கும்படி செய்தன என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன்.

உயிர்ச் சத்தான ஒரு சொல்

‘கர்நாடகம்’ என்னும் புனைபெயரில் ரா. கிருஷ்ணமூர்த்தி கல்கியில் எழுதிய விமர்சனத்தில் ஒளவையாராக நடிக்கும் ஷண்முகத்திற்கு இந்த நடிப்புக்காகவே நோபல் பரிசு வழங்கலாம்!’ என்று எழுதினார். நான் அதற்குத் தகுதியுடையவனா, அல்லவா என்பது ஒருபுறமிருக்கட்டும். அந்த ஒரு சொல் எனக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுத்தது! தொடர்ந்து 50 நாட்கள் ஒளவையாராக நான் நடிப்பதற்கு அந்த சொல்தான் உயிர்ச்சத்தாக... ‘டானிக்'காக இருந்தது என்பதில் ஐயமில்லை. கல்கி மேலும் எழுதுகையில்,

“இந்த நாடகத்தைப் பார்த்து வந்தபோதும் அதன் முடிவிலும் எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் கையில் மட்டும் அரசாங்க அதிகாரம் இருந்தால் இந்த நாடகக் கம்பெனியையும் இந்த ஒளவையார் நாடகத்தையும் உடனே நாட்டின் பொதுவுடமையாக ஆக்கிவிடவேண்டும் என்பதுதான். ஆம், தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் இந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும். மேற்கூறியவாறு ஒளவை நாடகத்தைப் பொதுவுடமையாகச் செய்யும் காரியத்திற்காக மேற்படி நாடகக் கம்பெனியின் செலவுக்கு சர்க்காரிலிருந்து வருஷம் மூன்றுலட்சம் ரூபாய் நன்கொடை கொடுக்கும்படி இருக்கலாம். இந்த மூன்று. லட்ச ரூபாய்ச் செலவினல் தமிழ் நாட்டின் குழந்தைகள் எத் தனேயோ பல லட்ச ரூபாய் செலவில் அடைய முடியாத நன் மைகள் அல்லவா அடைந்து விடுவார்கள்! ஒளவையார் நாடகம் தமிழரின் வாழ்வையே உயர்த்தக் கூடிய நிர்மானத் திட்டத்தைச் சேர்ந்தது.”

என்று குறிப்பிட்டிருந்தார். அன்பர் நாரண-துரைக்கண்ணன் அவர்கள் தமது பிரசண்ட விகடன் இதழில் எழுதிய நீண்ட விமர்சனத்தில், “தமிழில் நாடகமில்லை என்று பிதற்றும் மேதாவிகள் ஒளவையார் நாடகத்தைப் போய்ப் பார்க்கட்டும். ஸ்ரீபால ஷண்முகானந்த சபை நாடக அரங்கில் நாடகக்கலை சீரிளமைத் திறங் குன்றாது இருப்பதை அவர்கள் காண்பார்கள்” என்று சுட்டிக் காட்டியிருந்தார். இவ்வாறு ‘எழுதப்பட்ட விமசனங்களின் உந்துதலால் ஒளவையார் தொடர்ந்து, நடைபெற்று வந்தது.

தலைவரைச் சந்தித்தேன்

எங்களோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ‘ஜன சக்தி’ வார இதழில் 18.6.45இல் ஔவையார் விமர்சனம் வந்திருந்தது. ஜனசக்தியிலிருந்து யாரும் நாடகம் பார்க்க வரவில்லையாதலால், எழுதியவர் யாரென்று பார்த்தேன். ம. பொ. சிவஞான கிராமணி என்று போட்டிருந்தது. விமர்சனத்தைப் படித்தேன். நாடகத்தைப் பாராட்டி விரிவாக எழுதிவிட்டு இறுதியாக ஒன்று குறிப்பிட்டிருந்தார் விமர்சகர்.

“டி.கே.எஸ். சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாடகத்தின் இறுதியில் ‘ஒளவையார்’ விண்ணெய்தும் முன்னார், தமிழர் மேன்மையை விளக்கும் பாடலொன்றைப்பாடி, ஜனங்கள் கொட்டகையை விட்டுச் செல்லும்போது அவர்கள் காதுகளில் தமிழோசையை முழக்கித் தமிழுணர்ச்சியை யூட்டுவது நல்லது.”

இதைப் படித்தவுடன் எனக்குச் சிறிது வியப்பாகவே இருந்தது. முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டின் பெருமையும் தமிழ்மொழியின் சிறப்பும் நாடகம் முழுதும் பேசப் பெறுகிறது; பாடப் பெறுகிறது. இதைப் பார்த்த பிறகும் மன நிறைவு பெறாமல் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என்று யோசித்தேன். அப்போதுதான் சில நாட்களுக்கு முன் அவரைச் சந்தித்ததும் பேசியதும் நினைவுக்கு வந்தது. 26.6.45 அன்று மாலை பொதுவுடமைக் கட்சித் தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி எங்களைப் பார்க்க வந்தார். அவரோடு முன்பே எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இராமமூர்த்தியோடு ஒல்லியான உருவமுடைய மற்றொருவரும் வந்தார். வந்தவருடைய அடர்ந்த கம்பீரமான மீசை என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழனுக்குரிய வீரம் அவருடைய கண்களிலே பளிச்சிட்டது. உற்று நோக்கினேன். இவர்தான் ம.பொ. சிவஞான கிராமணியார் என்று அவரை அறிமுகப்படுத்தினார் இராமமூர்த்தி. இப்படித்தான் நான் முதன் முதலாக தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களைச் சந்தித்தேன். அன்றிரவு நாடகத்திற்கு அவரையும் அழைத்துவரும்படி தோழர் இராமமூர்த்தியைக் கேட்டுக் கொண்டேன். அதன்படி இரவு அவரும், ம.பொ. சியும், இஸட், அகமது என்னும் தோழரும் நாடகம் பார்க்க வந்தார்கள். அன்றைய நாடகத்தைப் பார்த்து விட்டுத்தான் விமர்சனம் எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது. விமர்சனத்தில் வெளியிட்டிருந்த கருத்து எனக்கு நிரம்பவும் பிடித்தது. அதற்கு நன்றி கூறி ஜனசக்தி மூலமாக ம.பொ. சி. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதன் பிறகு தான் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்ற பாரதி பாடலை நாடகத்தின் இறுதியில் பாடும் வழக்கத்தை தாங்கள் மேற்கொண்டோம். இடையே ஒரு நாள் நாடகத்திற்கு தேசீயக் கவினார் நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை தலைமை தாங்கி எங்களைப் பாராட்டினார். 9.7.45இல் 50வது பொன் விழா பிரபல அமைச்சூர் நடிகர் எப். ஜி. நடேசய்யர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாடகாசிரியர் திரு எதி ராஜுலு நாயுடுவுக்குக் கம்பெனியின் சார்பில் ஒரு பொற்பதக்கம் பரிசளிக்கப்பட்டது. நாடகாசிரியரையும் நடிகர்களையும் பிரமாத மாகப் பாராட்டிப் பேசினார் நடேசய்யர்.

நாமக்கல் கவிஞருக்கு நாடகம்

19-7.45இல்தொடங்கிய முதல் சிவாஜி நாடகம் நாமக்கல் கவிஞரின் நிதிக்காக நடத்திக் கொடுக்கப் பெற்றது. அன்று வெங்களத்தூர் சாமிகாத சர்மா அவர்கள் தலைமை தாங்கினார். அருமையாகப் பாராட்டிப் பேசினார். திரு அ. சீனிவாசராகவன், நண்பர் சாவி ஆகியோரும் பாராட்டிப் பேசினார்கள். அன்றைய வசூல் ரூ 1201 நிதியின் பொருளாளர் திரு சக்தி வை. கோவிந்தள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

23.7.45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு மேற்படி நாடகாசிரியரும் பிரபல கண் வைத்தியருமான டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களின் தமையனார் திரு டாக்டர் டி.எஸ். திருமூர்த்தி தலைமை தாங்கிப் பாராட்டினார். 15-8-45இல் நடைபெற்ற சிவாஜி நாடகத்திற்கு பிரசண்ட விகடன் ஆசிரியர் திரு. காரண துரைக்கண்ணன் தலைமை தாங்கி, டி. கே. எஸ். சகோதரர்கள் விரைவில் சென்னைக்குவந்து,தலைநகரிலுள்ள ரசிகர்களையும் மகிழ் விக்க வேண்டுமென்று கூறிப் பாராட்டினார். திருச்சியில் சிவாஜி நாடகம் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்றது.