எனது நாடக வாழ்க்கை/மேதைகளின் விசித்திரப் பண்புகள்

விக்கிமூலம் இலிருந்து
மேதைகளின் விசித்திரப் பண்புகள்

காரைக்குடியில் இருந்தபோது புரட்சிக் கவினார் பாரதிதாசன் கானாடுகாத்தான் வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கவிஞரை நேரில் காணவும் பில்ஹணன் சம்பந்தமான அனுமதியைப் பெறவும் எண்ணிக் கானடுகாத்தான் சென்றேன். எங்கள் நண்பர் திரு வை. சு. சண்முகம்செட்டியார் இல்லத்தில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். செட்டியார் அவர்களைப் பார்த்தேன். செய்திகளை விபரமாகச் சொன்னேன், வை. சு. ச. அவர்கள் மகாகவி பாரதியோடு நெறுங்கி பழகியவர். கவினார்களோடு எச்சரிக்கையாகப் பழகவேண்டுமென்று எனக்குச் சில அறிவுரைகளையும் கூறினார். பாரதிதாசன் 10 நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளத்துரர் போயிருப்பதாகச் சொன்னார். பாரதியாரைப்பற்றி ஒரு விசித்திரமான செய்தியையும் அறிவித்தார்.

நூறு ரூபாய் கோட்டு

ஒருநாள் செட்டியார் இல்லத்திற்குப் பாரதியார் வந்து தங்கியிருந்தபோது, திடிரென்று “எனக்கு அவசரமாக ஒரு நூறு ரூபாய் வேண்டும்; கொடுப்பீரா?” என்றாராம் பாரதி. உடனே வை.சு.ச. “இதோ கொடுக்கிறேன்” என்று பெட்டியைத்திறந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்தார். பாரதி நோட்டை இருபுறமும் திருப்பிப் பார்த்துவிட்டு, “இது எனக்குத் தானே?” என்றார்.

“ஏன்? என்ன சந்தேகம்?” என்றார் வை. சு. ச.

“இல்லை; எனக்குச் சொந்தமான இந்த நோட்டை நான் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள எனக்கு உரிமை யுண்டல்லவா?” என்றார் பாரதி.

“தாராளமாக, எப்படி வேண்டுமானலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.” இது வை. சு. ச. வின் பதில், மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே எழுந்து நின்றார். வை. சு. ச. வுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன்? ஏதாவது தேவையானால் வாங்கி வரச் சொல்கிறேனே?” என்று அவரும் எழுந்தார். அதற்குள் கண்மூடித் திறப்பதற்குள் பாரதியார் தம் கையிலிருந்ந நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூருகக் கிழித்துப் போட்டு விட்டார். வை. சு. ச. வுக்கு ஒரே வியப்பு. “ஏனய்யா கிழித்தீர்?” என்று கேட்டாராம். “என் நோட்டை நான் என்ன வேண்டுமானலும் செய்வேன். உமக்கென்னேயா அக்கறை?” என்று சொல்லிக் கொண்டு கலகலவென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைக் சொல்லிவிட்டு, மேதைகளான கவினார்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்கு பாதியாவது இருக்குமல்லவா?” என்றார்.

நான் செட்டியாரிடம் விடைபெற்றுப் பள்ளத்துTர் சென்றேன். பள்ளத்தூர் வந்த கவினார் நான் வந்திருப்பதைச் கேள்விப் பட்டு நச்சாத்துப் பட்டிக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது; கடைசியாகப் போன ஊரில் பாரதிதாசன் என்னைத்சந்திக்க விரும்பாமல் பாண்டிசேரிக்கே காரில் போய் விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் பல இடங்களில் அலைந்து அலைந்து அலுத்துப்போய் ‘இது மேதைகளின் இயல்பு’ என்று கவிஞரைப் பார்க்காமலை காரைக்குடிக்குத் திரும்பினேன். கடைசியில் பில்ஹணன் நாடக நூலில் நான் நினைத்தபடி புரட்சிக் கவிஞரின் இரு பாடல்களைச் சேர்க்க முடியவில்லை.

“புரட்சிக்கவினார் பாரதிதாசன் அவர்களின் புரட்சிக்கவியிலுள்ள கருத்துக்கள் சில இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ளன. கவினார் அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப் பட்டிருக்கிறோம்” என்று மட்டும் என்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டேன்.

புரட்சிக் கவினார் நிதிக்கு நாடகம்

திருச்சிக்கு வத்தபின் (சிவலீலா நடந்து கொண்டிருக்கை யில் கவிஞரோடு கடிதத் தொடர்பு கொண்டேன். “திருச்சியில் தங்களுக்கு ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விழைகிறோம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கும் ஒரு வாரத்திற்குமேல் பதில் இல்லை. எனக்கு மிகவும் கவலையாகத்தான் இருந்தது. 10 நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் வந்தது.

“1945 ஜனவரி மாதம் 20ஆம் தேதி நடைபெறும் ராஜா பர்த்ருஹரி நாடகம் எனக்கு” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது. நாங்கள் உடனே ஒப்புதல் அளித்தோம்.

திருச்சியில் 20-1-45இல் நடைபெற்ற ராஜா பர்த்ருஹரி முதல் நாடகம் புரட்சிக் கவினார் நிதிக்காகக் கொடுக்கப்பட்டது. கவிஞரே நேரில் வந்து அன்றைய வசூல் 1251ஐயும் பெற்றுக் கொண்டார். இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கினார். பில்ஹணனைப் பற்றி அவரிடம் பேச்செடுத்தேன். “அது சரிதாம்பா நடத்துங்க, நடத்துங்க” என்றார். பாண்டிச்சேரி சென்றபின், நாடகம் நடத்திக் கொடுத்ததற்கு நன்றி கூறிப் பெரியண்ணாவுக்கு ஒரு கடிதமும் தம் கைப் பட எழுதினார்.

கலைவாணர் கைது செய்யப்பட்டார்

திருச்சியில் சிவலீலா தொர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது டிசம்பர் 29ஆம் தேதி தினமணியில் கலைவாணர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியினைப் படித்து அதிர்ச்சி யடைந்தோம். இலட்சுமிகாந்தன் என்னும் ஒருவர் இந்துகேசன் என்ற வார இதழை நடத்தி வந்தார். அவ்விதழில் கலைவாணர், தியாகரா பாகவதர் போன்ற விளம்பரம் பெற்ற பெரியார்களின் சொந்தநடவடிக்கைகள் பற்றிப் புரளியாக வாரந்தோறும் செய்தி வெளியிட்டு வந்தார். இவைபோன்ற பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகள் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு வெளிவரும் மஞ்சள் பத்திரிகைகள் பெரும்பாலான பொதுமக்களை எளிதில் கவர்ந்து விடுகின்றன. இலட்சுமிகாந்தன் இதை ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார். உண்மையான கலைஞன் எவனும் இந்தப் புரளிகளைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். நான் காரைச்குடியிலிருந்து சென்னைக்குச் சென்றிருந்த சமயம் கலைவாணரிடம் அதைப்பற்றி யாரோ கேட்டார்கள். “இலட்சுமிகாந்தனைச் சும்மா விடக்கூடாது. சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும்” என்றார்கள். உடனே கலைவாணர், “ஒரு பத்திரிகைக்காரன் கிளப்பிவிடும் புரளிகளால், காலமெல்லாம் நாம் செய்து வரும் கலைப்பணியை மக்கள் மதிக்கவில்லையென்றால் போகட்டுமே. அதனால் பொது மக்களுக்கு நஷ்டமே தவிர நமக்கொன்றும் நஷ்டம் இல்லை” என்றார். இப்படிச் சொல்லிய அப்பழுக்கற்ற கலைமேதையின் மீது அந்தப் பத்திரிகையாளரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டியது மிக மிகக் கொடுமையல்லவா? கலைவாணரும் பாகவதரும் சென்னை சிறைச்சாலையில் இருப்பதாக அறிந்து வருந்தினோம். இந்த வழக்கு சம்பந்தமான செய்திகளைப்பத்திரிகைகளில் பரபரப்போடும் கவலையோடும் படித்து வந்தோம். 28.4-45 இல் கலைவாணரைப் பார்க்க நான் சென்னை சென்றேன். அப்போது என். எஸ். கே. நாடக சபையின் முழுப் பொறுப்பையும் சகோதரர் எஸ்.வி. சகஸ்ரநாமம் ஏற்று நடத்தி வந்தார். அவரோடு தங்கினேன்.

களங்கமற்ற பசலை முகம்

முற்பகல் 11 மணியளவில் சகஸ்ரநாமத்தோடு சிறைச் சாலைக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் ஜெயில் சூப்பரின் டெண்டுடன் அமர்ந்திருந்தோம். கலைவாணரை உட்புறமிருந்து அழைத்து வந்தார்கள். அவர் வரும்போதே, “என்ன ஷண்முகம் எப்போ வந்தே? திருச்சியிலே வசூல் நல்லா ஆகுதா? அண்ணாச்சி யெல்லாம் செளக்யமா?” என்று கேட்டுக் கொண்டே எப்போதும் போல் கலகலப்போடு வந்தார்.

என் கண்களில் நீர் நிறைந்து விட்டது. பொங்கி வரும் அழு கையை அடக்க எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. அவ ருக்கு ஆறுதல் கூறவந்த நான் கலங்கி நிற்பதைக் கண்டு, எனக்கு அவர் ஆறுதல் கூறினார். “30ம் தேதி நம் கே. எம். முன்ஷியின் வாதம் முடிந்ததும் எனக்கு விடுதலை கிடைத்து விடும். எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு” என்றார். நாங்கள் இருந்த நேரம் வரையில் அவர்தான் உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தாரே தவிர நான் பேசவே இல்லை. சிறிதும் களங்கமற்ற அந்தப் பசலை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கீழ்ப் பாக்கம் சென்று கலைவாணரின் துணைவி மதுரம் அம்மையாரைப் பார்த்து ஆறுதல் கூறினேன்.

கல்கியின் மேதைப் பண்பு

அதன்பின் கல்கி அலுவலகம் சென்று ஆசிரியர் திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்தேன். சுபத்திரையின் சகோதரன் சிறுகதையை நாடகமாக்கித் தரும்படியாக வேண்டி னேன். கல்கி சிரித்துக் கொண்டே சொன்னார். “மிஸ்டர் ஷண்முகம், கிருஷ்ணமூர்த்தி என்ன, சகலகலாவல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு நாடகம் எழுதவராது. உங்களுக்குப் பிடித்தமான நாடக எழுத்தாளர் யாரையாவது எழுதச் சொல்லுங்கள். அந்த எழுத்துப் பிரதியை எனக்கு அனுப்பி வையுங்கள். நான் சரி பார்த்துக் கொடுத்து விடுகிறேன்.”

என்றார் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் கல்கி. எந்த எழுத் தாளர் இப்படித் தன் திறமையைக் குறைத்துக் கொண்டு சொல்வார்! மாமேதை கல்கிக்குத்தான் அந்தத் துணிவு இருந்தது. இப்படித் தைரியமாகத் தன்னைப் பற்றி ஒப்புக்கொள்ளவும் ஒரு தனிப் பண்பு வேண்டுமல்லவா?

கல்யாணி ராமசாமி இணைப்பொருத்தம்

அன்றிரவு என்னெஸ்கே நாடக சபையின் ஸ்ரீ கிருஷ்ணலீலா ஒற்றைவாடையில் நடைபெற்றது. ஒவியர் மாதவன் அவர்களின் ஒப்பற்ற கைவண்ணத்தைக் கண்டு களித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவல்லவா? அன்று மீண்டும் அவர் படைத்த அற்புதக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். கே. ஆர். இராமசாமி ஸ்ரீ கிருஷ்ணனாகவும், செல்வி கல்யாணி ருக்மணியாகவும் நடித்தார்கள். இருவரையும் மேடையில் பார்த்த போது இணைப்பொருத்தம் பிரமாதமாக இருந்தது. நாடகம் முடிந்ததும் கம்பெனி வீட்டி லேயே தங்கும்படி சகஸ்ரநாமம் கூறினார்.

மறுநாள் காலை ஆசிரியர் எம்.எஸ். முத்துக்கிருஷ்ணனோடும் மற்றும் பழைய நண்பர்களோடும் பேசிக் கொண்டிருந்தேன். அப் போது கே. ஆர். இராமசாமிக்கும் செல்வி கல்யாணிக்கும் விரை வில் திருமணம் செய்து வைத்து விடுமாறு கூறினேன். ராமசாமி யும் என்ைேடு இருந்தார். அவருக்கும் அந்த எண்ணம் இருப் பதை எல்லோரும் உணர்ந்தோம். என். எஸ்.கே. சிறையிலிருந்து வந்ததும் அப்படியே நடத்திவிடாலாமென்றார் முத்துகிருஷ்ணன்.

அன்று மாலையும் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியையும் டி. சதாசிவம் அவர்களையும் சந்தித்தோம். 19.5.45இல் திருச்சி யில் நடைபெறவிருக்கும் எங்கள் ஒளவையார் நாடகத்திற்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக்கொண்டேன். கல்கி மகிழ்வோடு ஒப்புக் கொண்டார். அதன்பின் சென்னையில் பல்வேறு நண்பர் களைச் சந்தித்தேன். நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் எங்களோடு மேனகாவில் நடித்த கே.டி. ருக்மணியைச் சந்திக் காமல் போவதில்லை. அவரையும் சென்று பார்த்து வந்தேன். அன்றிரவும் சகோதரர் சகஸ்ரநாமத்தோடு தங்கினேன்.

கே. எம். முன்வியின் வாதத்திறன்

30 ஆம் தேதி முற்பகல் உயர்நீதிமன்றம் சென்று இலட்சுமி காந்தன்கொலை வழக்கு விசாரணையைப் பார்த்தேன்.கலைவாணர் பாகவதர் இருவரையும் கைதிக்கூண்டிலே பார்த்தபோது என்னல் தாங்க முடியவில்லை, கைதிக் கூண்டிலேயே நாற்காலிகள் போட்டுக் கலைமணிகள் இருவரையும் சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு அவர்களையும் உட்கார வைத்திருந்தார்கள். கே. எம். முன்ஷியின் திறமையான வாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டிலிருப்பவர்களின் உள்ளத்தில் கோடி கோடி எண்ணங்கள். அல மோதிக் கொண்டிருக்குமல்லவா? அதுதானே இயல்பு! பாகவதர், நாயுடு இருவருக்கும் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், கலைவாணர் எதைப் பற்றியும் சிந்தித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவர் உற்சாகத்தோடு பாகவதரின் முதுகைத்தட்டி நான் கோர்ட்டுக்கு வந்திருப்பதைச் சிரித்துக் கொண்டே சுட்டிக் காட்டினார் . துன்பத்தின் எல்லையிலும் இன்பத்தைக் காணும் இந்த உயரிய நிலை மேதைகளுக்கே உரிய விசித்திரப் பண்பல்லவா? அன்று மாலையே புறப்பட்டு மறுநாள் காலை திருச்சிக்கு வந்துசேர்ந்தேன்.

நான் திருச்சிக்கு வந்த நான்காம் நாள் காலைப் பத்திரிகைகளில் நெஞ்சந் திடுக்கிடும் செய்தி வந்திருந்தது. கலைவாணர், பாகவதர் இருவருக்கும் தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது என்ற துயரமிக்க செய்தி. இதனைப் படித்ததும் கம்பெனி நடிகர்கள் சிலர் அழுதார்கள். நானும் ஒர் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.