உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/தமிழ் நாடகப் பரிசுத்திட்டம்

விக்கிமூலம் இலிருந்து
தமிழ் நாடகப் பரிசுத் திட்டம்

நவம்பர் 4 ஆம் நாள் திருச்சி சேர்ந்தோம். நாடகம் நடை பெறும் நகர சபைத் தியேட்டரில் தங்கினோம். கம்பெனிக்கு வீடு தேடியலைந்தோம். எங்கும் கிடைக்கவில்லை. பெண்களுக்கு மட்டும் தென்னுரில் ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டரிலேயே குடியிருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. சமையல்மட்டும் பக்கத்திலுள்ள ஒருசிறிய வீட்டில் செய்து கொட்டகையில் கொண்டு வந்து பரிமாறினார்கள். இதனால் நாடகத்தைத் தொடங்கவும் தாமதம் ஏற்பட்டது. கரூர் வெண்ணெய் மலை செட்டியாருக்குத் தென்னுாரில் பெரிய வீடு இருந்தது. அவர் தேவகோட்டையில் இருந்தார். அவரைப் பார்த்துவர தம்பி பகவதி தேவக்கோட்டை போய்த் திரும்பினார். செட்டியார் ஊரில் இல்லை.வேறு வழியின்றிக் கொட்டகையிலேயே தங்கியிருந்தோம்.

17.11.44இல் திருச்சியில் சிவலீலா தொடங்கியது. 1939 இல் திருச்சியில்தான் சிவலீலாவை அரங்கேற்றினோம். அப்போது வருவாயில்லை. இப்போது அதேதிருச்சியில், அதே நாடக அரங்கில் நான்காண்டுகளுக்குப் பின் சிவலீலாவை அமோகமாக வரவேற்றார்கள். ஞாயிறு புதன்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கும்,மற்ற நாட்களில் இரவு 9-30 மணிக்குமாக நாடகம் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற்றது. வைரவிழா கொண்டாடினோம். தஞ்சை நகரசபைத் தலைவர் திரு ஏ. ஒய். அருளானந்தசாமி காடார் சிவ லீலா வைர விழாவுக்குத் தலைமை வகித்துப் பாராட்டினார்.

தமிழ் நாடகப் பரிசு

சிறுகதைப் போட்டிப்பரிசு; தொடர்கதைப் போட்டிப்பரிசு; கட்டுரைப்பரிசு என்றெல்லாம் பத்திரிகைகள் நடத்துகின்றனவே நாடகப்பரிசு என்று ஏன் ஒருவரும் நடத்தவில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டு மூன்று நாட்கள் இதைப் பற்றி நன்கு சிந்தித்தேன். ஏன்?நாமே ஒரு போட்டி நடத்தினுலென்ன? என்று தோன்றியது. பெரியண்ணா சின்னண்ணா இருவரிடமும் கலந்து யோசித்தேன். 1000 ரூபாய்கள் பரிசுக்காக ஒதுக்கலா மென்று பெரியண்ணா கூறினார். மறுநாளே அதற்கான ஒரு பெரியதிட்டம் வகுத்தோம். பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்ந் தெடுப்பதற்கு நீதிபதிகளாக யாரைப்போடலாம் என்றவிவாதம் எழுந்தது. இந்தப் பிரச்சினைகளைப்பற்றி திருச்சியிலுள்ள எழுத் தாள நண்பர்கள் சிலருடன் கலந்து ஆலோசித்தோம். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மனப்பட்ட கருத்து உருவாகவில்லை. ஒருவருக்குப் பிடித்த நீதிபதி மற்றொரு எழுத்தாளருக்குப் பிடிக்க வில்லை. எங்களுடைய நடுநிலை உணர்வில் எனக்கு நம்பிக்கை யிருந்தது. எல்லோரிடமும் நன்கு விவாதித்த பின் கடைசியாக நாங்களே நீதிபதிகளாக இருந்து நாடகங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். 1-12-44ல் தமிழ் நாடகப்பரிசு என்ற துண்டுப் பிரசுரத்தின் மூலம் எங்கள் திட்டத்தைப் பத்திரிகைகளுக்கு அறி வித்தோம். போட்டிப் பரிசு என்னும் சொல்லை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் ‘தமிழ் நாடகப் பரிசு’ என்று அறிவித்தோம். நாங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பிரசுரம் இதுதான்.

தமிழ் நாடகப் பரிசு
ரூ. 1000

தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் நாட்டங் கொண்ட எழுத்தாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

1. தமிழ் நாட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழர்களின் இன்றைய சமூக வாழ்க்கையையோ, பழந்தமிழ் மன்னார்களின் சரித்திரத்தையோ அடிப்படையாக வைத்துக் கற்பனையாக எழுதவேண்டும்.

2. மொழிப்பெயர்ப்போ, தழுவலோ கூடாது.

3. மூன்று மணி நேரத்தில் மேடையில் நடிப்பதற்கேற்ற முறையில் 25 காட்சிகளுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும்.

4. நாடகத்துடன் கதைச் சுருக்கமொன்றும், காட்சி விபரக் குறிப்பொன்றும் இணைக்கப்பட வேண்டும்.

5. 1945 ௵ ஜூன் மாதம் 1௳ க்குள் எமக்குக் கிடைக்கும் படி அனுப்பப்பட வேண்டும்.

6. எல்லாவற்றிலும் சிறந்ததென்று கருதப்படும் நாடகத்திற்கு முதற்பரிசாக ரூ. 600ம், இரண்டாவதாகக் கருதப் படும் நாடகத்திற்கு ரூ400ம் அளிக்கப்படும்.

7. பரிசுக்குரிய நாடகங்களைத் தேர்ந்தெடுக்கும் சகல பொறுப்பும் எம்மைச் சேர்ந்தது.

8. பரிசு பெறும் நாடகங்களின் சகல உரிமைகளும் எம்மைச் சேர்ந்தது.

9. பரிசு பெறும் நாடகங்களில் எந்தவிதத் திருத்தமும் செய்து நடிக்க எமக்கு உரிமையுண்டு.

10. பரிசு பெறாதவைகளில், நடிப்பதற்கேற்றவை என்று கருதப்படும் நாடகங்களை, ஆசிரியர் அனுமதியின் மேல் பரிசளித்து ஏற்றுக் கொள்ளப்படும்.

11. 1945 ௵ செப்டம்பர் மாதம் 1.ந்தேதி பரிசின் முடிவு அறிவிக்கப்படும்.

டி. கே. எஸ். சகோதரர்கள்
1- 12, 44. திருச்சி.

பத்திரிகைகளின் பாராட்டு

எங்களுடைய இந்த ஆத்மார்த்தமான முயற்சியினை வர வேற்றும், பாராட்டியும், தலையங்கம் தீட்டியும் உற்சாகப் படுத்திய பத்திரிகைகள் பல, அவற்றில் எனக்குக் கிடைத்தவை.

பாரததேவி - ஹிந்துஸ்தான்
சிவாஜி - கலாமோகினி
கிராம ஊழியன் - சினிமா
உலகம் நாரதர் - பிரசண்ட விகடன்
நவயுவன் - செட்டி நாடு
ஹனுமான் - சினிமா நிலையம்
கலை வாணி - குமரன்

பத்திரிக்கை மூலம் இவ்வாறு கிடைத்த பாராட்டைவிட நூற்றுக் கணக்கான நாடக ரசிகர்கள் எங்களுடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி நாங்கள் இதில் வெற்றி பெற வேண்டுமென நல்லாசி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழ் நாடகப் பரிசு சம்பந்தமான இந்தப் பிரசுரங்களை, எங்களுக்கு அறிமுகமான தனிப்பட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் அனுப்பியிருந்தோம். பத்திரிக்கைகளிலே வந்த செய்திகளைப் பார்த்து, எங்களுக்கு எழுதிக் கேட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் பிரசுரங்களை அனுப்பி வைத்தோம். இந்தத் திட்டத்தில் புராண இதிகாச நாடகங்கள் வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. சமூக நாடகங்களையும் சரித்திர நாடகங்களையும்தான் கேட்டிருந்தோம். ஈரோட்டில் நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு கூட்டிய எங்கள் நோக்கத்தில் சூழ்ச்சியோ தந்திரமோ எதுவும் இல்லையென்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தி இருந்தோம். புதிய நாடகக்தை உருவாக்கப் போதுமான அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் முதல் நாடகம் 8- 1-45ல் எங்களுக்குக் கிடைத்தது, உற்சாகமளிப்பதாக இருந்தது. தொடர்ந்து வாரத்திற்கு இரண்டொரு நாடகங்கள் வந்து கொண்டேயிருந்தன. பிரசுரத்தில் குறித்தபடி 1. 6. 45 வரை காத்திருந்தோம். அதற்குப் பின்னார் நானும் சின்னண்ணாவும் தனித் தனியாகப் படித்துக் குறிப்பெடுத்தோம். மொத்தம் வந்த 59 நாடகங்களில் 10 நாடகங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை மீண்டும் படித்தோம்.

பரிசுக்குரிய நாடகங்கள்

இறுதியாகப் பரிசுக்குரிய இரு நாடகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. குறித்தபடி 1. 9. 45இல் எங்கள் முடிவினைப் பிரசுரமாக வெளியிட்டுப் பத்திரிக்கைகளும் போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் அறிவித்தோம். ஒரு தினசரிப் பத்திரிகை யிலும், வார இதழிலும், எங்கள் முடிவை விளம்பரமாகவும் கொடுத்தோம். நடுநிலையுணர்வோடு நாங்கள் அளித்த தீர்ப்பு இது.

தமிழ் நாடகப் பரிசு ரூ 1000

முடிவு விவரம்

இப்பரிசுத் திட்டத்தில் கலந்துகொண்டு நாடக மெழுத முன் வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு நிறைந்த வணக்கங்கள்.

முதற் பரிசு ரூ. 600       இரண்டாவது பரிசு ரூ. 400 
அவள் விபசாரியா?       இராஜராஜசோழன் 
சமூக நாடகம்            சரித்திர நாடகம்

ல. சேதுராமன், அரவங்குறிச்சி அரு. இராமநாதன், கண்டனூர்

நடிப்பதற்கேற்றவை யென்று கருதி ஆசிரியரின் அனுமதி பெற்ற நாடகங்கள்.

புயல் (சமூக நாட்கம்)    வீரப்பெண் (சரித்திரநாடகம்)
‘அகிலன்’                  பி. எக்ஸ். ரங்கசாமி பி. ஏ.
                            பாளையங்கோட்டை

இப்பரிசுத் திட்டம் 1. 12. 44ல் வெளியிடப்பட்டது.

290 எழுத்தாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்புகள் அனுப்பப்பட்டன.

குறித்தபடி 1- 6. 45 வரை வந்த நாடகங்களின் மொத்த எண்ணிக்கை-59.

பரிசுத் தொகை 1- 9. 45ல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதர நாடகங்கள், குறித்த விலாசப்படி திருப்பியனுப்பி வைக்கப்படும்.

எங்களுடைய இம்முயற்சியை வரவேற்று ஆசி கூறிய அன்பர்களுக்கும் குறிப்புகள் வரைந்த பத்திரிக்கைகளுக்கும் இதய பூர்வமான நன்றி.

டி. கே. எஸ். சகோதரர்கள் உரிமையாளர்கள் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா 1. 9. 45. முகாம். திருச்சி

1945 இல் தமிழ் நாடகப் பரிசுகள் மூலம் எங்களுக்குக் கிடைத்த இராஜராஜ சோழன் நாடகத்தைத்தான், பத்தாண்டுகளுக்கு பின் 1955இல் அரங்கேற்றினோம். அதனைப் பற்றிய விவரங்களைப் பின்னால் அறிவிப்பேன்.

தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்காக இப்படி ஒரு பரிசுத் திட் டத்தை 28 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் நடத்தினோம் என்ற செய்தியினை இன்றையத் தலைமுறையினார் அறிந்திருக்க முடியாதல்லவா? அதனால்தான் சற்று விவரமாக இதனைக் குறிப்பிட்டேன்.

தமிழ் நாடகப் பரிசினை நாங்கள் வெளியிட்டதற்கும், அது பற்றிய முடிவினை அறிவித்ததற்கும் இடைப்பட்ட நீண்டகால இடைவெளியில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகளும், கவலை தரும் சம்பவங்களும் நடந்துள்ளன. பரிசு பற்றிய செய்தினைத் தொடர்பாக அறிவித்துவிட எண்ணியே இடைப்பட் நிகழ்ச்சிகளைச் சிறிது ஒத்தி வைத்தேன்.