எனது நாடக வாழ்க்கை/தம்பி பகவதி திருமணம்

விக்கிமூலம் இலிருந்து
தம்பி பகவதி திருமணம்


கரூரில் 2- 8- 42 முதல் சிவலீலா நாடகம் தொடங்கியது. நல்ல வருவாயும் இருந்தது. தம்பி பகவதிக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. சின்னண்ணா நாகர்கோவிலில் இருந்ததால் அங்கேயே பகவதிக்குப் பெண் பார்த்தார், பெரியண்ணாவும் நாகர்கோவில் சென்று பெண்ணைப் பார்த்து முடிவு செய்து விட்டுத் திரும்பினார். திருமணத்தேதி உறுதி செய்யப்பட்டது. கல்யாணக் கச்சேரியில் தமிழிசையே முழங்க வேண்டுமென நான் விரும்பினேன். மாலையில் இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகரின் இன்னிசையும் இரவில் திருமுருக கிருபானந்த வாரியாரின் வள்ளி திருமணம் கதையும் நடத்த முடிவு செய்தோம். தேசிகர் அப்போது காஞ்சீபுரத்தில் இருப்பதாக அறிவித்தேன். அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தந்தி மூலம் தகவல் அறிந்தேன். அவர் எங்கள் சார்பில் தேசிகர் அவர்களைச் சந்தித்துப் பேசி முடிவு செய்து கடிதம் எழுதினார். 1942 நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கருருக்கு அருகிலுள்ள திருமுருகன் திருத்தலங்களில் ஒன்றான வெண்ணெய் மலையில் தம்பிபகவதிக்கும் திருவளர் செல்வி கஸ்தூரிக்கும் திருமணம் நடந்தேறியது.

கந்தலீலா

கரூரில் கந்தலீலா நாடகத்தை நல்ல முறையில் தயாரிக்கத் திட்டமிட்டோம். சின்னண்ணா நாகர் கோவிலில் இருந்ததால் புதிய நாடகத்தை உருவாக்கும் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன். யாக குண்டம்; திருச்செந்துTர் கோயில்; சுவாமி மலை; பழனி, சரவணப் பொய்கை, திருத்தணிகை மலை முதலிய காட்சிகளெல்லாம் புதிதாகத் தயாரிக்கப் பெற்றன. சிவபெரு மானின் விஸ்வரூபமும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகள் பறப்பதும், அவை சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆவதும் கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தை களைத் தாலாட்டுவதும், பின் அவர்கள் நட்சத்திரங்களாவதும் அருமையான காட்சிகள். மின்சாரத்தின் துணையோடு மிக அற்புத மாக இவற்றை உருவாக்கிக் காட்டினார் மின்சார நிபுணர் ஆறுமுகம் 1943 ஜனவரி 1 ஆம் தேதியன்று கந்தலீலா அரங்கேறியது. சிறந்த பாடகர் எம். எஸ். வேலப்பன் சுப்பிரமணியராக வும்; நான் நாரதராகவும், பகவதி சூரபத்மனாகவும், டி. வி. நாரயணசாமி சிவபிரானுகவும் நடித்தோம். நாடகம். மிகச் சிறப்பாக அமைந்தது.

பண்டித இராமசர்மா

கரூர் பிரபல ஆயுர்வேத வைத்தியர் பண்டித இராமசர்மா வுடன் எங்களுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறந்த நாடக ரசிகர். அவரும் அவரது சகோதரரும் நாடகங்களை ஆர்வத்தோடு வந்து பார்ப்பார்கள், நோய், நொடி என்றால் அவரைத் தான் அணுகுவோம். அன்பும் பன்பும் நிறைந்த உத்தமமான மருத்துவர். கரூருக்கு வந்த சில நாட்களில் என் மனைவி நோயுற்றாள். எப்போதும் அவள் உடம்பு கதகதப்பாகவே இருந்தது. அடிக்கடி இருமிளுள். இராமசர்மா அவள் உடல் நிலையை நன்குகவனித்து ஏதேதோ மருந்துகள் கொடுத்தார். நோய் குணமாகவில்லை. ஒருநாள் என்னைத் தனியே அழைத்தார்.

“மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது” என்றார்,

“ஏன் நீங்களே குணப்படுத்தமுடியாதா?” என்றேன் நான்.

“கணவனைவிட்டுப் பிரிந்திருந்தால் விரைவில் குணப்படலாம்” என்றார் சர்மா.

அவர் வற்புறுத்தலின் மீது நான் மனைவியைச் சேலத்துக்கு அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டேன். சேலத்துக்குத் தகவல் அறிவித்தேன். சாந்தாவின் தமையன் வந்து அவளை அழைத் துச் சென்றார். என்னைப் பிரிய மனமில்லாதவளாய் சாந்தா கண் கலக்கத்துடன் பிரிந்து சென்றாள். சேலம் சென்ற பிறகும்

அவள் உடல்நிலை தேறவில்லையென்று கடிதம் வந்தது. அவளே உருக்கத்தோடு எழுதியிருந்தாள்.

பண்டித சர்மா ஒருநாள் என்னை அழைத்தார். சென்றேன்.

“நீங்கள் தொடர்ந்து சில மருந்துகள் சாப்பிட வேண்டும் என்றார். “சாப்பிடுகிறேன்” என்று ஒப்புக் கொண்டேன்.

அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டேன். “சாத்துக் குடிச்சாறு இரவு படுக்கைக்குப் போகு முன் ஒரு கோப்பை குடிக்க வேண்டும்” என்றார்.

அதன்படியே குடித்து வந்தேன். கரூர் நாடகம் முடிந்து பாலக்காடு புறப்படும்போது சர்மாவிடம் சென்று விடை பெற்றேன். புதிதாக மருந்துகள் எதுவும் கொடுக்கவில்லை. “சாத்துக்குடிச் சாறு மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்” என்றார். “ஏன்?” என்று கேட்டேன். “வேறொன்றுமில்லை. உடம்புக்கு நல்லது” என்றார் சர்மா. என்ன காரணத்திற்காக சர்மா எனக்கு மருந்துகள் கொடுத்தாரென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. பின்னால்தான் புரிந்தது. மொத்தம் ஐந்து மாதங்கள் கரூரில் நாடகங்கள் நடந்தன. பாலக்காடு பயணமானுேம்.

பழைய நாடகங்களுக்குப் புதிய மதிப்பு

பாலக்காடு கவுடர் தியேட்டரில் சிவலீலா தொடங்கியது. 1940இல் எங்கள் நாடகங்களுக்கு பாலக்காட்டில் இருந்த ஆதரவைவிட அதிக ஆதரவு இப்போது கிடைத்தது. மதுரை சிவ லீலாவுக்குப் பிறகு நாங்கள் சென்றவிடமெல்லாம் சிறப்புத் தான். நைந்துபோன பழைய நாடகங்களுக்குக்கூட ஒரு புதிய மதிப்பு ஏற்பட்டது. ஐம்பது ரூபாய் கூட வசூலாகாமல் இடைக் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மனோகராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடமின்றித் தவித்தது எங்களுக்கே வியப்பாக இருந்தது. மனோகரனாக நான் நடித்த போது, புதிய புதிய கட்டங்கள் சிலவற்றை மக்கள் ரசனை உணர்வோடுகை தட்டிப் பாராட்டினார்கள். இராமாயணம் நாடகத்திற்கு அதற்கு முன் கண்டிராத முறையில் நாடக வெறி பிடித்தவர்களைப் போல ரசிகப் பெருமக்கள் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து குவிந்தனார். இராமாயணம் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகும். ஆனால் ரசிகர்கள் மாலை 4 மணி முதலே இரட்டை மாட்டு வண்டிகளிலும், பஸ்களிலும், கார்களிலுமாகச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள். தியேட்டரின் பின்புறம் பெரிய தென்னத்தோப்பும், அதன் நடுவே கம்பெனி வீடும் இருந் தன. மாட்டு வண்டிகளையும்,கார்களையும், பஸ்களையும் தாண்டித் தான் நாங்கள் தியேட்டருக்குள் நுழைய வேண்டும். ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கட்டுச்சோற்றை வைத்துக் கொண்டு சிறுசிறு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது காட்சிக்குப் பெரும் விருந்தாக இருந்தது. மற்ற நாடகங்களுக்கு வசூல் குறையும்போது மனோகராவும், இராமாயணமுந்தான் வசூலுக்கு நம்பிக்கை தரும் நாடகங்களாக அமைந்தன.