உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/அறவழி காட்டிய அண்ணலின் மறைவு

விக்கிமூலம் இலிருந்து
அறவழி காட்டிய அண்ணலின் மறைவு

ஜனவரி 30ஆம் நாள். மக்கள் குலத்திற்குத் துக்க நாள் உலகமே அதிர்ச்சியடைந்தது. இதயம் படைத்தவர் எல்லோரும் அழுதனார். மாலை 6 மணிக்கு அகில இந்திய வானெலி மகாத்மா காந்தியடிகள் மறைந்தார் என்ற அவலச் செய்தியினைப் பலமுறை அலறியது. புதுதில்லியில் அன்று மாலை நான்கு மணி அளவில் ஒரு வெறிபிடித்த இந்துவால் காந்தி மகாத்மா சுடப்பட்டார் என்ற கல்லும் உருகும் செய்தியினைக் கேட்டுக் கலங்கினோம். உடனே நாடகத்தை நிறுத்திவிட்டு மேற்கொண்டு செய்திகளை அறியத் துடித்தோம். இரவு முழுதும் உறக்கமில்லை. மறுநாள் நடை பெற்ற மெளன ஊர்வலத்தில் கம்பெனி முழுதும் கலந்து கொண்டது.

பாரதி பாடல் உரிமை

பிப்ரவரி 2 ஆம் நாள் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக ஏ. வி. எம். அவர்களின் நோட்டீஸ் வந்தது. அதுபற்றி எங்கள் வக்கீல் திரு தாண்டவன் செட்டியார் அவர்களைக்கலந்து ஆலோசித்தோம். பில்ஹணன் நாடகத்தில் “தூண்டிற் புழுவினப்போல்” என்னும் மகாகவி பாரதியின் பாடலை நாங்கள் நாட்டியப் பாட லாக அமைத்திருந்தோம். அப்பாடல் பில்ஹணன் படத்திலும் பதிவு செய்யப்பட்டது. பாரதியின் பாடல்களை இசைத் தட்டு களிலும் திரைப்படத்திலும் பதிவு செய்யும் உரிமை சட்டப்படி தம்மைச் சேர்ந்ததென்றும், ஆகவே, பில்ஹணன் படத்திலிருந்து அப்பாடலை நீக்கிவிட வேண்டுமென்றும், அப்பாடலுடன் பில்ஹணன் படம் திரையிடப்படுமானல் தாம் நஷ்டயீடு கோரி

நடவடிக்கை எடுத்துக் கொள்ள நேருமென்றும் நோட்டீசில் குறிப்பிட்டிருந்தது. வக்கீலின் யோசனைப்படி,

பாரதி பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்தென்றும் அவற்றிற்குத் தனி மனிதர் உரிமை கொண்டாடுவதை ஒப்புக் கொள்ள முடியாதென்றும் நாங்கள் பதில் நோட்டீஸ் கொடுத்தோம்.

காவிரியில் காந்தி அண்ணலின் அஸ்தி கரைப்பு

காந்தியடிகளின் அஸ்தியினை இந்தியாவின் புண்ணிய நதி களிலெல்லாம் கரைக்க வேண்டுமென்று பாரதப் பேரரசு விரும்பியது. அதன்படி திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரையருகில் அஸ்தி கரைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. புனிதமான அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நானும் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், திரு ஏ. கிருஷ்ணசாமி செட்டியார் முதலியோரும் திருச்சிக்குச் சென்றிருந்தோம். 12. 2. 48இல் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அம்மா மண்டபக் கரையருகில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. கூட்ட நெருக்கடியில் போக வேண்டாமென்று நண்பர்கள் என்னைத் தடுத்தார்கள். உணர்ச்சிப் பிழம்பாக நின்ற நான் அந்தக் கூட்டத்தில் “வாழ்க நீ எம்மான்” என்ற மகாகவி பாரதியின் பாடலைப் பாடவேண்டுமென்று துடித்தேன். போலீசார் தங்களால் இயன்ற அளவு பெரு முயற்சி செய்து ஜன சமுத்திரத்தில் மூழ்க இருந்த என்னைக் காப்பாற்றி மைக் அருகிலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள். கண்ணிர் விட்டுக்கொண்டே “மகாத்மா நீ வாழ்க, வாழ்க!” என்ற பாரதி யின் பாடல்களைப் பாடிக் கதறினேன். அன்று நான் பிழைத்ததே ஆண்டவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்...இரவு 12 மணிக்கு, கடமையை நிறைவேற்றிய உணர்வோடு கோவை வந்து சேர்ந்தோம்.

அகிலனின் ‘புயல்’ அரங்கேற்றம்

தமிழ் நாடகப் பரிசுத் திட்டத்தில் வந்த நண்பர் அகிலன் அவர்களின் புயல் நாடகத்தினைக் கோவையில் அரங்கேற்றவிரும்பினோம். எங்கள் அழைப்பினை ஏற்று அகிலன் கோவைக்கு வந்தார்.

இருவரும் நாடகத்தைப் பற்றி நன்கு விவாதித்தோம். ஒரு வார காலத்திற்குள் நாடகத்தைத் திருத்தி எழுதிக்கொடுத்தார். நான் எதிர்பாராத அதிசயம் என்னவென்றால், நாடகத்திற்கான பாடல் களேயும் அவரே எழுதிக் கொடுத்தார். பாடல்கள் நன்றாக இருந்: தன. அதற்கு மெட்டுகள் அமைக்கும் பொறுப்பினே அப்போது எங்கள் குழுவில் நடிகராக இருந்த திரு ஆத்ம நாதனிடம் ஒப்படைத்தேன். ஆத்மநாதன் அப்போதே பாடல்களும் எழுது வார். அவரைப் பற்றிய விரிவான குறிப்புக்களை இரண்டாவது பாகத்தில் சொல்லவிருப்பதால் இங்கு சுருக்கிக் கொள்கிறேன். பாடல்களுக்கு ஆத்மநாதன் அமைத்திருந்த மெட்டுக்கள் அருமை யாக இருந்தன. நான் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக. சென்னை செல்ல முன் கூட்டித் திட்டமிட்டிருந்ததால் புயல் நாடகத்தில் வேடம் புனைய வாய்ப்பில்லாது போய்விட்டது.

13.4-48இல் புயல் நாடகம் அரங்கேறியது. நாடகத்தின் கதையமைப்பு நன்முக இருந்தது. நடிகர்கள் அனைவரும் திறமை. யாக நடித்தார்கள். 20 நாட்கள் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. நாடகத்தை அரங்கேற்றி விட்டு 18-4-48 இல் நான் சென்னைக்குப் பயணமானேன்.

பாரதியின் விடுதலைப் பயணம்

சென்னையில் பாரதிபாடலை நாட்டின் பொதுச்சொத்தாக்கு. வது சம்பந்தமாகப் பேராசிரியர் வ. ரா., பரலி சு. நெல்லையப்பர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோரை நானும் என் ஆத்மசகோ தரர் நாரண-துரைக்கண்ணனும் சந்தித்துப் பேசினோம். எங்கள் முயற்சிகள் வெற்றிபெற அப்பெரியவர்கள் மூவரும் நல்லாசி” கூறினார்கள். அன்றிரவு நாரண - துரைக்கண்ணன் வல்லிக் கண்ணன், இருவருடனும் கடற்கரை சென்று பாரதி பாடல் விடுதலை முயற்சி பற்றி இரவு 12 மணிவரை உரையாடிக் கொண்டிருந்தோம். மறுநாள் இரவு 10.30க்கு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன், ஆகியோருடன் பாரதி விடுதலைக்காகத் திருநெல்வேலிக்கு யாத்திரை புறப்பட்டேன்...

மறுநாள்கால திருச்சிவந்து வானெலிநிலையம் சென்றோம். நிலைய எழுத்தாளர் நண்பர் கே. பி.கணபதியைப் பாரதி விடுதலை யாத்திரையில் எங்களுடன் நெல்லைக்கு வருமாறு வேண்டினோம்.

அவர் ஆர்வத்தோடு இசைந்தார். சிவாஜி பத்திரிசை அலுவலகம் சென்று நண்பர் திருலோகசீதாராம் அவர்களையும் அழைத்தோம். அன்று எங்களோடு புறப்பட அவருக்கு வாய்ப் பில்லை. மீண்டும் வானெலி நிலையம் சென்றோம். அங்கு எதிர்பாராது பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களே ச் சந்தித்தோம். அவரும் எங்களோடு புறப்படச் சம்மதித்தார். அன்றிரவே செங்கோட்டைப் பாசஞ்சரில் ஐவரும் நெல்லைக்குப் பயணமானோம். இடநெருக்கடியால் பயணம் மிகவும் சிரமமாக இருந்தது. 22-4-48இல் காலை 10-மணிக்கு திருநெல்வேலி வந்து கஸ்தூரிகபே'யில் தங்கி உணவருந்தினோம்.

செல்லம்மா பாரதியைச் தரிசித்தோம்!

பாரதியின் துணைவியார் திருமதி செல்லம்மாபாரதி அவர்களையும், அவரது மூத்த மகள் திருமதி தங்கம்மா பாரதி அவர்களையும் அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்; பாரதி பாடல்களைத் தேசத்தின் பொதுச் சொத்தாக்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று திருமதி செல்லம்மாபாரதி எழுதிக் கொடுத்தார். திருமதி தங்கம்மாபாரதியும் அதில் கையெழுத்திட்டார். அதன்பின் நெல்லை நகரசபைத் தலைவர் திரு ப. ரா. அவர்களைக்கண்டு பேசினோம். இரவு தாமிரபரணி சிந்துபூந்துறையில் நாங்கள் ஐவரும் மற்றும் நெல்லை எழுத்தாள நண்பர்கள் சிலரும் கூடினோம். பாரதியின் கவிதைகளே நான் உரத்த குரலில் பாடி எல்லோரையும் மகிழ்வித்தேன். மறுநாள் பிற்பகல் பேராசிரியர் அ. சீ. ரா. அம்பாசமுத்திரம் சென்றார். மற்ற நால்வரும் ஊருக்குத் திரும்பினோம். திண்டுக் கல்லில் நண்பர். கே. பி. கணபதியை வழியனுப்பிவிட்டு மற்ற மூவரும் கோவை வந்து சேர்த்தோம். மறுநாள் இரவு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். புனிதமான இந்தப் பாரதி விடுதலைப் பயணம் வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்தி அவர்களிருவரையும் வழியனுப்பிவைத்தேன்.

திரு நாரண-துரைக்கண்ணனிடமிருந்து இரண்டாம் நாள் கடிதம் வந்தது. பாரதி விடுதலைக்குத் தம் அருமை மகனைப் பலி கொடுத்து விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் திருநெல்வேலியிலிருந்த 23. 4. 48 இல் அவரது அருமைத் திரு. மகன் காலமாகி விட்டான். துரைக்கண்ணன் போயிருக்கும் இடம் தெரியாத காரணத்தால் அவருக்குத் தகவல் கொடுக்க இயலவில்லை. மகனின் சடலத்தை வைத்துக்கொண்டு அன்று முழுதும். துரைக் கண்ணனே எதிர்பார்த்திருக்கிறார் அவரது துணைவியார். பயனில்லை. 26.4-48 இல் துரைக்கண்ணன் அவர்கள் தம் இல்லத் திற்குச் சென்ற பிறகுதான் செல்வமகன் மறைந்து விட்ட செய்தி தெரிந்தது. சடலத்தைக் கூடப் பார்க்க முடியாமல் போய். விட்டதே என்று கதறியழுதிருக்கிறார் துரைக்கண்ணன், என்ன செய்வது? சகோதரருக்கு ஆறுதல் கூறி, நீண்ட கடிதம் எழுதினேன்.

1. 5.48இல் கோவைக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு காமராஜ் அவர்களேக் கண்டேன். பாரதி பாடல் விடுதலை சம்பந்தமாக, பாரதியின் துணைவியாரைச் சந்தித்த, விபரங்களை அவரிடம் கூறினேன். சென்னை ராஜ்ய முதலமைச்சர் விரைவில் அதுபற்றி நடவடிக்கை எடுத்துக்கொள்வாரென தலைவர் காமராஜ் அவர்கள் உறுதி கூறினார்.