1
பாரதி -"ரஷ்யப் புரட்சியின் குழந்தை"
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியை, "ரஷ்யப் புரட்சியின் குழந்தை" என்றே இலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் தமிழகம் தந்த தேசிய மகாகவியான சுப்ரமண்ய பாரதியையும் 1905-1907-ம் ஆண்டுகளின் "ரஷ்யப் புரட்சியின் குழந்தை" என்றே சொல்லிவிடலாம். ஏனெனில் 1905-ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவில் எழுந்த தீவிரவாதத் தேசிய இயக்கத்தின்போதே, பாரதி தேச பக்தி பொங்கித் ததும்பும் கவிதைகளைப் படைத்த தேசிய கவியாகவும், அரசியல் பத்திரிகையாளராகவும் மலர்ச்சியுற்று மணம் பரப்பத் தொடங்கினார். பின்னால் வரப்போகிற வெற்றிகரமான புரட்சிக்கோர் ஒத்திகை என்று மாமேதை லெனினால் சரியாக வருணிக்கப் பெற்ற இந்தப் புரட்சி, இந்தியா உட்பட பல்வேறு கீழைநாடுகளிலும் தேச விடுதலைப் போராட்டங்களை மடை திறந்த வெள்ளம் போல் பொங்கியெழச் செய்தது. திலகர் போன்ற திறமை வாய்ந்த தலைவர்கள் தொடங்கிவைத்துத் தலைமை தாங்கி நடத்திய இந்தத் தீவிரவாதத் தேசிய இயக்கத்துக்குத் தூண்டுகோலாக விளங்கிய முக்கிய காரணங்களில், இந்தப் புரட்சியும் ஒன்றாகும் என்பது இன்று சரித்திர ஆசிரியர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ள உண்மையாகும்.
அந்நாளில் கனன்று பொங்கும் காளைப் பருவத்தினராக இருந்த பாரதி திலகரைத் தமது அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டதோடு, விழித்தெழுந்த நாட்டின் வீறு கொண்ட