நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/15. சிறை மாற்றம்
தன்னுடைய ஏவலோ, மந்திரமோ பலிக்க முடியாத படி மாவலி முத்தரையர் தடுத்துக் கட்டி விட்டதை உணர்ந்தான் தேனூர் மாந்திரீகன். கூண்டோடு அனைவரும் சேர்ந்து சிறைப்படுவதைத் தவிர அந்நிலையில் வேறு எதுவும் மீள வழி தோன்றவில்லை. எல்லாரும் செங்கணான் முகத்தையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மூடிய கதவுகளின் வெளியே இருந்து மாவலி முத்தரையரின் ஏளனச் சிரிப்புத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. கதவுச் சட்டங்களின் இடைவெளி வழியே அவர் முகத்தையும் இவர்கள் உட்புறம் இருந்தே காண முடிந்தது. “இதற்கு மேல் உங்கள் ஏவல் பலிக்காது! பேசாமல் மறுபடியும் சிறைக் கோட்டத்துக்குள் போய்ச் சேருங்கள். இனிமேல் தப்ப முடியும் என்று கனவு கூடக் காணாதீர்கள்!” என்று கடுமையான குரலில் அவர்களை நோக்கி அறைகூவினார் மாவலி முத்தரையர்.
இந்த அறைகூவலுக்கு மாந்திரீகன் செங்கணானோ, அழகன் பெருமாளோ, தென்னவன் மாறனோ, மாவலி முத்தரையரை நோக்கி மறுமொழி கூறிச் சீறவில்லை; என்றாலும் தங்களுக்குள் ‘மேலே என்ன செய்வது’ என்ற வினாவும் முகக் குறிப்பில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தென்னவன் மாறன் மாவலி முத்தரையரை நோக்கி ஏதோ கடுமையாக மறுமொழி சொல்லத் துடிதுடித்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு, ‘இப்போது அவருக்கு எதுவும் பதில் சொல்ல வேண்டாம்’ என்பது போல் கண் பார்வையாலேயே குறிப்புக் காட்டி விட்டான் அழகன் பெருமாள். இவர்கள் ஒடுங்கி விட்டார்கள் என்பதாக இந்த அமைதியைப் புரிந்து கொண்ட மாவலி முத்தரையர் தம்முடைய ஏவலை மீட்டுக் கொண்டார். ஒநாய்களும், நரிகளும் மறைந்தன. மாவலி முத்தரையர் திமிரான குரலில் மீண்டும் கூறினார்:
“இரவு நேரமாகி விட்டது. பாவம்! நீங்கள் எல்லாரும் மிகவும் களைத்திருப்பீர்கள். சிறையில் போய் இன்றிரவாவது உறங்குங்கள். நாளைக் காலையில் ஒருவேளை உங்கள் தலைவிதியின் கோர முடிவை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்!”
இதைக் கேட்டுக் குறளன் உதடுகளைப் பிதுக்கி முகத்தைக் கோணி மாவலி முத்தரையருக்கு அழகு காட்டினான். நண்பர்களின் உயரமான உருவங்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்ததனால், அவனுடைய குள்ள உருவம் அழகு காட்டியதை நண்பர்கள்தான் காண முடிந்ததே ஒழியக் கதவுக்கு வெளியே நின்ற மாவலி முத்தரையர் காண முடியவில்லை! இவர்களுடைய மெளனம் பணிவாகவும், பயமாகவும் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதனால் மாவலி முத்தரையர் இவர்களோடு பேசுவதை நிறுத்திக் கொண்டு வேறு ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
சில கணங்களில் மாவலி முத்தரையரைத் தேடிக் களப்பிரப் பூத பயங்கரப் படைத் தலைவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுடன் ஆயுதபாணிகளாகப் பூதபயங்கரப் படை வீரர்களும் வந்திருந்தனர்.
“நம்மைப்போல் அரசியல் காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையாக விழித்திருக்க வேண்டும். ஒரு விநாடி தாமதமாகவோ, பின் தங்கியிருந்தோ விழித்தால் கூடப் பெரிய தோல்விகள் வந்துவிடும். இந்தச் சிறைக் கோட்டத்துக் காவலை இரு மடங்காக ஆக்க வேண்டும் என்பதை இப்படி நான் சொல்லி நீ செய்யும்படி ஆகியிருக்கக் கூடாது. இவர்களை மட்டுமே இங்கிருந்து தப்ப விட்டு விடுவோமானால், மிக விரைவில் இந்தக் களப்பிரர் ஆட்சியே பறி போய் விடும் என்பதை நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குப் புரியவில்லை” என்று மாவலி முத்தரையர், பூத பயங்கரப் படைத் தலைவனிடம் இரைந்து கொண்டிருப்பது உள்ளே நின்ற இவர்களுக்கும் கேட்டது. சிறைக் கோட்டத்தின் வாயிலில் காவலுக்கு நிற்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிமாக்கிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலிமைப் படுத்தப் போகிறார்கள் என்பதும் உள்ளே இருப்பவர்களுக்குப் புரிந்தது. இந்த நிலைமை அவர்கள் கவலையை அதிகமாக்கியது.
வெளியே மாவலி முத்தரையரின் குரல் கேட்கவில்லை. இப்போது அவர் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. பூத பயங்கரப் படைத் தலைவன் மட்டும் காவல் வீரர்களுக்கு, ஏதோ எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் இட்டுக் கொண்டிருப்பது கேட்டது.
சிறிது நேரம் கழித்துக் தென்னவன் மாறனும், அழகன் பெருமாளும் முற்றிலும் எதிர்பாராதவிதமாக வீரர்கள் சூழப் பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
“உள்ளே வருகிறவர்கள் என்ன செய்தாலும் வாளா இருப்பதா, அல்லது ஒரு நிலைமைக்கு மேல் அவர்களை எதிர்த்துத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயற்சி செய்யலாமா, உள்ளே வருகிறவர்களை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு நம் எண்ணிக்கை இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள்? என்ன செய்யலாம்?” என்று கழற்சிங்கன், அழகன் பெருமாளின் காதருகே மெல்ல வினாவினான்.
“அவசரப்பட்டு விட வேண்டாம். அது நிலைமையை மேலும் கெடுத்து விடும். நீ சொல்கிறபடி செய்ய வேண்டும் என்றால், அப்படிச் செய்யும் வண்ணம் நானே சைகை காட்டுவேன். நான் சைகை காட்டாத பட்சத்தில், என்ன நடந்தாலும் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது” - என்று அழகன் பெருமாளிடமிருந்து கழற்சிங்கனுக்கும் பிறருக்கும் மறுமொழி கிடைத்தது.
தென்னவன் மாறனும், அவனோடிருந்த திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனுமே, தலைக்கு ஐவரை எதிர்க்கவும், அடித்து நொறுக்கவும் போதுமானவர்கள் என்றாலும், அவர்கள் பசி தாகங்களால் தளர்ந்து போய் நலிந்திருக்கிறார்கள் என்று அழகன் பெருமாளுக்குப் புரிந்தது. அவசரப்பட்டுத் தப்ப முயன்று, முடியாமல் அகப்பட்டுக் கொண்டால் பின்பு நிரந்தரமாகவே தப்ப முடியாமற் போய் விடுமோ என்ற முன்னெச்சரிக்கைதான் அழகன் பெருமாளுக்கு நிதானத்தைக் கொடுத்திருந்தது. உள்ளே வந்த பூத பயங்கரப் படைத் தலைவன், முதலில் தென்னவன் சிறுமலை மாறனையும், குன்றம் நிற்பது போல் தோன்றிய அறக்கோட்டத்து மல்லனையும் மற்றவர்களிடம் இருந்து தனியே பிரித்து நிறுத்திச் சங்கிலிகளாலும், விலங்காலும் பிணைத்துக் கட்டுமாறு, தன்னோடு வந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இந்தக் கட்டளையை அந்த வீரர்கள் நிறைவேற்றுமாறு விடுவதா, எதிர்த்துத் தாக்குவதா என அறியும் ஆவலோடு நண்பர்கள் அழகன் பெருமாளின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்திற்கு உள்ளே, தன்னோடு அழைத்து வந்த வீரர்களை வெளிப்புறம் மதிலோரமாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்பது அழகன் பெருமாளின் சந்தேகமாயிருந்தது. எந்த விநாடியில் பூத பயங்கரப் படைத் தலைவன் குரல் கொடுத்தாலும், வெளியே இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் ஓடி வர முடியும் என்ற நிலைமையை உய்த்துணர்ந்து நிதானமாக இருந்து விட்டான் அழகன் பெருமாள்.
வந்திருந்த களப்பிர வீரர்கள் தென்னவன் மாறனையும், அறக்கோட்டத்து மல்லனையும் விலங்கிட்டுச் சங்கிலியால் பிணிக்கத் தொடங்கினார்கள். அப்படி அவர்கள் இருவரும் பிணிக்கப்படும் போது மற்ற எட்டுப் பேரும் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்று முகங்களிலிருந்தே கண்டு பிடிக்க முயன்றவன் போல் இவர்களையே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தான் அந்தக் களப்பிரப் படைத் தலைவன். இவர்களும் அது புரிந்து மிகவும் தந்திரமானதும், எதிரி புரிந்துகொள்ள முடியாததுமான அமைதியைக் கடைப் பிடித்தனர். அந்த விநாடி வரை தன் கட்டளையையும் பேச்சுகளையும் பாலியிலேயே நடத்திக் கொண்டிருந்த களப்பிரப் படைத் தலைவர்களின் பேச்சையோ, எதையுமோ தெரிந்து கொள்ளாதது போல், அதே சமயம் எல்லாவற்றையுமே புரிந்து கொண்டும் தெரிந்து கொண்டும் மெளனமாக இருந்தார்கள் இவர்கள். இவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டது போலும் அறிந்து கொண்டது போலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்களேயானால் இவர்களுக்கு எந்த அளவு பாலி மொழி தெரியும் என்பதை அதிலிருந்து அவன் அனுமானிக்கக் கூடும். முதல் முயற்சியில் அவனால் அதைச் சாதிக்க முடியவில்லை. எனவே, தான் அறிந்தவரை உச்சரிக்க முடிந்த பிழையான கொச்சைத் தமிழில், “இவர்கள் இருவரையும் தனியே வேறு சிறையில் பிரித்து வைக்க வேண்டும். இவர்களைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் செல்லுங்கள்” என்ற பொருளில் கூறினான் அவன். தன்னுடைய கட்டளை களைத் தான் பாலியில் கூறிய வரை எதிரிலிருக்கும் மனிதர்கள் அடக்கமாகவும், அமைதியாகவும் இருந்தது மாறித் தானே தமிழில் கட்டளையிட்டதும் புரிந்து கொண்டு பொங்கி எழுகிறார்களா, இல்லையா என்பதை அவன் கவனிக்கவும், கணிக்கவும் முயலுவது போலிருந்தது. அப்படி அவன் தமிழில் கட்டளையிட்ட போதும் இவர்கள் எந்த மாறுதலையும் காண்பிக்கவில்லை. குறளன் மட்டும் யாரும் தன்னைப் பார்க்காத வேளையில் உதட்டைப் பிதுக்கி முகத்தைக் கோணி அழகு காட்டி முடித்துக் கொண்டான். மற்றவர்களின் இடுப்பு உயரத்தில் இவன் முகம் இருந்ததால், மற்றவர்கள் முகங்களையும், இவன் முகத்தையும் ஒரு சேரப் பார்ப்பது என்பது ஒரே சமயத்தில் இயலாது. மற்றவர்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும் போது, இவன் முகம் தெரியாமலும், இவன் முகத்தை மட்டுமே நேருக்கு நேர் பார்த்தாலோ, மற்றவர்களின் இடுப்புகள் மட்டுமே தெரிவது போலவும் இருந்ததனால், எல்லார் முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த படைத் தலைவனால் இவன் அழகு காட்டியதைக் கவனிக்க முடியாது போயிற்று. யாரை மீட்பதற்காகக் கோட்டைக்குள் வர நேர்ந்ததோ அவனையே வேறு சிறைக் கோட்டத்துக்கு மாற்றிக் கொண்டு போகிறார்கள் என்பது அழகன் பெருமாளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது என்றாலும், அதை எப்படித் தடுப்பது அல்லது தவிர்ப்பது என்பதுதான் புலப்படவில்லை. மாவலி முத்தரையர் பயமுறுத்திவிட்டுச் சென்றது போல் தென்னவன் மாறனுக்கோ, மற்றவர்களுக்கோ உயிர் அபாயம் ஏற்படுமுன் தப்பி விட வேண்டும் என்ற தவிப்பு மட்டும் உள்ளுற அழகன் பெருமாள் மனத்தில் இருந்தது. அவன் இப்படி நினைத்துத் தவித்துக் கொண்டிருந்த போதே அவனும், மற்றவர்களும் காணத் தென்னவன் மாறனையும், மல்லனையும் அங்கிருந்து வேறு சிறைக் கோட்டத்துக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
இருவரும் போகும் போது கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. படைத் தலைவன் கவனக் குறைவாயிருந்த ஒரு கணத்தில், ‘கவலைப்பட வேண்டாம்; நாம் எல்லாரும் சேர்ந்தே இங்கிருந்து தப்ப முடியும்! இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்ற பொருள் புரியத் தென்னவன் மாறனுக்குச் சைகை மூலம் அறிவித்தான் அழகன் பெருமாள். இந்தச் சைகையைத் தவிர வேறெதையும் இவர்களால் செய்ய முடியவில்லை. இவர்கள் எட்டுப் பேரையும் விலங்குகளாலோ, இரும்புச் சங்கிலிகளாலோ இட்டுப் பிணிக்காமல், அப்படியே அந்தப் பழைய சிறைக் கோட்டத்தில் அடைத்து விட்டுப் போனார்கள். பூத பயங்கரப் படைத் தலைவனும் வீரர்களும், வந்தவர்கள் எல்லோரும் போய் விட்டார்கள் என்பதையும் தாங்கள் எட்டுப் பேர் மட்டுமே இருக்கிறோம் என்கிற தனிமையையும் உறுதி செய்து கொண்ட பின், இவர்கள் மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசித் திட்டமிடலாயினர்.