நித்திலவல்லி/முதல் பாகம்/13. நதியும் நாகரிகமும்

விக்கிமூலம் இலிருந்து

13.நதியும் நாகரிகமும்

இளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா! உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில்தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே." “மறந்து விடவில்லை! என்றாலும் அஞ்ஞாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும், பயனுமில்லை. எதிரிகள் நம் கண் காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.”

“நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால், அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது, குறைந்த உயரத்திலிருந்து விழக் கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது, நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டு விடுவதும் அரச தந்திரங்களில் ஒன்றுதான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும், உயரங்களையும், அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து, பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே'- என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப்படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல், அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக் கூடாது.”

“மிகவும் பல்லாண்டுக் காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு...”

“நியாயம்தான். அதை நம்மை விட நம்முடைய வழி காட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்துதான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கணிகிறவரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத்தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.”

இப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறியவேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான் அவன். அந்த வேளையில், அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய் விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளைய நம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது.

யாழுக்கு நரம்பு பின்னிக் கொண்டிருந்தவன் பெயர் காரி என்றும், அவன் யாழ் வல்லுநனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகின்றான் என்றும் தெரிந்தது.

வாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தவன் தேனூர் மாந்திரீகன் செங்கணான் என்றும், அவன் மாந்திரீகனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகிறான் என்றும் பூத்தொடுத்துக் கொண்டிருந்தவன் பெயர் சாத்தன் என்றும், அவன் மாலை தொடுப்பவனாக அகநகரில் கலந்து ஊடுருவியிருக்கிறான் என்றும் அறிய முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தவனை, அவனுடைய உருவத்தின் காரணமாகவோ என்னவோ குறளன் என்று அழைத்தார்கள் அங்கிருந்தவர்கள். அவன் சந்தனம் அரைப்பவனாக நகரில் கலந்திருந்தான். நகரில் இருக்கும் பாண்டியநாட்டு மக்களின் கருத்தைக் களப்பிரர்களுக்கு எதிராகத் திரும்புவதில் கழற்சிங்கன் உட்பட இவர்கள் ஐவரும் நாளுக்கு நாள் வெற்றியடைந்து வருவதாகத் தெரிந்தது.

மதுரை மாநகர மக்களுக்குக் களப்பிரர் ஆட்சியில் வெறுப்பு வளர வளர, இவர்கள் செயல்களும் வளர்ந்து கொண்டிருந்தன. களப்பிரர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உணர்வு நெருப்பாய்க் கனிந்து கொண்டிருந்தது என்பதை இந்த நண்பர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. உப வனத்திலிருந்து, அகநகரில் வெள்ளியம்பலத்திற்கு இரகசியமான நிலவறை வழி ஒன்று இருப்பதை இவர்கள் வேண்டும்போதெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும், நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் சுற்றுப் புறத்துச் சிற்றூர்களிலும் தங்கள் காரியங்களுக்குப் பயன்படும் நண்பர்களைப் பெருக்கியிருந்தார்கள் என்பதையும் கூட இளையநம்பி அறிந்து கொண்டான். கோநகருக்கும் பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையும் ஆசியும் பெற்ற சிலர் இப்படி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கழற்சிங்கன் சொன்னான்.

அழகன் பெருமாள் நீராடி விட்டு வந்ததும், பொதுவாக இளையநம்பிக்கு அவன் ஓர் எச்சரிக்கை செய்தான்:-

“ஐயா! வழக்கமாக இந்த உப வனப் பகுதிக்குக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படையினரோ, பிறரோ சோதனைக்கு வருவதில்லை. எதற்கும் புதியவராகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் பாண்டிய நாட்டின் தொலை தூரத்து ஊரிலிருந்து வரும் ஒருவருடைய சாயல் உங்களிடம் தென்படுகிறது. யாராவது ஐயப்பாட்டோடு வினவினால், ‘நான் அழகன் பெருமாள் மாறனின் உறவினன். அவிட்ட நாள் விழாப் பார்க்க வந்தேன்’ என்று சொல்லிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது.”

“அப்படியே சொல்லிக் கொள்வேன் இந்தச் சூழ்நிலை பழகுகிற வரை சில நாட்களுக்கு அப்படிக் கூறிக் கொள்ள வேண்டியது அவசியம்தான் அழகன் பெருமாள்” என்று இளையநம்பியும் அவன் கூறியதில் இருந்த நல்லெண்ணத்தை ஒப்புக் கொண்டு இணங்கினான். நீராடச் செல்லுவதற்கு முன் இளையநம்பி அழகன் பெருமாளிடம் கேட்டான்:-

“கொற்கைத் துறைமுகத்துக்கு வரவேண்டிய சோனகர் நாட்டுக் குதிரைக் கப்பல், என்று கரையடையப் போகிறது? கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்? எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள்?”

அழகன்பெருமாள் இதற்கு உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் பின், “நீங்களும் நீராடிப் பசியாறிய பின் அவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம். இரவெல்லாம்

வெள்ளியம்பலத்தில் காத்துக் கிடந்தும், நிலவறையில் நடந்தும் களைத்திருக்கிறீர்கள். முதலில் நீராடிப் பசியாறுங்கள்” - என்றான் அவன்.

இளையநம்பி அந்த மண்டபத்தின் பின் பகுதிக்குச் சென்று வையைப் படித்துறையில் இறங்கியபோது மண்டபப் புறங்கடையில் இருந்த தாழம்புதரை ஒட்டிச் சிறிய படகு ஒன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டான்.

அந்த அதிகாலை வேளையில் வையை மிக அழகாகத் தோன்றினாள். நீர் பாயும் ஓசை நல்லகுடிப் பிறப்புள்ள பெண்ஒருத்தி அடக்கம் மீறாமல் நாணி நகைப்பதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெடுந்துாரத்திற்கு நெடுந்தூரம் மறு கரைவரை தெரிந்த அந்த நீர்ப்பரப்பைக் காண்பதில் அளவற்ற ஆனந்தத்தை உணர முடிந்தது. மதுரை மாநகரில் புகழ்பெற்ற திருமருத முன்துறை அருகில் இருந்ததாலோ என்னவோ அந்தப் பகுதியின் வையைக் கரை சொல்ல முடியாத வசீகரமும் வனப்பும் நிறைந்து காட்சியளித்தது.

‘பாண்டிய மரபின் கீர்த்திமிக்க பல அரசர்களின் காலத்தை எல்லாம் இதன் கரைகள் கண்டிருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நின்று மணக்கும் தமிழ்ப் புலவர்களின் சங்கங்களை இதன் கரைகள் பெற்றிருந்தன. ஓர் இணையற்ற நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கு இந்த நதியும் ஒரு சாட்சி’- என்று நெஞ்சுருக நினைத்த போது அந்த நாகரிகத்தை இன்று அந்நியர்களாகிய களப்பிரர்கள் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்னும் நிகழ்கால உண்மையும் சேர்ந்தே இளைய நம்பிக்கு நினைவு வந்தது. அந்த விநாடிகளில் மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்கப் பாதாதி கேச பரியந்தம் ஒரு புனிதமான சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். நெஞ்சில் மூலநெருப்பாக ஏதோ ஒரு கனல் சூடேறினாற் போலிருந்தது.

தனி மண் மட்டுமே ஒரு நாகரிகத்தையோ வரலாற்றையோ படைத்துவிட முடியாது. அந்த மண்ணில் ஒடும் நதியும் விளையும் பொருள்களும் அந்த மண்ணையும் நீரையும் கலந்து வளரும் பயிர்களும், அவற்றால் உயிர் வாழும் மக்களும் சேர்ந்தே ஒரு நாகரிகத்தைப் படைக்கிறார்கள். நீரில்லாத மண்ணுக்கு மணமில்லை. நாகரிகமில்லை. அந்த வகையில் பல்லாயிரங்காலமாகப் பாண்டிய நாட்டு நாகரிகத்தை செவிலித் தாயாக இருந்து, புரந்து வரும் இந்த நதியை மார்பளவு நீரில் நின்று கைகூப்பித் தொழ வேண்டும் போல் ஒரு பக்தி உணர்வு அவனுள் சுரந்தது. அவன் தொழுதான், போற்றினான்.

‘சேரர் நாகரிகத்தைப் பேரியாறும்[1], சோழர் நாகரிகத்தைக் காவிரியும் உருவாக்கியது போல் எங்கள் தமிழகப் பாண்டி நாகரிகத்தின் தாயாகிய வையையே! உன் அலைக்கரங்களால் நீ என்னைத் தழுவும் போது தாயின் மடியில் குழந்தை போல் நான் தனியானதோர் இன்பத்தை அடைகிறேன்’ - என்று நினைத்தான் அவன்.

நீராடி வந்த இளைய நம்பிக்கு மாற்றுடையாக மதுரையின் கைவினைத் திறம் வாய்ந்த காருக வினைஞர்[2] நெய்த ஆடைகளை அளித்தான் அழகன் பெருமாள். பாண்டி நாட்டின் புகழ் பெற்ற உணவாகிய ஆவியில் வெந்த தீஞ்சுவைப் பிட்டும், உறைந்த நெய் போல் சுவையுடையதாகிய, திருநெய்க்கதலி என்னும் வாழை விசேடத்தைச் சேர்ந்த கதலிக் கனிகளையும் உண்ணக் கொடுத்து அழகன் பெருமாளும், நண்பர்களும் இளையநம்பியை உபசரித்தனர். அவன் பசியாறிய பின், அவர்களும் பசியாறினர். சிறிது நேரத்தில் அழகன் பெருமாளையும், செம்பஞ்சுக் குழம்பு குழைக்கும் குறளனையும் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு நகருக்குள் புறப்பட்டுப் போய் விட்டனர்.

அழகன் பெருமாளிடம் மீண்டும் குதிரைக் கப்பல் துறையடைவது பற்றிய விவரங்களைக் கேட்டான் இளைய நம்பி.

“போகலாம்! அதைத் தெரிந்து கொள்ளவே, இப்போது நாம் புறப்படுகிறோம்” என்று கூறித் தோளில் பூக்குடலையோடும், கையில் செம்பஞ்சுக் குழம்பு நிரம்பிய ஒரு பேழையோடும் ஆயத்தமாக இருந்த குறளனையும் உடன் அழைத்துக் கொண்டு எழுந்தான் அழகன் பெருமாள்.

“இப்போது நாம் எங்கே போகிறோம் அழகன் பெருமாள்?”

“கணிகை மாளிகைக்கு...”

அவர்களோடு இளையநம்பியும் உடனெழுந்து புறப்பட்டான் என்றாலும் ‘ஓர் அரசியல் அந்தரங்கம் பற்றிய செய்திகளை அழகின் மயக்க உலகமாகிய கணிகையர் மாளிகையில் இருந்து எப்படி அறியப் போகிறான் இவன்?'- என்ற வினாவே இளையநம்பியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது அப்போது.

  1. இன்று பெரியாறு
  2. நெசவாளிகள்