நித்திலவல்லி/முதல் பாகம்/29. தேனூர் மாந்திரீகன்
தன் கையிலிருந்த இரும்பு உலக்கையை குறளனிடம் கொடுத்து விட்டுத் தீப்பந்தத்தை வாங்கிக்கொண்டு நிலவறைக்குள்ளே சிறிது தொலைவு ஒளி தெரியுமாறு அதை கீழே தணித்துப் பிடித்தான் இளைய நம்பி. அதே சமயத்தில் “இந்தக் கபாலத்தையும் கழியையும் பற்றி இழுத்து மேலே எறி” என்று இரத்தினமாலையிடம் கூறினான் அழகன்பெருமாள். அந்தக் கபாலத்தைக் கைகளாலே தொடுவதற்குக் கூசி அருவருப்புக் கொண்டிருந்தாலும், அவள் நடுங்கும் கைகளால் அதைக் கழியோடு பற்றி இழுத்தாள். கீழே அதைப் பிடித்துக் கொண்டிருந்தவன் அழுத்திப் பிடித்துக் கொள்ளாததாலோ, அல்லது அவன் கைகள் தளர்ந்திருந்ததாலோ இரத்தினமாலை பற்றி இழுத்தவுடன் அந்தக் கழியும் கபாலமும் மேலே வந்து விழுந்து விட்டன. ஆனால், அதேசமயம் கீழே நிலவறையில் அதைப் பிடித்திருந்தவன் ஈனக்குரலில் வலி எடுத்து முனகுவது போல் கேட்கவே அவர்கள் நால்வருமே ஏக காலத்தில் வியப்படைந்து விட்டனர்.
உடனே அழகன் பெருமாளுக்கு முற்றிலும் புதியதொரு சந்தேகம் எழுந்தது. அவன் தன் கையிலிருந்த உலக்கையை மூலையில் வைத்து விட்டுத் துணிந்து கீழே நிலவறைக்குள் இறங்கினான். கீழே இறங்கிக் கொண்டு மேற்புறம் இளையநம்பியிடம் இருந்த தீப்பந்தத்தைக் கை நீட்டி வாங்கிப் படி மேல் தளர்ந்து கிடந்தவனைப் பார்த்ததும், “ஐயோ! இதென்ன கோரம்?- உனக்கு இது எப்படி நேர்ந்தது செங்கணான்?” என்று கதறாத குறையாக, உருகிய குரலில் வினாவினான் அழகன்பெருமாள். செங்கணானை மேலே தூக்கும் முயற்சிகள் உடன் மேற்கொள்ளப்பட்டன.
நிலவறை வழியின் ஏதோ ஒரு முனையிலிருந்து, அதைக் கண்டுபிடித்து அந்த மாளிகையைக் கைப்பற்றுவதற்காகக் களப்பிரர்கள் பூத பயங்கரப் படை வீரர்கள் சிலரை அனுப்பியிருக்கக் கூடுமோ என்ற பயத்துடனேயே அந்த விநாடி வரை கவலைப்பட்டுக் காரியங்களைச் செய்த அவர்களுக்கு, இப்போது படவேண்டிய கவலையும் வருத்தமும் வேறாக இருந்தது. தோளிலும் முன் கைகளிலும் இரணகளமாய் இரத்தம் பீறிட்டுப் பாயக் காயமுற்று வந்து சேர்ந்திருந்த தேனூர் மாந்திரீகன் செங்கணானைத் தன் கைகளால் மேலே தூக்கினான் அழகன்பெருமாள். இளையநம்பி மேற்புறமிருந்து கைத்தாங்கலாகச் செங்கணானின் உடலை வாங்கினான். “தேனூர் மாந்திரீகனுக்கு என்ன நேர்ந்தது? அவன் ஏன் இப்படிப் படுகாயமுற்று நிலவறை வழியே வந்து இங்கே விழுந்தான்?”- என்பதை எல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய நிலையில் அவன் அப்போது இல்லை. பேசக் கூடச் சக்தியற்றுச் சோர்ந்து போயிருந்தான் அவன். மேலே அவனைத் தூக்கியதும் நிலவறை மூடப்பட்டது.
‘இவ்வளவு ஆபத்தான நிலையிலும் தேனூர் மாந்திரீகன் மூங்கில் கழியில் கபாலத்தைக் கோத்து மேல் நீட்டியது ஏன்?' என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.
உடனே காயங்களுக்கு மருந்திட்டு அவனைத் தேற்றும் முயற்சிகளை அவர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. மருந்தரைப்பதற்கும், தைலம் காய்ச்சிக் கொண்டு வரவும் பறந்தாள் இரத்தினமாலை. அவளுடைய சுறுசுறுப்பு இளையநம்பிக்கு வியப்பை அளித்தது. பெண் ஓர் அழகு என்றால், அவளுக்குக் குறிப்பறியும் தன்மையும், விரைவும், சுறுசுறுப்பும் இன்னோர் அழகு. அழகுக்கு அழகு செய்வது போல், இவை இரண்டுமே இரத்தினமாலையிடம் அமைந்திருந்தன.
தவிட்டைத் துணியில் கட்டிக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்துச் செங்கணானின் உடலில் ஒத்தடம் கொடுத்தார்கள் அழகன் பெருமாளும் இளையநம்பியும். செங்கணான் ஏதோ நலிந்த குரலில் சொல்ல முயன்றான். அப்போதிருந்த நிலையில் அவன் பேசுவது நல்லதில்லை என்று கருதிய இளையநம்பி, ‘அமைதியாயிருக்குமாறு’ அவனுக்குச் சைகை செய்தான்.
“இப்போது நீயிருக்கும் தளர்ந்த நிலையில் எதுவும் பேசவேண்டாம். பின்னால் நாங்களே எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்" என்று அவனிடம் கூறி, அவனை அமைதியடையச் செய்தார்கள் அவர்கள். செங்கணான் முற்றிலும் எதிர்பாராதவிதமான இந்த நிலையில் வந்து சேர்ந்ததால், அன்றிரவு அவர்கள் உறக்கத்தை இழந்து அவனுக்குப் பணிவிடை செய்ய நேர்ந்தது. அந்தப் பணிவிடைகளால் அவர்களில் யாரும் சோர்வடையவில்லை.
‘இந்தப் பணி இழிந்தது. இந்தப் பணி உயர்ந்தது’ என்று பாராமல் கணிகை இரத்தினமாலை, தன் பொன்னுடலும், பூங்கைகளும் வருந்த அன்றிரவு உழைத்ததைப் பார்த்த போது, இளையநம்பியின் மனம் அவளிடம் கருணை மயமாய் நெகிழ்ந்தது. இளகி இணைந்தது.
கோநகரில் கணிகையரின் சிரிப்புக்கும், அன்புக்கும் கூட விலை உண்டு என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் கண் காணவே என்ன கேள்விப்பட்டிருந்தானோ, அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. அந்த மாளிகையில் தான் தங்கியிருந்த நாட்களில் காரணமின்றி, அந்த இளம் கணிகையைச் சந்திக்கும் முன்பே, அவள் மேல் தன் மனம் கொண்டிருந்த வெறுப்பு மாறி, நம்பிக்கை வரப் பெற்றிருந்தாலும் செங்கணானுக்கு உதவிய இரவில், இளையநம்பிக்கு அவள் மேல் இனம் புரியாத பாசமே உண்டாகியிருந்தது. இவளைச் சந்திக்கும் முன், ஒரு குறும்புக்காக இவளைக் குறைத்துப் பேசிய தன்னுடைய சொற்களைக் கேட்ட போதெல்லாம் அழகன் பெருமாள் ஏன் உடனே சினந்து சீறினான் என்பது இப்போது இளையநம்பிக்கு நன்றாகப் புரிந்தது.
‘ஆண்கள் செய்யவேண்டிய காரியங்களையே இங்கே பெண்கள்தான் செய்தாக வேண்டியிருக்கிறது' என்று இரத்தினமாலை தன்னைக் குத்திக் காட்டிப் பேசிய போது கூட அவளைத் தான் புரிந்து கொள்ளாத காரணத்தால், ‘அளவுமீறி அவளிடம் சினம்கொண்டு விட்டோமோ' என்று இப்போது எண்ணிக் கொண்டான் அவன். புண்பட்டு வந்திருக்கும் ஒருவனிடம் அவள் காட்டிய பரிவு, அவளிடம் அவன் பரிவு கொள்ளச் செய்வதாயிருந்தது; மிகவும் கனிவு கொள்ள வைப்பதாயிருந்தது.
மறுநாள் விடிந்ததும் தேனூர் மாந்திரீகன் ஓரளவு தெளிவடைந்திருந்தான். அவனிடமிருந்து என்னென்ன செய்திகள் தெரியப் போகின்றன என்று அறியும் ஆவலில் அவர்கள் காத்திருந்தனர். ஓரளவு அவன் பேச முடியும் என்ற அளவிற்கு நிலைமை தேறியிருந்ததை அறிந்து அழகன் பெருமாள் அவனைக் கேட்டான். “செங்கணான்! உனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? எவரால் ஏற்பட்டது? உன்னோடிருந்த காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகியோர் என்ன ஆனார்கள்?”
“எனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதை அப்புறம் சொல்கிறேன்...! காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகிய மூவரும் இங்கே வரவில்லையா? அவர்கள் மூவரும் இங்கே வந்து, உங்களோடு பத்திரமாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? நாங்கள் நால்வருமாக உப வனத்திலிருந்து கோட்டைக்குள் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று ஆலவாய்ப் பகுதியில், நான் தனியாகப் பிரிந்து சென்றேன். அவர்கள் மூவரும் என்னிடம் விடைபெற்று வெள்ளியம்பலப் பகுதிக்குப் போனார்கள். நண்பகலுக்குச் சிறிது நேரம் இருக்கும்போது இன்னும் சிறிது நாழிகைகளில் கோட்டைக் கதவுகள் மூடப்படலாம் என்பது போன்ற பரபரப்பு ஆலவாய்ப் பகுதியிலேயே தெரிந்தது. யாத்ரீகர்கள் மூட்டை முடிச்சுகளோடு ஓடினர். பூத பயங்கரப் படை அங்கங்கே புகுந்து நெருக்கத் தலைபட்டது. உடனே ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப் போகிறது என்று புரிந்து கொண்டு நான் ஆலவாய்ப் பகுதியிலிருந்தே, கிழக்குக் கோட்டை வாயிலுக்கு விரைந்து, அகநகரிலிருந்து வெளியேறிவிட்டேன். கோட்டைக்கு வெளியேயும் கடுமையான பாதுகாப்பு இருந்தது. என்னைச் சில பூத பயங்கரப்படை வீரர்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்களோ என்ற ஐயப்பாடு இருந்ததனால், உப வனத்துக்குத் திரும்பாமல் நான் நேரே தேனூருக்குச் சென்றேன்.
தேனூரிலும் என்னை அபாயம் சூழ்ந்திருந்தது. சுற்றுப்புறச் சிற்றூர்களிலும் கோநகரின் உள்ளேயும் ஆயிரக் கணக்கானவர்கள் களப்பிரர் ஆட்சியை எதிர்த்துத் திடீரென்று கலகம் புரியக்கூடும் என்ற அநுமானத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கடுமையான பாதுகாப்புகளைச் செய்துவிட்டார் கள். நான் தேனூரில் இருந்து பல நாட்கள் வெளியேறவே முடியாமல் போயிற்று. கடைசியில், நேற்று முன் தினம் மாலை ‘தேனூர் மயானத்தின் வன்னி மரத்தருகே, தன் மனைவிக்குப் பேய் ஓட்டுவதற்காக’ ஒரு மறவன் வந்து கூப்பிட்டான். அதுதான் நல்ல சமயமென்று அந்த மறவனுடைய வண்டியில் மறைந்து தப்பி, மயானத்துக்குப் போனேன். அன்றிரவு, மயானத்திலிருந்து நான் திரும்பவே இல்லை. ஊருக்குள்ளும் சுற்றுப்புறங்களிலும் களப்பிரர்கள் என் தலையைச் சீவி எறியக் காத்திருப்பது எனக்குப் புரிந்தது. மயானத்தில் இருந்த வன்னி மண்டபத்துப் புதரிலேயே பதுங்கியிருந்தேன். சுடுகாட்டு நரிகள் என் மேல் படை எடுத்தன. பசிச் சோர்வில் நான் சக்தியற்றிருந்தேன். நரிகளை நான் வெல்ல முடியவில்லை. அவற்றின் பசிக்கு நான் இரையாகி முடிந்து விடாமல் தப்ப முயன்றும், நான் முழு வெற்றி அடையவில்லை.
தேனூரிலிருந்து முன்னிரவில் புறப்பட்டு, வையையின் மறுகரையில் வந்து நீந்தியே இக்கரைக்கு வந்தால், இங்கே உப வனத்திலும் பூத பயங்கரப் படை இருந்தது. பேய் ஓட்டுவதற்குக் கொண்டு வந்திருந்த என் சாதனங்களைப் பயன்படுத்தி, மிகத் தந்திரமாக நடு இரவுக்கு மேல்தான் நிலவறை வழியில் நான் இறங்க முடிந்தது. நரி கடித்த காயங்களின் வலியும், கடும் பசியும் என்னை வாட்டின. ஏறக்குறைய முக்காலும் செத்து விட்டது போன்ற நிலையில்தான் நிலவறையில் நான் நடக்க முடிந்தது. இங்கே வந்த பின்பும், எனக்கிருந்த பயத்தில் இந்த மாளிகையும் களப்பிரர் வசப்பட்டிருக்குமோ என்று அஞ்சியே முதலில் மூங்கிற்கழியில் என் கை வசமிருந்த கபாலத்தைக் கோத்து நீட்டினேன். குரல் கொடுத்து நிலைமை அறியவும் அஞ்சினேன். நல்ல வேளையாக நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள். சுடுகாட்டு நரிகள் என்னைக் கிழித்துப் பாதி கொன்று விட்டன.”
“அட பாவமே! நிலைமைகள் இவ்வளவு கெட்டுப் போயிருப்பதால்தான், எங்கிருந்தும் எதுவுமே நமக்குத் தெரியவில்லை. மோகூரில் பெரியவர் எப்படி இருக்கிறாரென்று தேனூரில் ஏதாவது கேள்விப்பட்டாயா நீ?” என்று இளையநம்பி கேட்டபோது ‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் செங்கணான். அவர்கள் யாவரும் கவலையில் ஆழ்ந்தனர். அந்த நிலையில் இரத்தின மாலையே மீண்டும் உதவுவதற்கு முன்வந்தாள். இளைய நம்பியின் கண்கள் கனிவுடன் அவளை நோக்கின. அந்தக்கனிவை அங்கீகரித்துக் கொள்வதுபோல் அவளும் அவனைப்பார்த்தாள். இருவர் கண்களும் குறிப்பினாற் பேசின.