உள்ளடக்கத்துக்குச் செல்

என் பார்வையில் கலைஞர்/கண்களைக் கலக்கிய ஒரு கையறு சொல்

விக்கிமூலம் இலிருந்து
கண்களைக் கலக்கிய
ஒரு
கையறு சொல்


1997ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்

மேட்டுக் குடியினரால் புறக்கணிக்கப்பட்ட திராவிட இலக்கியத்தை மறு ஆய்வு செய்யும் போக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்களிடம் கடந்து ஐந்தாண்டு காலமாக தீவிரமாக ஏற்பட்டுள்ளது. இதில் என் பங்கும் உண்டு. எழுத்தாளர் வெ. புகழேந்தி எழுதிய அண்ணா வழி சிறுகதைகளை நான் படித்தேன். இந்தத் தொகுப்பில் அண்ணா, கலைஞர், தென்னரசு, ராதா மணாளன், இரா செழியன், சேகரன், முரசொலி மாறன், டிகேசீனிவாசன் போன்றவர்களின் அற்புதமான சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. ஒரு குப்பைத் தொட்டி தனது அனுபவத்தைச் சொல்வது போன்ற கலைஞரின் ‘குப்பைத் தொட்டி’ என்ற சிறுகதை இப்போது கூறப்படுகிறதே மேஜிக்கல் ரியலிசம் - அதாவது மாந்திரீக யதார்த்தம் அதற்கு முன்னோடியாக இருந்த கதையாகும். இந்தக் கதை இலக்கிய இதழான செம்மலரில் சிகரங்களைத் தொட்ட சிறுகதை வரிசையில் பிரசுரிக்கப்பட்டது.

தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி போன்ற அற்புதமான மண்வாசனை படைப்புகளை உருவாக்கியவரும், பல மொழிகளில் கொண்டெடுத்து செல்லப்பட்டவருமான என் இனிய தோழர் சின்னப்ப பாரதி அவர்கள் திராவிட மற்றும் முற்போக்கு படைப்பாளிகளின் படைப்புகள் மேட்டுக்குடியினரால் இருட்டடிப்பு செய்வதை உணர்ந்து, இவற்றை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு ஆங்கில காலாண்டு இதழை துவக்கினார். இந்தியன் லிட்ரேச்சர் அண்டு அஸ்தட்டிக்ஸ் (ILA-Indian Literature and Aesthetics) என்ற இந்த காலாண்டு இதழை மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் முல்லை வேந்தன் அவர்கள் சென்னையில் வெளியிட்டார்.

இந்த இதழில் கலைஞரின் நாலைந்து சிறுகதைகளும், அண்ணா இறந்தபோது கலைஞர், வானொலியில் ஆற்றிய உரை வீச்சும் இடம் பெற்றன. இவற்றைப் படித்துப் பார்த்த பிறமொழி வாசகர்கள் குறிப்பாக மார்க்சிய தோழர்கள் கலைஞரின் இலக்கியத்தில் ஒரு போர்க்குணம் இருப்பதை கோடி காட்டினார்கள்.

இப்படி கலைஞரின் இலக்கியத்தின் பக்கம் எனது கவனம் திரும்பியபோது, கலைஞருக்கு எதிரான பல்வேறு அரசியல் நிகழ்வுகள் ஒன்று திரண்டன. சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியுற்ற ஜெயலலிதா அவர்கள் மரித்தெழுந்தார். மேற்கு மாவட்ட, தென் மாவட்ட சாதிய சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டார். இந்தச் சமயத்தில் நான் கண்ட சில ‘கள் யாதார்த்தங்களை’ கலைஞரிடம் சொல்வதற்காக அவரைச் சந்திக்க சண்முகநாதனிடம் தேதி கேட்டேன். கலைஞர் அனுமதித்து விட்டார்.

வழக்கம் போல் கலைஞரை மாடியில் உள்ள அவரது அறையில் சந்தித்தேன். நான் கண்ட யதார்த்தங்களை அவரிடம் விளக்கினேன். ஜெயலலிதா தலைமையில் பலமான எதிர்சக்தி உருவாகி இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஒரு குறிப்பிட்ட சாதியினர் திமுகவினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று வாதாடினேன். ஆனால், கலைஞர் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த சாதியில் திமுகவில் நாற்பதுக்கும் அதிகமான பேரவை உறுப்பினர்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார். சென்ற சட்டப் பேரவை தேர்தலிலும் இவர்கள் தனக்கு ஒட்டு மொத்தமாக வாக்களித்ததாக தெரிவித்தார். இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதே சமயம் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் பலனும் இல்லை. நான், சென்ற சட்டப்பேரவை தேர்தல் போல், நாடாளுமன்ற தேர்தல் இருக்காது என்றும் திமுகவிற்கு அப்போதைய அளவிற்கு வாக்குகள் கிடைக்காது என்றும் குறிப்பிட்டேன்.

உடனே முதல்வர் டெலிகாமில் பேசி, சண்முகநாதனை ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியான முரசொலியை எடுத்துக் கொண்டு வரச்சொன்னார். ‘நீங்கள் தான் முரசொலி படிப்பதில்லையே’ என்று ஒரு செல்லக் குட்டும் வைத்தார். சண்முகநாதன் கொண்டு வந்த முரசொலியின், முதல் பக்கத்தில், கலைஞர் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த போது சுயமாய் திரண்ட கூட்டப் பெருக்கை புகைப்படமாக காட்டியது. கலைஞர் பெருமிதமாக ‘சமுத்திரம்! எனக்கு போகிற இடமெல்லாம் நல்ல கூட்டம் வருது... பாத்தீங்களா முரசொலியை . ஆனா பெரிய பத்திரிகைகள் இதை இருட்டடிப்பு செய்கின்றன’ என்றார். பேச்சு வாக்கில் கலைஞர் முதலில் முரசொலியையும், பின்னர் விடுதலையையும் இவற்றிற்கு பிறகுதான் இதர பத்திரிகைகளையும் படிப்பதாக அறிந்தேன். உடனே, நான் இந்த பாணியில் பேசினேன்.

‘சார் காமராசர்... புதிதாக தோன்றிய திமுக சக்தியா பற்றி கவலைப்படாம, ராஜாஜியை மட்டுமே ஒரு பெரிய சக்தியா நினைத்தார். இதனாலதான் அவர் தமிழக அரசியலில் திமுகவிடம் தோற்றார். நீங்களும் போணியாகாத விடுதலைப் பத்திரிகை மேல ஒரு அடிக்சன் வைத்திருக்கிங்க. இது உங்களை யாதார்த்தத்திலிருந்து திசை திருப்புமுன்னு நினைக்கிறேன். முதல்ல அந்த பத்திரிகையை படிக்கிறத விடுங்க சார்’.

‘ஆயிரந்தான் இருந்தாலும் நான் வேலை செய்த பத்திரிகை ஆயிற்றே.’

கலைஞருக்கு, ஜெயலலிதாவிடம் அடிமைப் பட்டுப்போன விடுதலை பத்திரிகையின் பெருங்காய வாசனை போகவில்லை. ‘விடுதலையை பற்றி பேசும் போது அவரது கண்கள் உள்நோக்கிப் போய் கடந்த காலத்தில் கால் நிமிடம் மையம் கொண்டன. மீண்டும் எனது பேச்சு, வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலைச் சுற்றி வந்தது. இன்னின்ன இடங்களில் கலைஞருக்கு ஆதரவு இருக்காது என்பதை சொன்னேன். எனது நோக்கம் கலைஞரை உஷார் படுத்த வேண்டும் என்பதுதானே தவிர ஊக்க குறைப்பிற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டினேன்’

கலைஞரோ எனது கருத்தாக்கம் - எதிர்கருத்தாக்கம் என்ற தத்துவார்த்தப் போக்கை புரிந்தவர் போல் மெல்ல தலையாட்டினார். நான், மீண்டும் மீண்டும் அவருக்கும் கட்சிக்கும், மக்கள் மத்தியில், குறிப்பாக பேருந்து கட்டணங்களை உயர்த்தியதால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை தெரிவித்தபோது கலைஞர், மனம்விட்டு என்னிடம் ஆணியடிப்பதுப் போல் இந்த பாணியில் பேசினார்.

‘சமுத்திரம்! எல்லாருக்கும் நன்மை செய்யணுமுன்னுதான் நான் நினைக்கிறேன். கட்சிக்கு அப்பால் எல்லா மக்களையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன். பல நல்ல காரியங்களை செய்து வருவது உங்களுக்கே தெரியும். அப்படியும் யாராவது ஓட்டுப் போடா விட்டால் அதற்கு நான் என்ன சமுத்திரம் செய்ய முடியும்’

என் கண்கள் கலங்கி விட்டன. ஒரு மகத்தான் தலைவர், மாபெரும் முதல்வர், ஒரு எழுத்தாள சாமனியனிடம் எப்படியெல்லாம் மனம் விட்டு பேசுகிறார்! கட்சிக் காரர்களிடமும், அமைச்சர்களிடமும் கூட கூற முடியாத ஒரு கருத்தை என்னிடம் எப்படி முன் வைக்கிறார் என்பதை நினைத்ததும், நான் ஆடிப்போனேன். குறிப்பாக சண்முகநாதன் அவர்கள் மூலம் முரசொலியை தருவித்து கலைஞரே, தனது நெல்லை மாவட்ட சுற்றுப் பயண நிகழ்வு புகைப்படங்களை என்னிடம் காட்டியது என்னை பிரமிக்க வைத்தது.

நான் கலைஞரை நீர் போங்கும் கண்களோடு நிலைகுலைவாய் பார்த்தேன். ஒரு மகத்தான் மனிதரின் அருகே இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ந்து போனேன். சிறிது இடைவெளிக் கொடுத்து எழுந்து நடந்தேன். ஆனாலும், கலைஞர் அன்று உணர்ச்சி வசப்பட்டு, என்னிடம் தெரிவித்த இந்தக் கருத்து மனதளவில் அவரது செயலாக்கம் எப்படி மாசற்று இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. இதைக் கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் புரிந்து கொண்டார்களா என்பது வேறு விவகாரம்.