உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல்

விக்கிமூலம் இலிருந்து

29. நன்றியறிதல்

நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.

-ஸெனீக்கா

செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும்.

-ரோஷிவக்கல்டு
நன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக.
-ஸெனீக்கா

பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன்.

- ஸிஸரோ

நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க் குணங்களோடன்றி அது ஒரு பொழுதும் தனியாகக் காணப்படுவதுமில்லை.

- புல்லர்

நன்றியறியாமை ஒருவித பலவீனமே. பல முடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை.

- கதே

நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களை அனுஷ்டிப்பதில் கஷ்டம் உண்டு. இதிலோ அணுவளவு கஷ்டமும் கிடையாது.

-அடிஸன்

நண்பர்களின் உதவியை நாம் மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் நம்முடைய நன்றியறிவுடைமையன்று. நம்முடைய தகுதியைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசையேயாகும்.

-ரோஷிவக்கல்டு
நன்றியறிதல் அறங்களில் குறைந்தது. நன்றியறியாமை மறங்களில் கொடியது.
-பழமொழி

சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர்.

-தாக்கரே

வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை.

-ஷேக்ஸ்பியர்

நன்றியறிதல் என்பது அதிக கவனமாய் உண்டாக்க வேண்டிய பயிராகும். அதைக் கீழோரிடைக் காண முடியாது.

-ஜான்சன்

★ ★ ★