உள்ளடக்கத்துக்குச் செல்

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/14. இழந்த காத’லில் சிவாஜி

விக்கிமூலம் இலிருந்து

14. இழந்த காத’லில் சிவாஜி

“யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பெனி அப்போ பரமக்குடியிலே இருந்தது. அதை அங்கிருந்து கொண்டு போய்ச் சேர்க்க முதல்லே ஒரு இடத்தை ஏற்பாடு செஞ்சிக்க வேண்டாமா ? அதுக்காகச் சேலத்துக்கு வந்து ‘ஓரியண்டல் தியேட்டர் மருதப்பிள்ளை'யைப் பார்த்தோம். அவர் கிட்டே விஷயத்தைச் சொல்லி, நாடகம் நடத்த ஓரியண்டல் தியேட்டரிலே இடம் கொடுக்க வேணும்னும், நாடகச் சாமானுங்க ரயில்வே வேக்கின்லே வந்து இறங்கறப்போ அதை எடுக்க ஐந்நூறு ரூபா கடனாக் கொடுத்து உதவனும்னும் கேட்டுக்கிட்டோம். அவர் ‘சரி'ன்னு சொல்லிவிட்டார்.”

“தேவலையே, பணம்கூடச் சில சமயம் இருக்கிற இடம் தெரிந்து இருக்கும் போலிருக்கிறதே! இல்லாவிட்டால் நீங்கள் சொன்னதற்கெல்லாம் அவர் உடனே சரியென்று சொல்லியிருக்க முடியுமா ?”

“பணம் மட்டுமில்லே, அதிகாரம்கூடச் சில சமயம் இருக்கிற இடம் தெரிந்து இருக்கிறதில்லே; அதாலே வர ஆபத்துக்கள் தான் இந்த உலகத்திலே அதிகம்... அதை விடுங்க... நாடகம் நடத்த அட்வான்ஸ்’ இல்லாம தியேட்டர் கொடுக்கிறதுக்கும், வேக்கின்லே வர நாடகச் சாமான்களை கடனாப் பணம் கொடுத்து எடுக்கிறதுக்கும் ஆளைப் பிடிச்சாச்சு. அடுத்தாப்போலப் பரமக்குடியிலே இருக்கிற ரவுடிக் காண்ட்ராக்டருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து..." “அது என்ன, ரவுடிக்காண்ட்ராக்டர், ரவுடிக் காண்ட்ராக்டர் என்று சொல்கிறீர்கள்... ?”

“அந்தக் காலத்துப் பெரிய மனுஷனுங்களிலே பல பேரு அப்படித்தான் இருப்பாங்க. எடுத்ததுக்கெல்லாம் அடியாட்களை விட்டுத் தங்களுக்குப் பிடிக்காதவங்களைப் ‘பிடிடா, கட்டுடா, அடிடா'ம்பாங்க.....”

“அந்த மாதிரி பெரிய மனுஷர்களிலே பரமக்குடி காண்ட்ராக்டரும் ஒருவர் போலிருக்கிறது...”

“ஆமாம், அவருக்கு டிமிக்கி கொடுத்து அங்கே இருக்கிற நடிகர்களையும், நாடகச் சாமான்களையும் சேலத்துக்குக் கொண்டுவரப் பணம் வேணாமா ? அதுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சோம். ‘திருச்சியிலே ஒரு நண்பர் இருக்கார், அங்கே போய் அவரைப் பார்த்தா ஒரு இருநூறு ரூபாயாவது வாங்கலாம்’னு பொன்னுசாமிப் பிள்ளை சொன்னார். அப்படியே போய்ப் பார்த்தோம்; ரூபாயும் கிடைச்சது. ‘நான் இங்கேயே இருக்கேன். நீ மட்டும் பரமக்குடிக்குப் போய் அங்கே இருக்கிறவங்களையெல்லாம் அழைச்சிக்கிட்டு இங்கே வந்துடு. இங்கேயிருந்து எல்லாரும் சேர்ந்தாப்போலச் சேலத்துக்குப் போவோம்’னார் பிள்ளை. ‘சரி'ன்னு பணத்தை வாங்கிக்கிட்டு நான் பரமக்குடிக்குப் போனேன்...”

“அப்போது சிவாஜி கணேசனும் அங்கே இருந்தார், இல்லையா?”

“ஆமாம், இருந்தார். அவருக்கும் மற்ற நடிகர்களுக்கும் என்னைக் கண்டதும் ரொம்ப சந்தோஷம். எதிலே சந்தோஷம்னா ‘எந்த நிலைமையையும் நான் சமாளிப்பேன்’கிறதிலே சந்தோஷம். சினிமாவிலும் சரி, நாடகத்திலும் சரி, அப்பவே எனக்குக் கொஞ்சம் ‘ஸ்டார் வால்யூ’ இருந்தது. அதாலே காண்ட்ராக்டரும் என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டு, ‘இனிமே நீங்களும் இந்த நாடகக் கம்பெனியிலே சேர்ந்து நடிக்கணும்னு’ சொன்னார்...." “உங்கள் பாடு ரொம்ப தர்ம சங்கடமாகப் போயிருக்குமே?”

“இப்படிச் சொல்லி ரொம்ப நாளா ரொம்பப் பேர் ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கானுங்க....”

“எப்படிச் சொல்லி... ?”

“தர்மத்தையும் சங்கடத்தையும் சேர்த்துச் சொல்லி ... இது வேறே, அது வேறே இல்லையா ?.... ரெண்டையும் ஒண்ணாப் போட்டு ஏன் குழப்பனும் ?. நின்னா தர்மத்தின் பக்கம் நில்லு: இல்லேன்னா சங்கடத்தின் பக்கம் நில்லு ... நான் தர்மத்தின் பக்கம் இல்லே நிற்க வந்திருக்கேன்?... அதாலே, ‘ஐயா, காண்ட்ராக்டர் ஐயா! நானும் இந்த நாடகக் கம்பெனியிலே சேர்ந்து நடிக்கிறதிலே எனக்கு ஒண்னும் ஆட்சேபணையில்லே. ஆனா ஒண்ணு'ன்னு ஆரம்பிச்சேன்: ‘என்ன ?ன்னார். இந்த ஊரிலேயே இந்த நாடகக் கம்பெனி ரொம்ப நாளா இருந்துடிச்சி, வேறே ஊருக்கு மாத்திடுவோம், அங்கே நானும் சேர்ந்து நடிக்கிறேன்'னேன். ‘நல்ல யோசனை'ன்னார். நாலு ஸ்டேஷன் தள்ளியிருந்த ஒரு ஊர் பேரைச் சொல்லி....”

“அது எந்த ஊர் ?”

“பேர் மறந்து போச்சு; அந்த ஊருக்குப் போய் நாடகம் போடுவோம்னேன். சரி'ன்னார். அப்ப்டிச் சொல்லுங்க'ன்னு எல்லாச் சாமானையும் பாக் பண்ணி ‘செல்ப்’ போட்டுச் சேலத்துக்கு அனுப்பி வைச்சேன். காண்ட்ராக்டருக்கு மட்டும் நாலு ஸ்டேஷன் தள்ளி ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கெல்லாம் திருச்சிக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டேன். நாலு ஸ்டேஷன் தள்ளி ரயில் நின்றதும் காண்ட்ராக்டர் அவசர அவசரமாக ரயிலை விட்டு இறங்கி, ‘இறங்குங்க, இறங்குங்க'ன்னு எங்களையும் இறங்கச் சொல்லி அவசரப்படுத்தினார். ‘திருச்சியிலே ஒரு விசேஷம், நாங்க அதுக்குப் போயிட்டு வந்துடறோம், நீங்க இங்கேயே இருங்கன்னேன். அதுக்கும் ‘சரி'ன்னார் அந்த அப்பாவி..." “ஆமாம், இப்படி ஏமாற்றி விட்டு வருகிறீர்களே, அவர் நீங்கள் இருக்கும் ஊருக்கு உங்களைத் தேடி வந்து...”

“என்ன பிரயோசனம் ? ஊர்ப்பெரிய மனுஷனுங்க ரவுடிசமெல்லாம் அந்தந்த ஊரிலேதானே செல்லும்? மற்ற ஊர்களிலே செல்லாதே!”

“ம், அப்புறம்?”

“சேலம் ஓரியண்டல் தியேட்டரிலே ‘இழந்த காதல்’ நாடகம் போடறதா தீர்மானம் பண்ணோம். எனக்கு அந்த நாடகத்திலே ‘ஜகதீஷ்'னு வில்லன் வேஷம், சிவாஜிக்குச் ‘சரோஜா'ன்னு தாசி வேஷம்... சும்மா சொல்லக்கூடாது, அந்தக் காலத்திலேயே அவர் வேஷத்துக்குத் தகுந்தாப் போல நல்லா மினுக்கி, குலுக்கி, தளுக்கி நடிப்பார்...”

“அவரும் “ராதா அண்ணன் கிட்டே நடிக்கக் கத்துக்கிட்டவங்களிலே நானும் ஒருத்தன்’னு சமீபத்திலே கூடச் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறதே?”

“நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். என்கிட்டே அவருக்கு எப்பவுமே ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு...”

“இருக்காதா... ?”

“எல்லாருக்கும் எங்கே இருக்கு ? அவருக்கு இருக்கு, அவ்வளவு தான்.... அதோடே அதை விட்டுடுவோம்... டிராமாவுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சப்புறம் போஸ்டர், நோட்டீசு எல்லாம் போட்டு விளம்பரம் செய்ய வேணாமா ?.... அதுக்குக் கையிலே காசில்லே. ‘என்னடா செய்யறது ?’ ன்னு நானும் பிள்ளையும் கையைப் பிசைஞ்சிக்கிட்டு மாடர்ன் தியேட்டர்ஸ் வாசல்லே நின்னுக்கிட்டிருந்தோம்; என்.எஸ்.கே. வந்தார். இப்போ சில சினிமா நடிகருங்க டெரிலின் சட்டைப் பையிலே ஒரு நூறு ரூபா நோட்டை வெளியே தெரியறாப் போல வைச்சிக்கிட்டுத் திரியறதை நீங்கக்கூடப் பார்த்திருப்பீங்களே.... ?" “ஆமாம், பார்த்திருக்கிறேன்.”

“அந்த மாதிரி அப்போ என்.எஸ்.கே.யும் எப்போப் பார்த்தாலும் தான் போட்டுக்கிட்டிருக்கிற சில்க் சட்டைப் பையிலே ஒரு நூறு ரூபா நோட்டை வெளியே தெரியறாப் போல வைச்சிக்கிட்டிருப்பார். அவர் எங்களைக் கண்டதும் ‘என்ன விஷயம் ?’ ன்னு கேட்டார். பொன்னுசாமிப்பிள்ளை விஷயத்தைச் சொன்னார். ‘நாடகக் கம்பெனிக்காரன் பிழைப்பு இன்னும் அப்படித்தான் இருந்துகிட்டிருக்கா ?....ம்... இருக்கட்டும், இருக்கட்டும்’னு சட்டைப் பையிலே இருந்த நூறு ரூபா நோட்டை எடுத்து அப்படியே கொடுத்துட்டார்...”

“ஆச்சரியந்தான்!”

“இதிலே என்ன ஆச்சரியம் இருக்கு... ?” “புகழ் பெற்ற ஒரு சினிமா நடிகர் அக்கம் பக்கம் தெரியாமல் முழுசா நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார் என்றால்... ?”

“அவர் எப்பவுமே புகழை விலை கொடுத்து வாங்கறதில்லையே, அதாலே அப்படிக் கொடுத்துவிட்டார்... அப்புறம் கேட்கணுமா?... போஸ்டர் போட்டு ஒட்டியாச்சு, நோட்டீசு அடிச்சுக் கொடுத்தாச்சு. அந்த நாடகத்திலே ஒரு ‘சவுக்கடி சீன்’ வரும். அதிலே எனக்கு நல்ல பேரு. அதாலே, ‘இழந்த காதலில் எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைப் பார்க்கத் தவறாதீர்கள்’னு தனி விளம்பரம் வேறே. இத்தனை அமர்க்களத்தோடே இந்த நாடகம் நடந்துகிட்டிருந்தப்போ, ஒரு நாள் சக நடிகர் ஒருவர் வந்து, ‘உங்களுக்கு அண்ணாதுரையைத் தெரியுமா ?’ ன்னு கேட்டார். ‘எந்த அண்ணாதுரையை ?'ன்னேன். ‘அதுதான், தளபதி அண்ணாதுரையை ‘ன்னார். யாருக்குத் தளபதி? ன்னேன். “சரியாப் போச்சு’, போ! திராவிடர் கழகத்துக்காகப் பெரியார் ஈ.வெ.ரா. தமிழர் படைன்னு ஒரு படையை திரட்டிக்கிட்டிருக்கலையா? அதுக்கு அவர் தளபதின்னார். ‘சரி, அதுக்கு என்ன இப்போ ?’ ன்னேன். அவர் வந்து உங்க நாடகத்தைப் பார்த்து விட்டுக் குடி அரசு பத்திரிகையிலே ஒகோன்னு எழுதியிருக்கார். உங்களைப் பால்முனின்னு சொல்லியிருக்காருன்னார். ‘பால்முனியா, அவன் யாரு?’ ன்னேன். ‘மேல் நாட்டிலே புகழ் பெற்ற நடிகன். அவனுக்கு நிகரா அவர் உங்களை ஒப்பிட்டு எழுதியிருக்காருன்னார். ‘நல்ல வேளை, நான் அவனைப் பார்த்துக் காப்பி அடிச்சி நடிக்கிறதா எழுதலையே?’ ன்னேன். ‘இல்லே'ன்னார். அதுக்கு மேலேதான் ‘யார் அந்த அண்ணாதுரை ?'ன்னு நான் கவனிக்க ஆரம்பிச்சேன்; விசாரிக்கவும் ஆரம்பிச்சேன். ஈரோடிலே பெரியார் நடத்தற ‘குடி அரசு’ பத்திரிகையிலே அவர் துணையாசிரியரா யிருக்காருன்னும், என் நாடகத்தால் கவரப்பட்ட அவர், ஒவ்வொரு நாள் மாலையும் ஈரோடிலிருந்து சேலத்துக்கு வந்து என் நாடகத்தைப் பார்த்துவிட்டுக் கடைசி பஸ்ஸிலே ஈரோடுக்குத் திரும்பறாருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். ‘நமக்கும் இப்படி ஒரு ரசிகரா ?’ ங்கிறதைத் தவிர அப்போ நான் வேறே ஒண்ணும் நினைக்கல்லே. இது எந்த அளவுக்குப் போய் நின்னதுன்னா, அவரே ஒரு சமயம் என் நாடக மேடைக்கு வந்து, ‘அழையா வீட்டுக்கு துழையா சம்பந்தியா வந்திருக்கேன்’னு சொல்றதிலே வந்து நின்றது. அதோடு இல்லே, அதுக்கு மேலேயும் போய், ‘இந்தத் தாழ்ந்த தமிழகத்தைத் தலை தூக்கி நிறுத்த நூறு திராவிடர் கழக மாநாடுகள் நடப்பதும் ஒண்ணு, ஒரே ஒரு எம்.ஆர்.ராதா நாடகம் நடப்பதும் ஒண்ணு'ன்னு சொல்றதிலே போய் நின்றது."