நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/9. மாரீசன் குரல்

விக்கிமூலம் இலிருந்து

9. மாரீசன் குரல்


“நான் தான் ‘ராவணனையும் பொன்னையாவையும் மாறி மாறிப் பார்த்துக்கிட்டிருந்தேனே தவிர, என்னை அந்த ராவணன் திரும்பிக்கூடப் பாக்கல்லே. ஒரு வேளை மாரீசன் குரலை எதிர்பார்த்து, அதிலேயே அவர் கவனமாயிருந்துகிட்டிருக்காரோ என்னவோன்னு நான் மெல்ல பொன்னையாவை நெருங்கி, ‘இங்கே பஞ்சவடி எங்கே இருக்கு ? ன்னு அவர் காதோடு காதாக் கேட்டேன். அவர் ஒரு நிமிஷம் முழிச்சிட்டு மறு நிமிஷம் தன்னைச் சமாளிச்சிக்கிட்டு, ‘பக்கத்திலேதான் இருக்கு'ன்னார். அங்கே இருந்து மாரீசன் குரல் கொடுத்தா இங்கே கேட்குமா ?ன்னேன். ‘கேட்கும், கேட்கும்'னார். அந்தச் சமயத்திலே, ‘லட்சுமணா, லட்சுமணா'ன்னு ஒரு குரல் கேட்டது. அவ்வளவுதான், கமண்டலத்தைக் கையிலே தூக்கிக்கிட்டு ‘பிச்சை, தாயே"ன்னு ராவணன் சீதையைச் சிறையெடுக்கப் பஞ்சவடிக்குக் கிளம்பிடுவார்ன்னு நான் நெனைச்சேன். நெனைச்சபடி நடக்கல்லே. அவர் ஆடாம அசையாம உட்கார்ந்துகிட்டிருந்த இடத்திலேயே உட்கார்ந்துகிட்டிருந்தார். அப்போ, ‘லட்சுமணா, லட்சுமணா'ன்னு மறுபடியும் குரல் கொடுத்துக்கிட்டே ராவணன் வீட்டிலிருந்து யாரோ ஒரு அம்மா வெளியே வந்தாங்க. அவங்களைப் பார்த்ததும், ‘இவங்கதான் மண்டோதரியா?ன்னு நான் பொன்னையாவைக் கேட்டேன். அவர் சிரிச்சார். ‘என்ன சிரிக்கிறீங்க ?ன்னேன், ‘நீ என்னடா, ஒரேயடியா ராமாயண காலத்துக்கே போயிட்டே ? இது ராவணன் காலம். ஆனா அந்த ராவணன் இல்லே இந்த ராவணன், இவர் பெயர் ஈ.வே.ராமசாமி. எப்போதுமே இவர் சாமியார் மாதிரிதான் இருப்பார். இப்போ ஊரெங்கும் ஒரே பரபரப்பை உண்டாக்கிக்கிட்டிருக்கே சுயமரியாதை இயக்கம், அந்த இயக்கத்துக்கு இவர்தான் தலைவர். இப்போ வெளியே வந்தாங்களே ஒரு அம்மா, அந்த அம்மா மண்டோதரியில்லே, இவர் மனைவி நாகம்மை, அவங்க கூப்பிட்டது ராமன் தம்பி லட்சுமணனை இல்லே, வேலைக்காரன் லட்சுமணனை'ன்னு விளக்கிக்கிட்டே போனார்....”

“ஈ.வே.ரா.வைச் சுற்றி உட்கார்ந்திருந்த இளம் விதவைகள் யார் என்று நீங்கள் கேட்கவில்லையா ?”

“கேட்டேன்; அவங்க சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவங்க, மறுமணம் சேஞ்சிக்கிறதுக்காக வந்திருக்காங்கன்னு சொன்னார்.”

‘மாப்பிள்ளைகள் ?”

“தாங்களாகவே வருவதும் உண்டாம்; பெரியாரும் தேடி வைப்பதுண்டாம்.”

“அந்த வேலையைக் கன்னிப் பெண்களுக்கும் அவர் செய்யக் கூடாதா? அவர்களில் பலருக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, கலியாணமாவது கஷ்டமாயிருக்கிறதே?”

“கன்னிப் பெண்களுக்காகக் கவலைப்பட எத்தனையோ பேர் இருப்பாங்க. கைம்பெண்களுக்காக கவலைப்பட அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, பெரியாரைத் தவிர வேறே யாரும் இருக்கிறதா தெரியலையே?”

“அதற்கெல்லாம் ஒரு தனித் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் அவரைத் தவிர வேறு யாருக்கும் வர மாட்டேன் என்கிறது!”

“ஏன் வரல்லே?”

“அவரிடம் இருப்பதுபோல் மற்றவர்களிடம் பணம் இல்லாமல் இருப்பதுகூட அதற்கு ஒரு காரணமாயிருக் கலாம்..." "பணம் அவர்கிட்டே மட்டுமா இருக்கு, எத்தனையோ பேர்கிட்டே இருக்கத்தான் இருக்கு, அவங்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் வந்துடுதா?”

“பணத்தோடு மனமும் இருந்தால்தான் வரும்”

“அப்படி வாங்க, வழிக்கு அதுதான் உண்மைங்கிறேன். அவர் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ சேவை செய்ய வந்தவர் இல்லே, சேவையைச் சேவைக்காகவே செய்ய வந்தவர். அதனால்தான் அத்தனை எதிர்ப்புக்களுக்கும் தாக்குப் பிடிச்சி அவராலே இமயம்போல நிற்க முடியுது. அந்த நாளிலே அவர் நடத்திய குடியரசுப் பேப்பர் விறுவிறுப்பா வித்தாப்போல் இந்நாளிலே வேறே எந்தப் பேப்பரும் வித்து நான் பார்க்கல்லே. பெரியாரைத் திட்டி எழுதறதுக்குன்னே டி.கே.பாவலர் அப்போ ஒரு பேப்பர் நடத்தினார். அதன் பேரு இப்போ எனக்கு மறந்து போச்சு. அதுவும் விறுவிறுப்பா விற்கும். குடியரசு பேப்பர் வாங்கற அத்தனை பேரும் அதையும் வாங்குவாங்க. காந்தியார் வெளிநாட்டுத் துணிங்களைத் தெருவிலே தூக்கிப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்தினாபோல ‘நாங்க மேல் ஜாதிக்காரங்க'ன்னு சொல்லிக்கிட்டவங்க குடியரசுப் பேப்பரைத் தெருவிலே தூக்கிப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்துவாங்க. அந்தத் தீயிலே பெரியார் பேப்பர்தான் சாம்பலாச்சே தவிர, அவருடைய கொள்கைங்க, கோட்பாடுங்க சாம்பலாகல்லே...”

“நாங்கள் மேல் சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலும் அவருடைய கொள்கைகள், கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்மேல் அவர் கொண்டுள்ள துவேஷந்தான்.”

“தவறான பிரசாரம் அது. அவருக்கு எப்பவுமே நாங்க மேல் சாதிக்காரங்க'ன்னு சொல்லிக்கிட்டிருக்கிறவங்ககிட்டே துவேஷமே கிடையாது; அங்க சாஸ்திரங்க, சம்பிரதாயங்க மேலேதான்." "சரி, அதை விடுங்கள், ஈ.வே.ரா.வை முதன் முதலாகப் பார்த்தீர்களே, அவர் உங்களிடம் என்ன சொன்னார் ?”

“ஒண்ணும் சொல்லல்லே; என்னையும் பொன்னையாவையும் பார்த்ததும் பொதுவா ‘வாங்கய்யா'ன்னு சொன்னதோடு சரி. அதுக்கு மேலே அவர் செய்ய வேண்டிய உபசாரத்தையெல்லாம் அவர் மனைவியார் நாகம்மை அண்ணியார்தான் சேஞ்சாங்க.”

“யார் வந்தாலும் அவர்கள்தான் உபசாரம் செய்து அனுப்புவார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புறம்... ?”

“ஈரோடிலிருக்கிற எங்க கம்பெனி சேலத்துக்குப் போச்க...”

“அங்கேயும் ஏதாவது தகராறா ?”

“தகராறு கம்பெனியிலே வரல்லே; வழியிலே வத்துடிச்சி!”

“சரிதான், அதுவும் தன் வழியை மாற்றிக்கொண்டுவிட்டது போலிருக்கிறது. அது என்ன தகராறு ?”

“ஒருநாள் ராத்திரி நாலு பேரோடு சேர்ந்து தான் சினிமாவுக்குப் போனேன். திரும்பறப்போ ஒரு ஜட்கா வண்டியைப் பிடிச்சோம். அவன் என்னடான்னா, ‘நாலு பேரைத்தான் வண்டியிலே ஏத்துவேன், அஞ்சாவது ஆசாமியை ஏத்தவே மாட்டேன்’னு அடம் பிடிச்சான்.”

“அந்த ஆசாமி நீங்களாத்தான் இருந்திருப்பீர்கள். “

“அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”

“தகராறு வர வேண்டுமானால் மாமூல்படி அது உங்கள் மூலமாகத்தானே வர வேண்டும்?”

“நல்ல ஆளய்யா, நீங்க! நானா தகராறுக்குப் போறேன், அவங்க தானே தகராறுக்கு வராங்க?" "அநேகமாகப் பயணிகளைக் கொண்டு போய் வீட்டில் இறக்கி விட்டுக் கூலி வாங்கும்போதுதான் வண்டிக்காரர்களே தகராறுக்கு வருவார்கள். உங்கள் அதிர்ஷ்டத்தைப் பாருங்கள், வண்டியில் ஏறும்போதே தகராறுக்கு வந்திருக்கிறான்”

“அதைக் கூடப் பெரிசா நெனைக்காம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா, எனக்குன்னு தனி வண்டி பிடிக்க முடியுமா நான்'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்கல்லே. பொறுமை என்னை விட்டுப் போயிடிச்சி. அவனைக் கொழந்தையைத் தூக்கறாப்போல அப்படியே தூக்கிக் கீழே விட்டுட்டு, நானே லகானைப் பிடிச்சி ஜாவ்ரே ஜாவ்’னு குதிரையை ஓட்ட ஆரம்பிச்சேன். ‘ஏய், ஏய்'னு கத்திக்இட்டே அவன் என்னைத் தொரத்திக்கிட்டு வந்தான். ‘வாப்பா, வந்து நீயும் வண்டியிலே ஏறிக்க, நானே ஒட்றேன்'னேன். ‘என்னடா, வெளையாடறியா ?ன்னு மொறைச்சிக்கிட்டே அவன் இடுப்பிலே செருகி வைச்சிருந்த பிச்சுவாவை எடுத்து என் வயித்திலே குத்த வந்தான். நான் கையிலிருந்த ‘பாட்டரி லைட்'டாலே அவன் கையிலிருந்த க்த்தியை ஒரு தட்டுத் தட்டிவிட்டேன். அது எங்கேயோ போய் விழுந்தது. இருட்டிலே அது எங்கே விழுந்ததுன்னு அவனுக்கும் தெரியல்லே, எனக்கும் தெரியல்லே. கத்தி கையை விட்டுப் போனதும் ரெண்டு பேரும் தாராசிங், கிங் காங்காகி ரோட்டிலேயே கட்டிப் புரண்டோம்...”

“இரண்டு பேரா ?..உங்களுடன் வந்திருந்த நாலு பேர் என்ன ஆனார்கள்?”

“வண்டிக்காரன் கத்தியை எடுத்தபோதே அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்!”

“ரொம்ப நல்லவர்களாயிருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் சொல்லிக் கொள்ளாமல் போயிருக்கிறார்கள்!”

“அந்தச் சமயத்திலே என்ன நடந்ததுன்னா, பத்துப் பதினஞ்சி முஸ்லிம்கள் ‘மார்றே, மார்றே'ன்னு கையிலே கெடைச்சதை எடுத்துக்கிட்டு அந்த வண்டிக்காரனுக்காக என்னை அடிக்க வந்துட்டாங்க. அப்பத்தான் அதுவரையிலே என்னோடு சண்டை போட்டுக்கிட்டிருந்த வண்டிக்காரன் ஒரு முஸ்லிம்னு எனக்குத் தெரிந்தது. ‘இதென்ன வம்பு, நம்மாலே இங்கே இந்து-முஸ்லிம் கலவரம் வேறே வந்துடக் கூடாதே'ன்னு நான் மெல்ல அத்தனை பேருக்கும் டிமிக்கி கொடுத்துட்டு நழுவிட்டேன்!”

“அதோடாவது விட்டார்களா ?”

“எங்கே விட்டாங்க ? என்ன ஆனாலும் என்னைத் தீர்த்துக் கட்றதுன்னு ஊர் முழுக்கத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு மேலே நான் அங்கே இருந்தா நல்லாயிருக்காதுன்னு ஓரியண்டல் டாக்கீஸ் வேலாயுதம் பிள்ளையும், மருதப் பிள்ளையும் சேர்ந்து என்னை அன்னிக்கு ராத்திரியே வண்டியிலே ஏத்தி, மறுபடியும் மெட்ராசுக்கே அனுப்பி வைச்சுட்டாங்க.”

“அதோடு நாகலிங்கம் செட்டியார் கம்பெனிக்குக் குட் பை; அப்படித்தானே ?”

“நானா குட் பை போட்டேன்? அவங்க இல்லே எனக்குக் குட் பை போட்டுட்டாங்க!”

“கொஞ்சம் கவுரமாயிருக்கட்டுமே என்று நான் அப்படிச் சொன்னேன்; அதைக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறீர்களே ?”

“அந்த மாதிரி கவுரவத்தையெல்லாம் ஏத்துக்கிறவன் இந்த ராதா இல்லே; அவன் வேறெ ஆளு!"