உள்ளடக்கத்துக்குச் செல்

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/11. வாசு பிறந்தான்!

விக்கிமூலம் இலிருந்து

11. வாசு பிறந்தான்!

“வஸ்தாது நாயுடு எனக்காக எங்கெங்கேயோ பெண் பார்த்தார். பார்த்த இடத்திலெல்லாம் ‘கூத்தாடிக்குப் பெண் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க.”

“அப்புறம்?”

“பையன் கூத்தாடியில்லே, மெக்கானிக்குன்னு சொல்லிப் பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. விழுப்புரத்திலே ஒரு பொண்ணு, சரஸ்வதின்னு பேரு. அவ அப்பா ரயில்வேயிலே “டிராப்ட்ஸ் மேனாக இருந்தார். அவரைப் பிடிச்சாங்க. “பையன் மெக்கானிக்கா இருந்தா பார்க்கலாம்’னு அவர் சொல்ல, அவரை ஒரு நாள் வரச் சொல்லி விட்டு என்கிட்டே வந்தாங்க. ‘இதோ பார், பொண்ணைப் பெத்தவர் வரப்போ நீ மூஞ்சியிலே அரிதாரத்தைப் பூசிக்கிட்டு நிற்காதே, கையிலே ஸ்பானரைப் பிடிச்சிக்கிட்டுக் காருக்கு பக்கத்திலே நில்லுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அப்படியே நின்னேன்; கலியாணம் முடிஞ்சிப் போச்சு!”

“நீங்கள் போய்ப் பெண்ணைப் பார்க்கவில்லையா?”

“இல்லை!”

“கலியாணத்தைப் புரோகிதர் நடத்தி வைத்தாரா, பெரியார் நடத்தி வைத்தாரா ?”

“அப்போ நான் பெரியாரின் தொண்டனாகவில்லையே, புரோகிதர் தான் நடத்தி வைத்தார்." “கலியாணத்துக்குப் பிறகு ?” “நாடகக் கம்பெனியிலே வேலை பார்த்ததோடு நான் நிற்கல்லே; வெளியேயும் மெக்கானிக்காகவும், எலெக்ட்ரீஷியனாகவும் வேலைபார்த்துச் சம்பாதிச்சேன். அப்பத்தான் வாசு பிறந்தான்...”

“அவரும் உங்களைப் போலவே நடிகராகிவிட்டாரே, அவரை நீங்கள் படிக்க வைக்கவில்லையா ?”

“நல்லாக் கேட்டீங்க! என் கிட்டே இருந்தா என்னைப் போலவே உருப்படாமப்போயிடப்டோறான்னு திருச்சியிலே இருக்கும் அவன் மாமன் லட்சுமணன் வீட்டுக்கு அவனை நான் படிக்க அனுப்பி வைச்சிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு பள்ளிக் கூடமே கட்டும் அளவுக்குச் செலவழிச்சும் பார்த்தேன். பையன் புத்தி நடிப்பிலேதான் போச்சே தவிர, படிப்பிலே போகல்லே....?”

“பங்களா, கார் போன்ற சுக செளகரியங்கள் கூடச் சில குழந்தைகளைப் படிக்க விடாமல் செய்து விடுவதுண்டு....”

“அந்த விஷயத்தில் நான் ரொம்ப கண்டிப்புக்காரன். சின்ன வயசிலே அந்த மாதிரி சுக செளகரியங்களையெல்லாம் நான் அவனை அனுபவிக்கவிடறதில்லே.”

“இம்பாலா கார் கூட வாங்கினர்களாமே, ஆசைக்கு ஒரு நாள் அதில் ஏறக்கூடவா அவரை நீங்கள் அனுமதிக்கவில்லை ?”

“அவனை ஏற்றவா நான் அந்தக் காரை வாங்கினேன்?”

“வேறு எதற்கு வாங்கினர்கள் ?”

“அதன் விலை ஏறக்குறைய லட்ச ரூபாயாயிருக்கவே ஹைசொசைடியிலே அதுக்கு ஏக மதிப்பு இருந்தது. அது எனக்குப் பிடிக்கல்லே; ‘வர்ணம் அடிச்ச தகரத்துக்கா இவ்வளவு மதிப்பு ?’ ன்னு நினைச்சேன். அந்த மதிப்பை என்னைப் பொறுத்த வரையிலே குறைச்சிப் பார்க்கவே அதை நான் வாங்கினேன். வாங்கி, ஊரிலே இருக்கிற மாடுகளுக்கு இங்கிருந்து வைக்கோல் ஏற்றி அனுப்பினேன்!”

“இது என்ன கூத்து ? இம்பாலா காரிலா வைக்கோல் ஏற்றி அனுப்பினர்கள் ?”

“வைக்கோல் மட்டும் இல்லே, அதைப் பிரித்துப் போட மாட்டுக்காரப் பயல்களையும் அதில்தான் ஏற்றி அனுப்பினேன்!”

“நல்ல வேடிக்கைதான் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்காகக் கூட அதை ஒரு நாள் உங்களிடம் இரவல் கேட்க வந்தார்கள் போலிருக்கிறதே?”

“ஆமாம், வந்தாங்க. ‘இந்த ராதா ஏறவே அந்தக் காருக்குத் தகுதியில்லேன்னு நான் நினைக்கிறேன்; அந்த ராதா எதுக்கு ஏறணும் ?னு சொல்லி அனுப்பிவிட்டேன்.”

“இப்போது அந்தக் கார் யாரிடம் இருக்கிறது ?”

“ஜோதி அம்மாக்கிட்டே இருக்கிறதாச் சொல்றாங்க.

“பாவம், அதற்கு உயிரும் உணர்ச்சியும் இருந்திருந்தால், நீங்கள் செய்த அவமானத்துக்குத் தற்கொலை செய்து கொண்டிருக்கும்!”

“மனுஷனே இப்போ அவமானத்துக்கு அஞ்சறதில்லே, கார் எங்கே அஞ்சப் போவுது ?”

“சரஸ்வதிக்குப் பிறகுதான் தனம் உங்கள் வாழ்க்கையில் பங்கேற்றார்களா ?”

“ஆமாம். தனம் வேறே யாருமில்லே, சரஸ்வதியின் தங்கச்சி தான்.”

“வாசுவுக்குப் பிறகு... ?”

“சரஸ்வதிக்குக் குழந்தைங்க இல்லே, தனத்துக்குத்தான் அஞ்சு குழந்தைங்க..." “அவர்களில் இரு பெண்களுக்குத்தான் நீங்கள் சிறையில் இருத்தபோது கலியானம் நடத்தது, இலலையா?”

“ஆமாம். ரஷ்யாவுக்கும், சம்பத் ராணிக்கும் நடந்தது.”

“அப்படி என்ன அவசரம் வந்தது அவர்கள் கலியாணத்துக்கு ?”

“நான் வெளியே இருந்தப்பவே முடிவு சேஞ்சி வைச்சிருந்த கலியாணம் தான் அது. மாப்பிள்ளைங்க ரெண்டு பேருமே சொந்தக்காரங்க அண்ணன் தம்பிங்க. ஒருத்தர் பேர் சீனிவாசன்; இன்னொருத்தர் பேர் ராஜேந்திரன். மூத்தவர் வேலை விஷயமா திடீர்னு அமெரிக்காவுக்குப் போகும்படியா ஆயிடிச்சு. தனியா அவரை அங்கே அனுப்பி வைக்க வேணாம், கலியாணத்தைப் பண்ணி அனுப்பி வைப்போம்'ன்னு தனம் நெனைச்சா எனக்கும் அது சரின்னு பட்டது. ‘நான் வெளியே இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பெரியாரை வைச்சி ரெண்டு பேருக்குமே கலியானத்தைச் சேஞ்சி முடிச்சிடுங்க'ன்னு சொல்லிட்டேன். அப்படியே. நடந்தது. மணமாலையோடு அவங்க ஜெயிலுக்கு வந்து என்னை வாழ்த்தச் சொன்னாங்க வாழ்த்தி அனுப்பி வைச்சேன்.”

“இந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாயிருக்கும், இல்லையா?”

“இது ஒரு நிகழ்ச்சிதானா, இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிங்க...”

“மூன்றாவதாகத்தான் கீதாவை விரும்பிப் பதிவுத் திருமணம் செய்து கொண்டீர்கள் போலிருக்கிறது ?”

“ஆமாம்; அவளுக்கும் இப்போது நாலு குழந்தைங்க இருக்கு.”

“குடிப்பதை நிறுத்தி வைத்ததோதான் இனிமேல் நீங்கள் கலியாணம் செய்து கொள்வதையும் நிறுத்தி வைக்க வேண்டும் போலிருக்கிறது!" "இனிமே கலியாணம் நடக்கிறதாயிருந்தா என் பொண்ணுக்கும் பிள்ளைக்கும்தான் நடக்கணும்!”

“சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூட இவ்வளவு தூரம் சொல்லத் துணியும் உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே எனக்குப் புரியவில்லை!”

“ஒருவனுடைய பெருமை மட்டும் உலகத்துக்குத் தெரிஞ்சாப் போதாது, அவனுடைய பலவீனங்களும் தெரியணும்னு நினைப்பவன் நான். இல்லேன்னா, பொதுமக்களை ஏமாத்தறதாயில்லே அர்த்தம் ?”

“கரெக்ட் கலியாணத்துக்கு அப்புறம் உங்கள் நாடக வாழ்க்கை எப்படி இருந்தது?”

“ரொம்ப மோசம்! சண்டையில்லாத நாளே கிடையாதுன்னு ஆயிடிச்சு. ‘இந்துமுஸ்லீம்’ ஒற்றுமைக்காக ‘ராமதாஸ்’ நாடகம் நடக்கும். கடைசிக் காட்சியிலே நவாப் ராமதாஸைக் கட்டிப் பிடிச்சுக்குவாரு. ‘அது தப்பு'ன்னு முஸ்லீம்கள் வம்புக்கு வருவாங்க; ‘தப்பில்லே'ன்னு இந்துக்கள் அவங்களோடு சண்டைக்குப் போவாங்க. அவங்களையும் இவங்களையும் சமாதானம் சேஞ்சி வைக்கிறதுக்குள்ளே ‘போதும், போதும்’னு ஆயிடும். எந்த நாடகத்திலாவது ஒரு காட்சியோ, பாட்டோ நல்லா இருந்துட்டா வந்தது ஆபத்து, நாடகத்தை மேலே நடத்தவிட மாட்டானுங்க, ‘ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர்’னு கத்திக் கலாட்டா பண்ணுவாங்க. ஒரு நாள் எனக்குக் கோவம் வந்துடிச்சி. ‘நடந்து முடிஞ்ச நாடகத்துக்குகூட நீங்க ஒன்ஸ்மோர் கேட்பீங்க, நாங்க உடனே அதைத் திருப்பி நடத்தணுமா ?ன்னு கேட்டுட்டேன். இந்த மாதிரி நான் எதற்கும் பணியாம எதிர்த்து நிற்கிறது பொன்னுசாமிப் பிள்ளைக்குப் பிடிக்கல்லே; அவர் அந்தமாதிரி நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல்லே. ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்.”

“அப்புறம்?" “டி.ஆர். மகாலிங்கம், ரகோத்தமன்...”

“யார் அந்த ரகோத்தமன் ?”

“அவர் தான் ஏ.வி.எம். ‘வாழ்க்கை'யிலே நடிச்ச டி.ஆர். ராமச்சந்திரன்!”

“அந்த எட்டி கேன்ட்டரா?... சரி, பிறகு ?”

“எல்லாருமாச் சேர்ந்து கோலார் தங்க வயலிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தோம். அங்கே தான் ராஜசேகரன்’ படத்துக்காக என்னை ‘புக்’ சேஞ்சாங்க.”

“அதுதான் உங்கள் முதல் படமா ?”

“ஆமாம்; அப்போ ஸ்டண்ட்'டுக்கு என்னை விட்டா வேறே ஆள் கிடையாது.”

“ஹீரோ யார் ?”

“ஈ.ஆர். சகாதேவன்.”

“ஹீரோயின் ?”

“அந்த நாளிலே ஹீரோயின் அவ்வளவு முக்கியமில்லே; தேவையானப்போ ரெட் லைட் ஏரியாவுக்குப் போய் யாராவது ஒருத்தியைப் பிடிச்சிக்கிட்டு வந்துடுவாங்க.”

“டைரக்டர் ?”

“ஆர். பிரகாஷ்னு ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. ஹாலிவுட்டுக்குப் போய் சினிமான்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு வந்திருந்த ஆளு. அதாலே அவருக்கு ஏக மரியாதை காட்டுவாங்க. சதா தண்ணி வேறே போட்டுக்கிட்டே இருப்பார்.”

“ஸ்டுடியோ ?”

“பூந்தமல்லி ஹைரோடிலே இருந்தது. ‘நாராயணன் ஸ்டுடியோ'ன்னு பேரு. நாராயணன்னு சொன்னதும் பட்சிராஜா பிலிம்ஸ் ஸ்ரீ ராமுலு நாயுடு பிரண்ட் நாராயணனாயிருக்கும்னு நினைச்சுடாதீங்க. இந்த நாராயணன் சி.வி. ராமன் தம்பி நாராயணன். அப்போ ஸ்டுடியோன்னா மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை, அதுக்குக் கீழே லைட் கிய்ட் ஒண்ணும் இருக்காது. இப்போ அவுட்டோர் ஷல்ட்டிங்கைச் சூரிய வெளிச்சத்திலே வைச்சி நடத்தறாப் போல அப்போ இண்டோர் ஷாலிட்டிங்கையும் சூரிய வெளிச்சத்தை வைச்சிதான் நடத்துவாங்க. அதுக்காக ஸ்டுடியோ கூரையைக் கண்ணாடிக் கூரையாப் போட்டிருப்பாங்க. ரிகார்டிங்குக்குப் ‘பிடில்-டோன்ட்ரக்'குன்னு ஒண்ணு இருக்கும். அந்த ட்ரக்கிட்டே ‘கண்ணே ‘ன்னு காதல் வசனம் பேசறதா இருந்தாக்கூடக் கத்தித்தான் பேசணும். ‘கீழ்ப்பாக்கம் வேறே பக்கத்திலே இருக்கா ? விஷயம் தெரியாத ஹீரோயினுங்க என்னவோ ஏதோன்னு நினைச்சிப் பயந்து ஓடுவாங்க. அவங்களை இழுத்து வைச்சி விஷயத்தைச் சொல்லி, ரீடேக் எடுப்பாங்க.”

“டைரக்டருக்கு ரொம்பப் பொறுமை வேண்டியிருந் திருக்கும்!”

“பொறுமையாவது? எடுத்ததுக்கெல்லாம் அவருக்குக் கோபம் வந்துடும். காலை ஏழு, ஏழரை மணிக்கே மேக்கப் போட்டுக்கிட்டு நாங்க ஸ்டுடியோவுக்குப் போய் விடுவோம். அவர் புரசைவாக்கத்திலிருந்த ‘ரெக்ஸ்’ ஓட்டலுக்குப் போய் நல்லாத் தண்ணி போட்டுக்கிட்டுப் பதினோருமணிக்கு வருவார். அதுக்கு மேலே ஷூட்டிங் ஆரம்பமாகும். ஒரு நாள் ஜெயில் ஷாட் எடுக்கிறதாயிருந்தது. ஹீரோ சகாதேவன் ஜெயில்லே இருக்கார். அவர் அங்கே எப்படி இருக்கணும்னு டைரக்டர் சொல்லணும்; சொல்லல்லே. அவர் பாட்டுக்கு சிகரெட்டை ஊதித் தள்ளிக்கிட்டே இருந்தார். சகாதேவன் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டே இருந்தார். ரெண்டு பேரையும் கொஞ்ச நேரம் மாறி மாறிப் பார்த்துக்கிட்டிருந்த நான், “அதோ இருக்கே, அந்தத் துணிலே தலையைச் சாய்ச்சி வைச்சி நில்லுங்கன்னேன். அவ்வளவு தான்; ‘நான் டைரக்டரா, நீ டைரக்டரா?’ ன்னு டைரக்டர் என் மேலே பாய ஆரம்பிச்சிட்டார்!"