உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/கிரேக்க மரபினரின் பொது வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து
தோற்றுவாய்


1. கிரேக்க மரபினரின் பொது வாழ்வு

திருவளர்ந்தோங்கும் இந்நிலவுலகில் பல்வேறு நாடுகள் தோற்றம் அளிக்கின்றன. அவற்றுள் ஒன்று கிரீஸ் நாடாகும். அஃது எல்லாப் படியாலும் சிறந்து விளங்குகிறது ; காலத்தால் முந்தியது; கலையால் தலைசிறந்தது. இந்நாடு தமிழ் நாட்டோடு போட்டி இடவும் வல்லது ; இலக்கிய வளத்திலும் நாகரிக வாழ்விலும் ஒப்புயர்வற்றது. ஆகவே, அந்நாட்டு ஒழுகலாற்றை ஒருவாறு உணரவேண்டியது நம்மனோர் கடனாகும். ‘அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்’ என்று எண்ணுவதுபோல் நம் நாட்டுப் பெருமையும் சிறப்பும் மட்டும் அறிந்திருப்பதில் பயனில்லை. பிற நாட்டு வரலாற்றையும் நன்குணர்ந்து. பின் இரண்டினையும் சீர்தூக்கிக் காண்பதே அறிவுடைமையாகும். ஆகவே, கிரேக்க நாட்டு வரலாற்றைத் துணையாகக் கொண்டு, அதனை ஈண்டு அறிவோமாக.

அக்கேயர்கள் கிரீஸ் நகர் வருகை

கிருஸ்துப் பெருமான் பிறப்பதற்குப் பதின் மூன்று நூற்றாண்டுகட்கு முன், அஃதாவது ஏறக்  குறைய மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மொழியைப் பேசும் மரபினரான அக்கேயர்கள் (Achaeans) கிழக்கு ஐரோப்பாக் கண்டத் தினின்றும் கிரீஸ் நகரம் வந்து குடியேறினர். இவர்கள் குடிபுகுமுன் உள்நாட்டுக் குடிகளான பண்டைய கிரீஸ் நகர மக்கள், மிகவும் உயர்வான நிலையில் நாகரிகம் வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அந்நிலையில் இருந்தனர் என்பதை, அவர்கள் அமைத்திருந்த அழகிய அரண்மனைகளும், அவற்றில் அமைந்திருந்த திண்மைமிக்க சுவர்களும், கோட்டை கொத்தளங்களும், நன்கு சான்று கூற வல்லனவாக இருந்தன. இன்னோரன்ன இயல்பு வாய்ந்த கட்டட அமைப்பினைக் கண்ட அக்கேயர்கள் கிரீஸ் நகரிலேயே தாம் வாழ உறுதிகொண்டு, அதற்கு ஆவன அமைத்துக் கொண்டனர். நல் வாழ்வுக்கு இது நல்லிடம் என்று கண்ட இடங்களில், மக்கள் குடியேறி வசிக்க விரும்புவது இயற்கை தானே! ஒரு நாட்டின் பண்டைய ஒழுகலாற்றை அறிதற்குப் பண்டைய ஓவியங்களும் கல்வெட்டுக்களுமே உற்ற துணையாவன என்பது வரலாற்றூசிரியர் துணிபாகும். நம் தமிழ்நாட்டுப் பழங்கால நாகரிகத்தினையுணர்வதும் இவற்றால் தான் என்பதையும் ஈண்டு நினைவுபடுத்திக்கொள்ளுதல் வேண்டும். இவர்கள் எம்முறையில் அங்கு வாழ்வதற்கான வளங்களையும், நலன்களையும் ஏற்படுத்திக் கொண்டனர் என்பதை அவர்களது கல் ஒவியங்களாலும், கல் வெட்டுக்களாலும் தெள்ளத் தெளிய அறிந்துகொள்ளலாம். அக்கேயர்களின் குண நலன்கள்

அக்கேயர்கள் சிறிதும் சோம்பி இராதவர் ; எப்பொழுதும் சுறுசுறுப்பாய் உள்ளவர்; ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்னும் பழமொழிக்கிணங்கக் கலம் ஏறிக் கடற்பயணம் புரிபவர் ; புது நாடு கண்டு வீரதீரச் செயல்களை வெளிப்படுத்த வேண்டுமென்னும் உணர்ச்சிமிக்கவர்; எவ்வாறேனும் வெளி நாடுகளுக்குச்சென்று வாணிகம் செய்து பொருட்குவை திரட்டித் தம் நாட்டை வளப்படுத்த வேண்டுமென்னும் சீரிய நோக்கினர்.

செல்வம் ஈட்டுதற்குரிய பல்வேறு வழிகளில் வாணிகமும் ஒன்று. அவ்வாணிகத்தைக் கடல் கடந்து நடத்திப் பொருள் ஈட்டுதல் நம் தமிழரது மரபும் ஆகும். சாதுவன் என்பவன் நம் நாட்டு வணிகன். அவன் தன் முன்னோர் பொருள்களை இழந்தான்; இழந்த பொருள்களை மீண்டும் ஈட்ட விழைந்தான். அதன் பொருட்டுக் கலம் ஏறிக் கடல் கடந்து சென்றான் என்னும் வரலாற்றை மணிமேகலை என்னும் மாண்புறு நூல்

“வங்கம் போகும் வணிகர் தம்முடன்
தங்கா வேட்கையில் தானும் செல்வழி”

என்று குறிப்பிடுகிறது.

இவ்வாறே புனிதவதியாரின் கொழுநனான பரமதத்தனும் பொருளீட்ட மரக்கலம் ஏறி மாக் கடல் கடந்து சென்றான் என்பதை அருண்மொழித் தேவரும் அறிவிக்கின்றார். இவ்வாறே அக்கேயர்களின் வீரதீரச்செயல்கள்யாவும் அறிஞர்களால் பாடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. நம் தமிழ்நாட்டுப் பண்டை வரலாற்றையும் நாகரிகப் பண்பையும் அறிதற்கு எங்ஙனம் நம் சங்க இலக்கியங்களும் மற்றும் பல இடைக்கால நூல்களும் பயன்படுகின்றனவோ, அங்ஙனமே இவர்களின் உண்மை வரலாறுகளே அறிதற்கு அப்பாடல்கள் பெருந்துணை செய்கின்றன. இவர்கள் வெளிநாடு சென்று பெற்ற வெற்றிகளில் மிகவும் இன்றியமையாததாகக் குறிக்கப்படுவது டிராய் (Troy) நகரத்து மக்களோடு போரிட்டு வெற்றி கொண்டதே ஆகும். இந்நிகழ்ச்சி இலக்கியத்தில் ஆணித்தரமாக அழுந்திய வரலாறாகும்.

போர் வீரர்

அக்கேயர்கள் சோம்பேறிகளல்லர்; சுறு சுறுப்புடையவர்கள் என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இத்தகையவர், சிறந்த போர் வீரர்களாய் விளங்கியிருப்பர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, இவர்கள் பெரிய வீரர்களேயாவர். இவர்கள் போரிட்ட முறையை அறிந்தால், அது மிகவும் வியக்கத்தக்கதாய் இருக்கும். வில்போர் இவர்களிடையே உண்டு. இதனோடு கற்களே எதிரிகளின் மீது எறியவும் பயின்றிருந்தனர். இது பண்டைப் போர் முறைகளில் ஒன்று என்பதைச் சிலப்பதிகார ஆசிரியர் மதுரை மாநகர் மதிற்சுவர்ப் பொறிகளைக் குறிப்பிடுகையின் “கல்லுமிழ் கவணும்” என்று குறித்திருக்கிறார். நாம் அதை இங்குக் கவனத்திற்குக்  கொண்டுவர வேண்டியதாகும். அக்கேயர்கள் வில்லையும் கல்லையும் தம் படைகளாகப் பயன்படுத்தி வந்தவர்களாயினும், இவர்கள் மிகவும் விரும்பிக் கொண்ட ஆயுதம் ஈட்டியாகும். இவர்கள் எதிரிகள் எய்யும் படைகள் தம்மீது படா வண்ணம் இருக்கப் போருடைதரித்து இருந்தனர். இது மெய்க் கவசம் எனப்படும். இவர்கள் தலையில் நல்ல உலோகத்தாலான தொப்பியை அணிந்திருந்தனர். இவர்கள் மார்பில் தோலாலேனும், உலோகத்தாலேனும் செய்யப்பட்ட உடையைத் தற்காப்புக்காக அணிந்திருந்தனர். கால்களிலும் உலோகத்தாலாகிய கால் பாதுகாப்புக்குரியமேசோடு போன்ற காலணியைக் கொண்டிருந்தனர். எருதின் தோலாலாகிய நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய கேடயத்தைத் தம் கையகத்துக் கொண்டிருந்தனர். இன்னோரன்ன கனம் மிக்க உடைகளையும் படைகளையும் ஒரு வீரன் தாங்கில்செல்ல வேண்டியிருந்ததால்தான், நடந்து செல்ல இயலாதவனாய்த் தேர் மீது இவர்ந்தேசெல்ல வேண்டியவனாய் இருந்தான் என்பது தெரிய வருகிறது. நம் நாட்டு வீரரும் தேரூர்ந்தன்றே செருச் செய்தனர்? மறத்தினும் அறமே காட்டும் மாண்பு அக்கேய வீரர்பால் அமைந்த ஒரு சீரிய பண்பாகும். பலர் கூடி ஒருவரை அடக்கும் குணம் இவர்கள்பால் இல்லை. ஒருவரை ஒருவர் ஒறுக்கும் குணமே ஓங்கி இருந்தது. இதுவும் தமிழ்நாட்டு இயல்புகளில் ஒன்றாகும்; ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடும் முறையைக் கொண்டே அவர் திறன் கூறும் பண்பு அக்காலத்தில் இவர்களிடையே இருந்தது. பொதுமக்கட்குப் போரில் அதிகப் பொறுப்பு கிடையாது. அவர்கள் கொண்டிருந்த படைவலியும் மிகக் குறைவானதே. அவர்களால் மும்முரமான போரில் முன் நின்று போர் செய்ய இயலாது.

பொதுமக்களுக்குப் போரின்றி அமைதி நிலவிய போது, எதிலும் சிறந்த பங்குகொள்ளும் பேறு கிடையாது. அக்கேய மரபினருள் எவன் போர்ப் படையை நடத்திச் சென்றவனோ, அவனே தலைவன் என்னும் தகுதிக்குரியவன் ஆவான். அவன் போர்ப் படையைத் திறம்பட நடத்திச் செல்லும் வாய்ப்புப் பெற்றதோடு நில்லாமல், தம் மரபினர் நல்வாழ்வு கருதித் தம் மரபுக்குரிய கடவுளர்கட்கும் பலியிட்டு, அவர்கள் மனங்குளிரச் செய்யும் பொறுப்பையும் பெற்று விளங்கினான் தன் மரபினர்க்கு இடையே ஏதேனும் மனக் கலக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தீர்த்துவைக்கும் கடனும் இவனைச் சார்ந்ததேயாகும்.

பொது மக்கள் வாழ்க்கை

அக்கேயர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்னமும் தெள்ளத் தெளிய உணரவேண்டினால் ஹோமர் எழுதிய பாடல்களைக் கொண்டு நன்கு அறியலாம். அவையே “இலியட்டும் ஒடிசியும்” (Illiad, Odyssey) ஆகும்.

இவர்கள் நன்கு உண்ணும் இயல்பினர்; ‘எல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு’ என்னும் குணத்தினர். இது மக்கட்கு இயல்புதானே! பசி  எடுப்பின் பாடுபட முடியுமா? அது மிகக் கொடியது. அது செய்யும் செயல்கள் இன்ன என்பதை மணிமேகலை கீழ் வருமாறு கூறுகிறது.

ஒருவனுடைய நற்குடிப் பிறப்பும், சிறப்பும், கல்வியும் பயனின்றிப் போகும். வெட்கம் அழியும். அழகு சிதையும் என்பதாம்.

இதனால், இவர்கள் உணவில் பெருவிருப்புக் கொண்டதில் வியப்பில்லை. அடிக்கடி விருந்துணவு அயில்வர். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்பன இவர்கள் விருந்திற்கு மிகவும் வேண்டற்பாலன. திராட்சைச் சாறான நல்ல விலையுயர்ந்த மதுவகையும் அவ்விருந்தில் இடம் பெறும். பணியாளர்கள் விருந்தினர்க்கு வேண்டியவற்றை அவ்வப்போது படைத்த வண்ணமாய் இருப்பர். விருந்தில் பல பெருமக்கள் கலந்து கொண்டு-உடனிருந்து உண்பர். விருந்து இன்பமாக நடக்கையில் செவிக்கு இன்பம் அளிக்க இசையும் நடந்தவண்ணம் இருக்கும். நடிப்புக்கு அவ்விருந்து இடங்கொடுத்தது. ஆட்டம் ஆடுவதற்கெனவே தளங்கள் சில தயாரிக்கப்பட்டிருக்கும். நடிகர்கள் பாடல்களின் மூலம் பந்தாட்டம் ஆடி அபிநயம் புரிவர்.

உடற் பயிற்சிக்கெனச் சில பயிற்சிகளில் இவர்கள் கைதேர்ந்திருந்தனர். மற்போர், ஓட்டம், குத்துச் சண்டை, குதித்தல், கனமுள்ள பந்தினை எறிதல் முதலியன அவர்கட்கு உகந்தவிளையாட்டுக்களாகும். 

உறைவிடம்

அக்கேய மாதர்கள் உறைவதற்கெனத் தனி இடங்கள் இல்லங்கட்குள் இருந்தன. ஆனால், விருந்து முதலிய சிறப்புகள் நடைபெறும் காலங்களில், வேறுபாடின்றிப் பெண்மக்கள் ஆண்மக்களிடையே அமர்ந்து விருந்தினை அயர்வர். அந்நாட்டு மாதர்கள் வெறும் அடுப்பூதிகளாக இன்றி, முழு உரிமை உடையவர்களாய் இருந்தது மிகமிக வியக்கத்தக்கதாகும். பகட்டான வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டிருந்தாலும் மரியாதைப் பண்பில் சிறிதும் குறையாது வாழ்ந்ததுதான், மிகமிக இன்றியமையாத சமூக இயல்புகளில் ஒன்றாகும். இவர்கள்பால் அச்சமும் நாணமும் அமைந்திருந்தன. இளைஞர்கள் முதியவர்களைக் கண்டால் எழுந்து நின்று பணிவு காட்டுவர். “யான் கண்டனை யர் என் இளையர்” என்னும் பிசிராந்தையார் பாடல் இவர்கட்குப் பொருந்தும். அக்கேயர் வெளிநாட்டு மக்களிடத்தும், புதியராக வந்தவர்களிடத்தும், அன்பும் இரக்கமும் காட்டி வந்தனர்; பொறுமைக்கோர் உறைவிடமாகவும் விளங்கினர். இவர்கள் வாழ்வு இயற்கைக்கு இயைந்த வாழ்வு ஆகும்.

அக்கேயர்கள் வாழ்ந்த அரண்மனைகளின் அமைப்பு எளிமையானதென்றே சாற்றலாம். இவர்கள் சேர்ந்து வாழும் இடம் அரண்மனையில் அமைக்கப்பட்ட ஒரு பெரிய கூடமாகும். இதற்கு இடையே ஒரு சமையல் அறை அமைக்கப்பட்டிருக்கும். கூடம் நான்கு தூண்களின் ஆதரவில் நிலைத்திருக் கும். ஆண்மக்கள் கூடத்தில் துயில்கொள்வர். பெண்பாலார் தனித்த அறையில் கண் அயர்வர். அரண்மனைக்குப் புறத்தே தாழ்வாரமும் பரந்த வெளிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்விடங்கள் பணியாளர்களும் விருந்தினர்களும் துயில்கொள்ளப் பயன்படும். குளிப்பதற்கென்று தனித்த அறைகளும் உண்டு. இவர்கள் தூய்மையை விரும்பும் நேயர்கள். ஆதலின், தம் இல்லங்களையும் அரண்மனைளையும் நன்முறையில் அலங்கரித்து வைப்பர். அரண்மனையில் வெள்ளி, வெண்கலத்தாலான உருவங்களும், சுவர்களில் கற்சிலைகளும், தீட்டப்பட்ட ஒவியங்களும் நிறைந்து அழகுக்கு அழகு செய்து வந்தன. இதனால், கிரேக்கர்கள் ஒவியத்திலும் சிற்பத்திலும் தனியா வேட்கையுள்ளவர் என்பது அறிய வருகின்றது. இவ்வாறு தீட்டப்பட்ட செய்திகளை நம் தமிழ் நூல்களில் பார்க்கக் காணலாம். கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்த உலோகப் பொருள்கள் செம்பொன்னும், வெண்பொன்னுமே என்றாலும், வெண்கலமே அவர்கள் பெரிதும் விரும்பும் உலோகமாகும். இரும்பு அவ்வளவாக அவர்களால் பயன்படுத்தப்படவில்லை.

தொழில்கள்

கிரேக்கர்கள், வாழ்வு பெரிதும் போர் புரிவதில் ஈடுபாடுடையதானாலும், இவர்கள் உழவுத்தொழிலையும் சிறப்புடையதாகவே கருதி ஆகவேண்டும்? உழுதுண்டு வாழும் வாழ்விற்கு ஒப்பானது ஒன்றுமில்லை அல்லவா?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என்னும் வாக்கியம் எந்நாட்டவர்க்கும் பொதுவன்றோ ? இவர்கள் உழுத பயனால் தானியங்களையும் திராட்சைப் பழங்களையும், ஒலிவக் கொட்டைகளையும் பெற்றனர். ஒலிவக் கொட்டைகளை நசுக்கி அவற்றின் மூலம் எண்ணெய் எடுத்தனர். அந்த எண்ணெய் இருவகையில் இவர்கட்குப் பயன்பட்டது. இஃது உணவுப் பொருள்களைச் சமைப்பதற்கு எண்ணெய்க்குப் பதிலாக உபயோகப்பட்டது. இதனோடு ஆடைகளை வெளுக்கச் சவுக்காரத்திற்குப் பதிலாகவும் பயன்பட்டது. நிலங்களை உழுவதற்குக் கோவேறு கழுதைகளும் எருதுகளும் துணைபுரிந்தன. நிலங்களுக்கு உரியவர்களே அறுவடை செய்வதற்கு இயலாதவராயின் அவர்களின் பொருட்டுக் கூலியாட்களை அமர்த்தி அறுவடை செய்து வந்தனர். அவ்வழக்கம் நாம் கொண்டுள்ள உழுதுண்ணல், உழுவித்துண்ணல் என்னும் பழக்கங்களை நினைவுபடுத்துவதேயாகும். நிலங்களை உழுது பயன் கொள்வதோடு நில்லாமல், அக்கேயர்கள் ஆடு, மாடு,பன்றி முதலான விலங்கினங்களையும் வளர்த்து அவற்றின் பயனையும் அடைந்து வந்தனர். இம்மூவின விலங்குகளில் மாடுகளே இவர்கள் பெரிதும் மதித்துவந்த செல்வமாகும். மாடுகளைச் சிறந்த செல்வமாக மதிக்கும் வழக்கம், தொன்று தொட்ட வழக்கமாகும். இவ்வாழ்க்கைகளை எல்லாம் பார்க்கையில், நம் தமிழரது மருதநில வாழ்வும், முல்லை. நில வாழ்வும் நினைவுக்கு வருகின்றன. நம் தமிழ் நாட்டவரும் மாடுகளையே செல்வமாகப் பெரிதும் மதித்து வந்திருக்கின்றனர். மாடு என்னும் சொல்லுக்குப் பொன் என்னும் பொருளையும் தந்திருக்கின்றனர். இதனைக்

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை."

என்னும் வள்ளுவர் வாக்காலும்,

‘எத்தாயர் எத்தந்தை, எச்சுற்றத்தார் எம்மாடு’

என்னும் அப்பர் பெருமானர் அருள்மொழியாலும் நன்கு அறியலாம்.

பண்டம் மாற்றும் பழக்கம் பண்டைய அக்கேயரிடையே இருந்ததாலும் எண்ண இடம் உண்டு. நாணயங்கள் நடைமுறையில் வருவதற்குமுன் இவ்வழக்கமே எந்நாட்டிலும் கைக்கொள்ளப்பட்டது என்னலாம். முத்திரையிட்ட உலோக நாணயம் நடைமுறையில் வழங்க வசதி குறைந்த காலங்களில் இன்றியமையாத பொருள்களின் பொருட்டு மாடுகளே ஈடுகாட்டப்பட்டன. இவ்வமயத்தில் மற்ரறொரு செய்தியைக் கூறப்புகின் நாம் வியக்காமல் இருக்க இயலாது. அக்கேயர் தம் மகளை மணம்முடிக்க விரும்பினால், சில எருமைகளை அம்மகளுக்கு ஈடு தந்தால், மாப்பிள்ளை வீட்டார்க்கு மணமுடிக்க முன் வருவார்களாம். நம் நாட்டில் கொல்லேறு தழுவுவார்க்குத் தம் குலக்கொழுந்தைக் கொடுத்தனர். இவர்கள் கொல்லேறு கொடுப்பவர்க்குத் தம் குலக் கொடியையும் கொடுத்து வந்தனர். இரண்டிற்கு மிடையில் எருதுகள் பொதுப்பொருளாக நிலவுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

எந்த நாட்டிலும் எல்லாரும் செல்வர்களாய்ச் சிறக்க வாழ்ந்தனர் என்று சொல்ல முடியாது. செல்வர்கட்கு இடையில் வறியவரும் இருக்கத்தான் இருப்பர். கம்பர் முதலான புலவர் பெருமக்கள்

‘கொள்வார் இலாமையால் கொடுப்பாரும் இல்லை ;
வன்மை இல்லையோர் வறுமை இன்மையால்’

என்று கூறிய கூற்றுக்கள் யாவும், அவர்கள் புலவர் உலகில், காணும் கனவும், கற்பனையுமேயன்றி வேறல்ல.

அக்கேயர்கட்கு இடையில் ஏழை எளியவர்களும் வாழ்ந்தனர் எனக்கொள்க. இவர்கள் வயிறு வளர்க்க “ வேலையின்றிப் பன்னாள் பாடுறுவதும் உண்டு. இரந்துண்டு வாழ்வோரும் எண்ணிலர் இருந்தனர். ஏழை எளியவர்கள் அடிமை வாணிகக் குழுவினரால் தூக்கிச்செல்லப்பட்டு, அடிமைகளாக விற்கப்படுதலும் உண்டு. இவ்வடிமைகள் பலவித இடையூறுகட்கு உட்பட்டே ஆகவேண்டும். மழையிலும் குளிரிலும் வீடுவாசலின்றி வாழவேண்டியதும், செல்வர்களின் கொடுமைகட்குக் கீழ்ப்பட்டே வாழவேண்டியதும் இவர்கள் விதியாகும்.

சமயக் கொள்கை

கிரீஸ் நாட்டுப் பழங்குடிகள் தங்கள் வழிபடு கடவுளர், பாதாள உலகத்தில் இருப்பதாக எண்ணி 

வணங்கி வந்தனர். அத்தேவதைகள் கெட்ட தேவதைகளாகக் கருதப்பட்டு வந்தன. அத்தேவதைகளின் உள்ளம் குளிர்வதற்காக விலங்கினங்களைப் பலியிட்டு வந்தனர். சிற்சில வேளைகளில் மக்களையும் பலி கொடுப்பதுண்டு. இவர்கள் வழிபட்ட தேவதைகளில் மினோடார் (Minotaur) என்பதும் ஒன்று. இது ஒரு பாதி எருமை வடிவமும், மற்றெரு பாதி மனித வடிவமும் கொண்டது. இஃது இளவயதுடைய ஆண் பெண் மக்களை உண்டே வாழ்வதாக இவர்கள் கருதிவந்தனர். இந்தக்கொடிய பழக்கத்தை அக்கேயர்கள் கிரீஸ் தேசத்துப் பழங்குடி மக்களிடமிருந்து கைக்கொண்டனர் எனலாம். ஏனெனில் அகமெம்னன் (Agamemon) தம்மகளான இப்ஹிஜினியா (Iphigenia) என்பவளே இத்தெய்வத்திற்குப் பலி கொடுத்த பிறகே டிராய் தேசத்தவரோடு போர் தொடுக்கச் சென்றதனால் இஃது அறியப்படுகிறது. ஆனால், இந்தப் பழக்க வழக்கங்கள் யாவும், நாளடைவில் மறைந்துகொண்டும் மாறிக் கொண்டும் வந்தன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினுனே” என்பது இயற்கை விதி அல்லவா? இதானல்தெய்வம் தனக்கென ஓர் உருவம், ஒரு பேரும் ஒன்றும் இல்லாத ஒரு தனிப் பொருள் என்பதும், மக்களது உள்ளக்கிடக்கைக் கேற்பக் குறிகளை பெற்று, அன்பர்களது வேண்டுகோளை நிறைவேற். றும் என்பதும் புல்குகின்றன அன்றே ! இதானல் தான் நம் முன்னோர் இறைவனது உண்மைத் தன்மையைக் கூறும்போது,

"இந்நிறத்தவன் :இவ்வண்ணத் தன் ; இவன் இறைவன்
என்றெழுதிக் காட்டொனதே"

என்றும்

‘ஒரு நாமம் ஒருருவம் ஒன்றும் இல்லார்க்கு
ஆயிரம் திருநாமம்பாடி’

என்றும் கூறுகின்றனர். இவர்கள் வணங்கிய தெய்வங்கள் விலங்கு வடிவங்களிலிருந்த நிலையினின்றும். நீங்கி, மக்கள் வடிவில் உருவங் கொள்ளலாயின. கொடுமைக் குணங்கள் போய் அன்புக் குணங்கள் அமையப் பெற்றனவாய் மாறின. இதனால் தான் அம்முன்னோர் தெய்வங்கள் ஒவ்வொன்றும் தத்தமக்கென ஒவ்வொரு திறனைப் பெற்று விளங்கின என்று கூறுகின்றனர். அக்கேயர் வழிபட்ட தெய்வங்கள் ஒலிம்பஸ் மலையில் வாழ்ந்து வந்தனவாகக் கருதினர். அக்கடவுளரில் சீயஸ் (Zeus) என்பது வானத்திற்குரிய கடவுளாகும். இஃது ஒலிம்பஸ் மலையைத் தன் இருக்கையாகக் கொண்டு ஆண்டு வந்தது. எதினா என்னும் பெரிய கடவுள் தொழிற் கலைக்குரியதாய் விளங்கியது. இதன் வடிவு ஏதன்ஸ் (Athens) நகரில் உள்ளது. அப்போலோவின் (Apollo) உருவம். டெல்பி (Delpi) யில் உள்ளது. இக்கடவுள் வன்மைக் குரிய தெய்வமாக விளங்கியது. போருக்குரிய கடவுளாக ஏரஸ் (Ares) திகழ்ந்தது. இந்தத் தேவதைகளை வழிபடுவோர் மக்களைப் பலியிடுவதைத் தவிர்த்து மாக்களைப் பலியிடும் வழக்கத்தில் ஈடுபட்டனர்.