நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கடமைகளை நிறைவேற்றிய நபிகள் நாயகம் அவர்கள்
மனிதத் தந்தையான ஹலரத் ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து, இவ்வுலகை நேர்வழிப் படுத்துவதற்காகக் காலந்தோறும் ஆண்டவன் தீர்க்கதரிசிகள் பலரை அனுப்பி வந்திருக்கின்றான். அவர்களில் கடைசியாகத் தோன்றியவர்சள் பெருமானார் அவர்கள். தங்களுக்குப் பிறகு, உலகுக்குத் தீர்க்கதிரிசிகள் தோன்றுவதற்கு அவசியம் இல்லாதபடி, தங்கள் திருப்பணிகளைச் செல்வனே பூர்த்தி செய்து விட்டார்கள்.
பெருமானார் அவர்கள், உலகத்தில் மனிதர்களிடம் தோழமையோடிருந்து, அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றி, அவர்களை உன்னதமான இடத்தில் உயர்த்தி வைத்து, பிறகு தாங்களும் "மேலான தோழனான ஆண்டவனிடம்” போய்ச் சேர்ந்தார்கள்.
பெருமானார் அவர்கள், ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி, திங்கட்கிழமை இவ்வுலகில் தோன்றினார்கள். அதே மாதம், அதே தேதி, அறுபத்து மூன்றாவது வயதில் இம்மண்ணுலகைவிட்டு, விண்ணுலகுக்குச் சென்றார்கள்.
பரிசுத்த கஃபாவையும், மனித வர்க்கத்தை நல்வழிப் ப்டுத்துவதற்காக, இவ்வுலகில் தோன்றிய பெருமானார் அவர்களின் அடக்கத் தலத்தையும் காணும் பாக்கியத்தை ஆண்டவன் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அருள்வானாக!
ஒவ்வொரு முஸ்லிமும், பெருமானார் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்க ஆண்டவன் அருள்புரிவானாக!
இந்நூல்...
- பெருமானார் அவர்கள் பெரு வாழ்வு, பிறப்பு முதல் பிரிவு வரை, தனித்தனியாக 207 நிகழ்ச்சிகள் மூலம் கூறப்பட்டுள்ளது.
- சரித்திர நிகழ்ச்சிகளோடு, இஸ்லாமிய வரலாறும் இணைந்து திகழ்கின்றது.
- சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படித்து மகிழத் தக்க இனிய தமிழ் நடை.